கீதா ஜெயந்தியை முன்னிட்டு (இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அன்று), “வாழ்க்கை எனும் போரை வெல்லுதல் (எனக்குள் உள்ள குருக்ஷேத்ரம்)” என்ற தலைப்பில் YSS சன்னியாசி ஸ்வாமி சுத்தானந்த கிரி அவர்கள் தமிழில் வழங்கவிருக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம்.
இந்த சொற்பொழிவு, மகா குருவான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் தெய்வீக அகத் தூண்டுதலுடன் கூடிய, அருமை மறைநூலான பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு மற்றும் விரிவான விளக்கவுரையாகிய காட் டாக்ஸ் வித் அர்ஜுனா என்ற நூலில் அவர் விளக்கியுள்ள ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்வாமி சுத்தானந்தா தமிழில் நிகழ்த்தும் தொடர் உரைகளில் முதலாவதாகும்.
இந்த எழுச்சியூட்டும் உரையில், ஸ்வாமி சுத்தானந்தா குருக்ஷேத்திரப் போரின் குறியீட்டு உட்கருத்து பற்றிப் பேசுகிறார். அத்தியாயம் I இன் ஸ்லோகங்கள் 1 முதல் 9 வரையிலான பரமஹம்ஸரின் விளக்கவுரையை அவர், உவமைகள் மற்றும் அனுபவக் கதைகள் மூலம் எடுத்துரைக்கிறார். நமக்குள் உள்ள கௌரவர்கள் (தீய போக்குகள்) நமது ஆன்மீக முன்னேற்றத்தை எவ்வாறு தடை செய்கின்றன என்பதையும், நமக்குள்ளே பாண்டவர்களை (நல்ல போக்குகள்) வளர்ப்பதன் மூலம் குருக்ஷேத்திரத்தின் அகப் போரில் அந்தக் கௌரவர்களை எவ்வாறு தோற்கடித்து, அதன்மூலம் ஆன்ம-அனுபூதி எனும் இறுதி இலக்கை அடையலாம் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
கவனிக்கவும்: இந்த உரை, டிசம்பர் 13, சனிக்கிழமை இரவு 10 மணி (IST) வரை காணக் கிடைக்கும்.
பகவத் கீதை குறித்த பிற உரைகள்
ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கிய, பல பாகங்களாக அமைந்த மற்றொரு சொற்பொழிவுத் தொடரைக் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சாத்திர விளக்க உரை பற்றி
ஆன்மீக உன்னதமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியரான பரமஹம்ஸ யோகானந்தர், பகவத் கீதைக்குத் தெய்வீக உள்நோக்குத் திறனுடன் விளக்கம் அளிக்கிறார். அவரது விளக்கவுரையில், அன்றாட எண்ணங்கள் மற்றும் செயல்களின் நுட்பமான காரணங்கள் முதல் பிரபஞ்ச ஒழுங்கின் பேரமைப்பு வரை அதன் உளவியல், ஆன்மீகம் மற்றும் பரதத்துவ ஆழங்களை ஆராய்வதன் மூலம், பரமஹம்ஸர் ஆன்மாவின் முக்தியை நோக்கிய பயணத்தின் விரிவான சித்தரிப்பை வழங்குகிறார்.
கீதை கூறும் தியானம் மற்றும் சரியான செயல்பாட்டின் சமநிலைப் பாதையை தெளிவாக கோடிட்டுக் காட்டும் பரமஹம்ஸர், ஆன்மீக நேர்மை, அமைதி, எளிமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை எவ்வாறு நமக்காக உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறார். நம் விழிப்படைந்த உள்ளுணர்வின் மூலம், வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்க வேண்டிய சரியான போக்கை அறிந்துகொள்கிறோம்; இதனால் எந்தக் குறைபாடுகள் நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன, எந்த நேர்மறை குணங்கள் நம்மை முன்னேறச் செய்கின்றன என்பதைத் தீர்மானிக்கவும், வழியில் உள்ள இடர்களை அடையாளம் கண்டு தவிர்க்கவும் முடிகிறது.





















