ஓர் ஆன்மீக இலக்கியத்தின் உருவாக்கம்

பரமஹம்ஸ யோகனந்தருடன் தனிப்பட்ட முறையில் பழகியவர்களுக்கு, அவருடைய சொந்த வாழ்க்கையும் இருப்புமே, அவர் உலகிற்களித்த புராதன ஞானத்தின் சக்தி மற்றும் நம்பத்தக்க நிலைக்கு நம்பிக்கையூட்டக்கூடிய சான்றாக விளங்குகின்றன. அவரது சுயசரிதத்தை வாசித்த எண்ணற்ற வாசகர்கள், அதன் பக்கங்களில் அவரிடமிருந்து ஒளி வீசிய ஆன்மீக ஆளுமையின் அதே ஒளியின் இருப்பிற்கு சான்றளித்துள்ளனர். அறுபது வருடங்களுக்கு முன்பு இது முதன் முறையாக அச்சிடப்பட்ட பொழுதே, ஒரு தலைசிறந்த படைப்பாக வரவேற்கப்பட்ட இப்புத்தகம் தவறாக எண்ண இடமளிக்காத மேன்மையுடைய ஒரு வாழ்க்கையின் கதையை மட்டுமல்லாமல், இதுவரை சிலர் மட்டுமே அணுகக்கூடியவாறு இருந்ததை, மேற்கத்திய மக்களுக்கு ஓர் ஞான உலகைத் திறந்து விட்டவாறு கிழக்கின் ஆன்மீகச் சிந்தனைக்கு — முக்கியமாக இறைவனுடன் நேரடியான தனிப்பட்ட தொடர்பைப் பற்றிய அதனுடைய ஈடிணையற்ற விஞ்ஞானத்திற்கு — கவர்ந்திழுக்கும் ஓர் அறிமுகத்தையும் முன்வைக்கிறது.

இன்று ஒரு யோகியின் சுயசரிதம் உலகம் முழுவதும் ஓர் ஆன்மீக இலக்கிய நூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தில் இந்நூலினுடைய சில அசாதாரணமான வரலாற்று நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

Lahiri Mahasaya great yogi guru of Swami Sri Yukteswar

ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் பின் உள்ள அசாதாரணமான வரலாறு

நீண்ட காலத்திற்கு முன்பே இந்நூல் எழுதப்படுவதைப் பற்றி தீர்க்க தரிசனமாகக் கூறப்பட்டிருந்தது. நவீன காலத்தில் யோகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான, பத்தொன்பதாவது நூற்றாண்டின் வணக்கத்திற்குரிய மகான் லாஹிரி மகாசயர் முன்கூட்டியே அறிவித்தார்: “நான் மறைந்து ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்குப் பிறகு மேற்கில் எழப்போகும் யோகத்தின் ஆழ்ந்த ஆர்வத்தின் காரணமாக, என் வாழ்க்கையின் விவரம் எழுதப்படும். யோகம் பற்றிய செய்தி இவ்வுலகைச் சூழும். அது மனித சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு உதவி புரியும்: ஒரே பரமபிதாவைப் பற்றிய மனித இனத்தின் நேரடியான அறியும் சக்தியின் அடிப்படையிலான ஒற்றுமை.”

பல வருடங்களுக்குப் பின்னர் லாஹிரி மகாசயரின் உயர்ந்த சீடரான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரர், ஸ்ரீ யோகனந்தருக்கு இந்தத் தீர்க்க தரிசனத்தை எடுத்துரைத்தார். “அந்தச் செய்தியைப் பரப்புவதிலும்,” அவர் அறிவித்தார், “அத்துடன் அந்தப் புனித வாழ்க்கையைப் பற்றி எழுதுவதிலும் நீ உனது பங்கை ஆற்ற வேண்டும்.” 1945ல், லாஹிரி மகாசயர் மறைந்து மிகச் சரியாக ஐம்பது வருடங்கள் கழித்து, பரமஹம்ஸ யோகானந்தர் தனது ஒரு யோகியின் சுயசரிதம் நூலை எழுதி முடித்தார். இது அவருடைய குருதேவரின் கட்டளைகள் இரண்டையும் தாராளமாகப் பூர்த்தி செய்தது: லாஹிரி மகாசயருடைய குறிப்பிடத்தக்க வாழ்க்கையை ஆங்கிலத்தில் முதல் விரிவான அறிமுகமாக அளிப்பது, மற்றும் உலக அவையினருக்கு இந்தியாவின் பழமை வாய்ந்த ஆன்ம விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்துவது.

ஒரு யோகியின் சுயசரிதத்தை உருவாக்கும் திட்டத்தில் பரமஹம்ஸ யோகானந்தர் பல வருட காலமாக செயல்பட்டார். ஸ்ரீ தயா மாதா, அவருடைய நெருங்கிய சீடர்களில் ஒருவர், நினைவுகூருகிறார்.

“நான் 1931-ல் மௌண்ட் வாஷிங்டனுக்கு வந்த போது, பரமஹம்ஸர் சுயசரிதத்திற்கான பணியை ஏற்கனவே துவங்கி விட்டிருந்தார். ஒரு முறை நான் அவருடைய வாசிப்பு அறையில் செயலாளருக்குரிய சில கடமைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, அவர் எழுதிய முதல் அத்தியாயங்களில் ஒன்றை பார்க்கும் பேறு பெற்றேன் — அது ‘புலிச்சாமியார்’ பற்றியது. அதைப் பாதுகாக்கும்படி அவர் என்னிடம் கூறினார், மேலும் அவர் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்தில் அது சேர்க்கப்படப் போகிறது என்று விளக்கினார். பின்னால் 1937க்கும் 1945க்கும் இடையில் புத்தகத்தின் பெரும் பகுதி எழுதப்பட்டுவிட்டது.”

Sri Yukteswar divine Guru of Paramahansa Yogananda

ஜீன் 1935-லிருந்து அக்டோபர் 1936-ன் இறுதிவரை ஸ்ரீ யோகானந்தர், தனது குருதேவர் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்ரரிடம் இறுதி வருகை புரிவதற்காக இந்தியாவிற்குத் திரும்பும் பயணத்தை (ஐரோப்பா மற்றும் பாலஸ்தீனம் வழியாக) மேற்கொண்டார். அங்கிருக்கும் பொழுது சுயசரிதத்திற்காக அதிக உண்மையான விவரங்களையும், அவர் அறிந்திருந்த மகான்கள் மற்றும் ஞானிகளைப் பற்றிய கதைகளையும் தொகுத்தார்; அவர்களுடைய வாழ்க்கைகள் இப்புத்தகத்தில் நினைவில் வைக்கத்தக்கவாறு விவரிக்கப்பட்டு இருந்தன. “நான் லாஹிரி மகாசயருடைய வாழ்க்கையை எழுதுவதைப் பற்றிய ஸ்ரீ யுக்தேஸ்வரரின் கோரிக்கையை ஒரு போதும் மறக்கவில்லை,” அவர் பின்னாளில் எழுதினார். “நான் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது யோகாவதாரத்தின் நேரடியான சீடர்களையும் உறவினர்களையும் தொடர்பு கொள்ள நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தினேன். பல தொகுதிகள் கொண்ட குறிப்புகளில் அவர்களுடைய உரையாடல்களைப் பதிவுசெய்து செய்திகளையும், தேதிகளையும் சரி பார்த்தேன். புகைப்படங்கள், பழைய கடிதங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்தேன்.”

1936-ன் இறுதியில் அவர் அமெரிக்காவிற்கு திரும்பியதும், அவர் இல்லாத சமயத்தில் தென் கலிஃபோர்னியா கடற்கரை ஓரம், என்ஸினிடஸில் அவருக்காகக் கட்டப்பட்டிருந்த ஆசிரமத்தில் அதிகமான நேரத்தைக் கழிக்கத் துவங்கினார். பல வருடங்களுக்கு முன்பு அவர் துவக்கிய புத்தகத்தை முடிப்பதற்காக கவனத்தை செலுத்துவதற்கு அது ஓர் இலட்சிய இடமாக இருந்தது.

“அந்த அமைதியான கடற்கரையோர ஆசிரமத்தில் கழித்த நாட்கள் இன்னும் தெளிவாக என் நினைவில் இருக்கின்றன,” ஸ்ரீ தயா மாதா நினைவுகூருகிறார். “ஒவ்வொரு நாளும் சுயசரிதத்தை எழுதும் பணியைச் செய்ய முடியாத அளவுக்கு அவருக்குப் பல கடமைகளும் பொறுப்புகளும் இருந்தன. ஆனால் பொதுவாக மாலை நேரங்களையும், அவரால் தர முடிந்த எந்த சாவகாசமான நேரத்தையும் அவர் அப்பணிக்காக ஒதுக்கினார். ஏறத்தாழ 1939 அல்லது 40-ல் துவங்கி, அவரால் அப்புத்தகத்தின் மீது முழுநேரமும் கவனம் செலுத்த முடிந்தது. முழுநேரமும் என்றால் அதிகாலையிலிருந்து அதிகாலை வரை! சீடர்களாகிய எங்களுடைய ஒரு சிறு குழு தாரா மாதா: எனது சகோதரி ஆனந்த மாதா; ஸ்ரத்தா மாதா; மற்றும் நான் அவருக்கு உதவி செய்ய இருந்தோம். ஒவ்வொரு பதிவும் தட்டச்சு ஆன பிறகு, அவர் அதை பதிப்பாசிரியராக சேவையாற்றிய தாரா மாதாவிடம் கொடுத்தார்.

“எத்தகைய பொக்கிஷம் போன்ற நினைவுகள்! அவர் எழுதும்பொழுது, அவர் பதிவு செய்து கொண்டிருந்த புனித அனுபவங்களை அகமுகமாக மீண்டும் வாழ்ந்தார். அவருடைய தெய்வீக நோக்கமானது, மகான்கள் மற்றும் மகா குருமார்களின் தோழமையிலும், ஒருவரது சொந்த தனிப்பட்ட இறை அனுபூதியிலும் எதிர்ப்பட்ட ஆனந்தத்தையும் அருள் வெளிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதாகும். அடிக்கடி ஒரு சிறிது நேரத்திற்கு இடைநிறுத்தம் செய்வார், அவரது பார்வை மேல்நோக்கி இருக்கும், அவரது தேகம் அசைவற்று, இறைவனுடனான ஆழ்ந்த தோழமையின் சமாதி நிலையில் தன்வசமற்றிருக்கும். முழு அறையும் இறையன்பின் பேராற்றல் வாய்ந்த சக்திமிகு ஒளிவட்டத்தினால் நிறைந்திருக்கும். சீடர்களாகிய எங்களுக்கு அத்தகைய சமயங்களில் அங்கு இருப்பதே, உணர்வுநிலையின் ஓர் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவதாகும்.”

“இறுதியாக, 1945-ல் அப்புத்தகம் முடிவடைகின்ற மகிழ்ச்சி ஆரவாரமிக்க நாள் வந்தது. பரமஹம்ஸர் இறுதியான சொற்களை எழுதினார்,” இறைவா, நீ இந்த சன்னியாசிக்கு பெரிய குடும்பத்தை அளித்திருக்கிறாய்; பின்னர் தனது பேனாவை கீழே வைத்துவிட்டு, ஆனந்தமாகக் கூவினார்:

“எல்லாம் முடிந்தது; அது நிறைவு பெற்றுவிட்டது. இப்புத்தகம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கைகளை மாற்றும். நான் மறைந்துவிட்ட பிறகு, இதுவே எனது தூதுவனாக இருக்கும்.”

Tara Mata- Editor of Autobiography of Yogi

பின்னர் ஒரு புத்தக வெளியீட்டாளரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு தாரா மாதாவிடம் வந்தது. 1924-ல் ஸான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் பரமஹம்ஸ யோகானந்தர் தொடர் சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்த போது தாரா மாதாவைச் சந்தித்திருந்தார். அரிய ஆன்மீக நுண்ணறிவு பெற்றிருந்ததால் அவர் மிக அதிக முன்னேற்ற மடைந்த சீடர்களின் சிறிய குழுவில் ஒருவரானார். பரமஹம்ஸர் அவரது புத்தக வெளியீட்டுத் திறன் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார் மற்றும் தான் இதுவரை சந்தித்தவர்களை விட அவர் மிகச் சிறந்த புத்திக்கூர்மையுள்ளவர் என்று கூறுவது வழக்கம். பரமஹம்ஸர் அவரது இந்திய ஆன்மீக ஞானத்தைப் பற்றிய பரந்த அறிவு மற்றும் புரிதலைப் பாராட்டி ஒரு சமயம் குறிப்பிட்டார்: “எனது மகாகுரு, ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜியைத் தவிர, வேறு எவரிடமும் இந்தியத் தத்துவத்தைப் பற்றிப் பேசி அதிகம் மகிழ்ந்தது இல்லை.”

தாரா மாதா கையெழுத்துப் பிரதிகளை நியூ யார்க் நகருக்கு எடுத்துச் சென்றார். ஆனால் வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பது ஒரு எளிதான செயலாக இல்லை. அடிக்கடி பார்த்திருப்பது போல, அதிகம் வழக்கத்தில் ஊறிய மனதுடையவர்களால் ஒரு சிறந்த படைப்பின் உண்மையான மதிப்பை முதலில் அடையாளம் காண இயலாது. பருப்பொருள், சக்தி, சிந்தனை ஆகியவற்றின் நுட்பமான ஒற்றுமையின் வளர்ந்து வரும் புரிதலுடன் புதிதாகத் தோன்றியுள்ள அணுயுகத்தால் மனித குலத்தின் கூட்டு உணர்வுநிலை விரிவாக்கப் பட்டிருந்த போதிலும், அன்றைய வெளியீட்டாளர்கள் “இமயத்தில் ஒரு மாளிகையைத் தோற்றுவித்தல்” மற்றும் “இரு உடல்கள் கொண்ட மஹான்” போன்ற அத்தியாயங்களுக்குச் சிறிதும் தயாராக இல்லை!

ஒரு வருடமாக, ஒவ்வொரு வெளியீட்டளராக அலைந்து கொண்டிருந்த போது, தாரா மாதா குறைந்த அறைக்கலன்கள், வெப்பமூட்டப்படாத குளிர்நீர் மட்டுமே கொண்ட அடுக்குமாடி வீட்டில் வாழ்ந்தார். இறுதியாக அவரால் வெற்றிச் செய்தியுடன் தந்தி அனுப்ப முடிந்தது. தத்துவ நூலகம் என்ற ஒரு மரியாதைக்குரிய வெளியீட்டாளர், சுயசரிதத்தை வெளியிட ஒப்புக்கொண்டிருந்தனர். “இப்புத்தகத்திற்கென (அவர்) செய்திருப்பதை விளக்கத் துவங்க என்னால் இயலாது. “ஸ்ரீ யோகானந்தர் சொன்னார் “அவரன்றி இப்புத்தகம் வெளி வந்திருக்காது.”

புத்தகம் வாசகர்களாலும், உலகப் பத்திரிக்கையாளர்களாலும் பாராட்டு மழையுடன் வரவேற்கப்பட்டது. “இதற்கு முன் ஆங்கிலத்திலோ அல்லது வேறு எந்த மொழியிலோ இது போன்று யோகத்தின் அறிமுகம் இருந்ததில்லை,” என்று கொலம்பிய பல்பகலைக்கழக வெளியீடு தனது சமயங்களின் விமர்சனத்தில் எழுதியது. தி நியூ யார்க் டைம்ஸ் “ஓர் அரிய விளக்கம்” என்று பறைசாற்றியது. “யோகனந்தரின் புத்தகம் உடலின் சுயசரிதம் என்பதைவிட ஓர் ஆத்மாவின் சுயசரிதம் என்பதே சரி… இது நுண்மதியுடன் வளமை ததும்பும் கிழக்கத்திய நடையில் விளக்கப்பட்ட, சமய நெறி வாழ்வு பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் மற்றும் தெளிவான விளக்கங்களுடன் கூடிய ஆய்வு.” என்று நியூஸ்வீக் அறிவித்தது.

இரண்டாம் பதிப்பு விரைவாகத் தயார் செய்யப்பட்டது, மேலும் 1951-ல் மூன்றாம் பதிப்பு. உரையின் பகுதிகளைத் திருத்தியமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், மேலும் அமைப்பின் பழைய செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை விளக்கும் சில பகுதிகளை நீக்குதல் ஆகியவற்றுடன், பரமஹம்ஸ யோகானந்தர் 1940 – 1951 ஆண்டுகளை உள்ளடக்கிய ஓர் இறுதி அத்தியாயத்தைச் சேர்த்தார் — புத்தகத்தின் நீண்ட அத்தியாயங்களுள் ஒன்று. புதிய அத்தியாயத்தின் அடிக்குறிப்பில் அவர் எழுதினார், “இப்புத்தகத்தின் மூன்றாம் பதிப்புடன் (1951) 49-ம் அத்தியாயத்தில் அதிகமாக புதிய விஷயம் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் இரு பதிப்புகளின் பல வாசகர்கள் விடுத்த வேண்டுகோள்களுக்கு மறுமொழி கூறும் வகையில், இந்த அத்தியாயத்தில் இந்தியா, யோகம் மற்றும் வேதத் தத்துவத்தைப் பற்றிய வெவ்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றேன்.”

இந்தப் பதிப்பிற்கான வெளியீட்டாளரின் குறிப்பில் விளக்கப்பட்டபடி, பரமஹம்ஸ யோகானந்தரால் செய்யப்பட்ட கூடுதல் திருத்தங்கள் ஏழாம் பதிப்பில் (1956) இணைக்கப்பட்டுள்ளன. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தற்போதைய பதிப்புகள் அனைத்தும் புத்தகத்தின் இறுதி உரைக்கான யோகானந்தாவின் விருப்பங்களை உள்ளடக்கியன.

“1951-ல் ஆசிரியர் செய்த பிந்தைய மாற்றங்கள் ஸ்ரீ யோகானந்தர் 1951ம் வருடப் பதிப்பின் ஆசிரியர் குறிப்பில் எழுதினார், ஆயிரக்கணக்கான வாசகர்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றதைக் குறித்து நான் தீவிரமாக உனர்ச்சிவயப்பட்டேன். அவர்களது கருத்துக்களும், அப்புத்தகம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட விஷயமும், “பழமை வாய்ந்த யோக விஞ்ஞானம், நவீன மனிதனின் வாழ்க்கையில், பயனுள்ள ஒரு இடத்தைப் பெற்றுள்ளதா?” என்ற இக் கேள்விக்கான ஓர் உடன்பாடான பதிலை மேலை நாட்டினர் இப்பக்கங்களில் கண்டுவிட்டனர் என்ற நம்பிக்கையை எனக்கு ஊட்டுகின்றன.

வருடங்கள் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கான வாசகர்கள் இலட்சக்கணக்கானவராக மாறி, (ஒரு யோகியின் சுயசரிதத்தின்) நீடித்த மற்றும் உலகளாவிய ஈர்ப்பு மிக வெளிப்படையாகத் தெரிய வந்தது. இப்புத்தகம் வெளியிடப்பட்டு 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, மனோதத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் புத்தகங்களின் ஆகச்சிறந்த-விற்பனையாகும் புத்தகப் பட்டியலில் உள்ளது. ஓர் அரிய பெருநிகழ்வு! பல்வேறு மொழிகளிலும் கிடைக்கப் பெறும் இந்தப் புத்தகம், உலகெங்கிலும் உள்ள கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், கிழக்கிந்திய தத்துவ ஞான சாஸ்திரம் மற்றும் மதம், ஆங்கில இலக்கியம், மனோதத்துவம், சமூகவியல், மானிடவியல், வரலாறு மற்றும் வணிக மேலாண்மை வரையிலான பாடப்பிரிவுகளில் தற்சமயம் பயன்படுத்தப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னமே, ஸ்ரீ லாஹிரி மகாசயர் கணித்துக் கூறியதைப் போல, யோகமும், அதன் பழமையான தியான மரபும் மெய்யாகவே உலகை சூழ்ந்து கொண்டு விட்டது.

இந்தப் புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில், ஸ்ரீ பரஹம்ஸ யோகானந்தர், காலங்காலமாக உலகில் அனைத்து மதங்களின் துறவிகள் மற்றும் முனிவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆழ்ந்த உத்திரவாதத்தைப் பற்றி எழுதுகிறார்:

“இறைவன் அன்புமயமானவன்; படைப்பிற்கான அவனுடைய திட்டம், அன்பில் மட்டுமே வேரூன்றி இருக்க முடியும். அறிவாளிகளின் பகுத்தறிவு வாதங்களுக்கு மாறாக இந்த எளிய உண்மை மனித இதயத்திற்கு ஆறுதல் அளிக்கவில்லையா? மெய்ப்பொருளின் ஆழத்தைத் துளைத்தறிந்த முனிவர்கள் அனைவரும் கூறுவது: உலக முழுவதிற்கும் ஒரு தெய்வீகத் திட்டம் இருக்கிறது. அது மிக அழகானது, ஆனந்த மயமானது.” இரண்டாம் அரை நூற்றாண்டிலும் ஒரு யோகியின் சுயசரிதம் தொடர்வதால், முதன் முறையாக இதை வாசிப்பவர்கள், மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் நேசிக்கப்படும் ஒரு துணையாக இதைக் கொணடிருப்பவர்கள் என இப்புத்தகத்தின் வாசகர்கள் அனைவரும், வாழ்வின் வெளித்தோற்றப் புதிர்களின் இதயத்தில் இருக்கும் அறிவெல்லை-கடந்த சத்தியத்தில் ஓர் ஆழ்ந்த நம்பிக்கைக்கு வாயிலைத் திறக்கும் அவர்களுடைய சொந்த ஆன்மாக்களைக் காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp