ஸ்ரீ தயா மாதாவின் 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து ஒரு செய்தி

தயா மாதா புன்சிரிப்புடன்

அன்பர்களே,

நமது அன்புக்குரிய ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் 100 வது பிறந்த தினத்தின் இந்த மகிழ்ச்சியான தருணம் நிச்சயமாக அவர் இப்போது இருக்கும் விண்ணுலக சாம்ராஜ்யங்களிலும், அதே போல், இறை பக்தி நிரம்பிய அவரது தெய்வீக வாழ்க்கையினாலும் இறைவனது குழந்தைகள் மீதான அவரது எல்லையற்ற கருணையினாலும், மிகவும் மேம்படுத்தபட்ட நம் அனைவரின் இதயங்களிலும் நிச்சயமாக கொண்டாடப்படுகிறது. அவருடைய, இறை உணர்வுநிலையிலிருந்து பாய்ந்து, அவனிடம் ஈர்க்கும் அந்த அன்பு மற்றும் புரிதலுக்கு அனைத்து தேசங்கள் மற்றும் சமயங்களிலிருந்தும் ஆன்மாக்கள் செவி சாய்க்கலுற்றனர்.

சிறுவயது முதலே தயா மாதாஜி, சாத்திரங்களில் கூறப்படும் மகான்கள் செய்ததைப் போலவே இறைவனை அறியவும், அவனுடன் தொடர்பு கொள்ளவும் ஏங்கினார். நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரை முதன்முதலாகப் பார்த்து, அவர் பேசுவதைக் கேட்ட போது, “நான் எப்போதும் இறைவனை நேசிக்க விரும்புவதைப் போலவே இந்த மனிதரும் இறைவனை நேசிக்கிறார். அவர் இறைவனை அறிவார். நான் அவரைப் பின்பற்றுவேன்!” என்று நினைத்தார். அந்த அன்பை பூரணப்படுத்துவதே அவரது சொந்த வாழ்க்கையின் உன்னத இலக்காக மாறியது; அந்த இலக்கிலிருந்து தன்னை திசைதிருப்ப அவர் ஒருபோதும் அனுமதிக்காததால், அவரால் இறைவனின் ஆன்மீக அருளை முழுமையாகப் பெற முடிந்தது, மேலும் இந்த உலகில் இறைவனின் ஒளி மற்றும் அருளாசிகளின் தூய ஊடகமாக இருக்க அவரால் முடிந்தது. அவரது பணிவு, குருதேவரின் பயிற்சியை ஏற்கும் திறன் மற்றும் இறைச் சிந்தனையில் முனைப்புடன் வாழ்ந்த தன்மை ஆகியவற்றால் அவரைச் சுற்றியுள்ள நம் அனைவரையும் அவர் ஊக்கப்படுத்தினார். வாழ்க்கையின் அன்றாட சவால்கள் மற்றும் குருதேவர் தனது தோள்களில் வைத்த அதிகரித்து வரும் பொறுப்புகளுக்கு மத்தியில் கூட, அவர் இறைவனிடம் கொண்ட முழு விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பினால், உருவான ஒரு அக ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்.

“உன்னுடைய சித்தமே நிறைவேறட்டும், என்னுடையது அல்ல” என்பதே எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய குறிக்கோளாக இருந்தது. அவர் தனிப்பட்ட அங்கீகரிப்பை நாடவில்லை, ஏனென்றால் தன் குருவின் விசுவாசமான சீடராக மட்டுமே அவர் இருக்க விரும்பினார்; அவரது பல ஆண்டுகால தலைமையில், அவரது ஒவ்வொரு தீர்மானத்தின் அடிப்படையும், “குருதேவர் என்ன விரும்புவார்?” என்பதே. குருதேவரின் வழிகாட்டுதலை முழுமையாக உள்வாங்கி, அவரது இயல்பை– ஆற்றல் மற்றும் அளவற்ற கனிவு ஆகிய இரண்டையும் பெரிதும் பிரதிபலித்தார். அவரது இலட்சியங்களை அச்சமின்றி பின்பற்றும் அதே வேளையில், அனைவருக்கும் கருணையையும் புரிதலையும் அளித்தார். குருதேவர் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்குச் சற்று முன்பு, அவர் இல்லாமல் அவரது சீடர்கள் எப்படித் தொடர முடியும் என்ற கவலையை அவரிடம் வெளிப்படுத்தியபோது, “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகு, அன்பு மட்டுமே என் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும்” என்று அவர் பதிலளித்தார். குருதேவரின் அந்த வார்த்தைகள் அவர் இதயத்தில் எப்போதும் பொறிக்கப்பட்டு இருந்தன, அவர் அந்த அன்பாக தானே மாறும் வரை அவற்றையே தன் வாழ்வாக்கினார். இது குருதேவரின் மறைவுக்குப் பிறகு அவரது ஆன்மீக குடும்பத்தை வளர்த்தது மற்றும் எண்ணற்ற பக்தர்களுக்கு அவரது பாதுகாக்கும் இருப்பிற்கு உணர்வுபூர்வ உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

குருதேவரின் உலகளாவிய குடும்பத்தின் அன்னையாக, தயா மாதாஜி அனைவரின் மீதும் மிகவும் ஆழந்த அக்கறை காட்டினார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக குருதேவரின் பணிகளுக்கு சேவை செய்த போது நாங்கள் பகிர்ந்து கொண்ட தெய்வீகத் தோழமையை இறைவனின் மிகவும் மதிப்புமிக்கதான அருளாசிகளில் ஒன்றாக என் இதயத்தில் வைத்திருக்கிறேன், மேலும் குருதேவருடனான இணக்கத்தின் மூலம் அவர் வெளிப்படுத்திய ஞானத்தையும் அன்பையும் என் நினவில் போற்றுகிறேன். இறை பக்தியுடனும், அவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடனும் எப்பொழுதும் கனன்று கொண்டிருக்கும் அவர், அந்த உற்சாகத்தை மற்றவர்களிடம் எழுப்ப முயன்றார்; குருதேவர் அளித்த பயிற்சிகளை புது ஆர்வத்துடன் பின்பற்றுவதே நாம் தயா மாதாஜியை கெளரவிப்பதற்கான மிகச் சிறந்த வழி. உங்கள் முயற்சிகள் மற்றும் குருதேவரின் அருளாசிகள் மூலம், தயா மாதாஜியின் வாழ்க்கையில் ஊடுருவிய பேரின்பத்தையும் அனைத்தையும் நிறைவேற்றும் அன்பையும் நீங்களும் அறிந்து கொள்ள முடியும் என்பதை அவரது முன்மாதிரி உங்களுக்கு நினைவூட்டவும் ஊக்குவிக்கவும் பிரார்த்தனை செய்கிறேன். ஜெய் குரு, ஜெய் மா!

இறைவன் மற்றும் குருதேவரின் எல்லையற்ற அன்பில்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2014 ஸெல்ஃப்-ரியலைஸேஷன் ஃ பெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp