அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள்

யோகம் என்றால் என்ன?

யோகம் என்பதன் பொருள், தனிப்பட்ட உணர்வுநிலை அல்லது ஆன்மா, பிரபஞ்ச உணர்வுநிலையுடன் அல்லது பரம்பொருளுடன் “ஐக்கியம்” ஆதல் ஆகும். இன்று யோகம் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் எளிய உடல்ரீதியான பயிற்சியாக செய்யப்படுகிறது என்றாலும், யோகாவின் ஆழமான பயிற்சி தனிப்பட்ட ஆன்மாவை எல்லையற்றவனுடன் ஐக்கியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீங்கள் எந்த வகையான யோகத்தைக் கற்பிக்கிறீர்கள்?

பரமஹம்ஸ யோகானந்தர் ராஜ யோகப் பாதையைக் கற்பித்தார், இது திட்டவட்ட, விஞ்ஞான தியான முறைகளை — கிரியா யோகம் என்று அறியப்படுவதை –உள்ளடக்கியது; இது ஒருவரின் முயற்சிகளின் தொடக்கத்திலிருந்தே இறுதி இலக்கின் கண நேரத் தோற்றதைக் கண்டுணர உதவுகிறது — பரம்பொருளுடனான ஆன்மாவின் ஐக்கியம். கிரியா யோகப் பாதை ஒரு முழுமையான தத்துவத்தையும் வாழ்க்கை முறையையும் உள்ளடக்கியது. கிரியா யோகப் பயிற்சியின் மூலம், மன மற்றும் உடல் இயக்கங்களை அமைதிப்படுத்த முடியும், இதனால் வரையறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரின் உணர்வுநிலையால் இறைவனின் பேரின்பத்தையும் சர்வ வியாபகத்தன்மையையும் உணர முடியும்.

ஒய்.எஸ்.எஸ் போதனைகளில் ஹத யோக ஆசனப் பயிற்சியும் அடங்குமா?

ஒய்.எஸ்.எஸ் பாடங்கள், ஹத யோக ஆசனங்களில் அல்லது அங்க நிலைகளில் அறிவுறுத்தலை உள்ளடக்கவில்லை என்றாலும், அவற்றின் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரமஹம்ஸ யோகானந்தர் ஊக்குவித்தார்.

கிரியா யோகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொண்டு பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை என்னால் எப்படிப் படிக்க முடியும்?

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக இலக்கியமான, ஒரு யோகியின் சுயசரிதம் உங்களிடம் ஏற்கனவே இல்லையெனில், எங்கள் இலவசத் தகவல் தொகுப்பில் ஆத்ம அனுபூதியின் மூலம் உயர்ந்த சாதனைகள் -ஐ, வாசிக்குமாறு பரிந்துரைக்கிறோம். ஸ்ரீ யோகானந்தரின் போதனைகளைப் படிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், யோகதா சத்சங்கப் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

யோகதா சத்சங்கப் பாடங்களில் என்னவெல்லாம் இருக்கின்றன?

 ஒய்.எஸ்.எஸ் பாடங்கள்  என்பது பரமஹம்ஸ யோகானந்தரின் யோக முறைகளில் படிப்படியான கல்வியை வழங்கும் ஒரு ஆழ்ந்த வீட்டுப்பாடத் தொடராகும், இதில் கிரியா யோகத் தியான விஞ்ஞானம் மற்றும் அவரது “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளின் முழு அளவிலான பாடங்களும் அடங்கும்.

உலகில் என் பொறுப்புகள் என் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ளும்போது என் ஆன்மீக இலக்குகளை என்னால் எப்படி அடைய முடியும்?

பரமஹம்ஸ யோகானந்தர், எண்ணற்ற மற்றும் அதிக நேரம் எடுக்கும் பொறுப்புகளை உடையவர்களின் சவால்களை நன்கு புரிந்து கொண்டுள்ளார். தியானம் மற்றும் சரியான செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் சமச்சீரான வாழ்க்கைப் பாதையை அவர் கற்பித்தார். அவரது போதனைகள் அற்புதமாக நடைமுறை சார்ந்தது என்றும் குடும்பம் மற்றும் வேலை பொறுப்புகள் உட்பட உங்கள் அன்றாட தொழில்நாட்டத் தொடர்புடைய பல தலைப்புகளில் வழிகாட்டுதல்களை வழங்குகிறது என்றும் நீங்கள் காண்பீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் இறைவனை உங்களுடைய அனைத்துச் செயல்பாடுகளிலும் – மற்றும் எல்லாம்-நிறைவேற்றும் அவனுடனான ஆனந்தமயத் தொடர்பையும் – எவ்வாறு கொண்டு வர முடியும் என்பதை அவை கற்பிக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கி, ஒய்.எஸ்.எஸ் -ன் ஆன்மீக முறைகளைப் பயிற்சி செய்வதற்கு ஓர் அட்டவணை போட்டுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். நேரத்தின் அளவு மட்டுமல்ல, உங்கள் பயிற்சியில் உள்ள நேர்மை மற்றும் முயற்சியின் ஆழம் தான் இறைவனுடனான அகத்தொடர்பு உணர்வைத் தரும்.

நான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைகிறேனா என்பதை எப்படி அறிவேன்?

ஆன்மீக வளர்ச்சி என்பது ஒரு படிப்படியான செயல்முறை.. நமக்குள் நிகழும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களே அதற்கு உறுதியான அறிகுறிகள். அதிகரிக்கும் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு உணர்வு, அமைதி, ஆனந்தம், ஆழமான புரிதல், தீய பழக்கங்களிலிருந்து விடுபடுதல், மற்றும் இறைவனின் மீது பெருகும் அன்பும், ஆசையும், போன்றவை. பரமஹம்ஸ யோகானந்தர், விடாமுயற்சியே ஆன்மீக வெற்றியின் முழு மந்திரம் என்று கூறினார். சில நேரங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைபவர்கள், அதற்கு “ஆதாரமாக” அரிதாகவே ஆன்மீக அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள் அல்லது ஒன்றுமே இராது. உண்மையில், பெரும்பாலும் நாம் உறுதியாக ஆன்மீக முயற்சி எடுக்கும்போதும், வாழ்க்கையின் அன்றாட சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும்போதும், இறைவனின் வெளிப்படையான மறுமொழியை நாம் அறிந்திருக்காவிட்டாலும் கூட, நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். உண்மையான முன்னேற்றம், தரிசனங்கள் அல்லது பிற அனுபவங்களை விட, நமது அன்றாட நடத்தை, எண்ணங்கள் மற்றும் செயல்களில் அதிகமாக பிரதிபலிக்கிறது.

ஒய்.எஸ்.எஸ் உத்திகளைப் பயிற்சி செய்து கொண்டே நான் மற்ற ஆன்மீகப் பாடங்கள் மற்றும் உத்திகளைத் தொடரலாமா?

பரமஹம்ஸ யோகானந்தர், எந்த ஒரு சமயத்தினரையும் தனது போதனைகளின் மாணவராக வரவேற்றார். அவர் கற்பித்த யோகத்தின் விஞ்ஞான முறைகளைப் பயிற்சி செய்வதன் விளைவுகள், ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை முறையை ஏற்றுக்கொள்வதில் இருந்து வரவில்லை, மாறாக இறைவனுடனான நேரடி தனிப்பட்ட அனுபவத்திலிருந்து வருகின்றன என்று அவர் விளக்கினார். இருப்பினும், வெவ்வேறு பாதைகளின் ஆன்மீக உத்திகளை இணைப்பது நீர்த்த விளைவுகளையே தருகிறது என்று அவர் எச்சரித்தார். ஒரே பாதையை உறுதியாகப் பின்பற்றுவது மற்றும் அதன் பரிந்துரைக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவது உங்களை ஆன்மீக இலக்கிற்கு மிக விரைவாக அழைத்துச் செல்லும்.

நீங்கள் தியான வகுப்புகள் நடத்துகிறீர்களா?

தியானத்தைக் கற்றுக்கொள்ள நாம் பரிந்துரைக்கும் வழி யோகதா சத்சங்கப் பாடங்களுக்கு விண்ணப்பிப்பது ஆகும். பரமஹம்ஸ யோகானந்தர் தனது வாழ்நாளில் வழங்கிய போதனைகளிலிருந்து இந்த ஆழமான வீட்டுப்பாடத் தொடர் தொகுக்கப்பட்டது. ஒய்.எஸ்.எஸ் பாடங்கள் அவருடைய விரிவான, படிப்படியான கிரியா யோக தியான விஞ்ஞான வழிமுறைகளையும், அத்துடன் அவரது “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளின் முழு அளவிலான பாடங்களையும் அளிக்கின்றன.

கிரியா யோக தீட்சை எனக்கு எப்போது கிடைக்கும்?

யோகதா சத்சங்க பாட அடிப்படைத் தொடர் மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட அறிக்கையை (பாடம் 17 இல் சேர்க்கப்பட்டுள்ளது) ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க சகா மடத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் கிரியா யோக தீட்சை பெற விண்ணப்பிக்கலாம். (பாடங்களின் முந்தைய பதிப்பின் மாணவர்கள், அந்த வரிசையில் உள்ள பாடம் எண் 52-ன் மூலம் படிகள் 1 மற்றும் 2 ஐ முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.)

ஒருவர் ஆன்மீக ரீதியாக முன்னேறுவதற்கு ஸ்தூல உடலுடனான குரு தான் வேண்டுமா?

உண்மையான குருமார்கள் அனைவரும், ஸ்தூல உடலுடன் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று பரமஹம்ஸ யோகானந்தர் விளக்கினார். “ஒரே தளத்தில் வாழ்ந்தாலும் அல்லது இல்லாவிடினும் அவர்களுடய உணர்வுநிலை அவர்களின் சீடர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு உண்மையான குருவின் இன்றியமையாக் குணங்கள் மற்றும் வெளிப்பாடுகளில் ஒன்று சர்வ வியாபகத் தன்மையாகும்.” என்று அவர் கூறினார். ஆன்மீக வழிகாட்டுதலுக்காக அவரை நாடும் அனைவருக்கும் பரமஹம்ஸ யோகானந்தரே தொடர்ந்து உதவி செய்து அருளாசிகளை வழங்குகிறார்.

ஒய்.எஸ்.எஸ். குருமார்கள் வரிசையில் பரமஹம்ஸ யோகானந்தரைத் தொடர்ந்து யாராவது வந்தார்களா?

அவர் மறைவதற்கு முன்பு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் குருமார்கள் பரம்பரையில் அவர் கடைசி குருவாக இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் என்று பரமஹம்ஸர் கூறியுள்ளார். “நான் மறைந்த பின்னர், என் போதனைகள் குருவாக இருக்கும்; போதனைகள் மூலம் நீங்கள் என்னிடம் மற்றும் என்னை அனுப்பிய மகத்தான குருமார்களிடம் இசைந்து இருப்பீர்கள்” என்றார். எனவே பரமஹம்ஸ யோகானந்தரின் கூற்றுப்படி, பிற்கால சீடர் எவரும் ஒரு குருவின் பாத்திரத்தையோ அல்லது பட்டத்தையோ ஏற்க மாட்டார். இந்தத் தெய்வீகக் கட்டளை சமய வரலாற்றில் தனித்துவமானது அல்ல. இந்தியாவில் சீக்கிய மதத்தை நிறுவிய மாபெரும் துறவியான குருநானக்கின் மறைவுக்குப் பிறகு, வழக்கம் போல் குருமார்கள் அடுத்தடுத்து வந்தனர். அந்த வரிசையில் பத்தாவது குரு, தான் அந்த குருமார்களின் வரிசையில் கடைசியானவராக இருக்கப் போவதாக அறிவித்தார், இனிமேல் போதனைகள் தான் குருவாகக் கருதப்பட வேண்டும் என்று அறிவித்தார். தான் நிறுவிய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மூலம் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று பரமஹம்ஸர் உறுதியளித்தார்.

ஒய்.எஸ்.எஸ்/ எஸ்.ஆர்.எஃப் இன் தற்போதைய தலைவர் யார்?

ஒய்.எஸ்.எஸ்/ எஸ்.ஆர்.எஃப் -ன் தற்போதைய தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர் சுவாமி ஸ்ரீ ஸ்ரீ சிதானந்த கிரி ஆவார். இவர், யோகதா சத்சங்க சொஸைடி / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பில் நாற்பது ஆண்டு காலமாக இருக்கும் ஒரு சன்னியாசி. மறைந்த எஸ்.ஆர்.எஃப் தலைவர் ஸ்ரீ தயா மாதா, 2010 ஆம் ஆண்டில் அவர் மறைவதற்கு முன்னர், மிருணாளினி மாதாவுக்குப் பிறகு, ஒய்.எஸ்.எஸ்/எஸ்.ஆர்.எஃப் -ன் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் சுவாமி சிதானந்தர் இருக்க வேண்டும் என்ற தம் கருத்தை மிருணாளினி மாதாவிடம் வெளிப்படுத்தினார். மிருணாளினி மாதா, அவர் மறைந்த ஆகஸ்ட் 3, 2017-க்கு சில மாதங்களுக்கு முன்பு இதை உறுதிப்படுத்தினார், மேலும் தயா மாதாவின் பரிந்துரைக்கு தனது ஒப்புதலையும் இயக்குநர் குழுவிடம் உறுதிப்படுத்தினார். சுவாமி சிதானந்தர், இந்த பதவிக்கு ஆகஸ்ட் 30, 2017 அன்று இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

YSS/SRF-ன் தாமரை சின்னத்தின் அர்த்தம் என்ன?

யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா/ ஸெல்ப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் அடையாளச் சின்னம், ஒரு தங்க தாமரை மலருக்குள் அமைந்துள்ள இரு புருவங்களுக்கு இடையே உள்ள புள்ளியில் வெள்ளை நட்சத்திரம் மற்றும் நீல மற்றும் தங்க ஒளியுடன் சுற்றியுள்ள வளையங்களைக் காட்டும் ஆன்மீகக் கண்ணை சித்தரிக்கிறது. திறந்த தாமரை விழித்திருக்கும் ஆன்மீக உணர்வின் பண்டைய அடையாளமாக இருப்பது போலவே, தியானம் செய்யும் பக்தரின் தெய்வீக உணர்வின் கண்ணைத் திறக்கும் இலக்கை இது குறிக்கிறது.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp