உமர் கயாமின் ரூபியாத்திலுள்ள இரகசிய உண்மைகள்

உமர் கய்யாமின் ரூபாயத் மீதான முழு விளக்க உரைகளை வழங்கும் இத் தொகுதி, மூன்று புகழ்பெற்ற மனிதர்களின் கவிதை மற்றும் ஆன்மீக ரீதியான நுண்ணறிவுத் திறன்களை ஒருங்கே கொணர்கிறது. இம்மனிதர்களது வாழ்க்கைகள் 900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால இடைவெளியில் அமைந்துள்ளன. பதினோராம் நூற்றாண்டு உமர்கயாமின் அருட்பாக்கள் மற்றும் இவற்றின் 19வது நூற்றாண்டு எட்வர்ட் ஃபிட்ஸ் கெரால்டின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு ஆகியவை வெகுகாலமாக வாசகர்களை பரவசப்படுத்தி உள்ளன. ஆனாலும் இக்கவிதையின் உண்மையான பொருள் விளக்கம் மிகுந்த சர்ச்சைக்குரிய பொருளாக இருந்து வந்துள்ளது. தனது ஞான ஒளி ஊட்டும் பொருள் விளக்கத்தில் பரமஹம்ஸ யோகானந்தர், புரியாத உருவகத்திரைக்குப்பின் உள்ள இந்த உயர் தரமான இலக்கிய நூலின் பரதத்துவ சாரத்தை வெளிப்படுத்துகிறார்.

பரமஹம்ஸரின் ரூபையாத் மீதான பொருள் விளக்கமானது, கீழை மற்றும் மேலை நாட்டு மக்களை ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள இயல்பான தெய்வீகத்தை பற்றிய ஓர் ஆழ்ந்த புரிதலுக்கு விழிப்புற செய்வதற்கான ஒரு வாழ்நாள் முயற்சியின் ஓர் அம்சமாகும். அனைத்து ஆன்மீக மரபுகளைச் சார்ந்த ஞான ஒளி பெற்ற மகான்களைப் போல், ஸ்ரீ யோகானந்தர் பல்வேறு சமயங்களின் கோட்பாடுகள் மற்றும் சடங்குகளில் அடிப்படையாக இருப்பது, ஒரே எல்லை கடந்த மெய்மையான ஒரே பரம்பொருள் என்பதை கண்டார். இந்த உலகளாவிய நோக்கு மற்றும் விசாலமான பார்வையும் தான் அவருக்கு இந்தியாவின் புராதன யோக விஞ்ஞானத்தின் போதனைகள் மற்றும் இஸ்லாமிய உலகத்தின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பரத்துவ கவிஞர்களில் ஒருவரான உமர்கய்யாமின் படைப்புகளுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவு முறையை தெளிவாக விளக்கக் கூடிய வல்லமையை அளித்தது.

Wine of Mystic book cover.

இந்தப் புத்தகம், வெறுமனே ஒரு விளக்க உரை மட்டுமின்றி அதற்கும் மேற்பட்டு, வாழ்க்கை நடத்தைக்கு ஓர் ஆன்மீக போதனையை வழங்குகிறது. உமர்கய்யாமின் வெளிப்புறக் கற்பனைக்கு பின்னால், மனித வாழ்க்கையின் ஆனந்தம் மற்றும் உன்னத நோக்கம் பற்றிய மிகவும் அழகான ஓர் புரிதல் மறைந்துள்ளது என பரமஹம்ஸ யோகானந்தர் வெளிப்படுத்தினார்.

“உமர்கய்யாமின் திருவெளிப்பாடு”
“மறை ஞானியின் மது” என்ற நூலிற்கான பரமஹம்ஸ யோகானந்தரின் அறிமுக உரையில் இருந்து:

“இந்தியாவில், நீண்ட காலத்திற்கு முன் ஒரு மரியாதைக்குரிய பாரசீக கவிஞரை சந்தித்தேன். அவர், பாரசீகக் கவிதைகள் பெரும்பாலும் ஒரு வெளிப்புற மற்றுமொரு உட்புற அர்த்தங்கள் என இரண்டு அர்த்தங்களைக் கொண்டு இருக்கும் என கூறினார். பல பாரசீக கவிதைகளின் இருபொருள் முக்கியத்துவத்தை பற்றிய அவரது விளக்கங்களிலிருந்து நான் பெற்ற சிறந்த மனநிறைவை இன்னும் நினைவு கூறுகிறேன்.”

“ஒருநாள் உமர்கயாமின் ரூபையாத் பக்கங்களில் நான் ஆழ்ந்த கவனம் செலுத்திக் கொண்டிருந்த போது, வெளிப்புற அர்த்தங்களின் சுவர்கள் திடீரென நொறுங்கி, விலைமதிப்பற்ற ஆன்மீகப் பொக்கிஷங்களாலான பரந்தகன்ற உட்புற (அர்த்த) கோட்டை என் பார்வைக்கு முன் தெளிவாக நின்றது.”

“அப்பொழுதிலிருந்து, ரூபையாத்திலுள்ள, அதற்குமுன் கட்புலனாகா உட்புற ஞான கோட்டையின் அழகை வியந்து பாராட்டிய வண்ணம் உள்ளேன். எந்த விவேகம் மிக்க கண்ணினாலும் பார்க்கப்படக்கூடிய இந்த உண்மையின் கனவு கோட்டை, அறியாமை எனும் எதிரிகளால் தாக்கப் பெற்று புகலிடம் நாடும் பல ஆன்மாக்களுக்கு புகலிடமாகத் திகழும் என்று நான் உணர்கிறேன்.”

“ரூபையாத்தின் ஆன்மீக விளக்க உரைப் பணியில் நான் ஈடுபட்டபோது, நான் பரவசத்துடன் வியப்புணர்வில் மூழ்கும் வரை, அப்பணி என்னை சத்தியத்தின் ஒரு சிக்கலான முடிவற்ற பாதையினுள் இட்டுச் சென்றது. இந்தப் பாக்களில் பரதத்துவ மற்றும் நடைமுறை தத்துவங்கள் மீதான கய்யாமின் திரைமறைப்பு எனக்கு தெய்வத்திரு புனித யோவானின் திரு வெளிப்பாடுகளை நினைவூட்டுகின்றன. ரூபையாத் நிச்சயமாக “உமர்கய்யாமின் திருவெளிப்பாடுகள்” என்றழைக்கப்படலாம்

மறைஞானியின் மது” நூலின் மீதான பரமஹம்ஸ யோகானந்தரது விளக்க உரையிலிருந்து சில
பகுதிகள் தியானம் மற்றும் இறை தொடர்பு குறித்து…

இங்கு ஒரு ரொட்டித் துண்டுடன் மரக்கிளையின் கீழ் ஒரு குடுவை மது, ஓர் இறைக்கீதப் புத்தகம்—அத்துடன்
என்னருகில் நீ பாடி கொண்டிருக்கிறாய் காட்டில்..
இக்காடே சொர்க்கம் போதுமானது ..

“தியானத்தில் ஆழ்மெளனத்தில் அமர்ந்து கொண்டு, என் மனம் உயிர் சக்தி மற்றும் உணர்வு நிலையிலான மூளை முதுகுத்தண்டு மரத்தில் ஒருமுகப்பட்ட வண்ணம், நான் அமைதியின் நிழலில் இளைப்பாறுகிறேன். பிராணன் [உயிர் சக்தி] எனும் உயிர் – அளிக்கும் ரொட்டியால் ஊட்டமூட்டப்பட்டு நான் என் ஆன்மாவெனும் பீப்பாயில் பொங்கித் ததும்பும், தெய்வீக பரவசம் எனும் மிகப்பழைய மதுவை விழுங்குகிறேன். சாசுவத தெய்வீக அன்பின் எழுச்சியூட்டும் கவிதைகளை என் மனம் இடைவிடாது இசைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மிகவும் உள்ளார்ந்த அதி ஆழம் என்னும் காட்டில் – எங்கிருந்து கும்பலாக எழும் ஆசைகளின் அமளி ஓய்ந்துவிட்டுள்ளதோ அக்காட்டில் – நான் பாடிக் கொண்டிருக்கும் பேரின்பம் எனும் என் ஒப்புயர்வற்ற அன்பான உன்னிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன். நீ என்னிடம் இனிமையாக அனைத்து ஆசைகளைப் பூர்த்தி செய்யும் ஞானகீதத்தை இசைத்துக் கொண்டிருக்கிறாய். லெளகீக ஆசைகள் மற்றும் தீவிர உணர்ச்சிகள் எனும் இரைச்சலிலிருந்து விடுபட்டுள்ள ஓ காடே! இந்தத் தன்னந்தனிமையிலும் நான் தனியாய் இல்லை. என் அகமெளனம் எனும் ஏகாந்தத்தில் நான் முடிவற்ற ஆனந்தம் என்னும் சொர்க்கத்தைக் கண்டுள்ளேன்.”

அக அமைதி மற்றும் பூரண மன நிறைவின் மேல்…

 A man behind woman (depicting worldly desires).

மனிதர்கள் தங்கள் இதயங்களை இருத்தும் லெளகீக எதிர்பார்ப்புகள் சாம்பலாக மாறுகின்றன – அல்லது வளமுறுகின்றன; பாலைவனத்து தூசிமிக்க முகம் மேலுள்ள பனிபோல் ஓரிரு மணி நேரம் எரிந்து…… அணைந்து விடுகிறது, சிறிது நேரத்திலேயே…

அறியாமை மிக்க மனிதன்தான் இப்பூவுலகிலிருந்து பரிபூரணத்தையும் நீடிக்கும் மனநிறைவையும் எதிர்பார்த்து உடைந்த இதயத்துடன் கல்லறை வாயிலில் நுழைகிறான். விவேக மிக்க மனிதன், உலகத்தின் ஏமாற்றும் இயல்பை அறிந்து கொண்டு இங்கு ஆசைகளை வளர்த்துக் கொள்வதில்லை. லெளகீக ஆசைகளால் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டு விவேகிகள், நீடித்திருக்கும் மெய்மையை நாடுகின்றனர்; அவர்கள் சாசுவத பூரணத்துவத்தின் பிரம்மாண்டத்தில் நுழைகின்றனர்

ஓ, என் அன்பனே, கோப்பையை இன்று
பழைய வருத்தங்களையும் எதிர்கால அச்சங்களையும்
நீக்கும் ஆனந்தத்தால் நிரப்பு. நாளை – ஏன் நாளை,
நான் என்னுடைய எல்லையற்ற கடந்த காலத்துடன் இருக்கலாம்.

ஓ என் ஆன்மாவே, எனது உணர்வு நிலையை பரவச பீப்பாயிலிருந்து பொழியும் அமிர்தத்தால் நிரப்பு- தெய்வீகத் தொடர்பு மட்டும்தான் மனத்தை வாட்டும் கடந்த காலப் பாவங்கள் மற்றும் எதிர்கால தவறுகள் அனைத்தையும் அவற்றின் தீய விளைவுகளுடன் நீக்க முடியும்.

தியானத்தின் வாயிலாக ஒருவர், வாழ்க்கையின் பொறுப்புகளால், கோரப்படும் அனைத்து இணக்கமான அல்லது சோதனைமிக்க செயல் பாடுகளுக்கு ஒரு நிரந்தர இதமான பின்னணி சூழலாக இருக்கக்கூடிய ஒரு நிலையான அக அமைதியை அனுபவிக்க முடியும். ஒரு மணற்குவியல் பெரும் கடல் அலைகளின் அரிப்புத் தன்மையை தாக்குப்பிடிக்க முடியாது; சஞ்சலமற்ற அக அமைதி இல்லாத ஒருவர் மனப் போராட்டத்தின் போது, சாந்தமாக இருக்க முடியாது. ஒரு வைரம் எவ்வாறு பல கடல் அலைகள் அதனைச் சுற்றி சுழன்றாலும் சரி, மாற்றமடையாது உள்ளது போல், அமைதி உறுதிப்பாடு உடைய ஒரு தனிநபர், அவரை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சோதனை சூழ்ந்தாலும், அவர் பிரகாசமாக சாந்தத்துடன் தொடர்ந்திருக்கிறார். வாழ்க்கை எனும் மாற்றங்கள் நிறைந்த தண்ணீரிலிருந்து, தியானத்தின் வாயிலாக, மாற்றம் அடைய முடியாத ஆன்ம உணர்வு நிலையெனும், பரம்பொருளின் நீடித்த ஆனந்தத்துடன் ஜொலிக்கும் வைரத்தை மீட்டெடுப்போம்.

ஆன்மீகத் தேடல் மீது…

அவர்களிடம் ஞானத்தின் விதையை நானே விதைத்தேன்
என் சொந்தக் கரங்களால் அது வளரப் பாடுபட்டேன்:
ஆனால் நான் அறுவடை செய்தது இதை மட்டும்தான்—
“நான் தண்ணீர் போல் வந்தேன், காற்றைப் போன்று செல்கிறேன்.”

ஞான விதையானது குரு அல்லது ஆசானால் விதைக்கப்படுகிறது. ஆனால் மண் அதாவது ஏற்புத் திறன் மற்றும் அவ் விதையின் வளர்ச்சி சாதகரால் வழங்கப்பட வேண்டும்….. சுய – ஒழுக்கம் என்பது சுய சித்திரவதையன்று; அது, கட்டுக்கடங்காமல் மனச்சக்திகளை ஒழுங்குபடுத்தி, நமக்கு உண்மையான மகிழ்ச்சியை கொணரவல்ல வாழ்க்கையின் அந்த குறிப்பிட்ட பழக்கங்கள் மீது அவற்றை ஒருமுகப்படச் செய்யும் ஒரு வழி. சுய ஒழுங்கின் வழிமுறைகளை விடாப்பிடியுடன் பின்பற்றுவதன் மூலம் நாம் நம்மை, அமைதியின்மை, தீய பழக்கங்கள், துன்பத்தை உருவாக்கும் ஆசைகள் ஆகியவற்றிலிருந்து விடுவித்து, உண்மையான மகிழ்ச்சி உடையவர்களாவோம். நாம் பலவீனமாகவும், அமைதியற்றும் மனதளவில் நிலையற்றும் இருக்கும்போது, நாம் தண்ணீரைப் போல் பூமியுடன் தொடர்ந்து பிணைக்கப் படுகிறோம். ஆனால் நாம் சுய ஒழுங்கு மற்றும் ஆழ் தியானத்தின் வாயிலாக ஆன்மீகமானவர்களாக மாறும் போது, காற்றைப் போல் நமது உண்மையான ஆன்ம இயல்பின் சர்வ வியாபகத்தில் நாம் உயர்ந்து எழுகிறோம்.

Woman flying like wind in the omnipresence of her true soul nature.

கர்மவினை விதிமுறையை கடப்பதின் மீது…

Humans on checkerboard represent limitations behind the prison walls of past, present, and future.

‘இவையெல்லாம் இரவுகள் மற்றும் பகல்களான ஒரு
சதுரங்கப் பலகை. அங்கு மனிதர்களின் ஊழ்வினை சதுரங்கக் காய்களாக்கப்படுகின்றன, இங்குமங்கும் நகர்த்தப்படுகின்றன, இணைக்கப்படுகின்றன, மற்றும் அழிக்கப்படுகின்றன.. ஒருவர் பின் ஒருவராக அவர்கள் இரகசியமாகப் புதைக்கப்படுகின்றனர்

கருப்பு மற்றும் வெள்ளை நிற சதுரங்களைக் கொண்டுள்ள ஒரு சதுரங்கப் பலகை மேல், ஆட்சியாளர்கள் மற்றும் அடிமைகளைக் குறிக்கும் சதுரங்கக் காய்கள் அங்குமிங்கும் நகர்த்தப்படுவது போல், சுற்றிக் கொண்டிருக்கும் பூமி அதன் பகல்கள் மற்றும் இரவுகளுடன் ஒரு சதுரங்கப் பலகை போல் உருக்கொண்டு, அதன் மீது மனித வாழ்க்கை எனும் சதுரங்கக் காய்கள் நகர்த்தப்படுகின்றன. . . . மனிதர்கள் ஒரு நிலை அல்லது நிலைமையில் இருந்து, மற்றொன்றிற்கு அவர்கள் வாழ்க்கை முழுதூடாக நகர்த்தப்படுகின்றனர், பெரும்பாலும் அவர்களது திட்டங்கள் நிறைவேற்றப்பட முடியாமல் இலட்சியத்தில் ஏமாற்றப்படுகின்றனர். இறுதியாக அவர்களது வாழ்க்கை, மரணம் என்றழைக்கப்படும், மாற்றத்தால் சிறியதாக துண்டிக்கப்படுகிறது….

விதியானது உங்கள் வாழ்க்கை எனும் விளையாட்டை முன்னேற்றங்கள், தேக்க நிலைகள் மற்றும் பின்னடைவுகள் வாயிலாக சாமர்த்தியமாக கையாளும் போது, இந்த விளைவுகள் கடந்தகாலப் பிறவிகளில் நீங்கள் உருவாக்கிய காரணங்களால் ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் இன்னல்களுக்கு உங்கள் தலைவிதியை சபிக்கவோ அல்லது உங்கள் நற்பேற்றிற்கு, உங்கள் அதிர்ஷ்டத்தை காரணகர்த்தாவாக போற்றவோ கூடாது, மாறாக உங்கள் வாழ்வின் திருப்பங்களுக்கு உங்கள் சொந்த செயல்களே காரணம் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். சுயமாக உருவாக்கப்பட்ட உங்கள் விதியைக் கண்டு நீங்கள் வருந்தினால், அந்த விதியினை மாற்ற இறைவன் உங்களுக்கு சுதந்திர விருப்பத்தேர்வு எனும் சக்தியை அளித்து உள்ளான் என்பதை நினைவூட்டிக் கொள்ளுங்கள். சரியான செயலிற்கான நீண்ட கால முயற்சிகள் படிப்படியான பயன்களை உருவாக்குகின்றன; ஆனால் இதனுடன் கூட, ஆழ் தியானத்தின் மூலம் எழும் இறைஞானத்துடன் கூடிய இச்சா சக்தியை நினைத்தால், நீங்கள் உடனடியாக உண்மையான சுதந்திரத்தின் பொருளை உணர்வீர்கள்.

ஒவ்வொரு பிறவியாக நமது உற்சாகத்தை அழித்துக்கொண்டு நமது விதியை கட்டுப்படுத்த காலம் மற்றும் ஊழ்வினையை அனுமதிப்பதிற்கு பதிலாக, இறைவன் தன் தெய்வீக ஸ்பரிசத்தால் நம்மை அழிவற்றவர்களாக ஆக்க ஏன் அனுமதிக்கக்கூடாது? இனிமேலும், ஓய்விற்காக நாம், இறப்பிற்கு பிற்பட்ட வாழ்வின் மடியில் தவழ வேண்டிய அவசியமில்லை. இறைவனுடன் இருப்பதால், நாமே சாசுவத வாழ்வாக மாறி, கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால சிறைச் சுவர்களின் பின்னுள்ள வரையறைகளால் ஒரு போதும் மீண்டும் அடிமைப் படுத்தப் படாமல் இருப்போம்.

பிரபஞ்ச நாடகத்தின் பொருள்மேல்…

Man sees the end of the Cosmic Drama directed by God.

ஓ பேரன்பே, நீயும் நானும் விதியுடன் சேர்ந்து இந்த சூழ்ச்சி முறையின் முழு அம்சங்களையும் கிரகிக்க ரகசிய திட்டமிடுவோமா, இதை நாம் சுக்குநூறாகத் தூளாக்கிப் பிறகு அதை இதய ஆசைக்கேற்றவாறு, புதிதாக வார்ப்பிட்டு செய்வோமா!

இவ்வாறு ஒவ்வொரு மனிதனும், சில சமயங்களில் படைப்பாளியின் பங்கை தான் செய்து, இந்த உலகத்தை தன் இதய ஆசைகளுக்கேற்றவாறு ஆக்க விரும்புகிறான். கலப்படமற்ற ஆனந்ததிற்கான இந்த ஏக்கம், ஒருவரது உண்மையான இருப்பின் தெய்வீகமான உள்ளார்ந்த முழு நிறைவு மற்றும் சாஸ்வத பேரின்பம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள ஆன்மாவின் மையத்திலிருந்து எழுகிறது.
இந்த உலகம் ஒரு தெய்வீகப் புதிர்- தீமை நன்மையுடனும், இன்பம் துன்பத்துடனும், வாழ்வு மரணத்துடனும் கலந்தவாறு. . . . . நாம் மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது, அல்லது படைப்பிலுள்ள ஒரு தெய்வீகத்திட்டத்தை இயற்கையிலுள்ள அனைத்து நன்மை மற்றும் தீமை, இன்பம் மற்றும் துன்பம், ஏழை மற்றும் பணக்காரன், நோய் மற்றும் ஆரோக்கியம், போர் மற்றும் அமைதி, கனிவு மற்றும் கொடுமை ஆகியவற்றிலான முரண்பாடுகளை நாம் புரிந்துகொள்ள முடியாமல், நம்பாதவர்களாக மாறக்கூடாது. ஒரு வெற்றிகரமான நாடகம் மர்மத்தைக் கொண்டுள்ளது, ஆர்வத்தை வசீகரிக்கிறது, திகைக்க அல்லது குழப்பச் செய்கிறது, ஒரு மனநிறைவான நாடகப் பாணி காட்சியுடன் முடிவடைகிறது. இதுபோலவே, இறைவன் உரிய காலத்தில் திடீரென- முன்னேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆன்மாவின் திரையை விலக்கி, பல இன்பவியல் மற்றும் துன்பவியல் செயல்பாடுகளின் பின்னே நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ள பிரபஞ்ச நாடகத்தின் இறுதிப் பகுதியை, அதன் மாபெரும் உன்னத முடிவை தெரியப்படுத்துவதற்காக, வெளிப்படுத்துகிறான்.

இறைவனின் அன்பின் மேல்…

ஒருவன் கூறினான்- “முரட்டுத்தனமான சாராயப் பணியாள் மக்கள் கூறுகின்றனர் மற்றும் அவன் முகத்தை நரகம் எனும் தூசியால் அழுக்காக்குகின்றனர், மேலும் நம்மை கடுமையாக சோதிப்பதைப் பற்றி பேசுகின்றனர்– சீ சீ அவன் ஒரு நல்லவன் மற்றும் அனைத்தும் நல்லபடியாக இருக்கும்.”

தங்கள் படைப்பாளியை, அதிகாரத்துடன் அறியாமையாகிய தூசி மற்றும் தண்டனை என்ற தீயுடன் மனிதனை சோதிப்பவன், மற்றும் மனிதர்களின் செயல்களை ஈவு இரக்கமற்ற ஆய்வுடன் எடை போடுபவன் என்று சித்தரிக்கும் மக்கள் உள்ளனர். அவர்கள், இவ்வாறு, இறைவன் ஓர் அன்பு மிக்க, கருணை நிறைந்த தெய்வத் தந்தை என்ற கருத்தை, அவன் ஒரு கண்டிப்பான ஈவு இரக்கமற்ற பழிவாங்கும் கொடுங்கோலன் என்ற தவறான பிரதி பிம்பமாக திரித்துக் கூறுகின்றனர். ஆனால், இறைவனுடன் தொடர்பு கொள்ளும் சாதகர்கள், இறைவனை அனைத்து அன்பு மற்றும் நன்மையின் எல்லையற்ற கொள்கலன் எனும் கருணைமிக்க பேரிருப்பு என்று எண்ணுவதைத் தவிர, வேறு வகையில் எண்ணுவதை முட்டாள்தனம் என்று அறிகின்றனர். பிரபஞ்சத்தின் தந்தையான இறைவன் நல்லவனாக இருப்பதால் அவனது குழந்தைகளின் அனைத்துமே நல்ல முறையில் முடியவேண்டும்; அவர்களும், அனைத்துப் படைப்பும் ஒரு உன்னதமான உச்சக் காட்சி மற்றும் அவனுடனான மீண்டும் ஐக்கியமாவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறனர்.

மறைஞானியின் மது‘ எனும் நூலில் கூடுதலாக வாசியுங்கள்: பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய உமர் கய்யாமின் ரூபையத் மீதான ஒரு ஆன்மீக விளக்க உரை.

இதைப் பகிர