ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -இன் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் சுவாமி சிதானந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஒய்.எஸ்.எஸ்/எஸ்.ஆர்.எஃப். -ன் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் சுவாமி சிதானந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இயக்குநர்கள் குழு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப்) -ன் தலைவராகவும், ஆன்மீக முதல்வராகவும் சுவாமி சிதானந்த கிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ஜனவரி 2011 முதல் கடந்த மாதம் வரை இந்த பதவியில் பணியாற்றிய ஸ்ரீ மிருணாளினி மாதாவைத் தொடர்ந்து அவர் இப்பதவிக்கு வருகிறார். அவரது நியமனம் புதன்கிழமை, ஆகஸ்ட் 30, 2017 அன்று எஸ் ஆர் எஃப் இயக்குநர்கள் குழுவால் ஒருமனதான வாக்கெடுப்பின் மூலம் செய்யப்பட்டது.

மறைந்த எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ தயா மாதா, 2010-ஆம் ஆண்டில் அவர் மறைவதற்கு முன்னர், மிருணாளினி மாதாவுக்குப் பிறகு, ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -இன் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் சுவாமி சிதானந்தா இருக்க வேண்டும் என்ற தம் கருத்தை மிருணாளினி மாதாவிடம் வெளிப்படுத்தினார். மிருணாளினி மாதா, அவர் மறைந்த ஆகஸ்ட் 3, 2017 க்கு சில மாதங்களுக்கு முன்பு இதை உறுதிப்படுத்தினார், மேலும் தயா மாதாவின் பரிந்துரைக்கு தனது ஒப்புதலையும் இயக்குநர்கள் குழுவிடம் உறுதிப்படுத்தினார்.

சுவாமி சிதானந்தா நாற்பது ஆண்டுகளாக ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாசியாகவும், கடந்த எட்டு ஆண்டுகளாக எஸ் ஆர் எஃப் மற்றும் ஒய் எஸ் எஸ் இயக்குனர்கள் குழுமங்களின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட அவரது துறவு வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே, அவர் ஸ்ரீ மிருணாளினி மாதாவுடன் நெருக்கமாகப் பணியாற்றினார்; ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் படைப்புகள் மற்றும் பிற எஸ் ஆர் எஃப். வெளியீடுகளின் பதிப்பு மற்றும் வெளியீட்டில் அவருக்கு உதவியபோது, ஞானம் நிறைந்த, குருவுடன் இசைந்திருந்த அவரது பயிற்சியைப் பெற்றவாறு பணியாற்றினார்.

இறைவனுக்கும், எஸ் ஆர் எஃப் பணிக்கும் சேவை செய்ய ஒரு விழிப்புணர்வு

மேரிலாந்தில் உள்ள அன்னாபோலிஸில் 1953ம் ஆண்டு பிறந்த சுவாமி சிதானந்தர், சான்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் தத்துவத்தின் மாணவராக இருந்தபோது, 1970 களின் தொடக்கத்தில் என்சினிடாஸில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளையும் அவரது ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பையும் பற்றி முதன்முதலில் நேரடியாக அறிய நேர்ந்தது. இந்தியாவின் ஆன்மீகத்தில் நீண்ட காலமாக எழுந்திருந்த ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட அவர், பல்கலைக்கழக வளாகத்திற்கு வடக்கே என்சினிடாஸில் உள்ள எஸ் ஆர் எஃப் ஆசிரம மையத்திற்குச் சென்றார்; இது அருகிலுள்ள கடலோர சமூகங்களில் வாழும் பல மாணவர்களுக்கு ஒரு அறியப்பட்ட அடையாளமாக இருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, அவர் ஒரு யோகியின் சுயசரிதத்தின் பிரதியைக் காணநேர்ந்தது, மேலும் அதன் பக்கங்களிலிருந்து வெளிப்பட்ட உயர்ந்த ஞானம் மற்றும் இறை உணர்வால் உடனடியாக ஈர்க்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில், அவர் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்களுக்கு மாணவராகச் சேர்ந்தார் மற்றும் என்சினிடாஸில் எஸ் ஆர் எஃப் சத்சங்கங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அந்த நேரத்தில் அங்கு சன்னியாசியாக இருந்த சுவாமி ஆனந்தமோயியின் உரைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார், மேலும் சுவாமி ஆனந்தமோயியின் தனிப்பட்ட ஆலோசனையாலும் பயனடைந்தார். பரமஹம்ஸரின் அதிர்வலைகள் ஊடுருவி இருந்த இந்தப் புனிதமான சூழலில்தான், அங்கு வாழும் சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகளால் ஏற்பட்ட தாக்கத்தால், இறைவனை நாடுவதற்கும், ஒரு சன்னியாசச் சீடராக ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பணிக்காக சேவை செய்வதற்கும் தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற விருப்பம் உடனடியாக விழித்துக்கொண்டது.

சுவாமி சிதானந்தர் 1977 நவம்பர் 19 அன்று என்சினிடாஸில் உள்ள சன்னியாச விண்ணப்பதாரர்களுக்கான ஆசிரமத்தில் சேர்ந்தார், மற்றும் இளம் துறவிகளுக்கு பயிற்சிப் பொறுப்பாளாரக இருந்த புனித இல்ல சகோதரரான சுவாமி பிரேமமோயின் கண்டிப்பான மற்றும் அன்பான வழிகாட்டுதலின் கீழ் ஒன்றரை ஆண்டுகள் அங்கு கழித்தார். இந்த இளம் துறவியை எஸ் ஆர் எஃப் பதிப்பாசிரியர் துறைக்கு இணைத்துக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு ஸ்ரீ மிருணாளினி மாதாவிடம் முதலில் ஆலோசனை கூறியவர் சுவாமி பிரேமமோய். 1979 ஏப்ரலில், தனது துறவு விண்ணப்பாளர் பயிற்சியை முடித்த சுவாமி சிதானந்தர், மவுண்ட் வாஷிங்டனில் உள்ள எஸ் ஆர் எஃப் சர்வதேச தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார், உடனடியாக வெளியீடுகள் துறையில் பதிப்பகப் பணிக்கு நியமிக்கப்பட்டார், மிருணாளினி மாதா மற்றும் அவரது தலைமை இணை பதிப்பாசிரியர் சஹஜ மாதா ஆகியோரின் கீழ் பணியாற்றினார், அவர்கள் இருவரும் குருதேவரால் தனிப்பட்ட முறையில் எதிர்கால வெளியீட்டிற்கான அவரது படைப்புகளையும், உரைகளையும் வகுத்துத் தொகுக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.

1996-இல் சஹஜ மாதா மறைந்த சிறிது காலத்திற்குப் பின்னர், அப்போதைய தலைவர் ஸ்ரீ தயா மாதாவால், சுவாமி சிதானந்தா ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சர்வதேச வெளியீடுகள் குழுவுக்கு நியமிக்கப்பட்டார், அதில் அவர் தயா மாதா மற்றும் மிருணாளினி மாதாவுடன், 2010-இல் தயா மாதா அவர்களின் மறைவு வரை பணியாற்றினார். இந்த நேரத்தில் அவர் பரமஹம்ஸரின் மிகப்பெரிய சாத்திர விளக்கவுரைகள் (God Talks With Arjuna: The Bhagavad Gita The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You) மற்றும் 1980 முதல் தற்போது வரை வெளியிடப்பட்ட மற்ற அனைத்து எஸ் ஆர் எஃப் வெளியீடுகள் உட்பட பல படைப்புகளைத் தயாரிப்பதற்கும் வெளியிடுவதற்கும் இந்த இரண்டு மூத்த நேரடி சீடர்களுக்கு உதவினார். தயா மாதா, மிருணாளினி மாதா மற்றும் சஹஜ மாதா ஆகியோர்களிடம் பல ஆண்டுகள் படிப்படியான ஆழமான பயிற்சிக்குப் பிறகு, மிருணாளினி மாதாவால், அவர் மறைவிற்குப் பின், அவரைத் தொடர்ந்து ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் வெளியீடுகளின் தலைமைப் பதிப்பாசிரியராக இருப்பதற்கு நியமிக்கப்பட்டார்.

சுவாமி சிதானந்தருக்கு 1997ஆம் ஆண்டு ஸ்ரீ தயா மாதாவால் சன்னியாசத்தின் இறுதி, சன்னியாசச் சங்கல்பங்கள் வழங்கப்பட்டன. அவரது சன்னியாசப் பெயரான சிதானந்தம் என்றால் “எல்லையற்ற இறை உணர்வுநிலை (சித்) மூலம் பேரின்பம் (ஆனந்தம்) என்று பொருள்.” ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் விதிக்கப்பட்டிருந்த ஒரு சன்னியாசியான அவர், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் விரிவுரைச் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஏகாந்த வாச நிகழ்ச்சிகளின் போதும், லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் வருடாந்திர எஸ் ஆர் எஃப் உலக மாநாட்டு விழாக்களின் போதும், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் 2009 ஆம் ஆண்டில் ஸ்ரீ தயா மாதாவால் ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் இயக்குநர்கள் குழுமங்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார், மேலும் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் எஸ் ஆர் எஃப் -ன் எண்ணற்ற நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

 “நம் ஆன்மங்களின் ஒரே அன்புக்குரியவனாக இறைவனை இணைந்து நாடுதல்…”

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளிடம் உரையாற்றிய சுவாமி சிதானந்தா இவ்வாறு கூறினார்: “பணிவுடனும், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் தான் எப்போதும் இந்த அமைப்பின் தலைவர் என்ற உணர்வுடனும், நம் அன்புக்குரிய ஸ்ரீ தயா மாதா மற்றும் ஸ்ரீ மிருணாளினி மாதா ஆகியோரின் வேண்டுகோளாகிய, அவர்கள் வழியில் எடுத்துச் செல்வதை நிறைவேற்ற, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் உதவிகளையும் நான் கேட்கிறேன். குருதேவருடைய அன்பின் தூய வடிகால்களாக இருப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு — ஒவ்வோர் எண்ணம், தீர்மானம் மற்றும் செயல்பாட்டை அவரது விருப்பத்தினோடும், வழிகாட்டுதலினோடும் இசைந்திருக்க முயற்சிக்கும் அவர்களின் தெய்வீக உதாரணம் –- ஆசிரமத்தில் என் வாழ்க்கை முழுவதற்கும் உத்வேகமளிப்பதாக உள்ளது; இந்தப் புனிதப் பொறுப்புணர்வுடன், உங்கள் அனைவரின் உதவி, பிரார்த்தனை, நல்லெண்ணம் மற்றும் தெய்வீகத் தோழமை ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து, வரவிருக்கும் ஆண்டுகளில் இறைவன் மற்றும் குருமார்களின் இந்த மகத்தான பணிக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன்.

“நீங்கள் ஒவ்வொருவரும் குருதேவரினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சீடராவீர்கள். இறையன்பு, ஆனந்தம், சுயச் சரணாகதி ஆகியவற்றின் அந்த உணர்வில் — எதை நம் குருதேவர் நம் அனைவருக்கும் ஆணையிட்டாரோ மற்றும் எது தன் நிறுவனத்தின் உயிராகவும் வலிமையாகவும் வரும் எல்லாக் காலங்களிலும் இருக்கும் என முன்னுரைத்தாரோ அந்த உணர்வில் நமது ஆன்மாக்களின் ஒரே பேரன்புக்குரியவனாக இறைவனை நாடியவாறு — குருதேவருடைய சீடர்களின் ஒன்றுபட்ட ஒரு ஆன்மீகக் குடும்பமாக மட்டுமே, ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் இந்த மகத்தான பணியை நாம் இணைந்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை எற்றுக்கொள்வதன் நிமித்தமாக உங்கள் பாத தூளியை எடுத்துக்கொண்டு வணங்குகிறேன். ஜெய் குரு! ஜெய் மா!”

உலகளாவிய ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் ஆன்மீகக் குடும்பத்திற்கு, சுவாமி சிதானந்தர் பின்வரும் செய்தியை தெரிவிக்க விரும்புகிறார்:

“அன்பிற்குரியவர்களே, இறைவன் மற்றும் குருதேவரின் அன்பில் நான் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், பரமஹம்ஸ யோகானந்தர் நமக்கு கொண்டு வந்த ஆசீர்வதிக்கப்பட்ட பாதையாகிய இந்த கிரியா யோக தியானம் மற்றும் இறைவனுடன் இணக்கமாக வாழ்தலில், நாம் பயணிக்கும் போது நம் அனைவருக்குமான அவர்களின் தொடர்ச்சியான வாழ்த்துக்களைக் கோருகிறேன். ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் ஆசிரமங்களில் உள்ள சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகள் அனைவரையும் போலவே, உங்கள் அனைவருக்கும் சேவை செய்யும் வாய்ப்பை அளித்தமைக்காக அவரது பெயரில் நான் பணிவுடன் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சாதாரண சீடரோ அல்லது சன்னியாசப் பாதையில் இருப்பவரோ— இறைவனை நாடும் ஆன்மாக்களின் ஒரு உலகளாவிய குழுவாக, இந்தப் போதனைகளின் ஆன்மீக அருளாசிகளுக்காகவும், நமது சொந்த முயற்சியையும் , இறைவனுடனும், குருமார்களுடனும் ஆன அகக் கூட்டுறவையும் ஆழப்படுத்தும் தீர்மானத்திலும் நன்றியுணர்வில் அனைவரும் ஒன்றுபடுவோம். நீங்கள் ஒவ்வொருவரும் அவர்களின் தடையற்ற அருளாசிகளை உணர்வீர்களாக. ஜெய் குரு!”

இதைப் பகிர