ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துகளில் இருந்து சில பகுதிகள்
“எந்தத் தீங்கிழைக்கப்பட்ட நிலையிலும் ஒருவர் மன்னிக்க வேண்டும்,” என்று மகாபாரதம் கூறுகிறது. “இனங்கள் தொடர்ந்து வாழ்வது மனிதனின் மன்னிக்கும் பண்பால் என்று கூறப்பட்டுள்ளது. மன்னிப்பு புனிதமாகும்; மன்னிப்பின் மூலமே பிரபஞ்சம் ஒருசேர இணைக்கப்பட்டிருக்கிறது. மன்னிப்பே வலியோரின் வலிமை; மன்னிப்பு தியாகம் ஆகும்; மன்னிப்பு மனத்தின் அமைதி ஆகும். மன்னிப்பும் மென்மையும் ஆன்ம-அமைதி உடையோரின் பண்புகள் ஆகும். அவை நிலைபேறான நற்பண்பைக் குறித்துக் காட்டுகின்றன.”
![]()
மற்றவர்களின் இதயத்திலிருந்து எல்லா வலிகளையும் தணிக்கும் அந்த அனுதாபத்தை, இயேசுவைப் பின்வருமாறு கூற வைத்த அந்த அனுதாபத்தை உங்கள் இதயத்தில் ஊற்றெடுக்க வைக்க வேண்டும்: “தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை.” அவருடைய பேரன்பு எல்லோரையும் உள்ளடக்கியது. அவரால் தன் விரோதிகளை ஒரு பார்வையால் அழித்திருக்க முடியும், இருப்பினும் இறைவன் நமது எல்லாக் கெட்ட எண்ணங்களையும் அறிந்தபோதும் கூட நம்மை இடைவிடாது மன்னித்துக் கொண்டிருப்பதைப் போல, இறைவனுடன் சுருதி சேர்ந்திருக்கும் அந்த மாபெரும் ஆன்மாக்கள் அதே அன்பை நமக்கு வழங்குகின்றனர்.
நீங்கள் கிறிஸ்து-உணர்வுநிலையை வளர்க்க விரும்பினால், அனுதாபத்துடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கான உண்மையான உணர்வு உங்கள் இதயத்தில் வரும் போது, நீங்கள் அந்த மாபெரும் உணர்வுநிலையை வெளிப்படுத்த ஆரம்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்….பகவான் கிருஷ்ணன் கூறினான்: “எல்லா மனிதர்களிடத்தும் ஒரே மனமுடையவனே ஓர் உயர்ந்த யோகியாவான்….”
சீற்றமும் வெறுப்பும் ஒன்றையும் சாதிப்பதில்லை. நீங்கள் எவரையேனும் அடக்கிவைக்கலாம், ஆனால் அந்த நபர் ஒருமுறை மீண்டும் எழுந்தபின், அவர் உங்களை அழிக்க முயற்சி செய்வார். அப்போது எப்படி நீங்கள் அவரை வெற்றிகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் வெற்றிபெறவில்லை. வெற்றிகொள்ளும் ஒரே வழி அன்பினால் ஆகும். மேலும் எங்கே உங்களால் வெற்றிபெற முடியவில்லையோ, அங்கே அமைதியாக இருங்கள் அல்லது வெளியேறி விடுங்கள் , மற்றும் அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த வழியில்தான் நீங்கள் அன்பு செலுத்த வேண்டும். இதை உங்களுடைய வாழ்வில் நீங்கள் பயிற்சி செய்தால், உங்களிடம் புரிதலைத் தாண்டிய அமைதி இருக்கும்.
சங்கல்பம்
சங்கல்பத் தத்துவமும் அறிவுறுத்தல்களும்
“இன்று நான் இதுவரை என்னைப் புண்படுத்திய அனைவரையும் மன்னிக்கிறேன். நான் தாகமுள்ள எல்லா இதயங்களுக்கும், என்னிடம் அன்பு செலுத்துவோர், என்னிடம் அன்பு செலுத்தாதோர் ஆகிய இருசாரார்களுக்கும், என் அன்பை வழங்குகிறேன்.”

















