முதன் முதலில் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவங்கள்

பரமஹம்ஸ யோகானந்தரின் சீடர்கள் ‘ஒரு யோகியின் சுயசரித’ த்தை எவ்வாறு காணப்பெற்றனர்

1946 டிசம்பரில் தான் ஒரு யோகியின் சுயசரிதம் -ன் முதல் பிரதிகள் நியூயார்க்கில் உள்ள அச்சகத்திலிருந்து ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப் சர்வதேச தலைமையகத்திற்கு வந்தன. 1996-ம் ஆண்டில் புத்தகத்தின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன்னமும் நம்முடன் இருந்த பரமஹம்ஸ யோகானந்தரின் நெருங்கிய சீடர்கள் பலர், புத்தகங்கள் வந்த நாள் மற்றும் அது அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதன் பக்கங்களில் இருந்து வெளிப்படும் தெய்வீக ஞானம், அன்பு மற்றும் வாழ்க்கையை மாற்றும் கண்ணோட்டம் ஆகியவைகளை முதலில் அனுபவித்த பலரில் அவர்கள் இருந்தனர் — அதன் பின்னர் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றிவிட்ட பக்கங்கள்.

Sri Daya Mata former president of SRF

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா

ஒரு யோகியின் சுயசரிதத்தை உருவாக்கும் திட்டத்தில் பரமஹம்ஸ யோகானந்தர் பல வருட காலமாக செயல்பட்டார். 1931-ல் நான் மவுண்ட் வாஷிங்டனுக்கு வந்தபோது, அவர் ஏற்கனவே அதன் பணிகளைத் துவங்கி விட்டிருந்தார். ஒருமுறை நான் அவரது வாசிப்பு அறையில், அவருக்காக சில செயலக கடமைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, அவர் எழுதிய முதல் அத்தியாயங்களில் ஒன்றைப் பார்க்கும் பேறு பெற்றேன் — அது “புலிச்சாமியார்” பற்றியது. குருதேவர், அவை ஒரு புத்தகத்தில் வரவேண்டி இருப்பதால் அதைப் பாதுகாக்குமாறு என்னிடம் கூறினார்.

எனினும், அவரது சுயசரிதத்தின் மிகப்பெரிய பகுதி 1937-45 காலகட்டத்தில் எழுதப்பட்டது. பரமஹம்ஸருக்கு பல பொறுப்புகளும் கடமைகளும் இருந்தன, அவரால் தினமும் தனது புத்தகத்திற்காக வேலை செய்ய முடியவில்லை; ஆனால் பொதுவாக மாலை நேரங்களையும், கவனம் செலுத்த முடிந்த வேறு எந்த ஒரு ஓய்வு நேரத்தையும் அதற்காக அர்ப்பணித்தார். நாங்கள் ஒரு சிறிய குழு – ஆனந்த் மாதா (கீழே), ஷ்ரத்தா மாதா, மற்றும் நான் – அந்த நேரத்தில் அவரை சுற்றி அமர்ந்து, கையெழுத்துப் பிரதியை தட்டச்சு செய்ய உதவினோம். ஒவ்வொரு பாகமும் தட்டச்சு செய்யப்பட்ட பிறகு, குருதேவர் தனக்கு பதிப்பாசிரியராக பணியாற்றிய தாரா மாதாவிடம் அதைத் தருவார்.

Sri Ananda Mata Sannyasini disciple of Paramahansa Yogananda

ஒரு நாள், தனது சுயசரித வேலையின் போது, குரு எங்களிடம் கூறினார்: “நான் இந்த உலகத்தை விட்டுச் சென்ற பின்னர், இந்தப்புத்தகம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றும். என் மறைவுக்குப் பிறகு அது என் தூதராக இருக்கும்.”

கையெழுத்துப் பிரதி முடிந்ததும், தாரா மாதா அதற்கு ஒரு வெளியீட்டாளரைத் தேடி நியூயார்க் சென்றார், பரமஹம்ஸருக்கு அவரது அறிவு மற்றும் பதிப்புத் திறமைகள் மீது மிகுந்த மதிப்பு இருந்தது, மேலும் அடிக்கடி வெளிப்படையாகவே அவரைப் பாராட்டினார். அவர் கூறினார்: “இந்த புத்தகத்திற்காக அவர் என்ன செய்தார் என்பதை என்னால் விவரிக்கத் தொடங்கக் கூட முடியாது. நியூயார்க் செல்வதற்கு முன்பு அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். அந்த நிலையிலேயே நியூயார்க் சென்றார். அவர் இல்லமாலிருந்தால், புத்தகம் ஒருபோதும் இந்நிலைக்கு முன்னேறியிருக்காது”

புத்தகம் நிறைவடைந்ததை அறிந்த குருதேவர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். ஆசிரமங்களில் இருந்த மற்ற பல பக்தர்களுக்கு செய்ததைப் போல, என் பிரதியைத் தன் கையெழுத்திட்டுக் கொடுத்தார். நான் கையெழுத்துப் பிரதியை தட்டச்சு செய்ய உதவியிருந்ததால், நான் அதைப் பெற்றபோது, இது ஒரு அழியாத புத்தகம் என்று எனக்குத் தெரிந்திருந்தது — முன் எப்போதும் சொல்லப்படாத விதமாக தெளிவாகவும் உத்வேகம் அளிக்கும் முறையிலும் மறைக்கப்பட்ட உண்மைகளை முதல் முறையாக வெளிப்படுத்திய புத்தகம். அற்புதங்கள், மறுபிறவி, கர்ம வினைகள், மரணத்திற்கு அப்பாலான வாழ்க்கை மற்றும் அதன் பக்கங்களில் உள்ள மற்ற அற்புதமான ஆன்மீக உண்மைகள் பற்றிய குருதேவரின் விளக்கத்தை வேறு எந்த எழுத்தாளரும் அணுகியிருக்கவில்லை.

இன்று புத்தகம் பெறும் புகழுக்கு அவரது எதிர்வினை என்னவாக இருக்கும்? ஒரு யோகியின் சுயசரிதம் பூமியின் எல்லா மூலைகளிலும் ஒவ்வொரு கலாச்சார, இன, மத மக்களுக்கும் மற்றும் அனைத்து வயதினருக்கும் சென்றடைந்துள்ளது என்பதையும், இந்த ஐம்பது ஆண்டுகளாக அது மிகப்பெரிய பாராட்டுடனும் உற்சாகத்துடனும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து பணிவுடன் நெகிழ்ந்திருப்பார். குருதேவர் ஒரு போதும் சுய முக்கியத்துவத்தில் ஆழ்ந்ததில்லை என்றாலும், அவர் எழுதியவற்றின் பெரும் மதிப்பை அவர் நிச்சயமாக உணர்ந்திருந்தார் – ஏனெனில், அவர் சத்தியத்தைத் தான் எழுதினார் என்று அவருக்குத் தெரியும்.

Sri Mrinalini Mata former president of SRF

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

1946-ம் ஆண்டின் பிற்பகுதியில், என்சினிடாஸ் ஆசிரமத்தில் ஒரு நாள் மாலை, இளைய பக்தர்களான நாங்கள் எங்கள் சமையலறைக் கடமைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பொழுது, குருதேவர் அங்கு வந்தார். அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன, மற்றும் எங்கள் கவனம் அவரது பரந்த புன்னகை மீதும் வழக்கமான மினுமினுப்பை விட இன்னும் சற்று அழகாக இருந்த அவரது கண்களின் மீதும் குவிந்தது. அவரது கை அவரது முதுகுக்குப் பின்னால் இருந்தது, “எதையோ” மறைத்தது. அவர் இன்னும் சிலரை வரவழைத்து, எங்களை அவருக்கு முன்னால் வரிசையில் இருக்கச் செய்தார். பின்னர் அவர் மறைத்திருந்த புதையலை எங்கள் முன் காட்டினார் — அவரது ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தின் ஒரு முன்னீடான பிரதி.

“ஓஹோ’ க்களுக்கும்” “ஆஹா’க்களுக்கும்” மத்தியில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் மகத்தான மகான்கள் மற்றும் முனிவர்களிடையேயான அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்த்து, எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை — அவருடன் கழித்த, அவரது விலைமதிப்பற்ற நேரங்களில், இந்த நிகழ்வுகளினால் அடிக்கடி எங்களை ஈர்த்தார். அவர் சில பக்கங்களைத் திறந்தார், கடைசியாக மகாவதார பாபாஜியின் படத்தைக் காட்டினார். கிட்டத்தட்ட மூச்சற்று நாங்கள் எங்கள் மரியாதையைச் செலுத்தி எங்கள் பரம்-பரமகுருவின் சாயலில் இருந்தவரை முதலில் கண்டவர்களில் ஒருவராக நாங்கள் இருக்க கிடைத்த அருளாசிகளில் மூழ்கினோம்.

டிசம்பர் தொடக்கத்தில், வெளியீட்டாளரிடமிருந்து புத்தகக் கட்டுகள் வரும் நிகழ்வில் பங்கேற்கவும், முன்கூட்டியே ஆர்டர் செய்து ஆவலுடன் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அனுப்பத்தயார் செய்வதற்காகவும் நாங்கள் அனைவரும் மவுண்ட் வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டோம். குறித்த காலத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே, நேரம் கிடைத்த எங்களில், எவரொருவரும் பழைய கைமுறை பெரிய தட்டச்சுப் பொறிகளில் ஒன்றில் முகவரி லேபிள்களை தட்டச்சு செய்வதில் ஈடுபட்டோம். பெரிய மேஜைகள் (ரம்பச் சட்டத்தின் மேல் தட்டையான பலகைகள்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டன, ஒரு பெரிய ரோலில் இருந்து பழுப்பு அஞ்சல் காகிதம் ஒவ்வொரு தனி புத்தகத்தையும் வரிசை கிரமமாக உறையிடத் தயாராக இருந்தது, அதைச் சரியான அளவுக்கு கையால் வெட்டி, ஈரமான நுரைப் பஞ்சு பயன்படுத்தி ஈரப்பதமான லேபிள்கள் மற்றும் அஞ்சல் தலைகளை ஒட்டினோம். அந்த நாட்களில் தானியங்கிகள் அல்லது அஞ்சல் இயந்திரங்கள் இல்லை! ஆனால் ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப் வரலாற்றில் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதில் ஓ!, என்ன மகிழ்ச்சி. இந்த உன்னதமான தூதரின் மூலம் நமது புனித குருதேவரை உலகம் அறிந்துகொள்ளும்.

மூன்றாவது மாடி முன்கூடத்தில், குருதேவர் ஒரு மேஜையில் இடைவிடாமல் மணிக்கணக்கில் அமர்ந்து, ஒவ்வொரு புத்தகத்திலும் கையெழுத்திட்டார். வெளியீட்டாளர் அனுப்பிய அட்டைப்பெட்டிகளில் இருந்து புத்தகங்கள் எடுக்கப்பட்டு, திறக்கப்பட்டு, அவர் ஒவ்வொன்றிலும் கையெழுத்திட்டுக் கொண்டே வரும்போது, ஒரு சீரான ஓட்டத்தில் புத்தகங்கள் அவருக்கு முன் வைக்கப்பட்டன – ஒவ்வொரு மையூற்றுப் பேனாவும் காலியாகும் போது, மற்றொன்று மீண்டும் நிரப்பிக் வைக்கப்பட்டது.

அவர் என்னை மாடிக்கு வருமாறு அழைத்தபோது தாமதமாகிவிட்டது. அவர் இன்னும் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். மூத்த சீடர்கள் அவரைச் சிறிது ஓய்வெடுக்குமாறு வலியுறுத்தினர், ஆனால் வெளியீட்டாளர் அனுப்பிய பெட்டியில் இருந்த ஒவ்வொரு புத்தகமும் அவரது அருளாசிகளுடன் கையொப்பமிடப்படும் வரை அவர் அதைப் பரிசீலிக்கக்கூட மறுத்துவிட்டார். அவர் முகத்தில் மிகுந்த பேரின்ப வெளிப்பாடு இருந்தது, தன்னிலிருந்து, உண்மையான பகுதி ஒன்றும் தன் இறையன்பும் அந்த அச்சிடப்பட்ட பக்கங்களில் உலகம் முழுவதும் வெளியே போகிறது என்பதுபோலவும், அது ஒரு கூடுதல் கணம் நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்பது போலவும் இருந்தது.

வெளிப்படுத்த முடியாத ஆனந்தத்துடன் நாங்கள் அதிகாலையில் தியானம் செய்ய அவரது காலடியில் அமர்ந்தோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் பொக்கிஷத்தின் ஒரு தனிப்பிரதியை குருதேவர் எங்களிடம் கொடுத்திருந்தார். மற்ற எல்லா பிரதிகளும் காலையில் அஞ்சலில் அனுப்புவதற்காக சுற்றப்பட்டிருந்தன அல்லது ஹாலிவுட் மற்றும் சான் டியாகோவில் உள்ள அவரது கோயில்களுக்கு அனுப்புவதற்காக கட்டப்பட்டிருந்தது. ஒரு யோகியின் சுயசரிதம் ஒரு தெய்வீக இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது — இறுதியில் குருதேவரின் அருளாசிகளையும் இறையன்பையும் லட்சக்கணக்கான இறைநாடும் ஆன்மங்களுக்கு எடுத்துச் செல்ல.

தாரா மாதாவிற்கு யோகனந்தரின் பாராட்டுக் கடிதம்
தாரா மாதா- ஒரு யோகியின் சுயசரிதத்தின் பதிப்பாசிரியர்

தாரா மாதா (லாரி பிராட்) வுக்காக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புத்தகம். ஒரு யோகியின் சுயசரித்தின் ஆசிரியரின் நன்றியுரையில் குறிப்பிடும் அஞ்சலியில், பரமஹம்ஸர் தனது கையெழுத்துப் பிரதியைத் தொகுத்தமைத்த தாரா மாதாவின் பங்கிற்கு தனது பாராட்டைத் தெரிவிக்கிறார். இந்தப் புத்தகத்தின் அவருடைய பிரதியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், இந்த மதிப்பு மிக்க சீடரின் சேவையில் அவர் கொண்டிருந்த ஆழமான மதிப்பைப் பற்றிய உள்ளார்ந்த அறிதலை தெரிவிக்கிறது.

நம் லாரி பிராட் அவர்களுக்கு

“இந்தப் புத்தகத்தின் வெளியீட்டில் உங்கள் துணிவான மற்றும் அன்பான பங்கிற்காக இறைவனும் குருமார்களும் எப்போதும் உங்களுக்கு அருளாசிகள் வழங்கட்டும். ப. யோ.”

“இறுதியில் இறைவன், எனது குருமார்கள், ஆசான்கள் ஆகியோரின் புனித நறுமணம் என் ஆன்மாவின் இரகசியக் கதவுகள் வழியாக வெளிவந்துள்ளது — லாரி பிராட் மற்றும் பிற சீடர்களின் முடிவற்ற இடையூறுகள் மற்றும் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு அனைத்துத் துன்பக் கட்டுகளும் நித்திய ஆனந்தச் சுடரில் எரிந்து கொண்டிருக்கின்றன.”

Sailasuta Mata monastic disciple of Paramahansa Yogananda

சைலசுதா மாதா

பரமஹம்ஸர் ஒரு யோகியின் சுயசரிதத்தை எழுதிக் கொண்டிருந்தபோது எங்களில் சிலர் மட்டுமே என்சினிடாஸ் ஆசிரமத்தில் வசித்து வந்தோம். இந்தத் திட்டம் முடிவடைய அவருக்கு நிறைய வருடங்கள் ஆயின. அந்தச் சமயத்தில் நானும் சில காலம் அங்கு வசித்துக் கொண்டிருந்தேன்.

குருதேவர் அந்தப் புத்தகத்தின் பெரும்பாலானவற்றை ஆசிரமத்தில் தனது வாசிப்பு அறையில் எழுதினார். இரவு முழுவதும் அவர் சொல்வதை எழுதச் சொல்லும் காலகட்டங்கள் இருந்ததை நினைவு கூறுகிறேன், மற்றும் அது நாள் முழுவதும் அல்லது அதற்கு மேலும் தொடரும் சந்தர்ப்பங்களும் இருந்தன. தயா மா, ஆனந்த மா ஆகியவர்களைப் போல் செயலகக் கடமைகளில் நான் ஈடுபடவில்லை. அவர்கள் சில நேரங்களில் அவரது வார்த்தைகளை சுருக்கெழுத்தில் எடுப்பார்கள், மற்ற நேரங்களில் தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் தடையின்றி வேலை செய்வதற்காக, என் பொறுப்பு பெரும்பாலும், அவர்களின் உணவைச் சமைப்பது!

வெளியீட்டாளரிடமிருந்து ஒரு யோகியின் சுயசரிதம் வந்தபோது, மகிழ்ச்சிப் பரவசம் இருந்தது. உடனே குருதேவர், முன்கூட்டியே ஆர்டர் செய்த அனைவருக்கும் தனது புத்தகத்தை நாங்கள் அனுப்ப வேண்டும் என்று விரும்பினார்! எனவே ஆரம்பக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, நாங்கள் குவிந்து விட்ட தேங்கிய ஆர்டர்களை நிரப்புவதில் மிகவும் மும்மரமாக இருந்தோம். சகோதரி ஷிலாவும் நானும் பல பிரதிகளை உறையிட்டு, அஞ்சலிட்டோம், அனைத்தையும் தயார் நிலையில் வைத்தோம். பின்னர் நாங்கள் காரை அருகில் கொண்டு வந்து, டிரங்க் மற்றும் அனைத்து கதவுகளையும் திறந்தோம். கார் முழுவதுமாக நிரப்பப்பட்டபோது, நாங்கள் அந்தப் புத்தகக் கட்டுகளை லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள முக்கிய தபால் அலுவலகத்திற்கு ஓட்டிச் சென்றோம். நாங்கள் பெரு மகிழ்ச்சியடைந்தோம்: கடைசியாக ஒரு யோகியின் சுயசரிதம் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு கிடைக்கப் போகிறது!

Swami Bhaktananda-monk of SRF

சுவாமி பக்தானந்தர்

1939-ல் நான் ஆசிரமத்திற்குள் வந்த சிறிது காலத்தில், மவுண்ட் வாஷிங்டனில் உள்ள நிர்வாகக் கட்டிடத்தின் தாழ்வாரத்தில் எங்கள் ஓரிருவருடன் பரமஹம்ஸர் பேசினார். அவர் தனது வாழ்நாளில் சில புத்தகங்கள் எழுத வேண்டியிருக்கும் என்றும்; அந்த புத்தகங்கள் முடிந்ததும், பூமியில் அவரது பணி முடிந்துவிடும் என்றும் இறைவன் கூறினார் என்று குறிப்பிட்டார். ஒரு யோகியின் சுயசரிதம் அந்த புத்தகங்களில் ஒன்றாகும். சுயசரிதம் முதலில் வெளிவந்தபோது, நான் அதை ஓரிரு நாட்களில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படித்தேன் — எவ்வளவு அற்புதமானது மற்றும் உத்வேகமளிப்பது! பரமஹம்ஸரின் போதனைகள் மீது ஆர்வத்தை வளர்ப்பதில் இந்தப் புத்தகம் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் எண்ணியது எனக்கு நினைவிருக்கிறது. இன்று வரை நாம் பனிப்பாறையின் முனையை மட்டுமே பார்க்கிறோம்.

Uma Mata smilingஉமா மாதா

1943-ல் பரமஹம்ஸ யோகானந்தரை நான் சந்தித்தபோது எனக்கு ஒன்பது வயது. என் தந்தை ஒரு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் உறுப்பினராக இருந்தார் மற்றும் சான் டியாகோவில் உள்ள கோவிலில் சத்சங்கங்களில் கலந்து கொண்டார். 1947ல் பரமஹம்ஸர் அவருக்குக் கொடுத்த ஒரு யோகியின் சுயசரிதத்தின் பிரதியை நான் படித்தேன். என் தந்தை மிகவும் அடக்கமானவர் மற்றும் தனது சொந்த நம்பிக்கைகளால் மற்றவர்களில் தாக்கத்தை எற்படுத்த முயற்சித்ததில்லை. இதன் விளைவாக, அவர் புத்தகத்தைக் கூட எனக்குக் காட்டவில்லை — நான் தற்செயலாக அதைக் கண்டேன். அதைப் படிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது — நான் மிகவும் சிறு வயதினளாக இருந்தேன், புத்தகத்தில் சில பெரிய வார்த்தைகள் இருந்தன! ஆனால் ஆரம்பத்தில் இருந்தே, ஒரு யோகியின் சுயசரிதம் எனக்கு ஒரு புகலிடமாக, என் ஆன்மாவுக்கு ஒரு குணப்படுத்தும் தைலமாக இருந்து வருகிறது….எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு யோகியின் சுயசரிதம் இறைவனை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது.

Mukti Mata direct disciple of Paramahansa Yogananda

முக்தி மாதா

1946-ம் ஆண்டு ஆசிரமத்தில் எனது முதல் கிறிஸ்துமஸ் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு யோகியின் சுயசரிதம் நிறைவுற்றது. பரமஹம்ஸர் எங்கள் அனைவருக்கும் பிரதிகள் வழங்கினார். அந்தப் பக்கங்கள் நமது குருதேவரின் தெளிவான மற்றும் மகிழ்ச்சிகரமான மனோபாவத்தை எவ்வளவு சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தின — அவரது முன்னிலையில் நாங்கள் உணர்ந்த அன்பையும் ஆனந்தத்தையும். அதே நிகழ்வுகள் பலவற்றை அவர் தனிப்பட்ட முறையில் விவரிப்பதைக் கேட்டு நாங்கள் எவ்வளவு மேம்படுத்தப்பட்டோம், இந்த புத்தகத்தின் வாயிலாக அனைவராலும் அதில் பகிர்ந்து கொள்ள முடியும்.

Sister Parvati disciple of Paramahansa Yogananda

சகோதரி பார்வதி

ஒரு யோகியின் சுயசரிதம் முதன்முதலில் வெளியிடப்பட்டதை நான் தெளிவாக நினைவு கூருகிறேன். சிறிது காலம் கழித்து பரமஹம்ஸரிடம் என் பிரதியில் சிறு கருத்து ஒன்றை எழுதித் தருவீர்களா என்று கேட்டேன். அவர் எழுதினார், “இந்தப் பக்கங்களின் பீடத்தில் மறைந்திருக்கும் எல்லையற்றதைக் கண்டறியவும்.”

இந்தப் புத்தகம் என் தூதராக இருக்கும்… “ இவ்வாறாக, உலகெங்கிலும் இருந்து ஆன்மாக்களைக் கிரியா யோகத்தின் புனிதப் பாதைக்கு ஈர்ப்பதில் ஒரு யோகியின் சுயசரிதத்தின் பங்கை பரமஹம்ஸ யோகானந்தர் தீர்க்கதரிசனமாக கூறினார். கிரியா யோகத்தை உலகளவில் பரப்ப அவர் நியமிக்கப்பட்டிருந்தார். எண்ணற்ற ஆன்மாக்களுக்கு இந்தப் புத்தகம் உண்மையில் குருவின் தூதராக — அவரது வாழ்நாளின் போதும் மற்றும் அவரது மறைவுக்குப் பிறகும் —இருந்துள்ளது; அவர்களுள் மூவரிடமிருந்து பெற்ற விவரங்கள் வருமாறு.

Swami Anandamoy disciple of Paramahansa Yoganandaசுவாமி ஆனந்தமோய்

சுவிட்சர்லாந்தின் பெரிய நகரங்களில் ஒன்றான வின்டர்தூரின் புறநகர்ப் பகுதியில் ஓர் அத்தை மற்றும் மாமாவுடன் கோடை விடுமுறையைக் கழித்தபோது நான் என் பதின்ம வயதில் இருந்தேன். என் மாமா ஒரு இசைக்கலைஞர், சிம்பொனி இசைக்குழுவின் உறுப்பினர். அவரும் விடுமுறையில் இருந்தார், அதை அவர் தனது பெரிய தோட்டத்தில் வேலை செய்து கழித்தார். நான் அவருக்கு உதவினேன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால், என் மாமா என் மீது மிகுந்த ஆர்வம் காட்டினார், தோட்ட வேலையின் போது நீண்ட “பேசும் பொழுதுகள்” இருந்தன. என் மாமா கீழை நாடுகளின் தத்துவத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்ததைக் கண்டேன், மற்றும் கர்ம வினைகள், மறுபிறவி, சூட்சும மற்றும் காரண நிலைகள், மற்றும் குறிப்பாக மகான்கள் — ஞான ஒளி பெற்ற ஆசான்கள் — பற்றிய அவரது உரைகளை நான் மிகுந்த கவனத்துடன் கேட்டேன்.

புத்தரைப் பற்றி அவர் என்னிடம் சொன்னார். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிலையை அவர் எப்படி அடைந்தார் என்பதையும், மற்ற மகான்களைப் பற்றியும் அவர் என்னிடம் கூறினார். அது அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்தை என்னுள் தூண்டியது. ஞான ஒளி, ஞான ஒளி என்று நான் அகத்துள் திரும்பத் திரும்ப சொல்லியபடியே எப்படி சுற்றி நடந்து கொண்டிருந்தேன் என்று நினைவு கூறுகிறேன். அந்த வார்த்தையின் முழுப் பொருளையும் நான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், சாதாரண மனிதன் தனது பொருள்சார் அல்லது கலை வாழ்க்கையில் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அவனிடம் உள்ளதை விட இது மிகவும் பெரியது என்ற அளவுக்கு எனக்குத் தெரிந்தது. அந்த நிலையை ஒருவர் எப்படி அடைய முடியும் என்று நான் என் மாமாவிடம் கேட்டேன், ஆனால் அவர் சொல்லக்கூடிய ஒரே விஷயம், ஒருவர் தியானம் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் எப்படி என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றையும் கற்பிக்கக்கூடிய ஒரு குரு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நான் ஒரு குருவைச் சந்திக்கும் என் மிகப்பெரிய ஆசையை வெளிப்படுத்திய போது, அவர் தலையைக் குலுக்கி புன்னகைத்தார். “என் இரங்கத்தக்க சிறுவனே,’ சுவிட்சர்லாந்தில் குருமார்கள் இல்லை!”

எனவே நான் ஒரு குருவுக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். ஒரு குருவுக்கான என் ஏக்கம் எவ்வளவு அதிகமாக இருந்தது என்றால், நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு ரயில் நிலையத்திற்குச் சென்று, “அவர்” வருவார் என்ற நம்பிக்கையில் மணிக்கணக்கில் காத்திருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

நான் என் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, விரக்தியுடன் இருந்த இரண்டு ஆண்டுகள் என் தந்தையின் வியாபாரத்தில் வேலை செய்தேன். அதற்குள் நான் இந்துத் தத்துவத்தில் எனக்கு இருந்த ஆர்வத்தை விட்டுவிட்டேன். ஏனென்றால் எனக்கு ஒரு குருவைக் கண்டறிவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. நான் கலைத் தொழிலில் ஈடுபட்டேன், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான ஃபிராங்க் லாயிட் ரைட்டுடன் படிக்க அமெரிக்கா செல்ல அழைக்கப்பட்டேன்.

அமெரிக்காவில் என் முதல் வாரத்தில், 1920களில் இந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்த ஒரு மாமாவை சந்தித்தேன். ஒரு உரையாடலின் போது அவர் இந்துத் தத்துவத்தைக் குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விஷயத்தில் எனக்கு ஆர்வம் இருந்தது என்று நான் அவரிடம் சொன்னபோது, அவரது முகம் ஒளிர்ந்தது, அவர் என்னைத் தனது தனிப்பட்ட வாசிப்பு அறைக்கு அழைத்துச் சென்று ஒரு யோகியின் சுயசரிதத்தைக் காட்டினார். அட்டையில் இருந்த பரமஹம்ஸ யோகானந்தரின் படத்தைச் சுட்டிக்காட்டி, “அவரைப் பற்றி நீ எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னபோது, அவர், “நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த மனிதர். அவர் ஓர் உண்மையான குரு!” என்று பதிலளித்தார்.

“நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா?” நான் முற்றிலும் ஆச்சரியத்தில் அழுதேன். “அவர் எங்கே இருக்கிறார் – அமெரிக்காவில் இல்லையா!?”

“ஆம், அவர் லாஸ் ஏஞ்சலீஸில் வசிக்கிறார். “பின்னர் அவர் இந்த நாட்டிற்கு வந்த உடனேயே பரமஹம்ஸரின் தொடர் விரிவுரைகள் மற்றும் வகுப்புகளில் தான் எப்படிக் கலந்து கொண்டார் என்பதை என்னிடம் கூறினார். இதை நினைத்துப் பார்த்தேன், இத்தனை ஆண்டுகளாக நான் ஒரு குருவுக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது, என் மாமாவுக்கு ஒரு குருவும் அவரது போதனைகளும் தெரிந்திருக்கிறது!

நான் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகத்தைப் படித்தேன். அதுதான் முதல் அதிசயம். நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், இதுவே ஒரு அதிசயம் என்று கூட நான் கவனிக்கவில்லை — அந்த மொழியில் ஒரு புத்தகத்தைப் படிக்க போதுமான ஆங்கிலம் எனக்குத் தெரியாது. ஃபிராங்க் லாயிட் ரைட்டும் ஒரு சுயசரிதம் எழுதியிருந்தார், ஆனால் முதல் இரண்டு பக்கங்களைப் படிக்க நான் எடுத்த முயற்சி வீணானது. அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிவதற்கு முன்பு ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு முழு கூடுதல் ஆண்டு பிடித்தது. ஆயினும் ஒரு யோகியின் சுயசரிதத்தை அட்டையிலிருந்து அட்டைவரை என்னால் படிக்க முடிந்தது.

நான் விரும்பியதை கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என் இதயத்தில் அறிந்தேன், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் படித்து இறைவனை அறியவேண்டும் என மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.

நான் மேலும் ஆங்கிலம் கற்றுக்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு, குருவைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு ஒரு பயணம் மேற்கொண்டேன். நான் மதர் சென்டரின் நிலத் தளத்தில் நுழைந்தபோது, இதற்கு முன் எங்கும் நான் அனுபவித்திராத ஒரு பெரும் அமைதியை உணர்ந்தேன். நான் புனிதத் தரையில் நின்றேன் என்பதை உணர்ந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை காலை நான் ஹாலிவுட் கோவிலில் பரமஹம்ஸரின் காலை சத்சங்கத்தில் கலந்து கொண்டேன். நான் அவரை நேருக்கு நேர் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். இது ஒரு மறக்க முடியாத அனுபவம். சத்சங்கம் முடிந்ததும், குருதேவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார், சபையின் பெரும்பகுதி அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மேலே சென்றது. நான் வரிசையில் நின்றபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. இறுதியாக நான் அவருக்கு முன்னால் நின்றபோது, அவர் என் கையை அவரது கையில் எடுத்தார், நான் அந்த ஆழமான ஒளிரும் மென்மையான கண்களைப் பார்த்தேன். எந்த வார்த்தையும் பேசப்படவில்லை. ஆனால் அவரது கை மற்றும் கண்களின் மூலம் விவரிக்க முடியாத ஆனந்தம் என்னுள் வருவதை நான் உணர்ந்தேன்.

நான் கோயிலை விட்டு வெளியேறி சன்செட் பவுல்வார்டில் ஒரு பிரமிப்பில் நடந்தேன். என்னால் நேராக நடக்க முடியாத அளவிற்கு ஆனந்தத்தினால் எற்ப்பட்ட மயக்கத்தில் இருந்தேன். நான் ஒரு குடிகாரன் போல் தடுமாறினேன். அது மட்டுமல்ல, என் ஆனந்தத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, சத்தமாக சிரித்தேன். நடைபாதையில் இருந்த மக்கள் திரும்பி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்; என்னை நோக்கி நடந்து கொண்டிருந்தவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களின் குடிவெறி என்று கருதிய படி வெறுப்போடு தலையை ஆட்டியபடி பக்கவாட்டில் நகர்ந்தனர். நான் கவலைப்படவில்லை. நான் என் வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

இந்த அனுபவம் ஏற்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, நான் ஒரு சன்னியாசியாக ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப் ஆசிரமத்தில் நுழைந்தேன்.

Swami Premamoy a monastic disciple of Paramahansa Yogananda

சுவாமி பிரேமமோய்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பரமஹம்ஸ யோகானந்தரின் சன்னியாசி சீடராக இருந்த ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாசி சுவாமி பிரேமமோய், 1990 இல் மறையும் வரை இளம் துறவிகளின் ஆன்மீக பயிற்சிக்கு பொறுப்பாளாராக இருந்தார். அவர்களிடம் இந்தக் கதையை விவரித்துள்ளார்.

சுவாமி பிரேமமோய் ஸ்லோவேனியாவில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கம்யூனிஸ்டு தனது பூர்வீக நிலத்தை எடுத்துக் கொண்ட பின்னர், அரச குடும்பம் மற்றும் செல்வாக்கு கொண்ட மற்றவர்களுடனான அவரது குடும்பத் தொடர்புகள் காரணமாக அவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1950-ல், அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு அழைத்தது.

1950-ஆம் ஆண்டின் இறுதியில் நியூயார்க்கிற்கு பயணம் செய்வதற்கு சற்று முன்பு, சுவாமி பிரேமமோயிக்கு குடும்பத்தின் பழைய நண்பரான எவெலினா கிளான்ஸ்மேன் பிரியாவிடை பரிசு வழங்கினார். பரிசின் வடிவம் அது ஒரு மிட்டாய் பெட்டி என்று கருத வைத்தது. கப்பலில் அவர் சக பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள அதைத் திறந்தார். அவர் ஆச்சரியப்படும் வகையில் அந்த தொகுப்பு மிட்டாய் அல்ல, ஆனால் ஒரு புத்தகம் – ஒரு யோகியின் சுயசரிதம்.

அந்தப் பரிசைக் கண்டு நெகிழ்ந்து விட்டாலும், பிரேமமோய் அவர்கள் உடனடியாக அதைப் படிக்க விரும்பவில்லை. இளமையாக இருந்தபோது அவர் ஒரு ஆர்வமுள்ள வாசிப்பாளராக இருந்தபோதிலும், அந்த நாட்கள் முடிந்துவிட்டன. (அவர் தனது வாழ்நாள் முழுவதும் படித்ததை விட பதினைந்து வயதிற்கு முன்பே அதிக புத்தகங்களைப் படித்ததாக பின்னர் கூறினார்). மேலும், அவருக்கு கீழை நாடுகளின் தத்துவத்துவம் மிகவும் பரிச்சியப்பட்டது, ஒரு பதின்பருவத்தில் பகவத் கீதையின் மேல் பேரன்பு கொண்டு, அதில் பெரும்பாலானதை அவர் மனப்பாடம் செய்தார். இப்போது, இந்த பரிசுப் புத்தகத்தின் விஷயத்தைப் பார்த்து, அவரது முதல் எண்ணம், “நான் இதைப் படிக்கப் போவதில்லை — நான் கவர்ந்திழுக்கப் படவிரும்பவில்லை!” அமெரிக்காவில், அவர் பல்வேறு வணிக நிறுவனங்களில் ஈடுபடுத்திக்கொண்டார், இறுதியில் அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் டாக் ஹம்மார்ஸ்க்ஜோல்ட் -ன் தனிப்பட்ட உதவியாளர் பதவி வழங்கப்பட்டது, (அவர் கலிபோர்னியாவுக்கு வருவதற்கு முன்பு அந்தப் பதவியை நிராகரித்தார்.) மாதங்கள் சென்றன – மற்றும் சுயசரிதம் நியூயார்க்கில் உள்ள பிரேமமோய் அவர்களின் வீட்டில் படிக்கப்படாமல் அலமாரியில் இருந்தது. இதற்கிடையில், திருமதி கிளான்ஸ்மேன் (சுயசரிதத்தின் இத்தாலிய பதிப்பின் மொழிபெயர்ப்பாளர்) புத்தகத்தைப் பற்றிய தனது நண்பரின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் சுவாமி பிரேமமோய் படிக்க இன்னும் முயற்சிக்கவில்லை. இறுதியாக திருமதி கிளான்ஸ்மேன்: “நீங்கள் அதை விரும்புகிறீர்கள் அல்லது இல்லை என்று சொல்லுங்கள்; ஆனால் ஏதாவது சொல்லுங்கள்!” என்ற அர்த்ததில் ஒரு சிந்தனையில் மூழ்கிய மனநிலையில் வார்த்தைகளை எழுதினார் — இது நடந்தது, மார்ச் 6, அவரது பிறந்த நாள் அன்று, என்ன செய்ய வேண்டும் என்று அவர் தனது வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார் — அவர் புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார்.

கட்டுண்ட நிலையில், அவர் முழுப் புத்தகத்தையும் ஒரே அமர்வில் முடித்தார். தான் சந்தித்த எவருக்கும் இல்லாத ஆன்மீக நுண்ணறிவு ஆசிரியருக்கு இருப்பதை உணர்ந்த பிரேமமோய் அவர்கள் பரமஹம்ஸ யோகனந்தருக்கு கடிதம் எழுத முடிவு செய்தார்.

அந்தக் கடிதத்தை அனுப்பியபோது, குரு தனது பூமிக்குரிய வாழ்வின் இறுதி நாளில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது பிரேமமோய் அவர்களுக்குத் தெரியாது.

சில காலம் கழித்து, ஸ்ரீ தயா மாதா தனது கடிதத்திற்கு பதிலளித்தபோது, குரு மறைந்து விட்டதை சுவாமி பிரேமமோய் அறிந்தார். பல மாதங்கள் கழிந்தன; பிரேமமோய் அவர்களுக்கு அந்தப் புத்தகத்தையும் அதன் ஆசிரியரையும் பற்றிய எண்ணத்தை மனதில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. அந்தக் கோடையில் அவர் பரமஹம்ஸரின் போதனைகளைப் பற்றி மேலும் அறிய லாஸ் ஏஞ்சலீஸுக்கு செல்ல முடிவு செய்தார். அவர் முதல் முறையாக ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப் தலைமையகத்தின் நிலத் தளத்தில் நடந்து சென்றபோது, உடனடியாக ஒரு புன்னகைக்கும் அந்நியரால் அணுகப்பட்டார். ஒரு பிரகாசமான புன்னகையுடன், அந்த மனிதர் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் மிகவும் வரவேற்கப்படுகிற ஒரு பழைய நண்பரை எதிர்கொள்வது போல் அவரை அன்புடன் தழுவிக் கொண்டார். வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படவில்லை, பின்னர்தான் பிரேமமோய் அவர்கள் தனது புதிய “பழைய நண்பருக்கு” முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார் — ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர், நிறுவனத்தின் தலைவர் என!

இவ்வாறாக, பரமஹம்ஸர் தனது “தூதராக” என்று கூறிய புத்தகம் மேலும் ஒரு ஆன்மாமீது அதன் மாய வித்தையை நிகழ்த்தியது – அந்த நாளிலிருந்து, சுவாமி பிரேமமோயின் வாழ்க்கைக்கான போக்கு அமைக்கப்பட்டது.

Sister Shanti SRF

சகோதரி சாந்தி

அது 1952, நான் லாஸ் ஏஞ்சலீஸ் வில்ஷைர் பவுல்வார்ட் அம்பாசடர் ஹோட்டலில் உதவி மேலாளரின் செயலாளராக பணியமர்த்தப்பட்டிருந்தேன்: மிக உயர்ந்த ஒரு அமைப்பில் ஒரு சுவரஸ்யமான வேலை, அங்கு நான் உலக புகழ்பெற்ற பிரபலங்கள் பலரைச் சந்தித்தேன். ஆனால் என் காதில் சொல்லப்பட்ட ஒரு பெயரின் ஒலி என் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நான் அறிந்திருக்கவில்லை.

மார்ச் 6 அன்று, ஒரு திரைப்படத் தயாரிப்பாளரின் செயலாளர் ஹோட்டலை அழைத்து பரமஹம்ஸ யோகானந்தருக்கு ஒரு செய்தியை அனுப்புமாறு கேட்டார். நான் அந்த பெயரைக் கேட்ட கணத்தில், என் மார்பில் ஒரு பெரிய “காண்டா மணி” ஒலித்தது; என் தலை நீந்தியது, என் இதயத்திலும் மனத்திலும் ஆனந்தம் பொங்கியது, செய்தி விநியோகத்திற்கு ஏற்பாடு செய்ய முன்பதிவு மேஜைக்கு நான் சென்றபோது என்னால் நேராக நடக்கக்கூட முடியவில்லை. அந்த பெயர் எதுவும் ஹோட்டலில் பதிவு செய்யப்படவில்லை, இருப்பினும் இந்தியத் தூதரும் அவரது பரிவாரங்களும் தற்போது தங்கி இருக்கின்றனர் என்று என்னிடம் கூறப்பட்டது. என் அலுவலகத்திற்குத் திரும்பும் வழியில் அந்தப் பெயர் என் உணர்வில் சுழன்று கொண்டே இருந்தது, நான் அன்பினாலும் ஆனந்தத்தினாலும் மேன்மேலும் நிறைந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு திரைப்படத் தயாரிப்பாளர் அழைத்து, “என் செயலாளர் உங்களுக்கு என்ன பெயர் சொன்னார்?” என்று கேட்டார். நான் அவரிடம் “பரமஹம்ஸ யோகானந்தா” என்று சொன்னேன், அவர் வியப்புடன் கூறினார், “அவர் அப்படி சொன்னதை நான் கேட்டதாகத்தான் நினைத்தேன்! நான் அவருக்கு கொடுத்த பெயர் அதுவல்ல. அவர் ஏன் அதை சொன்னார் என்று அவருக்குத் தெரியவில்லை!”

அந்த நாளின் எஞ்சிய நேரத்தில் நான் ஒரு விசித்திரமான உள்ளார்ந்த விழிப்புணர்வில் இருந்தேன், அந்தப் பெயருடன் ஆழமான தொடர்பு உணர்வை அனுபவித்தேன். பின்னர் பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதியின் பெரு நிகழ்ச்சிக்குரிய தினமான மார்ச் 7 வந்தது. நான் அதைப் பற்றி பத்திரிகையில் படித்தேன் மற்றும் நான் என் சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் என்று உணர்ந்தேன். அது மிகுந்த அதிச்சியாக இருந்தது! என் வாழ்க்கை திடீரென்று முடிந்துவிட்டது என்று தோன்றியது. நான் நினைத்துக் கொண்டே இருந்தேன், நான் அவரைத் தவறவிட்டேன்! நான் அவருக்காக என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன், நான் அவரை தவறவிட்டேன்! ஆனால் உண்மையகாவே என்ன அர்த்தத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை, ஏனெனில் நான் ஒரு ஆசானையோ அல்லது ஒரு பாதையையோ தேடிக்கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தும், என் உணர்வின் ஆழத்தில், என் இருப்பின் மிக முக்கியமான நபரை நான் தவறவிட்டேன். அது உண்மை என்று எனக்குத் தெரியும்.

அந்தக் கணத்திலிருந்து சிறந்த திட்டமிடப்பட்ட, வசீகரமான வாழ்க்கை எனக்குப் பொருந்தவில்லை. நான் திடீரென்று முக்கியமான திட்டங்களை ரத்து செய்துவிட்டேன், எனக்குத் தெரிந்தவர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன், புத்தகங்கள் மூலம் தேடத் தொடங்கினேன். பரமஹம்ஸ யோகானந்தர் ஏதாவது ஒரு புத்தகம் எழுதியிருப்பாரா என்று எனக்கு பார்க்கத் தோன்றவில்லை; நான் வெறுமனே அவர் மறைந்து விட்டார், நான் அவரை தவறவிட்டேன் என்று மட்டும் உணர்ந்தேன். என் தேவையின் ஆழத்தைப் பூர்த்தி செய்யாத நான்கு பரதத்துவம் சார்ந்த தொகுதிகளைப் படித்த பிறகு, ஹாலிவுட் பொது நூலகத்தில் இருந்த அதே புத்தகவரிசையில் மீண்டும் என் தாயுடன் தேடிக்கொண்டிருந்தேன், என்னுள் கனன்று கொண்டிருந்ததில் சிலவற்றை உணர்ந்தவர் அவர் . நான் ஏற்கனவே முழுமையாக ஆராய்ந்ததாக நினைத்த முதல் பிரிவை கிட்டத்தட்ட கடந்து சென்ற பிறகு, ஒரு புத்தகம் மேல் அலமாரியில் இருந்து விழுந்து, என் தலையில் தாக்கி, தரையில் குதித்தது. என் தாய் அதை எடுத்து என்னை நோக்கித் திரும்பியபோது மூச்சுத் திணறினார்—பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம். அங்கே என் இதயம் அடைய முற்படும் பெயரும், ஆன்மாவை ஊடுருவின கண்களுடனான முகமும் இருந்தது!

நான் இரவில் அதைப் படித்தேன், நான் வேலையில் இருந்தபோது என் தாய் அதைப் படித்தாள். மெய்ப் பொருளின் உலகில் நுழையும் அனுபவத்தில் நாங்கள் மூழ்கியிருந்த விதத்தை விவரிக்க “வாசிப்பு” அநேகமாய் போதுமானதாக இல்லை. வாழ்க்கையின் தோற்றம், சீடராக இருத்தல், கிரியா யோக போதனை — அனைத்தும் ஒரு யோகியின் சுயசரிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டன.

நாங்கள் ஹாலிவுட் கோவிலில் ஒரு சத்சங்கத்தில் கலந்துகொண்டோம், நான் முதலில் குருவின் பெயரை தொலைபேசியில் கேட்டபோதிருந்த ஆற்றல் வாய்ந்த அதே இருப்பு இப்பவும் என்னை ஆட்கொண்டது. சேவைமுடிந்த பிறகு மீரா மாதா எங்களை மிகுந்த கருணையுடன் வரவேற்றார், மற்றும் சில கணங்களுக்குப் பிறகு நான் மவுண்ட் வாஷிங்டன் மதர் சென்டருக்கு சென்று அவரது மகள் மிருணாளினி மாதாவை சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். நாங்கள் சென்று சன்னியாச முறையைப் பற்றி அறிந்து கொண்டோம், நான் மூன்றாவது முறையாக “கவர்ந்திழுக்கப்பட்டேன்” — முதலில் பரமஹம்ஸ யோகானந்தா, இரண்டாவது ஒரு யோகியின் சுயசரிதம், இப்போது, இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்க்கையின் இலட்சியத்தால்.

மார்ச் 6-ம் தேதி பரமஹம்ஸரின் பெயரைக் கேட்டதன் விளைவைப் பற்றி விவரித்த பிறகு, அன்று காலை அவர் ஹோட்டலில் இந்தியத் தூதர் மேதகு பினய் ஆர். சென் அவர்களின் காலை உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அறிந்தேன். அந்த காலை உணவு என் அலுவலகத்திற்கு அடுத்த அறையில் நடந்ததுள்ளது. எனக்கு அழைப்பு வந்து அவரது பெயரைக் கேட்ட நேரத்தில் என் மேஜையிருந்த சுவரின் மறுபக்கத்தில் குருதேவர் அமர்ந்திருக்கிறார்.

குரு தனது மகத்தான சுயசரிதம் மூலம் “அவருக்குரிய” அனைவரையும் அழைக்கிறார். நம்மில் சிலர் பதிலளிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம், எனக்கு ஏற்பட்டது போல் தலையில் தட்டப்பட வேண்டும்! ஆனால் அவரது “குரலை” கேட்டு அவரது அழைப்புக்கு பதிலளிக்கும் லட்சக் கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு அருளாசி கிடைக்கப் பெற்றவர்கள்.

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp