YSS

குருதேவரின் கொடியை முன்னெடுத்துச் செல்வது

சுவாமி சியாமானந்தகிரியின் தளர்வுறாத மன உறுதிமிக்க வாழ்க்கை

பினாயேந்திர நாராயன் மே 4, 1911ல் ஸ்ரீ மற்றும் ஸ்ரீமதி கோகுல் பிரசாத் நாராயன் துபே தம்பதியருக்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாண்டாவில் பிறந்தார். அவர் தனது பூத உடலை சுவாமி சியாமானந்தகிரியாக ஆகஸ்ட் 28, 1971ல் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தலைமையகத்தில் துறந்தார். இக்காலத்தின் இடையில் என்ன நிகழ்வுற்றன என்பது இப்போது வரலாற்றை விட மேலானது: அது அவரை அறிந்தவர்களுக்கும், நீடித்திருக்கும் அவரது வாழ்க்கை மற்றும் செயல்களின் நினைவுச்சின்னங்கள் வாயிலாக அவரை அறியப்போகும் வருங்கால தலைமுறையினருக்கும் விசுவாசம், வலிமை, அர்ப்பணிப்பு, தன்னலமின்மை மற்றும் அகத்தூண்டுதலின் ஒரு மரபுரிமைச் செல்வம்.

அவரது எடுப்பான உயரமும் தோற்றமுமே மரியாதையை ஈர்த்தன. அவரது திறமைகள் தலைமை பொறுப்பையும் அதிகார உரிமையையும் ஈர்த்தன. இந்த உலகம் வழிவிட்டு விலகி அவருக்கு இவற்றையெல்லாம் எந்தத் தயக்கமும் அல்லது ஐயமும் இன்றி அளித்தன. எவருக்கெல்லாம் அவர் அக மனிதனை வெளிப்படுத்தினாரோ அவர்கள் அவருக்கு நிபந்தனையற்ற அன்பை அளித்தனர். அவரது வாழ்க்கையில் வருடங்கள் உருண்டோட உருண்டோட, அகமனிதனே அவரது முழு இருப்பாக மாறியது.

“இவன் சாதாரணக் குழந்தை அல்ல; இவன் சாதாரண உலகைச் சார்ந்தவன் அல்ல. அவனது வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது; அவன், அவனது வழியைப் பின்பற்றட்டும்.” இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் அவரது அன்னையாரால் மூன்று வயது பிஞ்சு மகனையும், இரண்டு மூத்த மகள்களையும் விட்டுவிட்டு இறக்கும் முன் கூறப்பட்டன. தன் மகனின் எதிர்காலத்தின் ஒரு காட்சி அவருக்கு கிடைத்ததா? அல்லது, நடக்க ஆரம்பித்த உடனேயே, தானாகவே அருகாமையில் உள்ள கோவிலில் சுற்றுப்புறத்தில் இந்த பிஞ்சு குழந்தை திரிவதை மட்டும் அவர் வெறுமனே கவனித்தாரா?

சியாமானந்தர் பின்னாளில் நினைவு கூர்ந்தார், “ஏன் கோவில் என்னைக் கவர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நான் மிகவும் சிறியவனாக இருந்தேன். நான் அங்கு இருக்கும் போது பாதுகாப்பாக உணர்ந்தது மட்டும் எனக்குத் தெரிந்தது. ஆனால் என் குடும்பத்தினருக்கு அவர்கள் என்னைக் காணாத போதெல்லாம் அது மிகுந்த கவலை கொள்ள காரணமாயிருந்தது, இதனால் அடிக்கடி கோபத்தின் விளைவான அறைகளும் எனக்கு விழுந்தன. அது கசப்பாக இருந்தது, ஆனாலும் அது என் பழக்கத்தை மாற்றவில்லை. “இறைவன் எங்கும் இருக்கிறான்.” வேத நூல்களில் உள்ள இந்த உண்மை சிறு குழந்தையான பினாயேந்திரா மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சியாமானந்தர் நினைவு கூர்ந்தார், “நான் அங்கு இங்கெல்லாம் சுற்றி, எல்லாவற்றையும் — மரங்கள், பறவைகள், வானம் — ஏக்கத்துடன் இறைவன் அங்கு இருக்கிறானா என்று உற்றுப் பார்ப்பது வழக்கம். நான் ஒரு மலரை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டே, எம்பெருமான் கிருஷ்ணா, நீ அங்கு இருக்கிறாயா? என்று கேட்பேன்.”

“நான் குழந்தையாக இருக்கும் போது மிகவும் விரும்பியது மறை நூல்களில் இருந்து சொல்லப்படும் கதைகளைக் கேட்பது,” சியாமானந்தர் தொடர்ந்தார். அவருக்கு ஒவ்வொரு அறநெறியும் இலட்சியமும் சட்டமாய் மாறின. மறைநூல் கதாநாயகர்களும் அவதாரங்களும் அவரது குழந்தைப் பருவத்து விளையாட்டு நண்பர்கள் போல் அவ்வளவு உண்மையாக காணப்பட்டனர். ஒருநாள் பாலர் பள்ளியில் வகுப்புகள் முடிந்த பிறகு பினாயேந்திரா தனியாக அங்கேயே தங்கி அந்த சிறிய பள்ளிக்கூட வீட்டு வளாகத்தினுள் விளையாடிக் கொண்டிருந்தார். இருள் கவியத் தொடங்கியது. “அந்த நாட்களில் அங்கு விளக்குகள் இல்லை,” சியாமானந்தர் விவரித்தார். “ஆனால் திடீரென அந்த முழு பகுதியும் பிரகாசமானது. அந்த ஒளியில் நான் அனுமாரைப் பார்த்தேன். பெரும்பாலான குழந்தைகள் அத்தகைய ஒரு பெரிய குரங்கு வடிவத்தைக் கண்டு மிரண்டுபோய் ஓடிவிட்டு இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அதற்கு மாறாக அக்காட்சி எனக்கு ஓர் அழகிய உணர்வைத் தந்தது, நான் மெதுவாக அந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுது படிப்படியாக அந்த உருவம் அந்த ஒளியினுள் மறைய ஆரம்பித்து, ஒளி உருவத்துடன் மாயமானது. அந்த தெய்வீகக் காட்சியின் மனவெழுச்சியூட்டும் தாக்கம் என்னுள் நீண்ட காலம் நிலைத்திருந்தது.” அனுமார், வால்மீகியின் மகா காவியமான ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த மற்றும் அனைவராலும் அவரது வீரசாகசச் செயல்களுக்காக நேசிக்கப்படும் வானரத் தெய்வம். தன்னளவில் ஓர் உதவியற்ற ஒன்றும் தெரியாத சிறிய வானரமாக இருந்தபோதிலும், இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு காரியத்தை நிறைவேற்ற அவர் எம்பெருமானின் திரு நாமத்தை உச்சரிக்கும் போது அவர் ஒரு ராட்சதர் போல பலவான் ஆகிறார், அவரது வல்லமை ஈடு இணையற்றதாகிறது; அவரால் முடியாதது ஒன்றுமில்லை. இறைவன் மற்றும் குரு பரமஹம்ஸ யோகானந்தரிடம் கொண்ட பக்தியினால் அகத்தூண்டுதல் பெற்று சியாமானந்தரால் செய்து முடிக்கப்பட்ட மிகப்பெரிய சொந்த சாதனைகள் ஸ்ரீ தயா மாதாவை ஒரு சந்தர்ப்பத்தில் அவரைப் “பரமஹம்ஸருடைய அனுமார்” என்று குறிப்பிட வைத்தது.

பினாயேந்திரா ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவரது தந்தை காலமானார். அவரது தந்தைக்கும், தந்தையின் உயிர் நண்பர் ராஜா பகதூர் சதி பிரசாத் கார்காவிற்குமிடையே ஒரு ஒப்பந்தம் இருந்து வந்தது. இருவரில் எவர் இறந்தாலும் இறந்தவரது குழந்தைகளை மற்றவர் வளர்க்க வேண்டும். இவ்வாறு பினாயேந்திரா குடும்பத்துடன் கல்கத்தாவிற்கு அருகில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மஹிசதாவில் கார்கா குடும்பத்துடன் அவர்களது மிகப்பெரியப் பண்ணையில் வாழச் சென்றார். “தத்தெடுக்கப்பட்ட குழந்தை” அன்புடன் நேசிக்கப்பட்டு குடும்பத்தின் மூத்த மகனாக வளர்க்கப்பட்டது.

இளம் சிறுவன் தன் புதிய தந்தையைப் போற்றி வழிபட்டான்; அதற்கு ராஜா கார்கா தகுதியானவர் என்று கேள்விப்படுகிறோம். ராஜா கார்கா ஓர் உயர்ந்த நடத்தை கொண்டவர், அசாதரணமான திறமைகள் படைத்தவர், அவர் சாஸ்திரங்களிலும் (இந்து மறை நூல்கள்) புராதன சமஸ்கிருத இலக்கியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். அவரது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், ஸ்ரீ ராம் கோபால் மஜும்தாரின்1 சகோதரருமான ஸ்ரீ ராம் தயாள் மஜும்தார் லாஹிரி மகாசாயரின் ஓர் உயர்ந்த சீடர் மற்றும் கிரியா யோகத்தின் முன்னோடியும் ஆவார். கடந்த காலத்தை நினைவு கூறுமிடத்தில் சியாமானந்தர் பின்னாளில், ராஜா கார்கா கூட ஒரு கிரியா யோகியாக இருந்திருக்கலாமோ என்று எண்ணி வியந்ததுண்டு.

ஸ்ரீ ராம் தயாள் மஜும்தார், உயர்வாக மதிக்கப்பட்ட ஆன்மீக பிரமுகர், சமஸ்கிருத கல்லுரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். அவரது விளக்க உரையுடனான பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு (சமஸ்கிருதத்திலிருந்து வங்காள மொழியில்) இளைஞனான பினாயேந்திராவால் படிக்கப்பட்ட புனித மறை நூலின் முதல் உரையாகும். பண்டிதர், சிறுவனின் பாதுகாவல போதகராக போகிறார் என்ற பேச்சு கூட அடிபட்டது, ஆனால் பினாயேந்திரா மிகவும் இளம் வயதினராகவும் மற்றும் ஆரம்பக் கல்வி நிலையிலும் தான் இருந்தார். இருப்பினும், ஸ்ரீ ராம் தயாள், சிறுவன் மேல் ஓர் ஆழ்ந்த ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தி அவரது உறுதியான ஆன்மீக இயல்பை ஊக்குவித்தார். சியாமானந்தர் எங்களிடம் கூறினார், “பல வருடங்களுக்குப் பிறகு நான் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் பணிக்குள் சேரும் வரை, இந்த ஸெல்ஃப்-ரியலைசேஷன்/ யோகதா சத்சங்க பரம்பரை குருமார்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு ஒருபோதும் தெரியாது. 1919ம் ஆண்டிற்கான ராஞ்சிப் பள்ளியை நிர்வகிக்கும் குழுவில் (குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர்), ஸ்ரீ யுக்தேஸ்வரர் மற்றும் பிற பெயர்களுடன் இவர் பெயரும் சொஸைடியின் அறிக்கையில் இருந்ததை கண்டு நான் வியப்புற்றேன்.”

சுவாமி சியாமானந்த கிரி 1911 – 1971

ஒரு வணங்கத்தக்க சாது, கோவிந்த பிரம்ம ரிஷி, பினாயேந்திராவிற்கு பதினோரு வயது ஆகி இருக்கும் போது, குடும்ப இல்லத்திற்கு விஜயம் செய்தார். அம்மகான், ஆன்மீக இயல்பு நிறைந்த இந்த இளம் சிறுவனிடம் ஒரு தீவிர ஆர்வம் காட்டினார். அந்த சாதுவும் கூட பினாயேந்திராவை, ஒரு சாதாரணக் குழந்தையாக கருத வில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. “உலக இலக்குகளைக் கைவிட்டு அம்மகானின் பின் போய்விடலாம் என்ற ஆழ்ந்த ஏக்கம் கொண்டேன்,” சியாமானந்தர் நினைவு கூறுகிறார், “ஆனால் அவர் கூறினார் ‘உன் நேரம் இதுவல்ல’. அவர் புறப்பட்டுச் சென்ற போது நான் மனமுடைந்து விட்டேன். அவரது திரும்புகைக்கான நேரம் நெருங்கிய போது, அவர் உடலை நீத்து விட்டதாக செய்தி வந்தது.”

ஆட்சிபுரியும் குடும்பங்களில் ஒன்றாக இருந்த முறையில், கார்கா குடும்பம் அப்பொழுது சுமார் ஐநூறு கிராமங்களைச் சொந்தமாகக் கொண்டு அவற்றை நிர்வகித்து வந்தது. பினாயேந்திராவின் கல்வி, நிர்வாகப் பணிகளையும், பணியின் ‘இளவரசர்’ என்ற முறையில் கடைப்பிடிக்க வேண்டிய சடங்கு மற்றும் மரியாதை முறைகளையும் கற்பதை உள்ளடக்கி இருந்தது. அவரது கல்விப் பயிற்சியைப் பொறுத்தவரையில் அவர் உலக சரித்திரத்தை முதன்மை பாடமாக ஏற்று தேர்ச்சி பெற்றார். அத்துடன் இறுதியாக, அவருக்கு வயது வந்தபோது, ஒரு சீமை வழக்கறிஞராக (பாரிஸ்டர்) ஆக விருப்பம் கொண்டார். ஓர் இயல்பான கூரிய அறிவுத்திறன், ஒரு அசாதாரணமான நினைவுத் திறன் மற்றும் ஒரு வலிமையான இச்சாசக்தி ஆகியவை, அவர் மனம் வைத்த எதிலும், அது அவரது படிப்பு, விளையாட்டு அல்லது காடுகளில் புலிகளை வேட்டையாடுதல் என்று எதிலும், அவர் விஞ்சுவதற்கான வல்லமையை அளித்தது.

உரிய காலத்தில், அவர் அக்குடும்பத்தின் மூத்த மகள் சாந்தனாவை மணந்தார். சாந்தனாவின் தன்மை பகுத்தறியும் வலிமை மற்றும் மென்மையின் ஓர் அற்புதக் கலவையாக இருந்தது. அவள் அவரது மன மற்றும் ஆன்மீக திறன்களுக்கு சமமாக இருந்தாள்; மரியாதையுடனும் பக்தியுடனும் சியாமானந்தர் தன் மனைவியைப் போற்றியது, ஒருவேளை அவரது மிகவும் பாராட்டத்தக்க பண்புகளில் ஒன்றாக இருக்கலாம் — குறைந்தபட்சம் கணவன் மனைவி உறவு முறையில் ஓர் அரிதான பண்பு. அவர் தன் மனைவியைப் பற்றி அடிக்கடி கூறுவார்: “அவள் ஒப்பற்றவள். அவளுக்கு நான் ஈடே இல்லை!” அவர்களது திருமணம் இரு மகள்களின் — தீப்திமோயி தேவி மற்றும் பிரீதிமோயி தேவி — வரவால் ஆசீர்வதிக்கப்பட்டது. அவர் அக்குழந்தைகளை மீரா மற்றும் மீனு என்று பாசத்துடன் அழைத்தார்.

பினாயேந்திரா, பெரும்பாலான மனிதர்கள், வாழ்க்கையில் விரும்பும் அனைத்தையும் பெற்றிருந்தார். இருப்பினும் அந்நாட்களைப் பற்றி அவர் கூறியதாவது, “நான் எப்பொழுதும் எதிலும் பொருந்தாதவனாக இருந்தேன். நான் எந்த இடத்திற்கும் உரியவன் அல்ல. ஏதோ ஒன்று என்னை இழுத்துக் கொண்டே இருந்தது.” இறைவனால் வாழ்வில் ஓர் உயர் கடமைக்கு ஈர்க்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வாறுதான் உணர்கிறது. ஆனால் அவர் வருத்தத்திற்கோ அல்லது கோபத்திற்கோ தன் வாழ்வில் ஒரு துளி கூட இடம் கொடுக்கவில்லை. இவை மற்றும் எந்த விதமான எதிர்மறை வடிவமும் அவரது வேதாந்தத்தில் விலக்கப்பட்டன. “எப்பொழுதும் உற்சாகமிக்கவாறும் ஆக்கபூர்வமாகவும் இருப்பதில் நான் நம்பிக்கை கொள்கிறேன், மேலும் எவற்றையெல்லாம் ஒருவர் அவசியம் செய்ய வேண்டுமோ அதை அவரே செய்ய வேண்டும்!” அப்படி இருந்தது அவரது வாழ்நாள் உறுதிமொழி.

சாந்தனா, அடிக்கடி, தன் கணவரில், “கொம்பைப் பிடித்து அடக்க வேண்டிய காளை”யை கண்டிருக்க வேண்டும். சியாமானந்தர் சமூக வசதிகளுக்கு இணங்காதவர். அவர், பரிந்துரைக்கப்பட்ட மறைநூல் நிலைமைகளில் தவிர, ஒரு சொட்டு நீரையோ அல்லது ஒரு கவளம் உணவையோ அருந்தாத (உண்மையில் அருந்த முடியாத) ஒரு தீவிர ஆச்சாரமான அந்தணர்; ஆனால் அவர் எதைச் செய்தாலும் பெரும்பாலும் உச்ச அளவிற்கு செல்லும் அளவு அத்துணை இச்சா சக்தியையும் உற்சாகத்தையும் பயன்படுத்துவார். (ஒரு சமயம், அவர் மகாத்மா காந்தி வழக்கமாக செய்வது போன்று தன்னாலும் உபவாசம் இருக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்று விட்டார். காந்திஜி அவரது உபவாச காலங்களில் வேண்டிய அளவு தண்ணீரை குடித்துக்கொண்டு பெரும்பாலும் தேகச் செயல்பாடுகளை தவிர்த்து இருப்பார். பினாயேந்திரா உணவைத் தவிர்த்ததோடு திரவ உணவுகளையும் எடுத்துக் கொள்ளாமல், தனது வழக்கமான படிப்பு மற்றும் சுட்டெரிக்கும் இந்திய வெயிலில் திறந்தவெளி விளையாட்டு என்று எல்லாச் செயல்பாடுகளையும், குடும்பத்தினருக்கு தாம் என்ன செய்கிறோம் என்பதை சொல்லாமலேயே செய்து வந்தார். ஒன்பது நாட்களுக்குப் பிறகு இந்த முயற்சியில் அவருடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்த வேலையாள், அவர் மயக்கம் போட்டு விழ ஆரம்பித்த உடன், சாந்தனாவை வரவழைத்தான். சாந்தனா அவரை உணவு அருந்துமாறு பணியச் செய்தாள். அதன் பின் அவர் தனது விபரீத உபவாசத்தை அனேக குவளைப் பால் மற்றும் சப்பாத்திகளின் ஒரு குவியல் என்று உச்ச அளவில் உட்கொண்டு முடித்தார். பின்னாளில் அவர், தன் ஆயுட்காலத்தில் அந்த சந்தர்ப்பத்தில்தான் செரிமானக் கோளாறைச் சற்று உணர்ந்ததாக கூறினார்!

ஸ்ரீ தயா மாதா சுவாமிஜியின் நெற்றியில் திலகத்தை (ஓர் ஆன்மீக அருளாசியின் சின்னம்) இடுகிறார். ராஞ்சி, மார்ச் 15, 1968

ஆனால் சாந்தனா ஒருபோதும் கலக்கமடைந்ததில்லை என்று கேள்விப்படுகிறோம்; அவள் அவரது ஒவ்வொரு சவாலான செயலுக்கும் சரி சமமாக இருந்தாள். “சமூக அமைப்பில்” ஓர் அங்கமாக மாற அவர் மறுத்த போது அவள் மௌனமாகப் புன்னகைத்தாள். ஒரு நாள் இரவு அவர் உறங்கிக் கொண்டிருந்த போது அவரது ஆசாரமான அந்தணக் குடுமியை வெட்டி விட்டார். (குடுமி தொலைந்ததாகவே அவர் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை, ஆனால் அவர் அதை மீண்டும் வளர்க்கவில்லை) மேலும் சாந்தனா, தனது வலிமையான மன உறுதி கொண்ட தன் கணவர் எந்த விஷயத்திலாவது மிதமிஞ்சிப் போவதாக உணர்ந்தால் அவள் “உறுதியான நிலையை மேற்கொள்வாள்,” மற்றும் அவர் கீழ்ப்படிந்து விடுவார். அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்த மிக மகிழ்ச்சியான தருணங்கள் அவர்கள் வேதாந்தத்தைப் பற்றி விவாதித்தபோது கழிந்தன. அந்தக் காலத்தில் இந்தியாவில், பெண்கள் வேதாந்தத்தைப் பற்றிய அறிவில் குறைந்தவர்கள் என்று கருதப்பட்டனர். “அவளது ஆழ்ந்த புரிதலுடன் கூட என் மனைவிக்கு அபார நினைவு திறனும் இருந்தது. ஒரு புத்தகம் அல்லது மறை நூலின் எந்த ஒரு பக்கத்தையும் ஒரு தடவை நோட்டமிட்டு விட்டு, பிறகு அப்பக்கத்திலுள்ள அனைத்தையும் வரிக்குவரி மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் இருந்தது. அதிலும் கூட அவள் என்னை மிஞ்சி இருந்தாள்,” சியாமானந்தர் அவளைப் பற்றிய ஒரு மரியாதை மிகுந்த நினைவில் கூறினார்.

சாந்தனாவிற்கு இருபது வயது மட்டுமே ஆகியிருந்த போது ஒரு நீடித்த நோயினால் பீடிக்கப்பட்டு இறந்தாள். “நான் எந்த வருத்தமும் அடைய வில்லை,” சியாமானந்தர் கூறினார், “ஏனெனில் என் இதயம் முழுவதும் நிறைந்திருந்தது”. அவரது மனைவி அவரிடம் கூறியிருந்தாள், “எனக்கு தெரியும் இது உங்கள் வாழ்க்கை முறையாக இருக்கப்போவதில்லை. நான் ஒரு தடையாக இருக்க மாட்டேன், உங்களை பிடித்து வைத்திருக்கவும் மாட்டேன். இந்த நாடகத்தை நாம் நடத்த வேண்டியிருந்தது; ஆனால் இப்பொழுது அது முடிவிற்கு வர வேண்டும், நான் உங்களை விடுவிக்க வேண்டும்.”

அது 1936 ல் நடந்தது. சியாமானந்தருடைய இறைவன் மற்றும் சத்தியத்திற்கான தேடல் அவர் வாழ்வின் முழுப்பகுதியாக மாறியது. புரிதலுள்ள அவருடைய மனைவியின் சகோதரி அவரது மகள்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்று அந்த கவலையிலிருந்து அவரை விடுவித்தாள். அவர் தன் குடும்பத்தை விட்டு விலகி, அடுத்த இருபத்திமூன்று வருடங்களின் பெரும்பாலான பகுதியை இந்திய ஆசிரமங்கள் மற்றும் இந்தியாவின் புனித தலங்களுக்கு யாத்திரை செய்தல் முதலியவற்றில் கழித்தார். அவர் அந்தக் காலத்தில் இருந்த புகழ்பெற்ற இந்திய மகான்கள் மற்றும் புனித ஆசான்களிடம் நெருங்கிப் பழகினார். அனேகர் அவரது பக்தியையும் திறமைகளையும், அவரது ஆன்மீகத் தேடல் மற்றும் தங்களது நிறுவனங்களை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற பரஸ்பர நன்மைகளுக்காக, கட்டுக்குள் கொண்டுவர விரும்பினர். அனைவரிடமும் மிகுந்த மரியாதை கொண்டு, அவர் தன்னால் எந்த விதத்தில் சேவை செய்ய முடியுமோ (ஆனால் ஒரு புனித மகானுக்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவி அங்கு பத்து வருடங்களில் பெரும்பாலான பகுதியைக் கழித்தார்.) அவ்வாறு அன்புடன் செய்தார்; ஆனால் அவர் தீட்சை எடுக்கவில்லை அல்லது எந்த ஒரு பாதையையும் பின்பற்றவில்லை, “நான் வேறு ஏதோ ஒன்றை இன்னமும் நாடிக் கொண்டிருந்தேன்,” சியாமானந்தர் விளக்கினார்: “விசித்திரம், குருதேவர் (பரமஹம்ஸ யோகானந்தர்) இந்தியாவில் 1935 – 36ல் இருக்கும் போது என் தேடல் ஆரம்பித்தது. 1936 ல் நான் பூரியில் இருந்த போது குருதேவரும் அங்கே தன் குருதேவரது மறைவிற்கான துக்கத்தை அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். நான் அவரைக் காண்பதை பலமுறை நூலிழையில் தவற விட்டிருக்க வேண்டும். நான் அப்போது அவரைச் சந்தித்திருந்தால், எனது தேடல் அதன் ஆரம்பத்திலேயே முடிந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.”

மஹிசாதாலில் பினாயேந்திர நாராயண் தன் மனைவியின் நினைவாக ஓர் அழகிய கல்லூரியைக் கட்டினார். அந்த இருபத்திமூன்று வருடங்களின் பிற்பகுதியில் அவரும் அவரது நான்கு நண்பர்களும் மிகவும் தேவைப்பட்ட காச நோய் சுகாதார நிலையத்தை நிறுவுவது பற்றி ஆழ்ந்து யோசித்தனர். அவர்கள், மேற்கு வங்காளத்தில் ஆரோக்கியச் சூழலிலுள்ள கிரிதங்கா சமவெளிப் பிரதேசத்தை தேர்ந்தெடுத்து அந்த மருத்துவ நிலையத்திற்கு நிராமோய் (“குணமாதல்”) என்று பெயரிட்டனர், மேலும் தன் கற்பனையை நினைவாக்க முனைந்தனர். தமக்குள்ளேயே அவர்கள் கணிசமானப் பணத்தை வசூல் செய்து, உடனடியாக அப்பணத்தையும் அந்த உன்னதத் திட்டத்தை அறிவிக்கும் தகவல் குறிப்பேட்டை அச்சடிப்பதிலும் வினியோகிப்பதிலும் செலவழித்தனர். நம்பிக்கை, தீர்மானம், கடின உழைப்பு ஆகிய சுவாமி சியாமானந்த கிரியின் வாழ்க்கை சிறப்பியல்புகள், பலனைக் கொணர்ந்தன. இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஆதரவு குவிந்தன; இன்று இந்த மருத்துவ நல்வாழ்விடம், அறுவை சிகிச்சை வசதிகள் மற்றும் ஒரு திறந்தவெளி மார்பு மருத்துவ நிலையத்தோடு ஒரு மாதிரி நிலையமாகத் திகழ்கிறது. பிரதம மந்திரி இந்திரா காந்தி பொதுக்குழுவின் தலைவி. இந்த ஸ்தாபனம் இரண்டு மார்பு மருத்துவ கிளை நிலையங்களைக் கொண்டுள்ளது. மேலும் சமீபத்தில் கல்கத்தாவில் ஒரு பெரிய 15 மாடி பன்மருத்துவ நிலையத்தை ஆரம்பித்துள்ளது — இவை அனைத்தையும் நிறுவ சுவாமி சியாமானந்தர் உதவினார். இப்பன் மருத்துவ நிலையம் அறக்கட்டளையைச் சார்ந்தது, நோயாளிகளுக்கு ஒரு சிறு தொகையைச் செலுத்தியோ அல்லது “கட்டணம் செலுத்த முடிகின்ற” அடிப்படையிலோ நோயாளிகளுக்கு வைத்தியம் அளிக்கிறது.

1946ல் சியாமானந்தர் ராஜ்கிர் நகருக்கும், கௌதம புத்தரின் சத்தியத்திற்கான தீவிர தேடலாலும் மற்றும் ஒரு பரந்தகன்ற போதி மரத்தின் கீழ் பெற்ற அவரது இறுதி நிர்வாணத்தாலும் புனிதமடைந்த புத்த கயாவிற்கும் யாத்திரை மேற்கொண்டார். சியாமானந்தர் பகல் முழுவதையும் புத்தகயாவிலுள்ள அந்த மரத்தடியின் கீழ் தியானம் செய்தவாறும் மற்றும் அருகிலுள்ள ராஜ்கிர் நகர கோவில்கள் மற்றும் ஆசிரமங்களின் இடிபாடுகளைச் சுற்றி நடந்தவாறும் கழித்தார். மாலையில் வெகு நேரம் கழித்து ராஜ்கிர்ரில் உள்ள அரசு ஓய்வில்லத்திலுள்ள தன் அறையில் ஓய்வெடுத்தார். ஒரு நாள் விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு அவர் திடீரென எழுப்பப்பட்டார், படுக்கையை விட்டுக் குதித்தெழுந்த அவர் தன் அறையில் ஓர் அழகிய நீல ஒளியைக் கண்டார். அவர் அந்த அனுபவத்தை விவரிக்கிறார்:

“அது அறையின் ஒரு மூலையிலிருந்து வெளிப்பட்டது, ஓர் ஆழ்ந்த நீல நிற ஒளி; பிறகு முழு அறையும் ஒளியால் நிரப்பப்பட்டது. மூலையிலிருந்த நீலநிற ஒளி சுழல ஆரம்பித்தது. ஒருமுகம் தோன்றியது. பிறகு தேகத்தின் முழு மேல்பாகமும், இறுதியாக முழு உருவமும் தோன்றியது. அந்த முகம் அத்துணை சாந்தமாகவும் அத்துணை அமைதியாகவும் இருந்தது — ஓ அத்துணை இனிமை! நான் இது எவராக இருக்க முடியும்? என்று நினைத்தேன், புத்தரா? சிவபெருமானா? இல்லை, இந்ததெய்வீகப் பிரமுகர் புத்தரின் நீளமாகத் துளைக்கப்பட்ட காதுகளையோ, மற்றும் அவரது குட்டையான வளைவுமிக்க தலைமுடியையோ பெற்றிருக்கவில்லை. அத்துடன் சிவபெருமானின் கழுத்திலுள்ள பாம்புகளின் ஆரத்தையோ2 அல்லது நீண்ட சடா முடியையோ கொண்டிருக்கவில்லை. ஆனால் முகமானது அவர்களது போல் அழகாகவும் சாந்தம் நிறைந்ததாகவும் இருந்தது; ஆனால் தலைமுடி பின்பக்கம் நேராக இழுத்துச் சீவப்பட்டிருந்தது. அவர் என்னிடம் பேசினார் மற்றும் எனக்கு ஒரு  மந்திரத்தையும்[3] அளித்தார். அது ஓர் அற்புத அனுபவமாக இருந்தது. அடுத்த பன்னிரெண்டு வருடங்களாக எப்பொழுதும் அந்த முகத்தைக் காண்பதற்காக அலைந்து கொண்டிருந்தேன்.

ஹாலிவுட் ஆலய இந்தியா ஹாலில் ஒரு விருந்தில்

“1958ல் நான் கல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஓர் அமைதியான ஆசிரமத்தில், என் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெற்று தியானம் செய்வதற்காக அத்தகைய ஒரு ஆசிரமத்தை தேடிக்கொண்டு கண்டுபிடிக்க முயற்சி செய்வது என்று தீர்மானித்தேன். தஷிணேஸ்வர காளி கோயிலிலிருந்து சிறிது தூரமுள்ள யோகதா மடத்தைப் பற்றி கேள்விப் பட்டிருந்தேன். நான் அங்கு சென்றேன். அது உண்மையிலேயே ஏகாந்த இடமாக இருந்ததைக் கண்டேன். அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை; மேலும் அது அழகாகக் கங்கைக் கரையின் மேல் அமைந்திருந்தது. நான் அங்கிருந்த சன்னியாசிகளில் ஒருவருடன் அங்கு தங்குகின்ற சாத்தியங்களைப் பற்றி கேட்டேன். அவர் அம் மடத்தை நிறுவினவரைப் பற்றி கூறிவிட்டு அவரது நூலான ஒரு யோகியின் சுயசரிதம் ஐ எனக்கு காட்டினார். நான் அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டேன்.

“தன் சுயசரிதம் எழுதும் ஒரு யோகி, அதுவும் மேலை நாட்டில் பல வருடங்கள் கழித்துள்ள ஒரு யோகியைப் பற்றி எனக்கு மிகவும் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் நான் தற்செயலாக பக்கங்களைப் புரட்டும்போது, இது ஒரு சாதாரண உரை அல்ல என்று கண்டேன்– எந்தப் பத்தியை நான் படிக்க நேர்ந்தாலும் அது ஆன்மீக வீரியம் மற்றும் சத்தியத்துடன் ஒலித்தது.

“ஆனால், நான் மகாவதாரர பாபாஜியின் புகைப்படம் இருக்கிற பக்கத்தைப் புரட்டிய போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தைக் கற்பனை செய்து பாருங்கள். “இது அவர்தான்!” நான் கூவினேன். “என் தெய்வீகக் காட்சியில் கண்ட ஒருவர், மற்றும் இத்தனை வருடங்களாக எவரைத் தேடிக் கொண்டிருக்கிறேனோ அவர்! இப்படி இருக்க முடியுமா? அல்லது நான் கற்பனை மட்டும் செய்து கொண்டிருக்கிறேனா?”

பிறகு அவர், யோகதா மடத்தில் உள்ள சன்னியாசி, மடத்திலுள்ளவர்கள் அமெரிக்காவிலிருந்து பரமஹம்ஸ யோகானந்தரின் அமைப்பின் தலைவியின் வருகை தொடர்பாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாக கூறியதை நினைவு கூர்ந்தார். அந்த செய்திக்கு தன் சந்தேகம் நிறைந்த எதிர்செயலையும் நினைவுகூர்ந்தார்: “ஒரு அமெரிக்க ஆன்மீகத் தலைவர்? அது கூட ஒரு பெண்மணி? கேவலம்!” அவரது எண்ணங்கள் அவ்விதமாக இருந்தன. இருப்பினும் எப்படியோ அவர் ஈர்க்கப்பட்டார். மேலும் சில நாட்களுக்குள் அவர் தானே ஸ்ரீ தயா மாதாவிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டார். “நான் அந்தச் சந்திப்பிலிருந்து வெளியில் வந்தவுடன் என் சாதனா வில் விடுப்பட்டிருந்த பகுதிப்பொருளை அவர் எனக்கு வழங்கியிருந்தார் என்பது எனக்குத் தெரிந்தது. நான், பிரசித்திபெற்ற சுவாமி விவேகானந்தரின் எடுத்துக்காட்டால் அகத்தூண்டுதல் பெற்று ஞான யோகத்தை பின்பற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் என் சாதனா வறட்சியாகவும் காலியாக இருந்தது. நான் இறைவனுக்கான அதிக பக்தி, அதிக அன்பு மற்றும் ஏக்கத்தை வளர்க்க வேண்டும் என்று மா என்னிடம் கூறினார். என் இதயம் முழுவதுமாக நிரம்ப ஆரம்பித்தது, மற்றும் மாதாஜி அவர்கள் கூறியது சரி என்று தெரிந்தது. என்ன ஆச்சரியம் என்றால் மாவுடன் எனது முதல் சந்திப்பு நிகழ்ந்த அதே நாளில்தான், ராஜகிர்ரில் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு பாபாஜியின் தெய்வீகக் காட்சி கிட்டியது. எனது தேடல் முற்றுப்பெற்று விட்டது என உணர்ந்தேன்.”

இருப்பினும் சந்தேகம் அவர் மனதில் ஒரு போரை எழுப்பியது. அவரது முழு வாழ்வும் தேடலும், இப்பொழுதும் மாயையினால் தவறாக வழிநடத்தப்பட்டால், வீணாகப் போய்விடும். அவர் மற்றவர்களிடமிருந்து ஒரு இடைவெளியை தக்கவைத்துக்கொண்டு, ஆசிரமத்தில் அமைதியாக தியானம் செய்து பின் மெதுவாக நழுவி கொண்டிருந்தார். ஒரு சமயத்தில் நீண்ட காலங்களுக்கு ஒதுங்கி இருக்கவும் கூட முயற்சி செய்தார். ஆனால் அவர் மீண்டும் வந்தபோது, அதே அமைதி நிறைந்த உத்திரவாதம் அவர் மேல் படர்ந்தது. ஸ்ரீ தயா மாதா, இந்தியாவில் அவர் சந்தித்திருந்த ஆன்மாக்களிலெல்லாம் மிகச் சிறந்த ஆன்மா மற்றும் இறைவனை ஆழ்ந்து தேடிக்கொண்டிருக்கும் ஒருவர் என்று ஏற்கனவே அவரை கூட்டங்களிலிருந்து பிரித்தெடுத்து தேர்ந்தெடுத்து விட்டிருந்தார்.

அவர் தயா மாதாவுடன், பரமஹம்ஸ யோகானந்தர் தன் பணியை ஒரு வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த சிறுவர் பள்ளியுடன் தொடங்கிய ராஞ்சிக்குச் சென்றார். அங்கு அவர்கள் குருதேவரின் பணியைப் பற்றி பலமுறை மனம்விட்டு உரையாடினார்கள். தனது குருவின் பணி இந்தியாவில் மோசமாக புறக்கணிக்கப்பட்டு சீரழிந்து கொண்டு இருப்பதைப் பற்றிய தன் இதய வலியை தயா மாதா அவரிடம் கொட்டித் தீர்த்தார் — அது ஒரு அழியும் நிறுவனமாக இருந்தது. தயாமாதா அவருடைய தீவிர மறுமொழியையும் புரிதலையும் உணர்ந்தார்.

அவர் தயாமாதா குழுவினருடன் பூரியில் உள்ள சுவாமி ஸ்ரீயுக்தேஸ்வரரின் ஆசிரமத்திற்குச் சென்றார். சியாமானந்தரது மனதில் இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்தப் பயணத்தில் அவை என்றென்றைக்குமாக நீக்கப்பட வேண்டியிருந்தது.

பூரியிலுள்ள ஜெகன்நாதர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமான கோவில்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. அவர் அங்கு பல முறை யாத்திரை செய்து இருக்கிறார், மற்றும் அந்தப் புனிதச் சூழ்நிலையில் அவரது தியானங்கள், பூஜ்ய ஸ்ரீ சங்கராசார்யார் பாரதி கிருஷ்ண தீர்த்தாவினால்[4] அளிக்கப்பட்ட சிறப்பு சலுகையினால் மிகவும் ஆழ்ந்து அருளப்பட்டதாக இருந்தது. ஸ்ரீ தயா மாதாதான் ஜெகன்நாத ஆலயத்தின்[5] உள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் அமெரிக்கப் பெண்மணி. சியாமானந்தர் அந்த நாள் தயா மாதாவின் குழுவில் இருந்தார்.

பிரபஞ்சத்தின் தலைவன் என்ற அம்சமாக ஸ்ரீகிருஷ்ணர் சிலையும், அவரது சகோதரி சுபத்திரை மற்றும் அவர் சகோதரர் பலராமர் சிலைகளும் உள்ள சன்னிதானத்தில் தயா மாதா தியானம் செய்த போது தன் சுற்றுப்புறத்தை முற்றிலும் மறந்த வண்ணம் அவர் ஒரு மிக ஆழ்ந்த பரவச நிலைக்குச் சென்றார். சியாமானந்தர் அந்த நேரத்தில் தன் சொந்த அனுபவத்தை விவரிக்கிறார்:

“நான் ஒரு பக்கத்தில் சுவரில் சாய்ந்தவாறு மா தியானத்தில் இருப்பதைக் கவனித்துக் கொண்டு நின்றிருந்தேன். திடீரென மாவின் உருவம் ஓர் ஒளியாக உருமாற ஆரம்பித்தது. நான் சன்னிதானத்தில் இருந்த ஜெகன்நாதரின் சிலையைப் பார்த்தேன். பிறகு மாவைப் பார்த்தேன், மீண்டும் சன்னிதானத்தைப் பார்த்தேன், நான் பலமுறை இதை நான் கற்பனை செய்யவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தலையை ஆட்டிக்கொண்டு செய்தேன். அவை இரண்டும் ஒன்று என்று எனக்குத் தெரிந்தது. இந்த அனுபவம் நீண்ட நேரம் தொடர்ந்தது, பிறகு படிப்படியாக மாவின் உருவம் மீண்டும் தெரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்கு பிறகு மாதா அவர்கள் எழுந்து கோவிலை விட்டு வெளியேறினார். அவர் அவ்வாறு எழுந்தபோது தனது காவி நிற கைக்குட்டையை நழுவ விட்டதைக் கவனித்தேன். அவருடன் இருந்தவர்கள் யாரும் ஏன் அதை எடுக்கவில்லை என்பது எனக்குப் புதிராக இருந்தது. எனக்கு அதைத் தொட மிகமிக தயக்கமாக இருந்தது. அந்தப் புனித இடத்தில் நான் கண்ட விஷயங்களுக்கு அது ஒரு அடையாளம். அதைப் பொறுக்கி எடுப்பது என்பது, இறைவனுக்கு முன், மாதாஜியின் கொடியை ஏந்துவதற்கு வாக்களிப்பதற்கு ஒப்பானது. நான் இவ்வாறு ஒருபோதும் என்னை எவருக்குமே அல்லது எந்த நிறுவனத்திற்கும் ஒப்படைத்ததில்லை. இருப்பினும் நான் கைக்குட்டையை அங்கேயே விட்டுச் செல்ல முடியாது. நான் பித்துப் பிடித்தவன் போல் சன்னிதானத்தை பார்த்து பிரார்த்தித்தேன், ‘எம்பெருமானே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ என்ன கேட்டுக் கொண்டிருக்கிறாய்?’ இறுதியாக நான் கூறினேன் ‘எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடக்கட்டும், இறைவா.’ நான் கைக்குட்டையை என் கையில் எடுத்து வெளியில் மாவிடம் கொடுக்கச் சென்றேன்.”

ஸ்ரீ தயா மாதாவும் சுவாமி சியாமானந்தரும் இமயமலை அடிவாரத்தில் துவாராஹாட்டிற்குப் போகும் கள்ளம் கபடமற்ற மலைவாழ் மக்களை வாழ்த்துகின்றனர், டிசம்பர் 1963.
ஸ்ரீ தயா மாதா, சுவாமி சியாமானந்தருடனும், முன்னாள் துணைத் தலைவரும் சுவாமிஜியின் வாழ்நாள் நண்பர்களில் ஒருவருமான ஸ்ரீ பனாமலி தாஸ் அவர்களுடனும்.

ஸ்ரீ தயா மாதாவிற்கு தான் கைக்குட்டையை நழுவ விட்டதையும் அதை சியாமானந்தர் எடுக்கத் தயங்கியதும் மிகவும் மங்கலாகத்தான் நினைவிருந்தது. மாதாவிற்கு அது ஒரு அடையாளம் என்று புரிந்தது. அதை சியாமானந்தர் அவரிடம் கொடுத்தபோது, அது ஏற்கனவே மாதாவிற்கு தெரிந்திருந்ததை உறுதிப் படுத்துவதாக இருந்தது: இறைவன், சியாமானந்தரை இந்தியாவில் தன் குருதேவரின் பணியை மீண்டும் கட்டமைப்பதற்கு தேர்ந்தெடுக்கிறான்.

இதுபோன்று “குருதேவரின் கொடியை ஏந்தும்” அடையாளச் செயல் சியாமானந்தரின் வாழ்க்கையில் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது. 1930ல் துர்க்கா பூஜையின் [6] பூஜையின் போது இளம் பினாயேந்திரா மற்றும் அவரது நெருங்கிய சில நண்பர்கள் விடுமுறையில் இருந்தார்கள். சுவாமிஜியின் மிகவும் நெருங்கிய மற்றும் வாழ்நாள் நண்பர்களில் ஒருவரான ஸ்ரீ பனாமலிதாஸின்[7] குடும்பம் ஒரு மாதத்திற்கு ராஞ்சியிலுள்ள ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்திருந்தது; ஆர்வமுள்ள இந்த சிறுவர்கள் யாவரும் அங்கு அவர்கள் விருந்தினர்களாகக் கூடியிருந்தனர். மகாராஜா காசீம் பஜாரது பண்ணையின் ஒரு பகுதியான இந்த பங்களா, விடுமுறையில் வந்திருப்பவர்கள் அறியாத விஷயம், ஒரு காலத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் யோகதா பள்ளியினால் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் 1929ல், பள்ளி விரிவடைந்தவுடன் காலி செய்யப்பட்டிருந்தது. “நாங்கள் அங்கு சென்ற போது, “சியாமானந்தர் கூறினார், “ஒரு யோகதா பெயர்ப் பலகை தரையில் கிடந்ததைப் பார்த்தேன். அது அழுக்கினால் மூடப்பட்டு வெள்ளை எறும்புகள் அதைத் தின்றுக் கொண்டிருந்தன. என்னால், எந்தப் பொருளும் பாழாகிக் கொண்டிருப்பதை, அது என் சொந்த பொருளாக இல்லாவிட்டாலும், பார்க்கப் பொறுக்க முடியாது. நான் கூடவே நினைத்தேன், ‘இது ஒரு ஆன்மீக நிறுவனத்தினுடையதாக இருக்க வேண்டும்; இந்தப் பெயர்ப் பலகை தரையில் கிடந்து மற்றவர்கள் இதன் மேல் நடந்து போவது நல்லதல்ல.’” அவர் அந்தப் பலகையை எடுத்து அழுக்கையும் எறும்புகளையும் தட்டிவிட்டு ஒரு மரத்தின் மீது அதைத் தொங்கவிட்டார்; அது அவரது யோசனை மிக்க, ஆனால் அவரே அறியாத அவரது குருவிற்கான முதல் சேவை.

சியாமானந்தர் ஸ்ரீ தயா மாதாவுடன் பூரியில் இருந்தபோது அவர் மாதாவிடம் தனக்கு தீட்சை[8] தருமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சடங்கு, யோகதா ஆசிரம நிலத்தில் சுவாமிக்கு யுக்தேஸ்வரரைப் புதைத்த இடத்திற்கு மேல் யோகானந்தரால் எழுப்பப்பட்ட நினைவாலயத்தில் நடைபெற்றது. சியாமானந்தர்தான் இந்தியாவில் ஸ்ரீ தயா மாதாவிடம் இருந்து தீட்சை பெற்ற முதல் நபர். அது ஒரு தொடக்கம் மட்டுமே; பரமஹம்ஸ யோகானந்தரது பணிக்கு உயிர்த்துடிப்புள்ள தீப்பொறி திரும்பியிருந்தது.

தயா மாதாவின் 1958-59 ஆம் ஆண்டு இந்திய விஜயத்தின் முடிவில் இந்தியாவை விட்டு அவர் செல்லும் முன் அன்றைய திருவாளர் பி.என். துபே இயக்குனர்கள் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு யோகதா சத்சங்க சொஸைடியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், சர்வதேச தலைமையகத்திலுள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பின் இயக்குனர்கள் குழுவிலும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அடுத்து வந்த வருடங்களின் போது, ஸ்ரீ தயா மாதா, அடிக்கடி அவரைச் சம்பிரதாய சந்நியாச தீட்சை பெற்றுக் கொள்ளுமாறு ஊக்குவித்தார். அவர் அந்த சந்நியாச விரதங்களை ஏற்கனவே 1938இல் கும்பமேளா வின் போது சம்பிரதாயமற்ற முறையில் எடுத்து இருந்தார். அவர் மீண்டும் மீண்டும், இதை ஒரு காரணமாக வைத்து மறுத்து வந்தார்: “பட்டங்களால் கெட்டுப் போவது எவ்வளவு எளிது என்று எனக்கு தெரியும், குறிப்பாக இந்தியாவில் துறவின் அடையாளமான காவித்துணி அணியும் எவர் மீதும் மரியாதை காட்டப்படும் இடத்தில். முதலில் நான் பணி செய்து என்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும், பிறகு இறைவனின் சித்தம் எதுவோ அது படி நடக்கட்டும்.” சிறிது காலத்திற்குப் பிறகு அவர் பணிவுடன் ஸ்ரீ தயா மாதாவிடம் இருந்து யோகாச்சார்யா (யோக ஆசிரியர்) பட்டத்தைப் பெற சம்மதித்தார். அதன்பின் அவர் யோகாச்சார்ய பினய் நாராயண் என்று அவர் சுவாமி ஆகும் முன் வரை அழைக்கப்பட்டார். அக்டோபர் 10, 1970ல் ஸ்ரீ தயா மாதா அவருக்கு பரமஹம்ஸ யோகானந்தரும் அவரது சன்னியாசசீடர்களும் சேர்ந்திருந்த புராதன பரம்பரையின் கிரி பிரிவில் சம்பிரதாய சன்னியாச தீட்சை அளித்தார். தயா மாதா அவருக்கு சுவாமி சியாமானந்த கிரி என்ற பெயரைச சூட்டினார்.

ஸ்ரீ தயா மாதா, ஸ்ரீ மிருணாளினி மாதா மற்றும் சுவாமி சியாமானந்த கிரியும் ராஞ்சியிலுள்ள யோகதாப் பள்ளி ஆசிரியர்களுடன், 1968

சியாமானந்தர், குருவின் பணிக்கு பன்னிரெண்டு தன்னலமற்ற, சோர்வற்ற, அர்ப்பணிப்பு வருடங்களாக உழைத்தார். அவரது முயற்சிகள் மூலம், சிதைந்து கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து பரமஹம்ஸர் யோகதா சத்சங்க சொஸைடிக்காக கண்ட மற்றும் ஸ்ரீ மாதா பரமஹம்ஸருக்கு நிறைவேற்றுவதாகவும் வாக்களித்த உன்னதக் கனவுகளின் நிறைவேற்றம் வெளிப்பட்டது. ஸ்ரீ தயா மாதாவிற்கு இந்த மிகப்பெரிய பணியில் உதவி புரிவதற்கு ஒப்பற்ற வகையில் தகுதி பெற்றிருந்தவரை இறைவன் ஊக்குவித்தான். ஸ்ரீ தயா மாதாவின் வழிகாட்டுதல், அருளாசிகள் மற்றும் குருவின் பணிக்கு மிகுந்த மன வெழுச்சியையும் இயக்க உந்து விசையையும் கொணர்ந்த மாதாவின் அடுத்தடுத்த மூன்று இந்திய விஜயங்களால் ஆதரவு பெறப்பட்டு, சியாமானந்தர், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள ஆசிரமங்களும் ராஞ்சியிலுள்ளப் பள்ளிகளிலும் தேய்ந்து கொண்டிருந்த உற்சாகத்தை புதுப்பிக்க உதவுவதில் வெற்றிகரமாகப் பாடுபட்டார். அவர் ராஞ்சியிலும் மற்ற சில உள்ளூர்களிலும் புதியப் பள்ளிகளை நிறுவினார். அவர் இந்தியா முழுவதும் குருதேவரின் செய்தியைப் பரப்பிக் கொண்டும், யோகதா மையங்கள், தியான குழுக்கள் ஆகியவற்றை நிறுவிக் கொண்டவாறும், பயணம் செய்தார். 1968 – 71 வருடங்களுக்கிடையில் அவர் லாஸ் ஏஞ்சலீஸிலுள்ள ஒய்.எஸ்.எஸ்./எஸ்.ஆர்.எஃப் சர்வதேச தலைமையகத்திற்கு, குருதேவரின் பணியை உலகளாவியதாக பரப்புவதற்கு நான்கு முறைகள் பயணம் செய்தார்; இந்தப் பயணங்களில் அவர் உலகத்தில் வெவ்வேறு பகுதிகளிலுள்ள யோகதா மையங்கள் மற்றும் உறுப்பினர்களை, பரமஹம்ஸ யோகானந்தரின் செய்தியைப் பரப்புவதில் உதவி புரிவதற்காக விஜயம் செய்தார்.

அவரது வேகத்திற்கு ஓய்வு கொடுப்பது என்றால் என்னவென்று தெரியாது. உண்மையில், தனது கடமைகளில் இருந்து ஓய்விற்கான தேவையை அவர் என்றும் உணராத அளவிற்கு அவர் அத்துணை உற்சாகமும் அர்ப்பணிப்பும் பெற்றிருந்தார். “தேகம் மற்றும் ஆன்மாவின் உயர் புத்துணர்ச்சியை இறைவன் மற்றும் குருவிற்குச் சேவை செய்வதிலிருந்து தவிர வேறெங்கே பெற முடியும்?” அவர் அடிக்கடி கூறக் கேள்விப்பட்டதுண்டு. “நான் இறைவனைப் பற்றிப் பேசும் போதும் அவன் பணியைச் செய்யும் போதும் நான் அவனது உயிர்ச் சக்தியால் நிரம்பப் பெறுகிறேன்.” அந்த வருடங்களில் பெறப்பட்ட பணியின் வளர்ச்சியானது, பின்னடைவுகள் மற்றும் எதிர்ப்புகள் மற்றும் கணக்கற்றத் தடைகள் இல்லாது, சாதிக்கப்படவில்லை. இறைவன் சியாமானந்தருக்குத் தேவையான வீரியத்தையும் ஞானத்தையும் வழங்கியிருந்தார்; அவரை விடக் குறைந்த ஆன்மீக நிலை மற்றும் ஏற்கும் திறனுள்ள எவராலும் அதைச் சாதிக்க முடியாது.

“நான் அறுபது வயதிற்கப்பால் உயிர் வாழமாட்டேன்,” அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். “என்னையும் என்னைச் சுற்றியுள்ள அனைவரையும் பல வருடங்களில் பணியை சில வருடங்களில் முடிக்க விசையுடன் இயங்க வைக்க வேண்டும். இப்பொழுது குருவிற்குச் செய்ய முடியாததை பின்னர் என்னால் செய்ய முடியாது. இறைவன் மற்றொரு வாய்ப்பை எனக்கு அளிக்க மாட்டான்.”

ஸ்ரீ தயா மாதாவும் சுவாமி சியாமானந்த கிரியும் தென்னிந்திய சுற்றுப்பயணத்தின்போது: சென்னை, 1968

அவரது சேவையின் தத்துவம் அவரது இந்த வரிகளில் சுருக்கமாகக் கூறப்படலாம்: “இறைவனுக்கான பணியே வழிபாடு. நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்; அதில் நான் தீர்மானமாய் உள்ளேன். இந்தப் பணியில்தான் விடுதலையும் முக்தியும் உள்ளது என்று எனக்கு தெரியும். மற்ற வழிகளில் பணி செய்தால் மனம் அலையலாம் மற்றும் எப்பொழுதும் இறைவனிடமும் குருவிடமும் இல்லாமல் போகலாம். ஆனால் இப்பணியில் என்னுடைய கொஞ்சப் பகுதியாவது எப்பொழுதும் அவர்களுடன் இருக்கும். நான் என் மனம், கைகள் மற்றும் கால்களை, அனைத்தையும் அவர்கள் பணியில் வைத்தால், பிறகு என் மனம் அலைந்தாலும் என் கைகளும் கால்களும் அவர்களுடன் மும்முரமாக உள்ளன. தியானம் புரிவதற்காக மட்டும், நான் சுதந்திரமாக இருக்க விரும்பியது உண்டு. ஆனால் நான் தியானத்திற்காக மட்டும் சென்று, எனது மனம் இறைவனிடமிருந்து அலைந்து திரிய ஆரம்பித்தால், அந்த கணங்களில் நான் இறைவனிடம் இருந்து 100 சதவிகிதம் விலகி இருப்பேன். மாறாக, நான் இறைவனுக்கும் குருதேவருக்கும் பணிபுரிந்தால், என் மனம் அலைந்தால் கூட, அப்போதும் சில சதவிகிதத்தில் அவர்களுடன் இருக்கிறேன். அது தான், நான் உணர்ந்தறிய வந்த கர்மயோகத்தின் ரகசியம். ஆனால் இது மட்டும் எனக்கு தெரியும், நான் குருதேவருக்காக, உடலில் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உழைப்பேன். இந்தப் பணியில் எனது முக்தியுள்ளது என்பதில் நான் உறுதியாயுள்ளேன்.

ஸ்ரீ தயா மாதா சுவாமிஜியின் மேல் காவிநிற சன்னியாச உடையை போர்த்துகிறார், 1970.

அவர் நிறைவேற்றிய அந்த சபதத்தை வெகு சிலரால் மட்டுமே நிறைவேற்றியிருக்க முடியும். அவரது இறுதி நாட்களில், அவர் அனுபவித்த உயிர்கொல்லி நோய் உண்மையில் அவருடைய அனைத்து வலிமை மற்றும் உயிரை அவரிடமிருந்த உறிஞ்சி இருந்தாலும், அப்போதும் அவர் கடிதங்களை சொல்ல எழுத கூறியும், கையெழுத்திட்டும், இந்தியாவில் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை அளித்துக் கொண்டும் தன் பணியைத் தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார். அவரைக் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினருக்கு அது அதிசயமாக பட்டது. இறுதி நாட்களில், இந்த அளவு வலிமை கூட அவரிடம் இல்லாத நிலையிலும், அவர் பல்வேறு ஆசிரம பக்தர்களை, தான் கடுமையாகச் செய்ய முயன்றது போல், குருவின் பணி எனும் கொடியை உயரத்தில் ஏந்திச் செல்வதற்காக அவர்களிடம் பேசி அவர்களை மன எழுச்சி பெறச் செய்வதற்காக தன்னை பார்க்கச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். இது இறைவனுக்கான அவரது பிரார்த்தனையாக இருந்தது, “இறைவா, நான் இப்பொழுது இந்த தேகத்தை விட்டு நீங்க வேண்டும் என்பதே உனது சித்தமாயின், எனது இந்தக் கொழுந்து விட்டெரியும் ஆசைக்கு அனுமதி கொடு: என் குருதேவரின் பணிகளைச் செய்து கொண்டிருக்க நான் விரைவாக பூமிக்கு திரும்ப வேண்டும்!”

நோய் என்றும் அவரது உணர்வு நிலையைத் தொடவில்லை. அவர் எப்பொழுதும் உற்சாகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும், நம்பிக்கை மற்றும் தெய்வீக அன்பு நிறைந்தவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, தன் வாழ்நாள் முழுவதும் அத்துணை அதிகமாக நேசிக்கவும் வழிபடவும் செய்த தெய்வீக அன்னையெனும் இறைவனது திருவுளத்திற்கு முழுவதும் சரணடைந்தவராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில், அவர் அநேக அற்புத அனுபவங்களைப் பெற்றார்.— தெய்வீக அன்னையுடனும் குருதேவருடனும் ஆனந்தமய தொடர்பு, குறைந்தபட்சம் இரண்டு தெரிந்த சந்தர்ப்பங்களில் பாபாஜியின் தரிசனம் போன்றவை. அவரது விழிப்புணர்வு அவரது இறுதி மூச்சு வரை இருந்தது. அந்த மர்மமான தெய்வீக அழைப்பிற்கு நான்கு மணி நேரங்களுக்கு முன், அவர் தனது இறுதித் துளி வலிமையை வணக்கம் செய்யும் சைகைக்காக, இறைவன் மற்றும் குழுவிற்கான பிரார்த்தனைகள் அவர் செவியில் கூறப்பட்டபோது, ஒன்று திரட்டினார்.

“எனவே மிக இளம் வயதிலிருந்தே எனது மனதிற்குள் எனது வாழ்விடமாயிருந்த ஒரு இடத்தைப் பற்றிய மங்கலான காட்சி வருவதுண்டு.” சியாமானந்தர் தனது மறைவிற்கு சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதயா மாதாவிடம் இவ்வாறு கூறினார், “ஏதாவது ஒரு நாள் நான் அதைக் காண்பேன் என்று எப்பொழுதும் நான் உணர்ந்தேன். அது இமயமலையில் பத்ரிநாத்திற்கு அருகே, அந்தத் தேய்ந்த வழிப்பாதைகளுக்கு[10] சற்று அப்பால்.

அதைக் கண்டுபிடிக்க அத்துணை ஓர் ஏக்கத்தை நான் உணர்வது வழக்கம். அங்கு நான் ஒரு சிறிய இடத்தை தியானத்தில் இறைவனுடன் தனித்திருக்க நிறுவி என் இறுதிநாளைக் கழிப்பேன். நான் என் வாழும் இடத்தை ஒருபோதும் கண்டு பிடிக்கவே இல்லை, ஆனால் அது அங்கு இருக்கிறது — அந்த வழிப்பாதைகளுக்கு சற்று அப்பால்.”

ஒருவேளை அவரது வாழ்விடம், மொத்தத்தில், இந்த லௌகீகத் தளத்தில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை, இப்பொழுது அவர் அதை கண்டிருந்து, இறுதியில் அவரது கடமைகளிலிருந்து விடுபட்டு, தியான ஓய்வில் அவரது அன்புக்குரிய இறைவனுடன் அங்கு ஒன்றிணைந்திருக்கலாம். அங்கு அவர் புதுப்பிக்கப்பட்டு, ஆன்மாவில் மேம்படுத்தப்பட்டு, மீண்டும் அவர் ஒருமுறை புவிக்கு ஒரு புதிய மற்றும் உயர் வீரியமுள்ள வடிவில் வந்து அவரது குருவின் பணிக்கு சேவை செய்வதற்கான அவரது ஆசையை நிறைவேற்றும் தருணத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கலாம்.

ஸ்ரீ தயா மாதாவும் சுவாமி சியாமானந்த கிரியும் மௌனப் பிரார்த்தனையில், சுவாமிஜியின் சன்னியாச விரதச் சடங்கின் முடிவில், நிற்கின்றனர்.

ஒரு நாள் மாலை, அவரது மறைவிற்கு மூன்று வாரங்களுக்கு முன், சியாமானந்தர் இந்த வரிகளை வங்காள மொழியில் இயற்றுவதற்கு அகத்தூண்டுதல் பெற்றார். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்:

“வாழ்க்கையின் காலையில்
சுடரொளி வீசும் ரதத்தில் ஆன்மா பயணம் செய்கிறது.
வாழ்வின் மாலை வேளையை அடைந்து,
அது எதைக் காண்கிறது?
எஞ்சி விடப்பட்டுள்ள தூசு படிந்த வானத்தையா?
அல்லது பிரகாசமான தொடுவானம் அதை முன்னால் அழைக்கிறதா?”

சுவாமி சியாமானந்தரை அறிந்த மற்றும் நேசித்த அனைவருக்கும் அவரது வெல்ல முடியாத ஆன்மா அவரை முன்னே அழைக்கும் பிரகாசமான தொடுவானத்தை மட்டுமே பார்க்கிறது என்பதில் ஐயம் இருக்காது.

[1] “தூக்கமற்ற மகான்,” இளமை நிறைந்த பரமஹம்ஸருக்கு, அவரது இமயத்தை நோக்கி இறை ஞானத்தைத் தேடிச் சென்ற அவரது இறுதிப் பயணத்தின் போது ஒரு விசேஷ அருளாசி அளித்தவர். அந்த சமயத்தில் ராம்கோபால் பரமஹம்ஸருக்கு  மகாவதார பாபாஜி யுடனான தனது முதல் சந்திப்பைப் பற்றி கூட கூறினார்.( ஒரு யோகியின் சுயசரிதம்) 13ஆம் அத்தியாயத்தைப் பார்க்கவும்).

[2] சுய-தேர்ச்சியின் அடையாளம் சார்ந்தது, உயிர்சக்தி மீதான கட்டுப்பாடு. சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று “யோகராஜன்”.

[3] சக்தி மிகுந்த அதிர்வுறும் சொல். சமஸ்கிருத மந்த்ரா வின் உண்மையான மொழிபெயர்ப்பு “எண்ணத்தின் கருவி.”

[4] கோவர்தன மடத்தின் ஆன்மீக தலைவர், பூரியில் இம்மடம் ஒன்பதாவது நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வேதாந்தியும், சன்னியாசப் பரம்பரையைச் சீர்திருத்தி அமைத்தவருமான பகவான் சங்கரரால் நிறுவப்பட்டது.

[5] பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவில் நிறுவப்பட்ட நாளிலிருந்து அது இந்து மதத்தைச் சாராதவர்களுக்கும் மேல் நாட்டு மக்களுக்கும் கோவிலில் அனுமதி கிடையாது. இந்தக் கட்டுப்பாடு, ஸ்ரீ தயா மாதாவின் பூரி விஜயத்தின் போது எதேச்சையாகத் தளர்த்தப்பட்டிருந்தது. சிறிது காலத்திற்குப் பின் இந்த கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வந்தது.

[6] “துர்க்கையின் வழிபாடு,” இறைவனை தெய்வீக அன்னை அம்சமாகப் போற்றி வழிபடும் ஒரு திருவிழா.

[7] ஸ்ரீ பனாமலிதாஸும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ஓர் உறுப்பினரானார். அவர் ஒய். எஸ். எஸ். இயக்குநர் குழுவின் உறுப்பினராக இருந்தார், சியாமானந்தரின் மறைவிற்குப் பின் சுவாமி சாந்தானந்தாவுடன் அவரும் இணைப் பொது செயலாளர் ஆனார். பின்னர் அவர் சொஸைடியின் உப தலைவராக 1975 – 1984 வரை சேவை புரிந்தார்.

[8] ஆன்மீக உபதேசம்; சமஸ்கிருத மூல வினைச்சொல் தீக்ஷ்விலிருந்து ஒருவரை அர்ப்பணித்துக் கொள்வது.

[9] உண்மையில், “முழுமையான வணக்கம்” சமஸ்கிருத மூலச்சொல்  நம்லிருந்து வணக்கம் செலுத்துதல் அல்லது தலை வணங்குதல் என்ற பொருள். சேர்க்கை புரோ, முழுவதுமாக என்று பொருள்.

[10] இந்தியாவின் மிகப் புனிதமான யாத்திரை தலங்களில் ஒன்றான பத்ரிநாத்திற்குச் செல்லும் யாத்ரீகர்களால் தேய்க்கப்பட்டப் பாதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதத்தின் வாசகர்கள், சுவாமி பிரணபானந்தர் மறுபிறவிக்குப் பிறகு பத்ரிநாராயணனுக்குச் சென்று (பத்ரிநாத்திற்கு அருகில்) அங்கு மகிமை பொருந்திய பாபாஜியைச் சுற்றியுள்ள மகான்கள் குழுவில் இணைந்தார் என்பதை நினைவு கூரலாம்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp