பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றி ராஜரிஷி ஜனகானந்தர்

எழுதியவர்: ராஜரிஷி ஜனகானந்தர்

ராஜரிஷி ஜனகானந்தர் நூலிலிருந்து மீண்டும் அச்சடிக்கப்பட்டது: ஓர் உயர்ந்த மேலைநாட்டு யோகி இப்போதே வாங்க

பின்வரும் விவரங்கள் ஜனவரி 3, 1937-ல் ஸெல்ப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சர்வதேச தலைமையகம், லாஸ் ஏஞ்சல்ஸில் அளிக்கப்பட்ட ஒரு சொற்பொழிவில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த சந்தர்ப்பமானது, பரமஹம்ஸர் தனது பதினெட்டு மாத இந்தியா மற்றும் ஐரோப்பிய விஜயத்தை முடித்து அவரது அமெரிக்க வருகையைக் கொண்டாடுவதற்கான ஒரு பெரு விருந்து. ராஜரிஷி ஜனகானந்தர் (1892 -1955) ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் என்ற முறையில் பரமஹம்ஸ யோகானந்தரின் முதல் ஆன்மீக வாரிசாக இருந்தார்.

குணப்படுத்தும் ஒளியின் ஓர் அனுபவம்

ஐந்து வருடங்களுக்கு முன்தான் நான் பரமஹம்ஸ யோகானந்தரை முதன்முதலாகச் சந்திக்கும் பெரும்பேறு பெற்றேன். நான் என்றுமே, எந்தக் கிறிஸ்துவச் சமய அமைப்பையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், சத்தியம் மற்றும் சமயத்தில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தேன். எனது வாழ்க்கை வியாபாரமயமாய் இருந்தது; ஆனால் எனது ஆன்மா சோர்வுற்றிருந்தது, எனது தேகம் வலுவிழந்துக் கொண்டிருந்தது மற்றும் என் மனம் அமைதிக் குலைவுற்றிருந்தது. நான் அசைவற்று அமர முடியாத வண்ணம் பதற்றம் உடையவனாய் இருந்தேன்.

நான் பரமஹம்ஸரைச் சந்தித்து அவருடன் சிறிது காலம் கழிந்த பிறகு, நான் மிகவும் அசைவற்று அமர்ந்து இருந்தேன் என்று எனக்கு தெரிய வந்தது, நான் இயக்கமற்றிருந்தேன்: நான் சுவாசிக்காததைப் போன்று தோன்றியது, நான் அதைப் பற்றி வியந்து பரமஹம்ஸரை நோக்கினேன். ஓர் ஆழ்ந்த வெண்ணிற ஒளி, முழு அறையையும் நிரப்ப முயல்வது போல் தோன்றியது. நான் அந்த அற்புத ஒளியின் ஒரு அங்கமானேன். அந்தக் கணத்திலிருந்து பதற்ற நிலையிலிருந்து நான் விடுபட்டவனானேன்.

உண்மையான ஏதோ ஒன்றை, எனக்கு மிகவும் பயனுடைய ஏதோ ஒன்றை நான் கண்டுபிடித்து விட்டதாக நான் அறிந்தேன். நான் அதைப் பற்றி நிச்சயம் செய்து கொள்ள வேண்டியதாய் இருந்தது. குணமளிக்கும் ஒளியின் என் அனுபவத்திற்கு முன்வரை, நான் இதற்கு முன் அறிந்திராத ஒரு ஆன்மீக உலகத்திற்குள் நான் பிரவேசித்துள்ளேன் என்பதை நான் உணரவில்லை.

இந்த போதனைகளில் ஓர் அழகிய விஷயம், ஒருவர் குருட்டுத்தனமான நம்பிக்கைகள் மீது சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதாகும். அவர் அனுபவம் பெறுகிறார். தனக்குத் தெரியும் என்பதை அவர் அறிகிறார், ஏனெனில் அவர் அனுபவிக்கிறார். சாதாரணமாக மனிதன், தன் எண்ணங்களையும் தான் முகரவும், சுவைக்கவும், தொடவும், பார்க்கவும் மற்றும் கேட்கவும் முடிந்த பொருள்சார் உலகத்தையும் மட்டுமே அறிந்தவனாக உள்ளான். ஆனால் அவன், அவனை சிந்திப்பதற்கும், புற உலகத்தைப் புலன்கள் மூலமாக அறிவதற்கும் சாத்தியமாக்கிய, அவன் அகத்தே மிகவும் ஆழத்தில் உறைந்துள்ள ஆன்மாவைப் பற்றி அறியாதவனாய் உள்ளான். புறக்காட்சிகளுக்குப் பின்னும், எண்ணங்கள் மற்றும் புலன்களுக்கு சற்றே பின்னும் உள்ள அந்த ஒன்றைப் பற்றி ஏதும் அறியாதவனாக உள்ளான். ஒருவன் இந்தப் பேருயிரின் இருப்பைப் பற்றி, உண்மையான இந்தப் பேருயிரைப் பற்றி உணர்ந்தறிவதற்கு; மற்றும் அந்த பேருயிருடன் ஆன தன் சொந்த உணர்வு நிலையின் ஐக்கியத்தை அடையவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

ஞானமில்லாத செல்வம் ஆனந்தத்தைத் தராது

நான் பரமஹம்ஸரைச் சந்திப்பதற்கு முன், மனிதனால் நான் அந்த காலத்தில் அறிந்திருந்ததைவிட மிக முழுமையான அளவிற்கு தன்னை அறிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் எனக்கு எழவே இல்லை. இருப்பினும், உலக விஷயங்களை அனுபவித்த பிறகு நான் ஒரு துயர நிலைக்கு வந்திருந்தேன்; ஏனெனில், நான் சற்று முன் முன் கூறியது போல், என் ஆன்மா சோர்வுற்றும் மற்றும் என் தேகம் நலமற்றும் இருந்தன. எதுவும் என்னை திருப்தி அடையச் செய்யும் என்று தோன்றவில்லை. நீங்கள் பணக்காரர்களை, பேரளவில் உடமை பெற்றிருப்பவர்களை கவனிக்கும் ஒரு வாய்ப்பு பெற்றிருந்தால், அதில் பெரும்பாலானோர் மனநிறைவற்றும் மகிழ்ச்சியற்றும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். ஞானம் இல்லாத செல்வம் ஆனந்தத்தைத் தராது. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஆனந்தத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்; ஒவ்வொரு விஷயத்திலும் நாம் மகிழ்ச்சியை தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஸெல்ஃப்-ரியலைசேஷன் பாதை -- யோகம் மற்றும் பக்தியின் ஒரு கலவை

ஸெல்ஃப்-ரியலைசேஷன் பாதையில் ஒருவர் மீண்டும் உயிர் பெறுகிறார். அவர் உண்மையிலேயே வாழ்கிறார். அவர் தன் உள்ளத்தில் தெய்வீகப் பேருயிரை உணர்கிறார். அவர் தன் தனிப்பட்ட ஆன்மாவுடன் பிரபஞ்ச பரம்பொருளின் ஐக்கியத்தை அனுபவிக்கிறார். பரமஹம்ஸரால் போதிக்கப்படும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் பாதை விஞ்ஞானப் பூர்வமானது. அது யோகம் — ஒருவரது சொந்த இருப்பினுள் பயிற்சி செய்யப்படும் விஞ்ஞானம் — மற்றும் இறைவனுக்கான பக்தி சேர்ந்த ஒரு கலவை. யோகமும் பக்தியும் ஒன்று சேர்ந்து மனிதனுக்கு அவனது தெய்வீகத் தன்மையின் அனுபூதியைக் கொணரும்.

சமயம் ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்: தன் சொந்த உயிர், சர்வ வியாபகப் பேருயிராக இருக்கிறது என்ற ஞானம். அந்த லட்சியத்தை எய்துதல் சொர்க்கமாகும். எனது சொந்த அனுபவத்திலிருந்து, ஆன்ம அனுபூதியை அடைவதற்கான ஒரு வெற்றிகரமான முயற்சி மேற்கொள்ளாமல் மனிதன் முக்தியை அல்லது பரம்பொருளில் இறுதி விடுதலையை அடைய முடியாது என்பது என் திடமான கருத்து.

மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பொக்கிஷங்களின் ஒரு சேர்க்கை தேவைப்படுகிறது

அமெரிக்கா உலகியல் சாதனைகளில் வளம் பெற்றுள்ளது. இந்தியா பரம்பொருள் ஞானத்தில் வளம் உடையதாக உள்ளது. இவ்விரண்டின் கூட்டு ஒரு லட்சிய உலக நாகரீகத்திற்கு இட்டுச்செல்லும்.

பொருள்சார் உலகில் மட்டுமே வாழும் ஒருவர், பொருட்பாட்டு உணர்வு நிலையில் உடைமைகளுடன் பற்றுக் கொண்டவராகிறார். பற்றுடமை அடிமைத்தனத்தை வளர்க்கிறது. நாம் பழக்கங்களுக்கும் உடைமைகளுக்கும் அடிமையாகிறோம். நம்மை அடிமையாக்குவது உடைமைகள் அல்ல, மாறாக அறியாமை மற்றும் பற்றுடமை.

பொருள்சார் பற்றுகளுடன் உள்ள ஒருவர் ஒருபோதும் சுதந்திரமானவர் அல்லர். அவர், தான் இழக்கப் போகிற விஷயங்களின் மீது தன் நம்பிக்கையை வைத்துள்ளார். ஒரே ஓர் உடமை மட்டும் தான் நிரந்தரம்: பரம்பொருள். எந்த ஒன்றிலிருந்தும் பரம்பொருளை நீக்கிவிட்டால், அது அதற்கு எந்தக் கவர்ச்சியும் அறவே இல்லை. வாழ்க்கை என்பது உண்மையில் பரம்பொருள் ஆகும்.

தேகம் அழியும் போது இரண்டு விஷயங்கள் நம்முடன் தங்குகின்றன: உயிர் மற்றும் உணர்வு நிலை. உயிர் மற்றும் உணர்வு நிலையைத் தவிர வேறு எதனையும் நாம் விலக்கி விடலாம். அவை நம்முடன் சாசுவதமாக உள்ளது. ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் போதனைகள் ஒருவருக்கு எவ்வாறு ஒரு சரியான உணர்வுநிலையை — பரம்பொருளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அக அனுபவம் – உருவாக்குவது என்று காட்டுகின்றன.

பரமஹம்ஸர் தன் மாணவர்களை எதையும் ஒரு நம்பிக்கைசார்ந்த விஷயமாக மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்பதில்லை. “கிரியா யோகத்தைப் பயிற்சி செய்யுங்கள்,” அவர் கூறுகிறார், “அகத்தே உறையும் ஆன்மாவின் மகிமைகளை நீங்களே கண்டுபிடியுங்கள்.”

பரமஹம்ஸர்: அன்பின் திருவடிவம்

ஒரு குரு இறைவனின் ஒரு தேவதையைப் போன்றவர். நம் பேரன்பிற்குரிய பரமஹம்ஸரில் நாம் அன்பு மற்றும் சுயநலமின்மையின் உண்மையான திருவடிவமாக இருக்கும் ஒருவரை நாம் பெற்றுள்ளோம். அவர் தெய்வீக ஆனந்தத்தின் உடைமையாளர். அவருடனான தொடர்பு அவருக்குப் பின்னால் உள்ள ஞான ஒளி பெற்ற குருமார்களின் சங்கிலித் தொடருக்குச் செல்கிறது. மேலைநாட்டு மனத்திற்கு இந்த அறிவிப்பு சற்று விசித்திரமாகப் படலாம், ஆனால் அது உண்மை. குருமார்கள் ஒருவர் மற்றொருவருடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரம்பொருளுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள், மற்றும் அவர்களது சக்திகளின் வாயிலாக அந்தப் பரம்பொருள் மற்ற மனிதர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தியா (அநேக மக்கள் அது பாம்பாட்டிகளின் நாடு என்று எண்ணும்) நமது நாட்டிற்கு இறை உணர்வு நிலையை நாம் அடைய நமக்கு உதவக்கூடிய ஒரு குருதேவரை அனுப்பியது என்பது நமக்கு என்னே பாக்கியம்.

பரம் பொருளுடன் தொடர்பு கொள்பவர்கள், மற்ற எந்த விதத்திலும் அனுபவிக்க முடியாத ஒரு அழகை, ஒரு இனிமையை அறிகின்றனர்.

ஒரு மகானின் தோழமையை அனுபவிப்பது எத்துணை தெய்வத்தன்மை வாய்ந்தது! வாழ்வில் எனக்கு கிடைத்துள்ள எல்லா விஷயங்களிலும் பரமஹம்ஸர் என்மீது வழங்கியுள்ள அருளாசிகளை எல்லாவற்றிற்கும் மேலாக போற்றுகிறேன்.

புராதன இந்துக்கள் ஆன்ம விஞ்ஞானத்தை வளர்த்தனர்

முதலில் நான் பாரபட்சமாக இருந்ததை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில், இந்துக்களைப் பாம்பாட்டிகளாக எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்தேன். இப்பொழுது நான் இந்தியாவை, விஞ்ஞானங்களில் மிக உயர்ந்த விஞ்ஞானமான ஆன்ம ஆய்விற்கான உத்திகள் எனும் யோகத்தை உருவாக்கிய மகான்களாலான நாடு என்று வணங்குகிறேன்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp