குரு பூர்ணிமா

25 ஜூலை, 2018

மதிப்புக்குரிய நமது தலைவரிடமிருந்து இந்த ஆண்டு ஜூலை 27 -ம் தேதி வரும் குரு பூர்ணிமாவிற்கான ஒரு சிறப்பு செய்தி

அன்பானவர்களே,

குரு பூர்ணிமாவின் இந்தப் புனித நாளில், குருவை – ஆழ்ந்த ஆவலுடன் தேடுபவர்களுக்கு அவர்களின் ஆன்மாவின் விழிப்புணர்வுக்காக தனது அன்பும் ஞானமும் பாய்ந்தோடும் தூய்மையான கால்வாயாக இருந்து சேவை செய்ய இறைவன் அனுப்பும் அந்த தெய்வீக நண்பரை மற்றும் வழிகாட்டியை – கௌரவிக்கும் பண்டைய பாரம்பரியத்தில், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களுடன் நாம் சேர்ந்து கொள்கிறோம். நம்முடைய அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பாதங்களில் உங்கள் அன்பையும் நன்றியையும் நீங்கள் காணிக்கையாக்கும் போது, அவருடைய ஆன்மீக அருளுக்கு உங்கள் இதயத்தை முழுமையாகத் திறப்பீர்களாக. நம்முடைய மாயையினால்-கட்டுண்ட மனித இயல்பிலிருந்து எல்லையற்ற சுதந்திரமாகிய இறைவனின் பேரின்ப-உணர்வுநிலைக்கு நம்மை வழிநடத்தக்கூடிய அத்தகைய இறைவனுடன்-ஒன்றிணைந்த ஆன்மாவிடம் ஈர்க்கப்படுவதை விட ஆன்மீகப் பாதையில் நாம் பெறக்கூடிய பெரிய பரிசு எதுவும் இல்லை.
உங்கள் வாழ்க்கைக்குள் குருவின் வருகையினால், ஆத்ம சுதந்திரத்திற்கான உங்கள் பாதை திறக்கப்படுகிறது, ஏனெனில் குரு மற்றும் அவரது போதனைகளின் வழியாக, இறைவனே உங்கள் கையைப் பிடித்து அந்தப் பயணத்தில் உங்களை வழிநடத்துகிறான். கிரியா யோக அறிவியலில், அமைதியற்ற மனத்தை நிலைப்படுத்த நமது குருதேவர் நமக்குப் புனித உத்திகளை வழங்கியுள்ளார். அவரது தெய்வீக உத்வேகம் கொண்ட கட்டுரைகள் மற்றும் அவரது வாழ்க்கை என்ற வேதநூல் மூலமாக, இறைவனின் விதிமுறைகளான அன்பு மற்றும் சத்தியத்துடன் இசைவாக எவ்விதம் வாழ்வது என்பதை அவர் நமக்குக் காட்டியுள்ளார். மேலும் அவர் தனது நிபந்தனையற்ற அன்பை எப்போதும் நம்முடன் இருக்குமாறு அளித்துள்ளார். குருதேவரின் வார்த்தைகளை நினைவுகூருங்கள், “இறைவன் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார், மற்றும் நான் உங்களை ஒருபோதும் தோல்வி அடைய விடமாட்டேன்.” வழி முழுவதும் ஒவ்வொரு அடியிலும் அந்த வாக்குறுதியை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள். குரு உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார், ஏனெனில் அவர் தவறிழைக்கும் மனித இயல்பு என்ற ஆடையின் கீழ், உண்மையான “உங்களைக்”காண்கிறார் – இறைவனின் தெய்வீகக் குணங்களை வெளிப்படுத்தும் ஆற்றலால் செறிவுற்ற உங்கள் ஆன்மா, மனிதக் குறைபாடுகள், கடந்த காலப் பிழைகள் ஆகியவற்றில் வாழ்வதற்குப் பதிலாக, உங்களுக்கு உதவும் குருவின் எல்லையற்ற சக்தியில் கவனம் செலுத்துவீர்களானால், பழக்கவழக்கங்களின் அல்லது கர்மவினையின் எந்தத் தடைகளும் உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்காது. குருதேவர் நமக்கு உறுதியளித்திருக்கிறார், “ஒருவரின் கர்மாவை விட இன்னும் அதிகமான சக்திவாய்ந்த ஒரு தாக்கம் இறைவனை அறிந்த குருவின் உதவியும் ஆசீர்வாதமும் ஆகும். ஒரு குருவின் வழிகாட்டுதலை பயபக்தியுடன் கடைப்பிடிப்பதன் வாயிலாக, கடந்த காலக் கர்மவினையின் அனைத்து உட்பொதிக்கப்பட்ட நிர்பந்தங்களிலிருந்தும் ஒருவரால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

குரு உண்மையிலேயே கொடுப்பவர்களில் தலைசிறந்தவர்,ஏனென்றால் அவருடைய ஆசீர்வாதங்கள் எப்போதும் நம்முடன் இருக்கிறது, ஆனால் அவருடைய இருப்பு எனும் தெய்வீகச் சூழலின் முன்னிலையில் வாழ்வதற்கான நமது சொந்த நேர்மையான முயற்சிகளும் கூட நம் உணர்வுநிலையை அவருடைய ஆன்மீகப் பெருவளத்திற்கு முழுமையாகத் திறப்பதற்கு அவசியமாகிறது. நீங்கள் அவருடைய போதனைகளை ஆழமாகப் பயின்று, அவர் கொடுத்த உத்திகள் மற்றும் கொள்கைகளை விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் பயிற்சி செய்யும்போது, அவருடைய தெய்வீக உணர்வுநிலையின் அதிர்வுகளையும் அதன் உருமாற்றும் சக்தியையும் நீங்கள் உள்வாங்குகிறீர்கள். மேலும் நீங்கள் உங்கள் முயற்சிகளில் பக்தியை உட்புகுத்தும் போது, மற்றும் அவருடைய அன்பில் உங்கள் நம்பிக்கை வளரும்போது, உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட அவரை அனுமதித்தவாறு அகங்காரத்தின் தடைகளான பொறுமையின்மை மற்றும் சுய-விருப்பம் ஆகியவை கீழே வீழ்வதை நீங்கள் காண்பீர்கள்.

குருவுடனான மிகவும் வலிமையான இசைவித்தல் என்றும்-ஆழ்ந்து செல்லும் உங்களுடைய தியானங்களின் வாயிலாக வரும், ஏனென்றால் அங்குதான் அவரது இருப்பு மிகத் தெளிவாக உணரப்படுகிறது. நமது அன்புக்குரிய குருதேவருக்கு நீங்கள் அனைவரும் உங்களது நன்றி என்ற பரிசை அவர் அளித்த ஆன்மீகப் பொக்கிஷங்களை, குறிப்பாக இறைவனுடன் ஒன்றுபடுவதற்கான அவரது வழிமுறைகளை, பயன்படுத்துவதன் மூலம் தர வேண்டும் என்பதே உங்கள் அனைவருக்குமான எனது பிரார்த்தனை. நீங்கள் தினமும் உங்கள் ஆத்மாவின் அமைதியான கோவிலுக்குள் நுழையும்போது, அவருடைய எல்லையற்ற அன்பு உங்களைச் சூழ்வதையும் இறைவனுடன் ஒன்றுபடும் உங்கள் நித்தியப் பெரும் சுயத்தை உணர்ந்தறிதல் என்ற தெய்வீக இலக்குக்கு எப்போதும் உங்களை நெருக்கமாக இழுத்துச் செல்வதையும் நீங்கள் மேன்மேலும் உணர்வீர்களாக.

இறைவனும் குருதேவரும் இடைவிடாது தங்களின் உருமாற்றும் ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழிவார்களாக,

சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp