யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சொல்லகராதி

தத்துவங்கள். பார்க்க பூதங்கள்.

மும்மை. பரம்பொருள்‌ படைப்பை வெளித்தோற்றுவிக்கும்போது, அது மும்மையாகிறது: பிதா, குமாரன்‌, பரிசுத்த ஆவி அல்லது ஸத்‌, தத், ஓம்‌. பிதா (ஸத்), படைப்பிற்கும்‌ அப்பாலுள்ள படைப்பவனாக இருக்கும்‌ இறைவன் (பேரண்ட உணர்வுநிலை). குமாரன்‌ (தத்) படைப்பிலுள்ள இறைவனின்‌ எங்கும்‌ நிறைந்த அறிவுத்திறன்‌ (கூடஸ்த சைதன்யம் அல்லது கிறிஸ்து உணர்வுநிலை ). பரிசுத்த ஆவி (ஓம்‌) புற உருவம்‌ கொடுக்கின்ற அல்லது படைப்பாகவே ஆகின்ற இறைவனின்‌ அதிர்வலை சக்தி.

சாசுவதத்தில்‌ பிரபஞ்ச படைப்பு மற்றும்‌ பிரளயத்தின்‌ அனேக சுழற்சிகள்‌ வந்து சென்றிருக்கின்றன. (பார்க்க யுகம்). பிரபஞ்ச பிரளய காலத்தில்‌ மும்மையும்‌, படைப்பின்‌ ஒன்றையொன்று சார்ந்துள்ள மற்ற அனைத்தும்‌ தனி முதல்‌ பரம்பொருளினுள்‌ ஒடுங்கிவிடுகின்றன.

உபநிடதங்கள். உபநிடதங்கள் அல்லது வேதாந்தம் (சொல்லின் நேர்ப்பொருள், “வேதங்களின்‌ அந்தம்‌”), நான்கு வேதங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் எழுகின்ற இந்து மதத்தின் கோட்பாடு சார்ந்த அடித்தளமாக அமையப்பெற்ற அடிப்படைத் தொகுப்புகள்.

வேதாந்தம்‌. “வேதங்களின்‌ அந்தம்‌” எனப்‌ பொருள்படும்‌; உபநிடதங்கள் அல்லது வேதங்களின்‌ பிற்பகுதியிலிருந்து எழும்‌ தத்துவம். இறைவன்‌ மட்டுமே ஒரே நிஜம்‌ என்றும்‌, அடிப்படையில்‌ படைப்பு ஒரு மாயையே என்றும்‌ பிரகடனம்‌ செய்யும்‌ வேதாந்தத்தின் முக்கிய வியாக்கியான விற்பன்னர்‌ சங்கரர்‌ (எட்டாவது அல்லது ஒன்பதாவது நூற்றாண்டின்‌ ஆரம்பம்‌) ஆவார்‌. இறைவனைக்‌ கருத்தில்‌ புரிந்து கொள்ளும்‌ வல்லமை படைத்த ஒரே உயிரினம் மனிதன்‌தான்‌; ஆதலால்‌ மனிதன்‌ தானே தெய்வீகமாக இருக்க வேண்டும்‌. ஆகவே அவனது கடமை தனது உண்மையான இயல்பை உணர்ந்து கொள்வதாகும்‌.

வேதங்கள்‌. ‌இந்துக்களுடைய நான்கு மறை நூல்கள்‌: ரிக்வேதம்‌, சாமவேதம்‌, யஜுர்‌ வேதம்‌ மற்றும்‌ அதர்வண வேதம்‌. இவை அடிப்படையில்‌ முக்கியமாக மனிதனுடைய வாழ்வு மற்றும்‌ செயற்பாடுகளின்‌ சகல கட்டங்களையும்‌ உயிரூட்டுவதற்கும்‌, ஆன்மீகமயமாக்குவதற்குமான‌ மந்திரங்கள்‌, சடங்குகள்‌ மற்றும் பாராயணப்‌ பகுதிகள்‌ அடங்கிய இலக்கியமாகும்‌. இந்தியாவின்‌ பெரும்பாலான நூல்களில்‌, அவற்றை இயற்றியவர்‌ எவரைப்‌ பற்றியும்‌ குறிப்பிடப்படாதவை, வேதங்கள்‌ (சமஸ்கிருத மூலம்‌ வித்‌, “அறிதல்‌”) மட்டுமே, ரிக்‌ வேதம்‌, துதிப்பாடல்களுக்கு ஒரு தெய்வீகப் பிறப்பிடத்தை அளித்து, அவை “புராதன காலங்களிலிருந்து,“ புதிய மொழியின்‌ வேடத்தில்‌ கீழே வந்துள்ளன என நமக்குக்‌ கூறுகிறது. யுகயுகங்களாக ரிஷிகளுக்கு, “தீர்க்கதரிசிகளுக்கு” தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்டு, நான்கு வேதங்களும்‌ நித்தியத்துவத்தை, “காலவரம்பற்ற முடிவு” பெற்றுள்ளனவாகக்‌ கூறப்படுகின்றன.

யோகம்‌. சமஸ்கிருத யுஜ்‌, “ஐக்கியமாதல்‌” இந்து தத்துவ சாத்திரத்தில் யோகம்‌ எனும் வார்த்தையின் மிக உயர்ந்த பொருள், விஞ்ஞான ரீதியான வழிமுறைகள் மூலமாக தனிப்பட்ட ஆன்மா, பரம்பொருளுடன்‌ ஐக்கியமாதல் என்பதாகும். இந்து தத்துவ சாத்திரத்தின் பரந்த பரிமாணத்தில் யோகம், ஆறு ஆசார முறைகளில் ஒன்றாகும்: வேதாந்தம்‌, மீமாம்சம்‌, ஸாங்கியம்‌, வைசேஷிகம்‌, நியாயம்‌ மற்றும்‌ யோகம்‌, அத்துடன்‌ பல வகையான யோக முறைகளும் உள்ளன: ஹதயோகம்‌, மந்திர யோகம்‌, லய யோகம்‌, கர்மயோகம்‌, ஞான யோகம்‌, பக்தியோகம்‌ மற்றும்‌ ராஜ யோகம்‌. ராஜயோகம்‌, “ராஜ” அல்லது முழுமையான யோகம்‌, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா/ ஸெல்‌ஃப்‌-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப்‌-பினால்‌ போதிக்கப்படுவதாகும்‌. மேலும்‌, பகவத்‌ கீதையில்‌ பகவான் கிருஷ்ணர் தனது சீடனாகிய அர்ஜுனனுக்கு அதைப்‌ பற்றி புகழ்ந்து கூறுகிறார்‌: “தேக-கட்டுப்பாட்டை நெறிப்படுத்தும்‌ தவசிகளைவிட யோகி மேலானவன்‌. ஞான மார்க்கத்தை அல்லது கர்ம மார்க்கத்தைப்‌ பின்பற்றுபவர்களையும்‌ விட மேலானவன்‌. ஆகையால்‌ ஓ அர்ஜுனா, நீ ஒரு யோகி ஆவாயாக!” (பகவத்‌ கீதை VI : 46). யோகத்தைப்‌ பற்றிய முதன்மையான விளக்கவுரையாளரான பதஞ்சலி முனிவர், ராஜயோகத்தின்‌ மூலம்‌ சமாதி அல்லது இறைவனுடனான ஐக்கியத்தை அடைகின்ற எட்டு திட்டவட்டமான வழிகளை வரையறுத்துள்ளார்‌. அவையாவன யமம், அறநெறி நடத்தை; நியமம் ‌, சமய அனுஷ்டானங்கள்‌; ஆசனம், சரியான அமர்வுநிலை; பிராணாயாமம், பிராணனை, அதாவது, சூட்சும உயிரோட்டங்களைக்‌ கட்டுப்படுத்துதல்; பிரத்யாஹாரம், புறப்பொருட்களிலிருந்து புலன்களை பின்னிழுத்தல்‌; தாரணை, ஒருமுகப்படுதல்‌; தியானம்‌; மற்றும்‌ சமாதி, உயர்‌ உணர்வுநிலை அனுபவம்; இறைவனுடனான ஐக்கியம்.

யோகி:  யோகத்தைப்‌ பயிற்சி செய்பவர்‌ இறை அனுபூதியைப்‌ பெறுவதற்கு விஞ்ஞான ரீதியான உத்தியை பயிற்சி செய்யும்‌ எவரும்‌ யோகி ஆவார்‌. அவர்‌ திருமணமானவராகவோ அல்லது திருமணமாகாதவராகவோ, உலகப்‌ பொறுப்புகள்‌ கொண்டவராகவோ அல்லது சம்பிரதாயமான மதரீதியான கட்டுப்பாடுள்ளவராகவோ இருக்கலாம்‌.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா. இந்தியாவில்‌ பரமஹம்ஸ யோகானந்தருடைய சொஸைடியால் அறியப்படுகின்ற பெயர்‌. இந்த சொஸைடி அவரால்‌ 1917-ல்‌ நிறுவப்பட்டது. இதன்‌ தலைமையகமான யோகதா மடம்‌, கொல்கத்தாவிற்கு அருகாமையிலுள்ள தக்ஷிணேஸ்வரத்தில்‌ கங்கைக்‌ கரையில்‌ அமைந்துள்ளது. யோகதா சத்சங்க சொஸைடிக்கு ஒரு கிளை மடம் ஜார்கண்ட்‌, ராஞ்சியில்‌ (முன்பு பீகார்) உள்ளது. அத்துடன் அனேக கிளை மையங்களும் உள்ளன. இந்தியா முழுவதும்‌ உள்ள தியான மையங்களுடன் ‌ கூட, ஆரம்பக்‌ கல்வியிலிருந்து கல்லூரி வரையான இருபத்தி இரண்டு கல்வி நிலையங்களும்‌ உள்ளன. பரமஹம்ஸ யோகானந்‌தரால்‌ உண்டாக்கப்பட்ட யோகதா என்ற சொல்‌, யோகா – விலிருந்து, “ஐக்கியம்‌, இணக்கம்‌, சமநிலை” என்பதையும்‌; மற்றும்‌ தா, “அளிப்பது” என்பதையும்‌ குறிக்கும்‌. சத்சங்கம்‌ என்பது சத், “மெய்ப்பொருள்” மற்றும் சங்கம், “தோழமை” ஆகும்‌. மேலைநாட்டவருக்காக இந்த இந்தியப்‌ பெயரை “ஸெல்‌ஃப்‌-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப்‌” என பரமஹம்ஸர்‌ மொழிபெயர்த்தார்‌.

யோகதா சத்சங்கப்‌ பாடங்கள்‌. உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வீட்டில்‌ கற்பதற்காக பாடத் தொடராக அனுப்பப்படும் பரமஹம்ஸ யோகானந்தரின்‌ போதனைகள்‌, சத்தியத்தை உண்மையாக நாடும் அனைவருக்கும் கிடைக்கப்பெறும். இந்தப்‌ பாடங்கள்‌, பரமஹம்ஸ யோகானந்தர்‌ கற்பித்த தியான உத்திகளை, ‌ கிரியா யோகத்திற்கு தகுதியானவர்களுக்கும் சேர்த்து, உள்ளடக்கியுள்ளன.

யோகதா சத்சங்க சஞ்சிகை. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா-வினால் ‌ வெளியிடப்படும் காலாண்டு சஞ்சிகை.‌ இதில்‌ பரமஹம்ஸ யோகானந்தருடைய சொற்பொழிவுகளும்‌, நூல்களும்‌ மற்றும்‌ இதர ஆன்மீக ரீதியான, நடைமுறைக்கேற்ற, நிகழ்கால கருத்துகள் மற்றும் நீடித்த மதிப்புள்ளவற்றைப் பற்றிய தகவலளிக்கும் கட்டுரைகளும் முக்கிய அம்சமாகும்.

யோகதா சத்சங்க சன்னியாச மரபு. தியானம் மற்றும் கடமையார்ந்த செயல்பாடுகளைக் கொண்ட யோகக் குறிக்கோள்களின் வாயிலாக இறைவனைத் தேடுவதற்கும் அவனுக்கு சேவை புரிவதற்குமான ஒரு வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டதை உணர்ந்தவர்களுக்காக ஆதி சங்கராச்சாரியரால் நிறுவப்பட்ட புராதன சுவாமி மரபுவழியின் ஒரு பகுதி. இம்மரபின் சன்னியாசிகள் சொஸைடியின் ஆசிரம மையங்களில் வசித்து, உலகம் முழுவதும் உள்ள பரமஹம்ஸ யோகானந்தருடைய பணியை அனேக பொறுப்புகளில் ஆற்றுகிறார்கள். அவற்றுள் ஏகாந்தவாசப் பயிற்சிகள், வகுப்புகள், பிற ஆன்மீக மற்றும் தொண்டாற்றும் நிகழ்ச்சிகளை நடத்துதல்; இப்போதனையை ஏற்றுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆன்மீக ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்குதல்; சொஸைடியின் பல்வேறு அறச் செயல்களை நிர்வகித்தல் போன்றவை அடங்கும். வெவ்வேறு பின்னணிகளையும் வயதையும் உடைய சன்னியாசிகள், தேசத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருகின்றனர்.

யுகம். புராதன இந்து நூல்களில்‌ விவரிக்கப்பட்டுள்ள படைப்பின்‌ ஒரு கால சக்கரம்‌ அல்லது உபகாலப்பிரிவு. தனது ஹோலி சயின்ஸ் என்ற நூலில் ஸ்ரீ யுக்தேஸ்வர்‌, 24,000 ஆண்டுகால‌ பூமத்திய ரேகை‌ சுழற்சியையும்‌ அதில்‌ மனித இனத்தின்‌ தற்போதைய இடத்தையும்‌ விவரித்துள்ளார்‌. இக்காலச்‌ சுழற்சி, தொல்கால ரிஷிகளால்‌ புராதன நூல்களில்‌ கணக்கிடப்பட்டுள்ளவாறு, மிக நீண்ட கால பிரபஞ்ச சுழற்சிக்குள்‌ நிகழ்கின்றது.இது  ஒரு யோகியின்‌ சுயசரிதம், அத்தியாயம்‌ 16-ல்‌ குறிப்பிடப்பட்டுள்ளது;

இதைப் பகிர

Facebook
X
WhatsApp