ஸ்ரீ தயா மாதாவின் புத்தாண்டுச் செய்தி: 2010

“நம் ஒவ்வொரு எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் பின்னால் இறைவனின் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது. அவனைத் தேடுங்கள், மற்றும் நீங்கள் முழுமையான வெற்றியை அடைவீர்கள்.

—பரமஹம்ஸ யோகானந்தர்

புத்தாண்டு - 2010

இந்தப் புதிய வருடத்தில் நாம் நுழையும்போது, குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் உலகெங்கிலும் உள்ள நமது ஆன்மீக குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறோம். கிறிஸ்துமஸின் போது நீங்கள் எங்களை நினைவு கொண்டதற்காகவும், ஆண்டு முழுவதும் மனத்தைத் தொடும் பல வழிகளில் எங்களுடன் தொடர்பு கொண்டதற்காகவும், எங்கள் இதயங்களிலிருந்து நன்றி கூறுகிறோம். தெய்வீக நட்பு என்பது இறைவனின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாகும், மேலும் உலகெங்கும் இருக்கும் அவனுடைய குழந்தைகளின் வாழ்வில் அதிக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, நமது ஒன்றிணைந்த பிரார்த்தனைகள் மூலம் அந்த நட்பை அனைவருக்கும் நீட்டிப்பதற்கு, எங்களுடன் இணைய உங்களை அழைக்கிறோம்.

புதிய தொடக்கங்களின் இந்தப் பருவம், நமது உன்னதமான கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அவற்றை அடைவதற்கான நமது திறனில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வதற்கும் ஒரு புதிய வாய்ப்பைக் கொண்டுவருகிறது. நம் வாழ்வில் நாம் செய்ய விரும்பும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை வலுவாக மனத்தில் உருவகப்படுத்தி அவை இந்த உலகில் உருப்பெருவதைக் காணும் நேரம் இது, ஏனென்றால் சிந்தனா சக்தியிலிருந்துதான் ஒவ்வொரு பயனுள்ள சாதனையும் பிறக்கிறது. நம் மனத்தில் நாம் உருவாக்கும் எண்ணப் படிவங்கள் நம் ஊழ்வினையை வடிவமைத்து நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. நம் இருப்பின் எல்லையற்ற பேராதாரத்துடன் ஒன்றிசைந்து, நம்மிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சிறந்ததை நாம் வெளிக்கொண்டுவர ஆக்கப்பூர்வமான, அன்பான, நம்பிக்கையைத் தூண்டும் எண்ணங்களை நாம் உணர்வுப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்போம்.

நமது நல்ல நோக்கங்கள் நிறைவேறுவதற்கு, வலுவான உறுதியும் இச்சா சக்தியின் தொடர்ச்சியான பயன்பாடும் தேவை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நாம் ஒரு விருப்பத்தேர்வை எதிர்கொள்கிறோம்: நம் எண்ணங்களையும் செயல்களையும் இறைவனோடு ஒன்றிணைப்பது அல்லது ஏமாற்றக்கூடிய மாயையின் சக்திகளுடன் ஒன்றிணைப்பது. மாயை பழக்கமான படிவங்களை மீண்டும் மீண்டும் செய்யவும், நமது அகந்தையின் வரம்புகளுடன் அடையாளப்படுத்தவும் தூண்டுகிறது. ஆனால் நீங்கள் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படியும் எல்லையற்ற ஆதாரங்களைக் கொண்ட ஓர் ஆன்மா என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு யதார்த்தமான, தகுதியான இலக்கைத் தேர்ந்தெடுத்து, ஆற்றல்வாய்ந்த உங்கள் இச்சா சக்தியால் உங்கள் முயற்சிகளை வலுப்படுத்தும் போது, நீங்கள் வெற்றி பெறுவதை எதுவும் தடுக்க முடியாது. அம்மாதிரியான தோற்கடிக்க முடியாத உறுதியை குருதேவர் வெளிப்படுத்தியுள்ளார். “முடியாது” என்ற வார்த்தைக்கு அவரது அகராதியிலோ அல்லது உணர்வுநிலையிலோ இடம் இருந்ததில்லை, மேலும் நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கான மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென உங்களையும் அவர் ஊக்குவிப்பார்.

சூழ்நிலைகள் அல்லது உங்கள் அகத்தே இருக்கும் தடைகள் உங்கள் மாற்றத்திற்கான முயற்சிகளைத் தடுத்தாலும் கூட, உங்களுக்கு எது உயர்ந்த நன்மை அளிக்குமோ அதைத் தேர்வு செய்ய உங்கள் ஆன்ம சுதந்திரத்தை உங்களால் பயன்படுத்த முடியும். நீங்கள் உங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை, ஏனென்றால் உங்கள் மனித இச்சாசக்திக்குப் பின்னால் இறைவனின் சர்வ வல்லமை பொருந்திய இச்சாசக்தி உள்ளது மற்றும் அவனுடைய அன்பு உங்களைப் பேணிக்காத்து வருகிறது. மனித பலவீனங்களைத் தாண்டி, உங்கள் ஆத்மாவின் எல்லையற்ற திறன்களைப் பார்க்கும் அவன் மீது உங்கள் நம்பிக்கையை வைத்து, குருதேவரின் வார்த்தைகளை மனதில் கொள்ளுங்கள்: “இறைவனால் எதையும் செய்ய முடியும், அதே போல் அவனது வற்றாத இயல்புடன் உங்களை அடையாளப் படுத்திக்கொள்ளக் கற்றுக்கொண்டால் உங்களாலும் செய்ய முடியும்.” எல்லா எண்ணங்களுக்கும், உணர்ச்சி வேகங்களுக்கும் அப்பாற்பட்ட சலனமற்ற நிலையில் அவனுடன் தொடர்பு கொள்வதற்கு நீங்கள் தினமும் நேரம் எடுத்துக் கொள்ளும்போது, உங்களைச் சூழ்ந்திருக்கும் அவனுடைய இருப்பை உணர்வீர்களாக மற்றும் அவன் சாசுவதமாகவும், அன்புடனும் என்றும் உங்களுக்கு உதவுகிறான் என்பதையும் அறிவீர்களாக.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இறைவனின் ஆசீர்வாதங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்,

ஸ்ரீ தயா மாதா

பதிப்புரிமை © 2009 செல்ஃப் ரியலைஸேஷன் பெல்லோஷிப். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதைப் பகிர