லாஹிரி மகாசயர்

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் பெரிய யோகி குருலஹிரி மகாசயர்

லாஹிரி மகாசயர் செப்டம்பர் 30, 1828 அன்று இந்தியாவின் வங்காளத்தில் உள்ள குர்னி கிராமத்தில் பிறந்தார். தனது முப்பத்து மூன்றாவது வயதில், ராணிகேத் அருகே இமயமலை அடிவாரத்தில் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தபோது, அவர் தனது குரு மஹாவதார் பாபாஜியைச் சந்தித்தார். கடந்த காலங்களில் பல வாழ்க்கைகளில் ஒன்றாக இருந்த இருவரின் தெய்வீக மறுசந்திப்பு அது; ஒரு விழித்தெழச் செய்யும் ஆசீர்வாத ஸ்பரிசத்தில், லாஹிரி மகாசயர் ஒரு தெய்வீக அனுபூதியின் ஆன்மீக ஒளிவட்டத்தில் மூழ்கினார்; அதன்பின் அந்த ஒளிவட்டம் ஒருபோதும் அவரை விட்டுச் செல்லவில்லை.

மஹாவதார் பாபாஜி அவரை கிரியா யோக விஞ்ஞானத்தில் தீட்சை அளித்து, புனிதமான உத்தியை அனைத்து நேர்மையான சாதகர்களுக்கும் வழங்குமாறு அறிவுறுத்தினார். இந்தப் பணியை நிறைவேற்ற லாஹிரி மகாசயர் பனாரஸ் நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார். தொலைக்கப்பட்ட பண்டைய கிரியா அறிவியலை தற்காலத்தில் முதன் முதலில் கற்பித்தவர் என்ற முறையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நவீன இந்தியாவில் தொடங்கி இன்று வரை தொடரும் யோகத்தின் மறுமலர்ச்சியில் அவர் ஒரு முன்னோடியான நபராக புகழ்பெற்றுள்ளார்.

பரமஹம்ஸ யோகனந்தர் “ஒரு யோகியின் சுயசரிதம்” -ல் எழுதியுள்ளார்: “மலர்களின் நறுமணத்தை அடைத்து வைக்க முடியாது

என்பது போல, லாஹிரி மகாசயர், ஒரு சிறந்த இல்லறத்தானாக அமைதியாக வாழ்ந்தும், அவரது உள்ளார்ந்த மகிமையை மறைக்க முடியவில்லை. பக்த-தேனீக்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் முக்தியடைந்த குருநாதரின் தெய்வீகத் தேனை நாடத் தொடங்கினர்… . தலைசிறந்த சம்சார-குருவின் ஒத்திசைவாக சமச்சீராக்கப்பட்ட வாழ்க்கை ஆயிரக்கணக்கான ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் உத்வேகமாக மாறியது.”

லாஹிரி மகாசயர் யோகத்தின், இறைவனுடன் சிறிய சுயம் ஐக்கியமாவதின், மிக உயர்ந்த இலட்சியங்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்ததால், அவர் ஒரு யோகாவதார் அல்லது யோகத்தின் அவதாரம் என்று போற்றப்படுகிறார்.

பரமஹம்ஸ யோகனந்தரின் பெற்றோர் லாஹிரி மகாசயரின் சீடர்களாக இருந்தனர், அவர் ஒரு குழந்தையாக இருந்தபோது அவரது தாயார் அவரை தனது குருவின் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். குழந்தையை ஆசீர்வதித்த லாஹிரி மகாசயர், “அன்புத் தாயே, உங்கள் மகன் ஒரு யோகியாவான். ஆன்மீக இயந்திரமாக, அவன் பல ஆத்மாக்களை இறைவனுடைய இராஜ்ஜியத்திற்கு கொண்டு செல்வான்.”

லாஹிரி மகாசயர் தனது வாழ்நாளில் எந்த அமைப்பையும் நிறுவவில்லை, ஆனால் இந்த முன்னறிவிப்பைச் செய்தார்: “நான் சென்றுவிட்ட சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்கில் எழும் யோகாவின் ஆழ்ந்த ஆர்வத்தின் காரணமாக என் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதப்படும். யோகத்தின் போதனை உலகைச் சுற்றி வளைக்கும். இது மனித சகோதரத்துவத்தை நிறுவுவதற்கு உதவும்: ஒரே தெய்வத் தந்தையைப் பற்றிய மனிதகுலத்தின் நேரடி உணர்வின் அடிப்படையில் ஒரு ஒற்றுமை.”

லாஹிரி மகாசயர் 1895 செப்டம்பர் 26 – ம் தேதி, பனாரஸில் மகாசமாதி அடைந்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில், மேற்கத்திய நாடுகளில் யோகத்தின் மீதான அதிகரித்த ஆர்வம், லாஹிரி மகாசாயரின் வாழ்க்கையைப் பற்றிய அழகான விவரத்தைக் கொண்ட ஒரு யோகியின் சுயசரிதையை எழுத பரமஹம்ஸ யோகானந்தருக்கு உத்வேகம் அளித்தபோது அவரது முன்னறிவிப்பு முழுமை அடைந்தது.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp