குரு பூர்ணிமா – 2013

இந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி வரும் குரு பூர்ணிமாவிற்காக நமது மதிப்பிற்குரிய சங்கமாதா ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவிடம் இருந்து ஒரு சிறப்பு செய்தி

அன்புக்குரியவர்களே,

ஜூலை 22, 2013

பல யுகங்களாக, இந்தியாவில் உள்ள பக்தர்கள் குருவிற்கு — தன்னிடம் திரும்ப அழைத்துக் கொள்ள உண்மையாக நாடும் ஆன்மாக்களிடம் இறைவன் அனுப்பும் இறைத் தூதர்– அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புனிதமான குரு பூர்ணிமா நாளில், நமது அன்புக்குரிய குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு நமது இதயப்பூர்வமான நன்றியை சமர்பிப்பதன் மூலம், நாம் அந்த மரபில் இணையும் அதே சமயம், மனித உணர்வு நிலையிலிருந்து இறை உணர்வுநிலைக்கு நம்மை உயர்த்தக்கூடிய ஒருவரிடம் ஈர்க்கப்படுவது எனும் அந்த விலைமதிப்பற்ற பரிசைப் பற்றி புதிதாக ஆழ்ந்து சிந்திக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆன்ம-அனுபூதிக்கான தேடலில், நமது வரையறுக்கப்பட்ட, புலன்களால்-
கட்டுப்படுத்தப்பட்ட மனம் இந்த உலகின் பன்முகத்தன்மையாலும் நமது கண்ணோட்டங்களின் மீதான மாயையின் தாக்கத்தாலும் பல்வேறு திசைகளில் இழுக்கப்படுகிறது. ஆனால் ஒரு உண்மையான குருவின் உதவியால் பாதை நேராகவும் தெளிவாகவும் ஆகிறது; நமது இறுதி வெற்றி நிச்சயம்.

குருதேவர் நம்மிடம் கூறியுள்ளார், “குரு சொல்வதைக் கேட்பது சீடரை உச்ச இலக்குக்கு அழைத்துச் செல்லும் ஒரு கலையாகும்.” அவரது எங்கும் நிறைந்துள்ள அன்பினாலும் ஞானத்தினாலும், தன்னைச் சரணடையும் ஒவ்வோர் ஆன்மாவையும் அவர் தொடர்பு கொள்கிறார்; நம்முடைய பங்கு, அவருடைய வழிகாட்டுதலையும் அருளையும் முழுமையாகப் பெறும் வகையில், எப்போதும் ஓர் ஆழமாக கேட்டுணரும் திறனை வளர்த்துக் கொள்வதாகும். நம் கவனம் குறைந்து இருந்தால், அன்றாட வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு நடுவில் அவரது வார்த்தைகளில் இருந்து பெறப்பட்ட உத்வேகம் எளிதில் மங்கிவிடும். இருப்பினும், ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் அவரது முன்னிலையில் நாம் இருந்து, அவர் வழங்கியவற்றில் ஒரேயொரு முக்திக்கான மெய்க்கருத்தை அகமுகமாக கிரகித்துக் கொண்டால் கூட, அது ஒரு உந்து சக்தியாக, குருவின் உதவிக்கான கருவியாக மாறுகிறது. நமது மனிதப் பகுத்தறிவு, அவரைப் பின்பற்றுவதற்கான நமது முயற்சிகளில் ஒரு முக்கிய கருவியாக இருந்தாலும் கூட, அதுவும் நம் அகந்தையின் பாரபட்சத்திற்கு–அவருடைய வழிகாட்டும் குரலைக் கேட்கும் நம் திறனைப் பாதிக்கும் அதன் விருப்பத்தேர்வுகள் மற்றும் பாதிப்புகள்– உட்பட்டது. சில சமயங்களில் மனம் நம் ஆசைகளை குருவின் விருப்பம் என்று நியாயப்படுத்துகிறது, அல்லது கடினமாக இருப்பதை “சிறிய நான்” எதிர்க்கிறது. நாம் திறந்த மனம், ஒரு நம்பிக்கையுள்ள இதயம் ஆகிய இரண்டுடனும் கவனித்தால் ஆழ்ந்த அளவிலான இசைவித்தலும் புரிதலும் வரும். நம்முடைய உயர்ந்த நன்மையை மட்டுமே விரும்புகிறார் என்பதை உணர்ந்தவாறு, இறைவனின் அருள் மற்றும் குருவின் அன்பின் ஈர்ப்பிற்கு நாம் மறுமொழியளிக்கும் போது, அகந்தையின் பாதுகாப்பு ஓடு உருகத் தொடங்குகிறது. அவனுடைய நிலைமாற்றும் ஸ்பரிசத்திற்கு அதிக ஒத்திசைவுடன், நாம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றிற்கு அதிக ஏற்கும் பண்புடன், இருப்பவராக நாம் ஆகிறோம். பணிவுடனும் பக்தியுடனும் அவரிடம் முழுமையாக சரணடைவதன் மூலம், நம் ஆன்ம மலர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான குருவின் சக்தி தடையின்றி செயல்பட நாம் அனுமதிக்கிறோம். சவாலான சூழ்நிலைகள் நம்மை எதிர்த்து நிற்கும் போது கூட, நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்யும் புனிதப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாக நம்மால் அவற்றை முன்னிலும் மேலாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.

குருதேவர் தான் கற்பித்த புனித தியான உத்திகளின் வாயிலாக–நம் ஆன்மாவினால் அவர் சொல்வதைக் கேட்பதன் மூலம்–அவருடன் தொடர்பு கொள்வதற்கான மிகவும் நேரடியான வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளார். அமைதியற்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் அடங்கும்போது அகந்தை செயல்படுவதை நிறுத்துகிறது, மற்றும் குருதேவரின் முன்னிலையை உணர நமது ஆன்மாவின் உள்ளுணர்வு விழித்தெழுகிறது. அவரது எல்லையற்ற உணர்வுநிலையை நாம் தொடும்போது நமது ஏற்புத்தன்மை உயர்கிறது. அவரது எண்ணங்களை வார்த்தைகள் எனும் ஊடகத்தை மீறிய ஒரு தெளிவுடன் நாம் புரிந்துகொள்கிறோம். உங்களது முழு இருப்போடு நீங்கள் அவர் சொல்வதைக் கேட்டு, விசுவாசத்துடன் அவரைப் பின்பற்றினால், உங்கள் ஆன்மாவின் பேரன்புக்குரிய தெய்வீகத்துடன் நீங்கள் ஐக்கியப்படும் வரை ஒவ்வொரு தடையையும் கடக்க அவர் உங்களுக்கு உதவுவார். ஜெய் குரு!

இறைவன் மற்றும் குருதேவரின் அன்பில் மற்றும் இடைவிடாத அருளாசிகளில்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

இதைப் பகிர

Facebook
X
WhatsApp