குரு பூர்ணிமா வேண்டுகோள் — 2025

4 ஜூலை, 2025

குருதேவரின் இந்த வார்த்தைகளில் எவ்வளவு பெரிய உறுதிப்பாடு உள்ளது: ‘நான் உடலை விட்டு நீங்கும்போது முன்பை விட அருகாமையில் இருப்பேன்.’ உங்கள் வாழ்வில் மிகவும் கடினமான அல்லது சவாலான நேரங்களில்கூட, குரு அங்கு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா துன்பங்களையும் தீர்க்கவோ அல்லது தாங்கிக்கொள்ளவோ உதவும் உயர் உணர்வுநிலைக்கு உங்களை உயர்த்துவதற்காக அவர் இரு கரங்களையும் நீட்டுகிறார்.

— ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா, YSS/SRF-இன் மூன்றாவது தலைவர் மற்றும் சங்கமாதா

குரு பூர்ணிமா தினத்தன்று சிறப்பு காணிக்கை செலுத்துங்கள்

நம் அன்பிற்குரிய குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், ஒரு உண்மையான குரு, தனது தெய்வீகப் பார்வை மூலம் அனைவரிலும் இறைவனைக் காண்கிறார், மேலும் மற்றவர்களை உயர்த்துவதற்கு மகிழ்ச்சியுடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார், என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். குரு பூர்ணிமா என்பது இறையன்பு மற்றும் இறைப் பேரொளியின் தெய்வீக அவதாரங்களான நமது குருமார்களை நாம் போற்றும் புனித தினமாகும்.

அவரது சீடர்களாகிய நமக்கு, இந்த நிகழ்வு வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. ஆழ்ந்த நன்றியுடன் அவரை மனதார வணங்குவதற்கும், மேலும் அவரது தெய்வீகப் பணிக்குச் சேவை செய்வதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான தருணம். நமது குருவிடமிருந்து நாம் பெற்ற அருளாசிகளைப் பற்றி மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு அவரது ஒளி மற்றும் கருணையின் கருவிகளாக நாம் எவ்வாறு மாற முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

குருதேவரின் பணிக்கு அன்புடன் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு

இந்த புனித தருணத்தில், நமது அன்பிற்குரிய குருதேவரைச் சுற்றி நமது எண்ணங்களையும் இதயங்களையும் ஒன்றுசேர்க்கும்போது, பல பக்தர்கள் தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளத் தூண்டப்படுகிறார்கள்: “அர்த்தமுள்ளதான ஒன்றை நான் எவ்வாறு அவருக்கு திருப்பித் தர முடியும்?”

இந்த குரு பூர்ணிமா அன்று, YSS வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத எங்களோடு இணைந்து பணியாற்றுமாறு உங்களை அழைக்கிறோம் — உண்மை நாடும் ஆன்மாக்கள் அனைவருக்காகவும், சாந்தமும் அமைதியும் நிலவும் ஒரு சரணாலயமாக மாறும் முதல் YSS ஆசிரமத்தை தென்னிந்தியாவில், சென்னையில் உருவாக்குதல்.

இந்த ஆன்மீக வளாகத்திற்கான அடித்தளப் பணி மற்றும் முதல் கட்ட கட்டுமானம் ₹ 65 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது — இது நாடு முழுவதும் பரவியுள்ள குருதேவரின் பெரிய ஆன்மீக குடும்பத்தின் கூட்டு பக்தி மற்றும் அன்பான ஆதரவைச் சார்ந்து மேற்கொள்ளப்படும் ஒரு புனிதமான பணி.

குருதேவரின் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை

பரமஹம்ஸ யோகானந்தர், YSS/SRF-இன் தாக்கம் “ஒரு மென்மையான தென்றலாகத் தொடங்கி, படிப்படியாக வலிமையும் ஆற்றலும் அதிகரித்து, ஒரு வலிமையான காற்றைப் போல, இறைவனின் குழந்தைகளின் வாழ்க்கையை சூழ்ந்திருக்கும் இருளையும் அசுத்தங்களையும் அகற்ற உதவும்” என்று முன்னறிவித்தார். அவரது அருளாசிகள் ராஞ்சி, தக்ஷிணேஸ்வர், துவாரஹாத் மற்றும் நொய்டாவில் உள்ள ஆசிரமங்கள் மூலம் YSS இன் வளர்ச்சிக்கு அமைதியாக ஊட்டமளித்துள்ளன. இருப்பினும், நீண்ட காலமாக, இந்தியாவின் பரந்த தெற்குப் பகுதியில் ஒரு பிரத்யேக ஆசிரமம் இருந்ததில்லை.

இப்போது, அந்த நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஓர் ஏகாந்தவாச மையம் என்பதிலிருந்து ஓர் ஆசிரமமாக

மூன்று பக்கமும் பாதுகாக்கப்பட்ட காடுகளாலும், நான்காவது பக்கம் அமைதியான ஏரியாலும் சூழப்பட்ட யோகதா சத்சங்க சென்னை ஏகாந்த வாச மையம் — சென்னைக்கு 40 கி.மீ தொலைவில், தமிழ்நாடு, ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள மண்ணூரில், 17 ஏக்கர் பரப்பளவுள்ள அமைதியான பசுமைப் பகுதியினுள் அமைந்துள்ளது — இது ஆன்மீகப் புதுப்பித்தலுக்கான ஒரு புனித இடமாக 2010 இல் திறந்து வைக்கப்பட்டது.

2022 இல் யோகதா சத்சங்க பாடங்களின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டதன் மூலம், இப்பகுதியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான உண்மை நாடும் ஆன்மாக்கள் பரமஹம்ஸரின் முக்தியளிக்கும் கிரியா யோக போதனைகளுக்கு ஈர்க்கப்பட்டனர்.

இந்த வளர்ந்து வரும் ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக, 2024 இல், ஆன்மீக நிகழ்ச்சிகளை வழிநடத்தவும் படிப்படியாக விரிவுபடுத்தவும் உதவும் வகையில், தங்கியிருந்து சேவை செய்யும் சன்னியாசி சமூகம், ஏகாந்த வாச மையத்தில் நிறுவப்பட்டது. விரைவில், ஏகாந்த வாச மையம் நாடு முழுவதிலுமிருந்து, குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களிலிருந்தும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்தும் பக்தர்களை ஈர்க்கத் தொடங்கியது, ஆன்மீக செயல்பாடுகளின் துடிப்பான மையமாக மாறியது.

வார இறுதி ஏகாந்தவாச நிகழ்வுகள், சாதனா சங்கங்கள் மற்றும் இங்கு நடைபெறும் சொற்பொழிவுகள் மிகவும் பாராட்டப்பட்டன, ஏனெனில் அதிகமான பக்தர்கள் தங்கள் பயிற்சியையும் இறைவன் மற்றும் குருதேவருடனான தொடர்பையும் ஆழப்படுத்த ஏகாந்தவாச மையத்தின் அமைதியான சூழலை நாடினர். இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு சிறந்த ஆன்மீக உதவியை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நமது வணக்கத்திற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான, ஸ்வாமி சிதானந்த கிரி, இதை யோகதா சத்சங்க கிளை ஆசிரமமாக 2024, செப்டம்பர் 15 அன்று முறையாக அறிவித்தார் – இது இந்தியாவின் ஐந்தாவது YSS ஆசிரமமாக நிறுவப்பட்டது.

அமைதியான தோட்டத்தில் தியானம் செய்யும் பக்தர்கள்
ஸ்வாமி பவித்ரானந்தா ஒரு சாதனா சங்கத்தின் போது உரை நிகழ்த்துகிறார்

இந்த அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஆசிரமம் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது: 

  • தினசரி கூட்டுத் தியானங்கள், ஞாயிறு சத்சங்கங்கள் மற்றும் நினைவு கூரும் நிகழ்ச்சிகள் 
  • தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சாதனா சங்கங்கள் மற்றும் ஏகாந்தவாச நிகழ்ச்சிகள். மலையாளத்திலும் ஏகாந்தவாச நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன  
  • குழந்தைகள் சத்சங்கங்கள், இளையோர் நிகழ்ச்சிகள் மற்றும் தன்னார்வலர் ஏகாந்த வாச நிகழ்வுகள் 
  • சன்னியாசிகளின் ஆலோசனை மற்றும் அருகிலுள்ள மையங்களுக்கு வருகை 
  • சுற்றுப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவும் அறப்பணி சார்ந்த சேவைகள் 
2024 குரு பூர்ணிமா பிரபாத் ஃபெரியின் போது ஸ்வாமி சுத்தானந்தா மற்றும் பிரம்மச்சாரி நிரஞ்சனானந்தா குருதேவரின் படத்தை பல்லக்கில் ஏந்திச் செல்கின்றனர்
YSS சன்னியாசிகள் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக யோகதா சத்சங்க அறப்பணி மருத்துவமனையை தொடங்கி வைக்கின்றனர்

பக்தர்கள் தங்கள் இதயபூர்வ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்:

சென்னை ஆசிரமத்திற்கான ஒரு தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்குதல்: மாஸ்டர் பிளான்

புதிதாக நிறுவப்பட்ட ஆசிரமத்தில் நிகழ்ச்சிகளின் அதிகரிப்பால், ஆரம்பகால உள்கட்டமைப்பின் சில குறைபாடுகள் தெரியவந்தன. ஆரம்பக் கட்டுமானம் எளிமையானதாக இருந்ததால், பக்தர்களுக்கும், சேவகர்களுக்கும், சன்னியாசிகளுக்கும் குறைந்த அளவிலான தங்கும் இடமும் வசதிகளும் மட்டுமே இருந்தன. தற்போது நடைபெற்று வரும் செயல்பாடுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள ஏகாந்த வாசக் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்யவும், எதிர்காலத்திற்கான திட்டமிடலுக்கும், நகர திட்டமிடுபவர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோசித்து ஒரு விரிவான மாஸ்டர் பிளான் முன்யோசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

தனது சமீபத்திய இந்தியா மற்றும் நேபாள பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்வாமி சிதானந்தஜி 2025 பிப்ரவரியில் முதல் முறையாக YSS சென்னை ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார். அவரது வருகையின் போது, ஆசிரம வளாகத்தை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் திட்டமிடப்பட்டுள்ள மாஸ்டர் பிளான்-இன் கண்ணோட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

தள வரைபடம் – ஒரு கட்டடக் கலை வடிவமைப்பு படம்

ஸ்வாமிஜியின் ஆசிகளுடன், அமைதி, ஏகாந்தம் மற்றும் நிலைத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு விரிவான ஆன்மீக வளாகத்தை உருவாக்க இரு-கட்ட கட்டுமானத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர், நாம் சில அடித்தளப் பணிகளைச் செய்ய வேண்டும், இது சில ஆரம்ப செலவுகளை ஏற்படுத்தும்.

அடித்தளப் பணிகள் (₹10 கோடி)

  1. மண் நிரப்புதல் மூலம் நிலத்தைச் சமப்படுத்துதல், குறிப்பாக தாழ்வான வடகிழக்குப் பகுதியில்.
  2. வளாகத்தைச் சுற்றிலும் ஒரு கான்கிரீட் சாலையையும், ஆசிரம மைதானத்தின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கும் பல நடைபாதைகளையும் உருவாக்குதல்.
  3. சுற்றுப்புறச் சாலையை ஒட்டி மின் மற்றும் நெட்வொர்க் கேபிள்களை அமைக்க மழைநீர் வடிகால்கள் மற்றும் அகழிகளை அமைத்தல்.
வடகிழக்குப் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள மண் நிரப்புதல் மற்றும் கான்கிரீட் சுற்றுப்புறச் சாலை
YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர் ஸ்வாமி சிதானந்த கிரி, YSS சென்னை ஆசிரமத்தில் தள கட்டடக் கலைஞருடன்
கட்டம் I: தியான மண்டபம், தங்குமிடம் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள் (₹55 கோடி)
  • தியான மண்டபம் (1,200 பேர் அமரக்கூடியது)
  • பக்தர்களுக்கான தங்கும் கட்டடம் (100 பேர் தங்கும் வசதி)
  • சன்னியாசிகளுக்கான குடியிருப்புகள் (25 சன்னியாசிகளுக்கு)
  • சமையலறை மற்றும் உணவருந்தும் அறை (200 பேர் அமரக்கூடியது)
  • குழந்தைகள் சத்சங்கம் நடத்துவதற்கான வசதிகள்
  • நிர்வாகக் கட்டடம்
  • YSS வெளியீடுகளுக்கான கிடங்கு
  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
  • நிலத்தோற்ற வடிவமைப்பு
தியான மண்டபத்தின் கட்டடக் கலை வடிவமைப்புப் படங்கள் — முன்பக்கத் தோற்றங்கள்
தியான மண்டபத்தின் கட்டடக் கலை வடிவமைப்புப் படங்கள் — பக்கவாட்டு தோற்றங்கள்
பக்தர்களுக்கான தங்குமிட கட்டடத்தின் கட்டடக் கலை வடிவமைப்பு படம் – முன் பக்கத் தோற்றம்
கீழ் தளத்தில் சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், முதல் தளத்தில் குழந்தைகள் சத்சங்கம் நடத்துவதற்கான வசதிகள் மற்றும் பல்நோக்கு மண்டபம் கொண்ட கட்டடத்தின் கட்டடக் கலை வடிவமைப்புப் படம்

கட்டம் II: பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நிலையான உள்கட்டமைப்பு விரிவாக்கம் (₹45 கோடி)

  • சத்சங்கா மண்டபம் 
  • கூடுதல் பக்தர்களுக்கான தங்குமிட கட்டடங்கள் (200 பேர் தங்கும் வசதி) 
  • சேவகர்களுக்கான குடியிருப்பு வசதிகள் 
  • பயன்பாடுகள் மற்றும் சலவைப் பகுதி 
  • ஸோலார் பேனல்கள், நீர் தேக்கத் தொட்டி 

மாஸ்டர் பிளானை உருவாக்கும் போது, ​​முடிந்தவரை அசல் பசுமைப் போர்வையை – குறிப்பாக மா மற்றும் தென்னை மரங்களை – பாதுகாக்க நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். ஒவ்வொரு கட்டடமும் செயல்பாடு மற்றும் அழகியலின் இணக்கமான கலவையைப் பிரதிபலிக்கும் வகையில் முன்யோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் ஆயிரக்கணக்கான உண்மை நாடும் ஆன்மாக்களுக்கு — இளையவர்கள் மற்றும் முதியவர்கள், தொலைவில் இருந்தும் அருகிலிருந்தும் வருபவர்கள் — வரும் தலைமுறைகளுக்கு சேவை செய்யும்.

திட்ட கால அட்டவணை:

சென்னை ஆசிரமத் திட்டத்திற்கான மேம்பாட்டு அட்டவணையின் தெளிவான நிலையை வழங்க, பின்வரும் காலவரிசை முக்கிய கட்டங்களை கோடிட்டுக் காட்டுகிறது:

கட்டம்தொடங்குவதுஎதிர்பார்க்கப்படும் கால அளவு
அடித்தளப் பணிகள்ஜூன் 2025*6 மாதங்கள்
கட்டம் Iஜனவரி 20263 ஆண்டுகள்

*குறிப்பு: அடித்தளப் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன. 

நாம் ஒன்றிணைந்து இதை உருவாக்குவோம்

அடித்தளப் பணிகள் மற்றும் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மொத்த நிதித் தேவை ₹65 கோடி ரூபாய் ஆகும். இந்த தெய்வீக தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்திட உங்கள் ஆதரவை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

இந்த புனிதமான பணி, நம் ஒவ்வொருவரிடமும் உள்ள குரு-சேவையின் தன்னலமற்ற உணர்வை எழுப்புகிறது. ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு காணிக்கையும் — எவ்வளவு தொகையாக இருந்தாலும் — உண்மை நாடும் ஆன்மாக்களுக்காக கட்டப்பட்டு வரும் இந்த ஒளி ஆலயத்தில் ஒரு செங்கல்லாக மாறுகிறது.

நீங்கள் தியான மண்டபத்திற்கு நன்கொடை அளிக்க ஈர்க்கப்பட்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட வசதிக்கு ஆதரவளித்தாலும் சரி, அல்லது ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வைக்காக மாதந்தோறும் நன்கொடை அளித்தாலும் சரி — உங்கள் தாராள மனப்பான்மை பரமஹம்ஸரின் போதனைகளை வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோரிடம் கொண்டு செல்லும், மற்றும் அவரது தெய்வீக அருளாசிகளைப் பெறும்.

குருதேவர் கூறினார்: “இறைவன் பக்தர்களின் தன்னலமற்ற சேவையைத் திருப்பிச் செலுத்துகிறான்; இயற்கை முழுவதிலும் அதிர்வுறும் அவனது மௌன ஆணை, அவர்களின் ஒவ்வொரு தேவையையும் மர்மமான வழிகளில் நிறைவேற்றுகிறது.”

உங்கள் ஆதரவை எவ்வாறு வழங்குவது

இந்த புனிதப் பணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், பின்வரும் வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:

இந்த ஆசிரமத் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உதவ அல்லது பெரிய அளவில் நன்கொடை அளிக்க நீங்கள் உத்வேகம் பெற்றால், உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். YSS உதவி மையத்தை (0651-6655 555, திங்கள்–சனி: காலை 9:30 முதல் மாலை 4:30 வரை) தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

எங்கள் மனமார்ந்த நன்றி

உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும், மேலும் குருதேவரின் பணிகளுக்கு நீங்கள் சேவை செய்யும் பல வழிகளுக்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றி கூறுகிறோம். உங்கள் ஆதரவுடன், யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், சென்னை, நிச்சயமாக குருதேவரின் ஒளி, அன்பு மற்றும் ஞானத்தை வரும் அனைவருக்கும் பரப்பும் ஒரு ஆன்மீகப் புகலிடமாக மலரும்.

நம் அன்பிற்குரிய குருதேவரின் அருளாசிகளும், மகா குருமார்களின் அருளாசிகளும் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.

தெய்வீகத் தோழமையில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

இதைப் பகிர