நற்செய்திகளில் உள்ள ரகசிய உண்மைகள்

புதிய ஏற்பாட்டின் மீதான பரமஹம்ஸ யோகானந்தரின் இரு தொகுதி விளக்க உரையில் இருந்து சில பகுதிகள்:

Jesus christ as drawn by Heinrich Hofmann.இந்த பக்கங்களில் நான் உலகிற்கு, உள்ளுணர்வு ரீதியாக உணரப்பட்ட, இயேசு பேசிய வார்த்தைகளின் ஆன்மீகப் பொருள் விளக்கத்தை, கிறிஸ்து உணர்வு நிலையுடனான உண்மையானத் தொடர்பு வாயிலாக பெறப்பட்ட உண்மைகளை, வழங்குகிறேன். . . . அவை கிறிஸ்துவ பைபிளின் திருவெளிப்பாடுகள், இந்தியாவின் பகவத் கீதை மற்றும் அனைத்து காலத்தால் சோதிக்கப்பட்ட உண்மையான மறை நூல்கள் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள பரிபூரண ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன.

உலகத்தின் மீட்பர்கள் தீங்கு விளைவிக்கும் மதக் கோட்பாடு பிரிவுகளை ஆதரிக்க வருவதில்லை; அவர்களது போதனைகள் அந்த இலக்கிற்கு பயன்படுத்தப்படக் கூடாது. புதிய ஏற்பாட்டை “கிறிஸ்துவ” பைபிள் என்று அழைப்பது கூட ஓரளவு தவறான சொல் வழக்குப் போன்றதாகும்; ஏனெனில் அது எந்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே சார்ந்த தனிப்பட்ட உரிமை அல்ல. பேருண்மையானது அனைத்து மனித இனத்தையும் ஆசீர்வதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உரியது. கிறிஸ்து உணர்வுநிலை உலகளாவியது என்பதால், இயேசு கிறிஸ்து அனைவருக்கும் சொந்தமானவர்….

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்று இந்த நூலிற்கு நான் தலைப்பிடும் போது இயேசு பூமிக்கு உண்மையாக திரும்பி வருவதை பற்றி நான் குறிப்பிடவில்லை. . . ஓராயிரம் கிறிஸ்துக்கள் பூமிக்கு அனுப்பப்பட்டாலும், அது பூமியிலுள்ள மக்களை, அவர்களே தங்கள் தனிப்பட்ட உணர்வு நிலையை இயேசுவிடம் வெளிப்பட்டது போன்ற கிறிஸ்து உணர்வு நிலையின் இரண்டாம் வருகையை ஏற்பதற்காக, அதைத் தூய்மைப்படுத்தி மற்றும் விரிவாக்குவதன் வாயிலாக கிறிஸ்துவைப் போல் மாறினாலன்றி, கடைத்தேற முடியாது. தியானத்தின் என்றும் புதிய ஆனந்தத்தில் நுகரப்படும் இந்த உணர்வு நிலையுடனான தொடர்பு தான் கிறிஸ்துவின் உண்மையான இரண்டாம் வருகையாகும், மற்றும் அது சரியாக பக்தரது சொந்த உணர்வு நிலையினுள்ளேயே நிகழும்.

"ஒரே பேறான தேவகுமாரன்": கிறிஸ்து உணர்வுநிலை

இயேசு மற்றும் கிறிஸ்துவுக்கும் இடையே தனிப்பட்ட ஒரு வேறுபாடு உள்ளது. அவருக்கு இடப்பட்ட பெயர் இயேசு; அவரை கெளரவிப்பதற்கு சூட்டப்பட்ட பட்டம் “கிறிஸ்து”. இயேசு என்றழைக்கப்பட்ட அவரது சிறிய மனித உடலில், படைப்பின் ஒவ்வொரு பகுதி மற்றும் துகளிலும் சர்வ வியாபகமாக உள்ள இறைவனின் அனைத்தும் அறிந்த பேரறிவுத் திறன் எனும் பரந்தகன்ற கிறிஸ்து உணர்வுநிலை பிறந்தது. இந்த உணர்வு நிலை தான் “ஒரேபேறான தேவகுமாரன்.” இது இவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம், இது மட்டும்தான் அறிவெல்லை கடந்த முழுமுதற் பொருள், பரம்பொருள் அல்லது இறைவன் எனும் தெய்வத் தந்தையின் ஒரே முழுநிறைவான படைப்பிலுள்ள பிரதிபலிப்பு.

இறைவனது அன்பு மற்றும் பேரின்பத்தால் பொங்கித் ததும்பும் அந்த எல்லையற்ற உணர்வு நிலையைப் பற்றித்தான் புனித யோவான் இவ்வாறு கூறினார், “அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.”… (யோவான் 1: 12)

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் யோகிகள் மற்றும் மகான்களுக்கும். இயேசுவிற்கும் தெரிந்த திட்டவட்டமான தியான விஞ்ஞானத்தின் மூலம் எந்த இறை சாதகரும் தனது உணர்வு நிலையின் ஆற்றலை, தன்னுள் இறைவனின் உலகளாவிய அறிவுத்திறனை ஏற்பதற்காக, சர்வஞான நிலைக்கு விரிவுபடுத்த முடியும்.

காணொளி: “Christ Consciousness: The Goal for Each One of Us”

ஈஸ்டர் நினைவு தியான நிகழ்வின் இந்த சிறிய காணொளியில், ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் தலைவர் சுவாமி சிதானந்த கிரி, பரமஹம்ஸ யோகானந்தர் செயின்ட் ஜானின் மேற்கோளுக்கு அளித்த மிக ஆழ்ந்த முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கிறார்: யோகதா சத்சங்கப் பாடங்களில் உள்ள போதனைகளையும் உத்திகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், இயேசுவிடம் வெளிப்பட்ட எல்லையற்ற உணர்வுநிலையை நமக்குள் உணர்வது உண்மையில் சாத்தியம் என்று பரமஹம்ஸர் கற்பித்தார்.

இயேசுவின் நீதி கதையிலுள்ள இரகசிய உண்மை

சீடர்கள் அவரருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமையின் வாயிலாக பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்களுக்கு இயேசு மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமையின் வாயிலாக பேசுகிறேன்.”

இயேசு தன் சீடர்களால், ஏன் அவர் மக்களுக்கு நீதி கதைகளின் நுட்பமான உதாரணங்களால் போதித்தார் என்று கேட்கப்பட்டபோது அவர் மறுமொழி அளித்தார், “என் உண்மையான சீடர்களாகிய நீங்கள் என் போதனைகளின் படி ஓர்ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, உங்கள் செயல்களை ஒழுங்குபடுத்துவதால் உங்கள் தியானங்களில் எழும் உங்கள் அக விழிப்புணர்வின் காரணமாக விண்ணுலகின் எவருக்கும் புரியாத இரகசியங்களின் உண்மையை புரிந்து கொள்வதற்கும் மற்றும் பிரபஞ்ச மாயையின் அதிர்வுறும் படைப்பின் பின் மறைந்துள்ள பிரபஞ்ச உணர்வு நிலையாகிய இறைவனின் ராஜ்யத்தை அடைவதற்கும் நீங்கள் தகுதியுள்ளவராகிறீர்கள். ஆனால் சாதாரண மக்கள், அவர்களது ஏற்புத்திறன் குறைபாட்டால், ஆழ்ந்த ஞான உண்மைகளை புரிந்து கொள்ளவோ அல்லது பயிற்சி செய்யவோ திறனற்றவர்களாக உள்ளனர். நீதிக் கதைகளில் இருந்து அவர்களது புரிந்து கொள்ளும் திறனைப் பொருத்து, நான் அவர்களுக்கு அனுப்பும் ஞானத்திலிருந்து எளிய உண்மைகளை அவர்கள் சேகரிக்கின்றனர். அவர்களால் ஏற்க முடிந்தவற்றின் நடைமுறை பயன்பாட்டின் மூலம் அவர்கள், மீட்பை நோக்கி சிறிது முன்னேற்றம் எய்துகின்றனர்.”…

ஏற்கும் திறன் உடையவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்ந்தறிகிறார்கள் அதேசமயம் ஏற்கும் திறனற்றவர்கள், ” கண்டும் காண்பதில்லை, கேட்டும் கேட்பதில்லை. புரிந்து கொள்வதுமில்லை.” விண்ணுலகம் மற்றும் இறை சாம்ராஜ்யத்தின் இறுதி உண்மைகள், புலன் உணர்வு மற்றும் பகுத்தறியும் மனத்தின் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் உள்ள மெய்மை ஆகியவை உள் உணர்வால் மட்டுமே கிரகிக்கப்பட முடியும். — அதாவது ஆன்மாவின் உள்ளுணர்வு பூர்வமான அறிதலை, தூய புரிந்து கொள்ளும் திறனை விழிப்புற செய்தல்.

கீழைநாட்டு கிறிஸ்துவாகிய இயேசு - ஓர் ஒப்புயர்வற்ற யோகி

கிறிஸ்துவானவர் உலகத்தினரால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளார். அவரது போதனைகளின் மிக அடிப்படையான கோட்பாடுகள் கூட தூய்மை-கெடுக்கப்பட்டு அவற்றின் மறைபொருள் ஆழங்கள் மறக்கப்பட்டுள்ளன. அவை, கொள்கைப் பிடிவாதம், பாரபட்சம் மற்றும் குறுகிய புரிதல் ஆகியவற்றினால் சீரழிந்துள்ளன. இன அழிவு போர்கள் நடத்தப்பட்டன, மக்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் சூனியக்காரர்கள் மற்றும் சமய எதிர்ப்பாளர்கள் என்று எரிக்கப்பட்டுள்ளனர். அறியாமையின் கரங்களிலிருந்து எவ்வாறு அமரத்துவ போதனைகளை மீட்பது? நாம் இயேசுவை ஒரு கீழை நாட்டு கிறிஸ்துவாக, இறை ஐக்கியம் என்கிற உலகளாவிய விஞ்ஞானத்தின் மீதான முழு தேர்ச்சியை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இறைவனது குரல் மற்றும் அதிகாரத்துடன் ஒரு மீட்பராக பேசவும் செயல்புரியவும் முடிந்த, ஒரு ஒப்புயர்வற்ற யோகியாக அறிந்துகொள்ளவேண்டும். அவர் மிகவும் அதிகமாக மேலை நாட்டினராக ஆக்கப்பட்டுள்ளார்.

மறைபொருள் உண்மை இறை தொடர்பெனும் உலகளாவிய மதத்தை வெளிப்படுத்துகிறது.

வழக்கமான மறைநூலின் வாசிப்பு, மதத்தின் உலகளாவிய தன்மையை கொள்கைப் பிடிவாதத்தில் அமிழ்த்துகிறது. ஓர் ஆழ்ந்த உண்மையின் புரிதலில் ஒற்றுமையின் பரந்த காட்சி மலர்ச்சியுறுகிறது. . . . . தெய்வீக அவதாரங்கள் ஒரு புதிய அல்லது தனிப்பட்ட மதத்தை கொணர வருவதில்லை; மாறாக இறை-அனுபூதி எனும் ஒரே மதத்தை புதுப்பிப்பதற்காக வருகிறார்கள்.

அவரது பெயரில் பல மாதாக் கோவில்களும் தேவாலயங்களும் நிறுவப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை செல்வச் செழிப்பு உள்ளதாகவும் அதிகாரம் மிக்கதாகவும் உள்ளன, ஆனால் அவர் வலியுறுத்திய தொடர்பு, இறைவனுடனான உண்மையானத் தொடர்பு எங்குள்ளது? இயேசு, முதலில் மற்றும் எல்லாவற்றிற்கும் முதன்மையாக, மனித ஆன்மாக்களில் ஆலயங்கள் நிறுவப்பட வேண்டுமென்று விரும்பினார்; பிறகு புறத்தே, ஸ்தூல வழிபாட்டு இடங்களில் நிறுவப்பட வேண்டும். இதற்கு மாறாக, மாபெரும் கட்டிடங்களில் மிகப் பெரிய மதக் கூட்டங்கள் வாயிலாக கிறிஸ்துவ மதத்தில் கருத்துக்கள் மனதில் பதிக்கப்படுகின்றன. ஆனால், ஆழ்ந்த பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் கிறிஸ்துவிடம் உண்மையில் தொடர்புள்ள மிகச்சில ஆன்மாக்களே உள்ளன.

இயேசுவின் செய்தியிலுள்ள மையக் கருத்தை மீண்டும் கண்டுபிடித்தல்:

தனிநபர் பிரார்த்தனை மற்றும் இறைவனுடனான தொடர்பின் இல்லாமை, நவீன கிறிஸ்தவர்களையும் கிறிஸ்துவ பிரிவுகளையும் இறை ஞானத்தைப் பற்றிய இயேசுவின் போதனைகளில் இருந்து தொடர்பற்றிருக்கச் செய்துள்ளது. இது இறைவன் அனுப்பிய தூதர்களால் தொடங்கப்பட்ட அனைத்து சமய பாதைகள் விஷயத்திலும் கூட உண்மையாகும். இவற்றை பின்பற்றுபவர்கள் உண்மையான இறைத் தொடர்பிற்கு மாறாக கொள்கைப் பிடிவாதம் மற்றும் சடங்குகள் எனும் கிளை வழிகளில் அடித்துச் செல்லப்படுகின்றனர். ஆழ்ந்த ஆன்ம – எழுச்சியூட்டும் பயிற்சிகளற்ற சமயப் பாதைகள், கொள்கைப் பிடிவாதம் மற்றும் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டவர்களைத் தவிர்க்கும் சுவர்களை எழுப்புதல் ஆகியவற்றில் தம்மைக் மும்முரமாகிக் கொள்கின்றன. உண்மையிலேயே இறைவனை தரிசிக்கும் தெய்வீக மனிதர்கள் அவர்களது அன்புப் பாதைக்குள் அனைவரையும், பலதரப்பட்டவர் அடங்கிய மதக் கூட்டம் என்ற கருத்தின் அடிப்படையிலின்றி மாறாக அனைத்து உண்மையான இறை சாதகர்கள் மற்றும் அனைத்து சமய மகான்கள் நோக்கிய மரியாதை மிகுந்த தெய்வீக நட்புறவின் அடிப்படையில், சேர்த்துக் கொள்கிறார்.

ஆன்மாக்களின் நல்மேய்ப்பன், எவரையும் நிராகரிக்காமல் தன் கரங்களை நீட்டி அனைவரையும் வரவேற்றார். மேலும் உலகளாவிய அன்புடன் முக்திக்கான தன் பாதையில் தியாகம், துறவு, மன்னிப்பு, நண்பனையும் எதிரியையும் ஒன்றுபோல் நேசித்தல் அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்கான ஒப்பற்ற அன்பு ஆகிய உணர்வுமிக்க தனது எடுத்துக்காட்டின் மூலம் முழு உலகையும் தன்னைப் பின்பற்றுமாறு நயந்து பேசி இணங்க வைத்தார். பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவ தொட்டியில் சின்னஞ் சிறுகுழந்தையென்ற உருவத்திலும், நோயாளிகளைக் குணப்படுத்தி, இறந்தவரை உயிர்த்தெழச் செய்து, பாவங்கள் எனும் காயங்கள் மீது அன்பெனும் வலி நீக்கும் களிம்பினைப் பூசிய மீட்பர் என்ற உருவத்திலும், இயேசுவில் இருந்த கிறிஸ்து, மக்களும் தெய்வங்கள் போல வாழக்கற்றுக் கொள்ள வேண்டுமென்ற காரணத்தினால், அவர்களில் ஒருவராக வாழ்ந்தார்.

விவரிக்கவொண்ணா இறைவனின் அன்பு

“நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பது எல்லாம் நடக்கும்.”

“என் தந்தை என் மீது அன்பு கொண்டு உள்ளது போல, நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைபிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

.” இயேசு தன் சீடர்களிடம் , “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்” என்று உறுதியளித்தார் -அவர்களது உணர்வுநிலை, பரிபூரணமாக கிறிஸ்து உணர்வுநிலையுடனும் மற்றும் பிரபஞ்ச அதிர்வு எனும் அதன் வெளிப்பாடுடன் இசைந்திருந்தால், உலகளாவிய படைப்புத் தத்துவக் கோட்பாட்டை இயக்குவதன் வாயிலாக அவர்கள் கணக்கற்ற அற்புதங்களை நிகழ்த்த வல்லவர்களாவர்….

பிறகு இயேசு அவர்களிடம் மிக அரிதான வார்த்தைகளைப், பக்தரது இதயத்திற்கு இதைவிட பிரியமான வார்த்தைகள் இல்லாதது போல், பேசினார்; தெய்வத் தந்தை அவரை நேசிக்கும் அதே தெய்வீக, பாரபட்சமற்ற அழியா அன்புடன் அவர்களை நேசிப்பதாக கூறினார்….இந்த வரிகளில் இயேசுவால் பேசப்பட்ட அன்பினை கற்பனை செய்து பாருங்கள்….

அனைத்து தூய இதயங்களின் அந்த ஆன்ம அன்பை உணர்வது என்பது, மிகச்சிறந்த கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் திணறவைக்கும் ஆனந்தத்தின் ஒரு பரவசத்தில் சுமந்து செல்வதற்கு ஒப்பாகும் – ஒரு நூறு கோடி மின் சக்தி போன்ற பரவச விசையெனும் பேரின்பத்தின் ஒரு செறிவூட்டம் ஒருவரது உடலின் ஊடாக பாய்தல். இந்த தெய்வீக உணர்ச்சி வேகம் வருணணைக்கு அப்பாற்பட்டது – எல்லையற்ற கருணை, விவரிக்க முடியாத மகிமை, சாசுவத இறைப் பாதுகாப்புடன் கூடிய ஓர் சொல்லொண்ணா இனிமையுடனான ஓர் இறைத் தொடர்பு. இத்தகைய இறை அன்பைத்தான் இயேசு உணர்ந்து அதில் தன் சீடர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார். “என் தந்தை என் மீது அன்பு கொள்வது போல் நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன்.”

இந்த புனித நிகழ்ச்சியில், பைபிள் இயேசுவினது வார்த்தைகளின் ஒரு பதிவை பாதுகாக்கிறது; ஆனால் வாசகர்கள் உணர்ந்தறிய வேண்டும் – அத்துடன் தங்கள் அகத்தே தாங்களும் அங்கே இருந்தது போன்று உணர வேண்டும் – அந்த வார்த்தைகளின் பின்னால் தெளிவான இறை இருப்பின் அதிர்வு இருந்ததை உணர்ந்தறிய வேண்டும். தனது சீடர்களுடனான இயேசுவின் இறுதி விருந்து காலங்களில் இருந்ததுபோல தெய்வத் தோழமையின் போது (சத்சங்கம்), ஏற்புத் திறன் உள்ளவர்கள் குருவானவர் பேசப்பேச, தங்கள் இதயங்கள் மற்றும் மனங்களினுள் பொழிந்துக் கொண்டிருக்கும் இறை ஞானத்தின் ஓர் உயர் உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவதை உணர்கிறார்கள். இந்த ஒத்திசைவானது சீடரது உணர்வு நிலையை, ஆழ்ந்த வணங்கத்தக்க தியானம் எனும் அக ஆலயத்தில் குருதேவரின் கருணையை வரவழைக்கும் போதெல்லாம், இறை ஞானத்தால் தோய்விக்கிறது.

இயேசுவின் உயிர்த்தெழுதல், மற்றும் அவரது சாசுவத இருப்பு

உயிர்த்தெழுதல், இந்தியாவின் தேர்ச்சி பெற்ற யோகிகளால் யுகங்களின் ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இயேசுவே கூட ஒரு இறை ஞானம் உள்ள யோகி: அதாவது பிறப்பு மற்றும் இறப்பு, இறைத் தொடர்பு மற்றும் இறை ஐக்கியம் ஆகிய ஆன்மீக விஞ்ஞானத்தை அறிந்து அதில் தேர்ச்சி பெற்றவர், மாயையிலிருந்து இறை சாம்ராஜ்யத்திற்குள் செல்லும் முக்தியின் வழி முறை அறிந்த ஒருவர். இயேசு தன் வாழ்வு மற்றும் சாவின் முழுதூடாக, தன் உடல் மற்றும் மனம் அத்துடன் அடிக்கடி கட்டுக்கடங்காத இயற்கையின் சக்திகள் மீதான முழுத் தேர்ச்சியை காண்பித்தார். இயேசு சிலுவையிலேற்றப்பட்ட தன் தேகத்தை இறைச் சுதந்திரம் மற்றும் ஒளியில், எந்த அடிப்படைக் கோட்பாடுகளின் மூலமாக உயிர்த்தெழ வைத்தாரோ அவற்றைத் தெளிவாக வரையறுக்கும் யோக விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ளும்போது உயிர்த்தெழுதலை அதன் உண்மையான கோணத்தில் நாம் புரிந்து கொள்கிறோம்….

இறைவனின் தனிப்பட்ட உணர்வு நிலையின் ஆன்ம இறக்கம் மனிதனுள் ஆன்மாவாகவும், பரம்பொருளினுள் மீண்டும் அதன் ஏற்றம் பரிணாம வளர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியாகவும் நிகழ்வதை எந்த பிற விஞ்ஞானமும் விவரித்திருக்கவில்லை. இந்த நவீன யுகத்தில், இருள் யுகங்களில் தொலைந்த பிறகு மீண்டும் கொண்டுவரப்பட்ட கிரியா யோகமானது, மனித உணர்வு நிலையின் ஆன்மீக பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்தவும் மற்றும் ஆன்ம ஏற்றத்தின் மூளை முதுகுத்தண்டு வழித்தடத்தை திறந்து ஆன்மீகக் கண்ணின் வழியாக புனித ஆவி, கிறிஸ்து உணர்வு நிலை மற்றும் தந்தையாகிய இறைவனின் பேரண்ட உணர்வு நிலை ஆகியவற்றின் ராஜ்யத்தினுள் ஆன்மாவை விடுதலை செய்வதற்குமான ஒரு திட்டவட்ட வழிமுறையாக, வெளிக்கொணரப்பட்டுள்ளது.

உங்கள் அகத்தே உள்ள இறைவனின் சாம்ராஜ்யம்

“உங்கள் அகத்தே உள்ள இறைவனின் சாம்ராஜ்யத்திற்குள்” நுழைவதற்கான இயேசுவின் போதனைகளுக்கும், மனிதனில் உள்ள இறைவனின் பிரதிபலிப்பான ஆன்ம அரசனுக்கு அவனது உரிமையுள்ள தேக ராஜ்யத்தின் அரசாளும் உரிமையை, ஆன்மாவின் தெய்வீக உணர்வு நிலை பற்றிய முழு ஞானத்துடன், மீட்டுக் கொடுக்க, கிருஷ்ணரால் பகவத்கீதையில் முன்வைக்கப்பட்டுள்ள யோக போதனைகளுக்கும் இடையே ஓர் அழகிய ஒற்றுமை உள்ளது. மனிதன் தெய்வீக உணர்வு நிலையெனும் அந்த அக ராஜ்யத்தினுள் நிலை பெறும் போது, ஆன்மாவின் விழிப்புறப்பட்ட உள்ளுணர்வுப் பூர்வமான ஞானமானது, பருப்பொருள், உயிர் சக்தி மற்றும் உணர்வு நிலையின் திரைகளை ஊடுருவி அனைத்துப் பொருட்களின் மையமான இறை – சாரத்தை வெளிப்படுத்துகிறது.….

இறை ஐக்கியத்தின் இராஜ பாதையாகிய இராஜயோகம், அகத்தேயுள்ள இறை இராஜ்யத்தை உண்மையாக அறியும் விஞ்ஞானம் ஆகும். ஒரு உண்மையான குரு அளிக்கும் தீட்சையின் போது பெறப்பட்ட உள்முகப்படுதலின் புனித யோக உத்திகளின் பயிற்சி வாயிலாக, அறிவெல்லை கடந்த உணர்வு நிலையின் விண்ணுலக பகுதிகளின் வாயில்களான மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள சூட்சும மற்றும் காரண மையங்களை விழிப்புறச் செய்வதின் மூலம், ஒருவர் அந்த ராஜ்யத்தைக் காணமுடியும். அத்தகைய விழிப்பு நிலையை அடையப் பெறும் ஒருவர் சர்வ வியாபக இறைவனை அவனது எல்லையற்ற இயற்கையில், ஒரு ஆன்மாவின் தூய்மையில் மற்றும் மாறக்கூடிய லெளகீக வடிவங்கள் மற்றும் சக்திகள் எனும் மாயை சார்ந்த ஆடைகளிலும், அறிகிறார்.

மேற்போக்காக எளிமையாகத் தோன்றும் போதனைகளில், இயேசு மிக ஆழ்ந்து – பெரும்பாலான மக்கள் புரிந்துக் கொள்வதை விட மிக அதிகம் ஆழ்ந்து சென்றார்….அவற்றில் [அவரது போதனைகளில்] தியானத்தின் மூலம் இறை ஐக்கியத்தை அடையும் அறிவெல்லைக் கடந்த வழியில், யோகத்தின் முழு விஞ்ஞானமும் உள்ளது.

இதைப் பகிர