YSS

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் கடைசி கிறிஸ்துமஸ் செய்தி

தெய்வீக முதல்வனாகிய இயேசுவின் வடிவத்தில் கிறிஸ்து உணர்வுநிலை பிறப்பை நாம் சிறப்பிக்கும் அதே சமயம், இந்த புனிதப் பருவத்தில் மிகவும் வலுவாக உணரப்பட்ட ஆனந்தம் மற்றும் நம்பிக்கையால் உங்கள் இதயம் புதிதாக உயர்த்தப்படட்டும். இறைவனின் ஒளியை முற்றிலும் பிரதிபலிக்கும் அத்தகைய மகான்களின் வருகை, நாமும் ஒரு விஷயம் சார்ந்த இருப்பிலிருந்து நமது ஆன்மாவின் எல்லையற்ற இயல்புக்கு ஒரு மறுபிறப்பை அனுபவிக்க முடியும் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. நம்முடைய உணர்வுநிலையை விரிவுபடுத்தி, நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும், மற்றவர்களுடனான நமது உறவுகளிலும் இறைவனின் மேன்மை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்குமான நமது சொந்த எல்லையற்ற ஆற்றலை நாம் அவர்களிடம் காண்கிறோம்.

இயேசு பிறந்ததிலிருந்து நூற்றாண்டுகள் பல வந்து கழிந்தாலும், அவருடைய உதாரணத்தின் சக்தியும் அவரது எங்கும் நிறைந்த அன்பும் ஏற்புத் திறன் கொண்ட ஆன்மாக்களை இயல்மாற்றம் செய்து கொண்டே இருக்கின்றன. அவரும் மிகுந்த சச்சரவுகளும் கொந்தளிப்புகளும் நிறைந்த ஒரு காலத்தில்தான் வாழ்ந்தார், ஆனால் அவர் தெய்வத் தன்மையுடன் எதிர் வினையாற்றுவது எப்படி என்பதைக் காட்டினார் – தெய்வத் தந்தையுடன் இசைந்திருந்தால், நாமும் அவரைப் போலவே அனைவருக்காகவும் உணர முடியும், இந்த உலகத்தின் இருமைகளுக்கு மேலே எழுந்து, அகத்துள் அமைதியைக் கண்டறிந்து மற்றவர்களுக்கு அன்பையும் அமைதியையும் கொடுப்பவராக இருக்கவும் முடியும்.

கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஆழ்ந்து, அவர் வெளிப்படுத்திய குணங்களை பின்பற்ற முயற்சிப்பதன் மூலம், அவரிடமும், இறைவனுடன் இணக்கத்திலிருக்கும் எல்லா ஆன்மாக்களிலும் வெளிப்படும் பரம்பொருளை இன்னும் ஆழமாக கிரகித்துக் கொள்ள உங்கள் இதயத்தைத் திறப்பீர்கள். பிரபஞ்சத்தை நிலைநிறுத்தும் ஆற்றல் அவரது இருப்பை நிரப்பியது; இறைவனின் சித்தத்தையும் அவருடைய அன்பையும் முழுமையாக வெளிப்படுத்துவதற்கு இசைவளித்த அவரது பணிவு மேலும் சிறந்தது. நமது அகந்தையின் தேவைகள் மற்றும் அபிப்பிராயங்களின் எல்லைக்குள் நாம் வாழும் வரை, இறைவனிடமிருந்தும் மற்றவரிடமிருந்தும் நம்மைப் பிரிக்கும் தடைகளை எளிதில் உருவாக்குகிறோம். ஆனால், நாம் சுயத்தைப் பற்றி குறைவாக நினைக்கும் போது, எல்லா வழிகளிலும் நமக்கு வரும் அவருடைய ஞானத்தை ஏற்றுக்கொள்கிறோம், இதனால் நமது புரிதலையும் கருணையையும் விரிவுபடுத்திக்கொள்கிறோம். தெய்வத் தந்தையின் அன்பில் பாதுகாப்பாக இருந்த கிறிஸ்து, பதவி அல்லது வெளி அங்கீகாரத்திற்கான எந்த தேவையும் இல்லாமல் இருந்தார். அவர் சேவை செய்ய மட்டுமே முயன்றார், அவர் செய்தது போலவே செய்வதன் மூலம், கொடுப்பதன் ஆனந்தத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். கிறிஸ்து அனைவரிடமும் தெய்வீகத்தைக் கண்டார் – தவறு செய்தவர்களிடமிருந்தும் கூட, அவர்களின் உண்மையான சுயத்தைக் காண அவர்களின் மனிதக் குறைபாடுகளுக்கு அப்பால் பார்த்தார். “என் இறைவன் அந்த ஆன்மாவில் இருக்கிறார்” என்ற உணர்தலில் வரும் அன்பான, மதிப்பீடு செய்ய முயலாத மனப்பான்மையை நாமும் கூட பயிற்சி செய்யலாம்.

ஒவ்வொரு வெளிக்களம் சென்றடையச் செய்யும் செயலும் நமது உணர்வநிலையை விரிவுபடுத்துகிறது, ஆனால் அமைதியற்ற எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் அடங்கும் அமைதி கோவிலுக்குள் செல்வதன் மூலம் “எல்லா புரிதலையும் தாண்டிய அமைதியை” நாம் முழுமையாக அனுபவிக்க முடியும், கிறிஸ்து உணர்ந்த அந்த எல்லையற்ற அன்பை – இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் தன்னிடம் ஈர்க்க பயன்படுத்தும் அந்த அன்பை உணர முடியும். இத்தகைய ஆழமான அகத் தொடர்பு படிப்படியாக வருகிறது, ஆனால் ஒவ்வொரு முயற்சியும் நம் வாழ்வில் அதிக அமைதியையும், பரிவையும், இறை நெருக்கத்தையும் கொண்டுவரும். நாம் விடாமுயற்சியுடன் இருந்தால், “எல்லையற்ற அருள், விவரிக்க முடியாத மகிமை, நித்திய பாதுகாப்பு ஆகியவற்றுடன் சொல்ல முடியாத இனிமையான ஒரு தொடர்பை” அடைய முடியும் என்று குருதேவர் கூறியுள்ளார். இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் இறைவன் உங்களுக்கு அளிக்கும் விலைமதிப்பற்ற பரிசு அது. இது ஒரு ஆனந்தமயமான ஆன்ம விழிப்புணர்வின் தொடக்கமாகவும்,அவரது அனைத்தையும் அரவணைக்கும் அன்பையும் புரிதலையும் பகிர்ந்து கொள்ளும் நேரமாகவும் இருக்கட்டும்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகுந்த அருளாசிகளுடனான கிறிஸ்துமஸ்,

தயா மாதா கையெழுத்து

ஶ்ரீ தயா மாதா

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp