YSS

நிச்சயமற்ற உலகில் அக பாதுகாப்பு

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துக்களில் இருந்து சில பகுதிகள்

இத்தனை போர்களும் இயற்கை பேரழிவுகளும் நிகழ்வது ஏன்?

பேரழிவையும் பெருத்த சேதத்தையும் ஏற்படுத்தும் திடீர் இயற்கை சீற்றங்கள் “கடவுளின் செயல்” அன்று. அத்தகைய பேரழிவுகள், மனிதனின் எண்ணங்களாலும் செயல்களாலுமே நிகழ்கின்றன. மனிதனின் தவறான எண்ணங்கள் மற்றும் செயல்களால் விளையும் துன்ப அதிர்வுகளின் மிகுதியால் உலகில் நல் அதிர்வுகளுக்கும் தீய அதிர்வுகளுக்கும் இடையேயான சமநிலை சீர்குலையும் போதெல்லாம் நீங்கள் பேரழிவுகளை காண்பீர்கள். . . .

போர்கள் தெய்வீக விதிகளுக்கு இணங்க நிகழ்வது இல்லை. மாறாக பெருகிவரும் உலகியல் சார்ந்த சுயநலமே போர்களுக்கு காரணமாகின்றன. சுயநலத்தை விட்டொழியுங்கள்- சொந்த வாழ்க்கையில், தொழிலில், அரசியலில், நாட்டில் – அப்போது போர்கள் ஒரு போதும் நிகழாது.

தெய்வீகத்திற்கு புறம்பான சித்தாந்தங்களுடன் வாழ்வதுதான் நவீன யுகத்தின் பல்வேறு குழப்பங்களுக்கு காரணம். தெய்வீக இலக்குகளான சகோதரத்துவம், தொழில்துறையில் ஒத்துழைப்பு, பொருட்கள் மற்றும் அனுபவங்களின் உலகளாவிய பரிமாற்றம் ஆகிய தெய்வீகக் குறிக்கோள்களுடன் வாழந்தால் நாடுகளுக்கும் தனி மனிதர்களுக்கும் பேரழிவிலிருந்து பாதுகாப்பு கிட்டும்.

ஒரு நாள் நம்மிடையே அதிகமான புரிதல் ஏற்பட்டு, தேச எல்லைகள் மறைந்துவிடும் என்று நான் நம்புகிறேன். நாம் இந்த பூவுலகம் முழுவதையும் நமது நாடு என்று கூறிக் கொள்வோம்: நாம் நடுநிலையான சர்வதேச கூட்டமைப்பின் மூலமாக தன்னலம் கருதாது மக்களின் தேவைக்கு இணங்க பொருட்களை விநியோகம் செய்வோம். ஆனால் சமநீதியை அடக்குமுறையினால் நிலைநாட்ட முடியாது. அது இதயத்திலிருந்து வர வேண்டும். . . . . நாம் அதை இப்போதே, நம்மிடத்திலிருந்தே தொடங்க வேண்டும். மீண்டும் மீண்டும் உலகில் தோன்றி நமக்கு வழிகாட்டிய தெய்வீக பிறவிகளை போன்று நாம் வாழ முயற்சிக்க வேண்டும். அவர்கள் கற்பித்தவாறும், வாழ்ந்து காட்டியவாறும், நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவதன் மூலமாகவும், ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளுவதன் மூலமாகவும் அமைதியை அடையலாம்.

உலகத்தின் துயரங்களை நீக்கும் ஒரே வழி – பணம், வீடு வாசல் அல்லது வேறு எந்த வகையான சொத்து சுகத்தையும் விட – தியானம் செய்வதன் மூலம் நாம் உணரும் தெய்வீக விழிப்பை மற்றவர்களுக்கு பரவ செய்வது மட்டுமே. நான் என்னுள்ளே வைத்திருப்பதை ஆயிரம் சர்வாதிகாரிகள் வந்தாலும் அழித்துவிட முடியாது. இறை உணர்வை நாள்தோறும் மற்றவர்கள் மீது பாய்ச்சுங்கள். எல்லா ஆன்மாக்களையும் தன்னிடமே ஈர்த்துக் கொள்ளவேண்டும் என்ற மனித குலத்திற்கான இறைவனது திட்டத்தை புரிந்து கொள்ளுங்கள்- அவனது விருப்பத்திற்கு ஒத்திசைந்து பணியாற்றுங்கள்.

ஆண்டவன் என்றால் அன்பு; அவனது படைப்புப் பணியின் திட்டம் அன்பில்தான் முளைத்தெழுகிறது. இந்த ஒரு எளிய சிந்தனை – அறிவார்ந்த ஒரு காரண காரியங்களை விட மனித இதயத்திற்கு ஆறுதல் அளிப்பதல்லவா? உண்மையின் உள்ளீட்டை உரசிப் பார்த்த மகான்கள் அனைவரும் உலகளாவிய தெய்வீக திட்டம் ஒன்று உள்ளது, அது அழகானது, ஆனந்தமயமானது என்பதற்கு சான்று பகர்கின்றன.

இறைவனின் நம்பிக்கையின் மூலம் அச்சமற்று இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்

Sun rays piercing in gardenஉலகத்தில் வீசும் சூறாவளிகளிலிருந்து பாதுகாக்கும் ஒரே துறைமுகம் இறைவன் மட்டுமே. “உங்களது இதயத்தில் முழு ஆர்வத்தோடு இறைவனில் தஞ்சம் புகுந்திடுங்கள். அவனது அருளால் உங்களுக்கு பூரண அமைதியும் நிரந்தர புகலிடமும் கிட்டும்.” அவனில் நான் என் வாழ்ககையின் ஆனந்தத்தைக் கண்டேன். அது இருப்பின் விவரிக்க இயலாத பேரின்பம், அவனது எங்கும் நிறை இயல்பை என்னிடமே அறிந்த அற்புத உணர்வு. உங்கள் அனைவருக்குமே அது கிடைக்க வேண்டும்.

இறைவன் எங்கு இருக்கிறானோ அங்கு அச்சமும் இல்லை, துக்கமும் இல்லை என்று யோகம் உரைக்கின்றது. மோதி உடையும் உலகங்களின் நடுவில் எந்த பாதிப்பும் இன்றி நிமிர்ந்து நிர்க்க ஒரு வெற்றிகரமான யோகிக்கு சாத்தியமாகும்: “இறைவா, நான் எங்கு இருக்கிறேனோ அங்கு நீ வந்தாக வேண்டும்”, என்ற புரிதலில் அவன் பாதுகாப்பாக உணருகிறான்.

அச்சமின்மை என்பது கடவுளில் நம்பிக்கை: அவருடைய பாதுகாப்பு , அவர் நீதி, அவர் ஞானம், அவர் கருணை, அவர் அன்பு, சர்வவியாபம் ஆகியவற்றில் நம்பிக்கை….

பயம் மனிதனின் ஆத்மாவின் நிலையற்ற தன்மையைப் பறிக்கிறது. தெய்வீக சக்தியின் மூலத்திலிருந்து வெளிவரும் இயற்கையின் இணக்கமான செயல்பாடுகளை சீர்குலைப்பது, பயம் உடல், மன மற்றும் ஆன்மீக இடையூறுகளை ஏற்படுத்துகிறது …. கவலையில் மூழ்குவதற்கு பதிலாக அவர் உறுதி செய்ய வேண்டும்: “நான் எப்போதும் உங்கள் அன்புப் பராமரிப்பு கோட்டையில் பாதுகாப்பாக இருக்கிறேன்.”

நீங்கள் ஆப்பிரிக்க காடுகளில் இருந்தாலும், போர்முனையில் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டிருந்தாலும், வறுமையில் வாடினாலும், இறைவனிடம் சொல்லுங்கள் அதையே நம்புங்கள். உன் அணுக்கத்தில் உள்ள கவச வாகனத்தில் நான் வாழ்க்கைப் போர்க்களத்தை கடந்து செல்கிறேன். நான் பாதுகாப்பாக உள்ளேன். இறைவனைத் தவிர்த்து வேறெந்த பாதுகாப்பும் நமக்கில்லை. இயல்பான பொது அறிவை பயன்படுத்தி இறைவனை முழுமையாக நம்புங்கள். நான் விசித்திரமான எதையும் கூறவில்லை; என்ன நடந்தாலும் இந்த உண்மையில் உறுதியாக இருங்கள். அதையே நம்புங்கள்: “ ஆண்டவனே, உன்னால் மட்டுமே எனக்கு உதவ முடியும்.”

உங்களது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இறைவனிடமிருந்து ஈர்த்துக் கொள்ளுங்கள். தாங்க முடியாத துன்பங்கள் பனிச்சரிவைப் போல திடீரென தாக்கும்போது உங்களது துணிவும் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றலும் செயலிழக்க அனுமதிக்காதீர்கள். உங்களது இயல்பான உள்ளுணர்வையும் இறை நம்பிக்கையையும் உயிர்ப்போடு வைத்துக் கொண்டு, தப்பிப்பதற்கான மெலிதான வாய்பாக இருப்பினும் இதை கண்டறிய முயலுங்கள். அந்த வழி உங்களுக்குப் புலப்படும். எல்லாமே இறுதியில் சரியாக வந்தடையும். புறத்தே புரியாத புதிராக விளங்கும் மனித அனுபவங்களின் பின்னால் இறைவன் தனது நல்லெண்ணத்தை மறைத்து வைத்திருக்கிறான்.

இருள் சூழ்ந்த தருணங்களில் இறைவனின் அன்பார்ந்த வழிகாட்டுதலைப் பற்றிக் கொள்ளுங்கள்.

தெய்வத்தை உங்களது ஆன்மாவின் மேய்ப்பராக ஆக்குங்கள். நீங்கள் நிழல் பரவிய பாதைகளில் பயணிக்கும் போது இறைவனை உங்களது தேடல் விளக்காக்கிக் கொள்ளுங்கள். அறியாமை என்ற இரவில் அவனே உங்களுக்கு ஒளிகாட்டும் நிலா. நீங்கள் விழித்திருக்கும் பகற் பொழுதில் அவன் உங்களது சூரியன். இருள் மண்டிய வாழ்க்கைக் கடலில், திசைகாட்டும் வடமீன் அவனே. அவனது வழிகாட்டுதலை நாடுங்கள். தனது ஏற்ற இறக்கங்களுடன் வாழ்க்கை இவ்வாறுதான் நகர்ந்து கொண்டே இருக்கும். எந்த திசையில் செல்வது என்பதற்கான விடை எங்கே கிடைக்கும்? நமது பழக்க வழக்கங்களாலும், குடும்பம், நாடு, உலகம் ஆகிய சூழ்நிலைகளின் பாதிப்புகளாலும், நம்முள் கிளர்ந்தெழும் தவறான எண்ணங்கள் மூலம் எந்த விடையும் கிடைக்காது. மாறாக நம்முள் ஒலிக்கும் அகக் குரலே நம்மை வழிநடத்தும்.

ஒவ்வொரு கணமும் நான் இறைவனைத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் என் இதயத்தை இறைவனிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டேன். நான் என் ஆன்மாவை அவனது பொறுப்பில் விட்டுவிட்டேன். அவனது அழிவற்ற பாதாரவிந்தங்களில் எனது அன்பை, பக்தியை அற்பணம் செய்துவிட்டேன். இறைவனைவிட வேறு எதையும் நம்ப வேண்டாம். அதன்பின், உள்ளிருந்து இறைவன் ஆணையிடுவதற்கு இணங்க, அவனது ஒளியை வெளிப்படுத்துபவர்களை நம்புங்கள். அந்த ஒளியே எனக்கு வழிகாட்டுகிறது. அதுவே என் அன்பு, அதுவே என்அறிவு. அவனது நற்கணங்கள் எவ்வாறு வெற்றியடைகின்றன, என்றும் அவை எப்பொழுதுமே வெற்றியடைய வல்லவை என்றும் அவன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கின்றான்.

நான் இந்தப் போரைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது வழக்கம், ஆனால், “இறைவா, நான் தீர்ப்பு வழங்கும் ஒருவன் அல்ல. அனைத்து மனித குலத்திற்கும் தேசங்களுக்கும் நீயே நீதிபதி. நீ அனைவரின் கர்மவினைகளையும் அறிவாய். உனது தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதுவே என் விருப்பம்”, என்று நான் பிராத்தனை செய்தபோது எனக்கு மிகுந்த ஆறுதல் கிடைத்தது. இந்த எண்ணம் இந்தியாவைப் பற்றிய எனது கவலையைக்கூட போக்கிவிட்டது, ஏனெனில் இறைவன் அவளைப் பாதுகாப்பான் என்பதை நான் அறிவேன். ஆண்டவனின் தீர்ப்புகளையே நாம் அதிகமாக சார்ந்திருக்கப் பழக வேண்டும். உலக நாடகத்தில் ஒவ்வொரு காட்சியும் முடிவுற்ற பின்தான் இந்த உண்மை நமக்கு புரிகின்றது. போர் நிகழும்போது அவனது தீர்ப்புகளை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்; ஆனால் காலப்போக்கில், இந்த மோதலில் அவனது பங்கு இருந்தது என்பது புலப்படும். அதன் உடனடி விளைவுகள், பின்னர் வரும் தொடர் நிகழ்வுகள் ஆகிய அனைத்துமே அவனது தீர்ப்பிற்கு இணங்க, அந்த நாடுகளின் அவற்றின் தனிப்பட்ட மனிதர்களின் கர்ம வினைகளுக்கு இணங்க அவன் வழங்கும் தீர்ப்புகளாக இருக்கும். இந்தப் போரின் தீக் கனலிலிருந்து ஓர் உயர்வான உலகம் தோன்றும். இதை நினைவில் கொள்ளுங்கள், மிருகத்தனமான வலிமைக்கு இறுதி வெற்றி கிட்டுவதில்லை. அதை நீங்கள் இந்தப் போரில் காண்பீர்கள். நல்லெண்ணமே இறுதியில் வெற்றிவாகை சூடும்.

இன்றைய சூழல்களுக்கு ஏற்ற ஆன்மீக அனுகுமுறை என்ன?

தற்போதைய உலக நெருக்கடிக்கு காரணம் துவாபரயுகத்தின் மேல் நோக்கிய நகர்வே; உலகம் முன்னேற வேண்டுமானால் தீமை தூக்கி எறியப்பட வேண்டும். தீய சக்திகள் தம்மைத் தாமே அழித்தக் கொள்ளும். அதனால் ஞாயமான நாடுகளுக்கு காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கை பிறக்கும். வரலாறு தோன்றிய நாட்களில் இருந்தே நன்மைக்கும் தீமைக்குமான மோதல் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. ஆனால் உலகம் துவாபரயுகத்தில், மின்சார அல்லது அணுயுகத்தில் முன்னேறிச் செல்வதால் நன்மை நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பது மட்டுமன்றி, பேராசை கொண்டவர்களும் அதிகாரத்தில் விருப்பம் கொண்டவர்களும் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தவதால் அழிவை சந்திக்கவும் நேரும். துவாபர யுகத்தின் பாதிப்பால் தொழில்நுட்பம் சாமானிய மக்களை சாதனைகளின் உச்சத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. இந்த முன்னேற்றம் சாதனையாளர்களுக்கும் சாதிக்க இயலாதவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்கிவிடுகிறது. இது பொறாமை மற்றும் சமூக பொருளாதார அரசியல் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

பரஸ்பர அன்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பால் உருவாகும் மனித சகோதரத்துவத்தை நான் நம்புகிறேன். நல்ல குறிக்கோள்களும் உயர்ந்த லட்சியங்களும் நல்வழிப்பட்ட ஆன்மீக எடுத்துக்காட்டுக்களால் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், மிருக பலத்தாலும் போர்களாலும் அல்ல. ஆன்மீகக் கோட்பாடுகள் என்று நான் கூறுவது ஒரு சில மதங்களின் கொள்கைகளை அல்ல. அவையும்கூட பிரிவினைக்கு வழி வகுக்கக் கூடும். தர்மம் அல்லது மனித குலம் முழுமைக்கும் நன்மை விளைவிக்கும் உலகளாவிய அறக்கோட்பாடுகளையே நான் இங்கு குறிப்பிடுகின்றேன். சில சமயங்களில் தீமை பரவுவதை தடுப்பதற்கு, அறப்போர் அவசியமாகிறது. காட்டில் வாழும் புலியிடம் அகிம்சையையும் ஒத்து வாழ்வதையும் போதிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் உங்களது தத்துவ பிராச்சரத்தை முடிப்பதற்கு முன்பே அது உங்களை கொன்றுவிடும். தீங்கு விளைவிக்கும் சில மனிதர்கள், பகுத்தறிவு வாதங்களுக்குக் கட்டுப்படுவதில்லை. ஹிட்லரைப் போல முரட்டுத்தனமாக போர் தொடுப்பவர்கள் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். தீமையை எதிர்த்து அறப்போர் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் வெல்வது உறுதி. ஒரு போர், அறம் சார்ந்ததா, இல்லையா என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறான்.

நான் தீர்க்கதரிசனமாக ஒன்றை இப்போது கூறுகின்றேன்: உலகம் இப்போது அழிவை நோக்கி செல்லவில்லை. எனவே நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தெய்வீக தந்தையின்பால் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் அவரது லட்சியங்களை நினைவில் கொண்டு, அவர் மீது நம்பிக்கை வைத்தால் அவர் உங்களை காப்பார். நாம் மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். உலகியல் சார்ந்த 12,000 வருட சுற்று கடந்து விட்டது, 32,400 வருட அணுயுகம் முடிந்துவிட்டது. அதன்பின் மனம் மற்றும் ஆன்மீக யுகங்களே எண்ணங்களே எஞ்சியுள்ளன. நாம் கீழ் நோக்கி செல்லவில்லை. என்ன நடந்தாலும் பரம்பொருள் வெற்றியடையும். நான் முன் கணித்துக் கூறுகின்றேன். . . . . ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடு அணுகுண்டை பயன் படுத்துபவர்கள், அந்த அணுகுண்டாலேயே இறந்து போவார்கள்; ஆனால், நான் அறிவேன், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இதயத்தில் வன்முறைக்கான விருப்பம் இல்லை. எங்ஙனம் ஹிட்லரும் அவனது சக்தியும் வீழ்ந்ததோ அதைப் போலவே எந்த சர்வாதிகாரியும் அவன் எங்கு இருந்தாலும் வீழ்ச்சியைதான் தழுவுவான். இதுவே எனது தீர்க்கதரிசனம்.

உலகெங்கிலும் உள்ள என் சகோதரர்களே, சகோதரிகளே: இறைவனே நமது தந்தை, அவர்ஒருவரே என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். நாம் அனைவரும் அவரது குழந்தைகள். எனவே நாம் ஆக்கப்பூர்வமான வழிகளில் உடலிலும், மனதிலும், பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் உலக ஐக்கிய நாடுகளின் லட்சிய குடிமக்கள் ஆவதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும். . . . .

உண்மையான ஆன்மீகப் புரிதல் மூலம் ஒவ்வொரு ஆன்மாவும் அற்பத்தனமான பிரிவினைகளிலிருந்து மேலெழும்போது, இறைவனின் உலகளாவிய தன்மை மற்றும் மனித சகோதரத்துவம் பற்றிய புரிதல் ஏற்படும். அப்பெரு நெருப்பு உலகின் துன்பங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்துவிடும்.

வானொலி, தொலைக்காட்சி, விமானப் பயணம் ஆகியவை முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு நம்மை ஒன்றிணைத்துள்ளன. நாம் இனிமேல் ஆசியா ஆசியர்களுக்கானது, ஐரோப்பா ஐரோப்பியர்களுக்கானது, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்றெல்லாம் எண்ணாமல் உலக ஐக்கிய நாடுகளாக இறைவனின் ஆளுகையின் கீழ் உலக குடிமக்களாக, உடல், மனம், மற்றும் ஆன்மாவில் முழு நிறைவுபெற கற்றுக் கொள்ள வேண்டும்.

பூமியின் மாறும் நிழல்களுக்குப்பின்னால் இறைவனின் மாறாத அன்பைத் தேடுங்கள்.

எந்த மனிதனாலும் எந்த தீர்க்க தரிசியாலும் இவ்வுலகிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவினைகளை துடைத்து விட முடியாது. ஆனால், நீங்கள் இறை விழிப்புணர்வில் உங்களை காணும்போது இந்த வேறுபாடுகள் யாவும் மறைந்துவிடும். அப்பொழுது நீங்கள் கூறுவீர்கள்:

என் இறைவா, உனது இசை என் மூலம் பாய்ந்தோடும்போது வாழ்க்கை இனிமையாகிறது. இறப்பு வெறும் கனவாகிறது. அப்போது இன்பம் இனிது, துன்பம் ஒரு கனவு உன் இசை என் வழியே பாய்கையிலே. அப்போது ஆரோக்கியம் இனிமை, நோய் கனவு உன் இசை என் வழியே பாய்கையிலே. அப்போது புகழ்ச்சி இனிது, இகழ்ச்சி கனவு உன் இசை என் வழியே பாய்கையிலே.

இது மிக உயரிய தத்துவம். எதற்கும் அஞ்ச வேண்டாம். ஒரு புயல்காற்று வீசும் போது கடல் அலையால் புரட்டி எடுக்கப்படும்போதுகூட நீங்கள் சமுத்திரத்தின் மார்பின் மீதுதான் இருக்கிறீர்கள். இறைவனின் உள்ளார்ந்த இருப்பு பற்றிய விழிப்புணர்வை எப்பொழுதும் பற்றிக் கொள்ளுங்கள். சமச்சீரான மனநிலையோடு, உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்: “எனக்கு பயமில்லை. நான் இறைப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளேன். பரம் பொருள் எனும் அக்னிப் பிழம்பின் அனல்பொறி நான். பிரபஞ்சப் பெருஞ்சுடரின் ஓர்அணு நான்.தெய்வீகத் தந்தையின் பிரபஞ்ச உடலில் ஓர் உயிர் அணு நான். நானும் என் தந்தையும் ஒருவரே ஆவோம்”

உங்களை இறைவனது திருவடிகளில் கிடத்திவிடுங்கள். நீங்கள் அவனிடம் சராணாகதி அடைவதற்கு இதைவிட சிறந்த நேரம் வேறெதுவும் இல்லை. . . . . . உங்களது ஆன்ம பலம் முழுவதையும் பயன்படுத்தி இறைவனை தேர்ந்தெடுங்கள். . . . . மாயை என்ற புகை மண்ணடலம் நம்மை அவனிடமிருந்து பிரிக்கின்றது. நம்மால் அவனை பார்க்க முடியவில்லையே என்று அவன் வருந்துகிறான். தனது குழந்தைகள் குண்டு மழையில் மாண்டுபோவது, கொடிய நோய்களுக்கு ஆளாவது, தவறான வாழ்வியல் பழக்கங்களில் வீழ்வது போன்ற பெரும் துன்பங்களுக்கு ஆளாவது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அதற்காக அவன் வருந்துகிறான். அவன் நம்மை நேசிக்கிறான், நாம் அவனிடமே மீண்டும் வந்துவிட வேண்டும் என அவன் விரும்புகிறான். இரவு நேரங்களில் நீங்கள் முயற்சி செய்து தியானித்து அவனோடு இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவன் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் உங்களை கைவிட்டுவிடவில்லை. நீங்கள்தான் உங்கள் ஆன்மாவை கைவிட்டுவிட்டீர்கள். . . . . இறைவன் ஒருபோதும் உங்களை புறக்கணிப்பதில்லை. . . . .
Beautiful scenic landscape with mountains

படைப்பின் ஒரே குறிக்கோள் அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு உங்ளைக் கட்டாயப்படுத்தி, எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள இறைவனை தரிசிக்க செய்வதேயாகும். நீங்கள் அனைத்தையும் மறந்து இறைவனை மட்டுமே நாட வேண்டும் என்று அவன் விரும்புகிறான். நீங்கள் இறைவனிடம் தஞ்சம் புகுந்துவிட்டால், வாழ்வும் சாவும் உண்மை என்ற எண்ணம் இராது. தூங்கும்போது இறைவனின் நிலையான இருப்பில் வந்து போகும் கனவுகளைப் போல அனைத்து இருமைகளையும் நீங்கள் காண்பீர்கள். எனது குரல் மூலம், இறைவன் கூறும் இந்த உபதேசத்தை மறந்துவிடாதீர்கள்: நானும் உங்களைப் போல ஆதரவற்ற நிலையில்தான் உள்ளேன். ஏனெனில் நான், ஒரு ஆன்மாவாக உடலோடு பிணைக்கப்பட்டுள்ளேன். நீங்கள் உங்கள் ஆன்மாவை விடுவித்துக் கொள்ளவில்லை என்றால் நானும் உங்களுடன் அடைக்கப்பட்டுதான் உள்ளேன். இனி தயக்கம் வேண்டாம். துன்பம் மற்றும் அறியாமை சகதியில் இனியும் விளையாட வேண்டாம். “வாருங்கள்! என்னுடைய ஒளியில் குளித்திடுங்கள்.”

இறைவன் நாம் இந்த மயக்கும் உலகிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவன் நமக்காக கதறுகிறான், ஏனெனில் அவனை விடுவிப்பது நமக்கு எவ்வளவு கடினமானது என்பதை அவன் அறிவான். நீங்கள் அவனது குழந்தை என்பதை மட்டுமே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் மீது இரக்கம் கொள்ளாதீர்கள். இறைவன் கிருஷ்ணனை அல்லது இயேசுநாதரை எவ்வளவு நேசிக்கிறானோ அதே அளவு உங்களையும் நேசிக்கிறான். நீங்கள் அவனது அன்பை நாட வேண்டும். ஏனெனில் அது நிரந்தர விடுதலை, முடிவற்ற ஆனந்தம் மற்றும் இறவாமை ஆகியவற்றை உள்ளடக்கியது.

அச்சுறுத்தும் இவ்வுலகக் கனவுகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். இறைவனின் இறை ஒளியில் விழித்தெழுங்கள். ஒரு கால கட்டத்தில் வாழ்க்கை ஒரு பயங்கரமான திரைப்படத்தைப் பார்ப்பதைப் போல எனக்கு இருந்தது. அப்போது நிகழ்த்தப்பட்ட துயர நிகழ்வுகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். அச்சமயம், நான் தியானம் செய்துகொண்டிருக்கையில், ஒரு பேரொளி என் அறையில் தோன்றியது. இறைவனின் குரல் என்னிடம் கூறியது: “நீ எதைப் பற்றி கனவு காண்கிறாய். எனது அழிவற்ற ஒளியைப் பார், அதில் உலகின் பல கொடுங்கனவுகள் வருவதும் போவதுமாக இருப்பதைக் காண்பாய். அவை உண்மையானவை அல்ல.” அது எவ்வளவு பெரிய ஆறுதலாக இருந்தது! கொடுங்கனவுகள் எத்தனை கொடியவையாக இருந்தாலும், அவை வெறும் கனவுகள் மட்டுமே. திரைப்படங்கள் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தாலும், துன்பம் தருவதாக இருந்தாலும் அவை வெறும் திரைப்படங்கள் மட்டுமே. வாழ்க்கையின் துன்பமும், திகிலும் நிறைந்த நாடகங்களில் நமது மனதை மூழ்கடித்துவிடக்கூடாது. அதைவிட அழிவற்ற, மாறாத சக்தியின்பால் நமது கவனத்தை திருப்புவது புத்திசாலிதனது அல்லவா? உலக நாடகத்தின் கதை களத்தில் நிகழும் சகப்பான ஆச்சரியங்களைப் பற்றி எதற்காக கவலைப்பட வேண்டும்? நாம் இங்கு ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கப் போகிறோம். வாழ்க்கை நாடகம் சொல்லும் பாடத்தைக் கற்றுக் கொண்டு உங்களது விடுதலையைத் தேடிக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்க்கை நிழல்களின் கீழே வெகு அருகாமையில் இறைவனின் அற்புதமான ஒளி உள்ளது. இந்தப் பிரபஞ்சம் அவன் வசிக்கும் ஒரு அகண்ட ஆலயம். நீங்கள் தியானம் செய்யும்போது, அவனை நோக்கிய கதவுகள் எல்லா பக்கங்களிலும் திறப்பதைக் காண்பீர்கள். நீங்கள் அவனோடு ஐக்கியமாகும் போது, உங்களது ஆனந்தத்தையும் அமைதியையும் உலகின் அழிவுகள் அத்தனையும் சேர்ந்தால் கூட அகற்றிவிட முடியாது.

உறுதிமொழி: “வாழ்விலும் சாவிலும், நோயிலும், பஞ்சம், பெருந்தொற்று, வறுமையிலும் நான் உன்னையே பற்றிக் கொள்வேன். நான் வாலிபம், இளமை, முதுமை ஆகிய மாற்றங்களாலும் மற்றும் உலகின் ஏற்றத் தாழ்வுகளாலும் பாதிப்புறாத அழிவற்ற பரம் பொருள் என்பதை உணர எனக்கு உதவுவாயாக.”

மேலும் கற்பதற்கு

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp