ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் இயக்குனர் குழுவிடமிருந்து சிறப்புச் செய்தி

நினைவேந்தல்: ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா (ஜனவரி 31, 1914 --- நவம்பர் 30, 2010)

சங்கமாதா மற்றும் தலைவரான நம் அன்புக்குரிய ஸ்ரீ தயா மாதா நவம்பர் 30, 2010 (இந்திய நேரப்படி டிசம்பர் 1, 2010) அன்று தமது பூத உடலைத் துறந்தார் என்பதை ஆழமான அன்புடனும் மரியாதையுடனும் தெரிவிக்கிறோம். அவரது வீற்றிருப்பால் பெரிதும் நெகிழ்ச்சியுற்றிருந்த எண்ணற்ற, ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும், அவர், குருநாதரது போதனைகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளின் மறு உருவாகவே தோற்றமளித்தார். அவரது நிபந்தனையற்ற அன்பு, குருநாதரது உலகளாவிய குடும்பத்தினர் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மிக நிச்சயமாக ஆசீர்வதித்து கொண்டே இருக்கும்.

ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் இயக்குனர் குழுமத்திடம் இருந்து ஒரு சிறப்பு செய்தி

Sri Daya Mata — Third spiritual head of YSS/SRF.டிசம்பர் 2, 2010

 

அன்புக்குரியவர்களே,

1, டிசம்பர் 2010 அன்று நமது அன்புக்குரிய தயா மாதா, சங்கமாதா மற்றும் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் அமைப்பின் தலைவர், அமைதியாக தமது ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்கினார். இறைவனது ஒளியாலும் அன்பாலும் பிரகாசித்த அவர்தம் வாழ்க்கை, அவனது அகன்ற, எங்கும் நிறைந்த பேரன்பில் கலந்தது. இத்தனை ஆண்டு காலம் தயா மாதா அவர்களை நம்முடன் இருக்கச் செய்து, தமது தாயன்பினாலும் கருணையினாலும் இவ்வுலகிற்கு அருளாசி வழங்கி, நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தடம்பதிக்க அனுமதித்தமைக்காக தெய்வீக அன்னைக்கு அத்துணை நன்றிகள் உரித்தாகுக. அவர் இன்றும் நம்முடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நம் உள்ளங்கள் விரும்புகின்றன. இருப்பினும், இவ்வுலகைக் கடந்த பிரதேசங்களில் அவருக்கு கிடைத்து வரும் தெய்வீக வரவேற்பின் பேரின்பத்தை நமது கவலையால் கெடுத்து விட மாட்டோம். அல்லது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் தமது தோள் மீது சுமத்திய பொறுப்புகளை தாம் அத்துணை உன்னதமாகவும் துணிச்சலோடும், முழு நிறைவோடும் நிறைவேற்றி இருப்பதை ஸ்ரீ தயா மாதாவின் ஆன்மா இப்போது புரிந்து கொள்ளும் என்பதை நாம் உணர்ந்து, மேலுலகில் அவர்களுக்கு கிடைக்கும் கற்பனைக்கு எட்டாத பேரின்பப் பெருக்கை, நமது மனபேதனையால் பழுதடையாமல் பார்த்துக்கொள்வோம்.

தொடக்க காலத்திலிருந்தே, ஒரு கூச்சம் மிகுந்த 17 வயது இளம் பெண்ணாக அவர் ஆசிரமத்தில் அடியெடுத்து வைத்தபோதே, தாம் முழுமையாக நம்பக்கூடிய ஒரு சிஷ்யை, மற்றெல்லாவற்றையும் விட, இறைவனையே நாடும் உண்மையான பக்தை, தன் பணிகளுக்கான “சேமிப்புக் கருவூலம்,” மற்றும் ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் எண்ணற்ற ஆன்மாக்களின் அன்புத் தாய், என்பதை குருஜி கண்டுகொண்டார். ஸ்ரீ தயா மாதாவின் இதயத்தினுடைய ஏற்கும் திறனால், அவரது வாழ்க்கை மொட்டு அவிழ குருநாதர் துணை புரிந்தார். குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு வேட்கையுடன், இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, வரும் காலங்களில் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் ஆன்மீக பலத்தை குருநாதர் அன்னைக்குப் புகட்டினார். இத்தனை ஆண்டுகாலமாக, அன்னை, குருதேவரின் பணிகளுக்கு கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டிலும் ஒரு பலமான அடித்தளம் அமைத்தார். குருவின் குறிக்கோள்களுடனும், குருவுடனும் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டு அவற்றை தொடர்ந்து வழிநடத்தினார். குருவின் அறிவார்ந்த சொற்களைப் பதிவு செய்து, அவரது புனிதமான போதனைகளைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறை பக்தர்களுக்கு தந்துள்ளார்.

நமது அன்புக்குரிய மாதாஜி, “இறைவனைத் தவிர வேறு எதுவும் தெரியாத அளவிற்கு அவனின் அன்பை அருந்தி உன்மத்தம் கொள், மற்றும் அந்த அன்பை அனைவருக்கும் வாரி வழங்கு” என்ற குருவின் வார்த்தைகளை அவர் முழுமையாக வாழ்ந்து காட்டியதன் மூலம், நமது இதயங்களை, குருநாதர் அவருடைய இதயத்தை தூண்டி விட்டதைப் போலவே, தெய்வீகத்துக்காக ஏங்கச் செய்தார். அந்தப் பேரின்ப உணர்வுநிலையில் மூழ்கி, இறைவனின் குழந்தைகள் அனைவருக்காகவும் அவர் கசிந்துருகினார். உலகெங்கிலும் உள்ள ஆன்மாக்கள் அன்னையின் மீது தமது ஆழமான உணர்ச்சிகளையும் பரிவையும் பொழிந்தார்கள். அன்னையும் தெய்வத் தாயின் மென்மையான அன்போடு அவர்களை தமது எண்ணங்களிலும் பிராத்தனைகளிலும் நினைவில் கொண்டார். அவரது விரிந்து பரந்த இதயத்தால், பலர், வாழ்க்கையில் முதன்முறையாக, நிபந்தனையற்ற அன்பை அனுபவித்து அறிந்தனர். அவர் தொண்டு செய்ய மட்டுமே விரும்பினார், மற்றும் தன்னைப் பற்றி அவர் ஒருபோதும் சிந்தித்தது இல்லை; “அந்த ஆன்மாவிற்கு என்னால் எவ்வாறு உதவ முடியும்?” என்பது மட்டுமே அவரது சிந்தனையாக இருந்தது.

அவரது இருப்பின் சாரம் அன்பு மட்டுமே. எனவே ஆன்மாக்கள் அவருடன் ஆழமாகத் தொடர்பு கொண்டன. அன்னையின் அருளாசி பெற்ற வாழ்க்கையைப் பரிசாக பெற்றதற்காக, இறைவனையும் குருநாதரையும் மரியாதை கலந்த நன்றியோடு வணங்குகிறோம். அவர் நம் ஒவ்வொருவருக்கும் அளித்தவற்றுக்காகவும், குருஜியின் பணிகளில் அவரது பங்களிப்பிற்காகவும், இவ்வுலகிற்கு அவர் அளித்த கொடைக்காகவும் அவரது ஆன்மா பயணிக்கும் பாதையில் நன்றி மலர்களை அகமுமகாகத் தூவி, பிரார்த்தனை செய்வதில் எங்களோடு இணைந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். அன்னை நமக்கு புகட்டிய துணிச்சல் மற்றும் தெய்வீக உற்சாகம் ஆகியவற்றுடன் முன்னேறிச் செல்வதன் மூலமும், அவற்றை பின்பற்றி தெய்வீக வாழ்க்கை வாழ்வோம் என்று உறுதிபூண்டு, இறைவன் மீது தன்னலமற்ற அன்பு செலுத்துவதன் மூலமும், ஒவ்வொருவரையும் இறைவனின் அங்கங்களாக கருதி, ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டுவதன் மூலமும், அவரது பாதக் கமலங்களில் மிக சிறப்பான அஞ்சலியைச் சமர்ப்பித்து, நம் அன்பிற்குரிய அன்னையை கெளரவிப்போம். என்றோ ஒருநாள் இறைவனின் எல்லையற்ற இன்பத்தில் மீண்டும் சந்திக்கும் வரை மிகவும் தூய்மையான அன்பின் கட்புலனாகாத பந்தங்களைக் கொண்டு, அவரை நமக்கு வெகு அருகாமையில், நம் இதயத்தில் வைத்துக்கொள்வோம்.

தெய்வீக நட்பில், உங்கள்

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் இயக்குனர் குழுமம் சார்பாக

நம் அன்புக்குரிய ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவை கௌரவிக்கும் வகையில் நினைவேந்தல் வழிபாடுகள் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரமங்கள், முக்கியமான தியான கேந்திரங்கள் மற்றும் தியான மையங்களில் டிசம்பர் 5, 2010 அல்லது டிசம்பர் 12, 2010 அன்று நடைபெறும்.

தகவல் அறிய உள்ளூர் ஆசிரமம், கேந்திரம் அல்லது மையங்களில் தொடர்பு கொள்ளுங்கள். எமது மையங்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் அஞ்சல் முகவரி ஆகியவை இங்கு எமது இணைய தளத்தில் கிடைக்கும்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp