மகாவதார பாபாஜி — அமரத்துவம் வாய்ந்த மாபெரும் யோகி — 1861 ஆம் ஆண்டில் மனித உணர்வுநிலையை மேம்படுத்த தொன்மையான ஓர் ஆன்ம-அனுபூதி உத்தியாகிய பண்டைய கிரியா யோக விஞ்ஞானத்தை, தனது சீடரான லாஹிரி மகாசயருக்கு அருளி மீண்டும் உயிர்ப்பித்தார். YSS/SRF குருமார்களின் உன்னத வரிசையில் அவர் ‘பரமகுரு’ வாகத் திகழ்கிறார்; இறைத் தூதர்கள் தங்கள் சிறப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்குத் துணைபுரிவதையே தனது நோக்கமாகக் கொண்ட ஒரு தெய்வீக அவதாரம்.
பாபாஜி மனிதகுலத்தின் ஆன்மீக பரிணாம வளர்ச்சியை மௌனமாக வழிநடத்தி வருகிறார். அவரை நேரில் சந்தித்தவர்கள், தூய அன்பே அவரது இயல்பு என்றும், பணிவு அவரது தனிச்சிறப்பு என்றும் கூறுகின்றனர். அவரது புனித திருநாமத்தை பக்தியுடன் உச்சரிப்பது உடனடி ஆசீர்வாதத்தை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது.
மகாவதார பாபாஜி பற்றி
பத்ரிநாராயணுக்கருகில் வடக்கு இமயமலையின் செங்குத்தானப் பாறைகள் லாஹிரி மகாசயரின் குருவான பாபாஜி வாழும் பேற்றை இன்னும் பெற்றிருக்கின்றன. தனிமையில் வாழும் அந்த மகான் தன் ஸ்தூல ரூபத்தைப் பல நூற்றாண்டுகளாக, ஒருக்கால் பல்லாயிரம் ஆண்டுகளாகவோ வைத்துக் கொண்டிருக்கிறார். மரணமற்ற பாபாஜி ஓர் அவதாரமாவார். இந்த சமஸ்கிருதச் சொல் இறங்கிவருதல் எனப் பொருள்படும் அதன் மூலச் சொற்கள் அவ, கீழே த்ரி, செல்லுதல். இந்து சமய நூல்களில் அவதாரம் எனில் தெய்வம் தேகத்தைத் தாங்கி இறங்கிவருதல் என்பதாம்.
— பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதம் நூலில்
![]()
பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் மூலமாகத்தான் மகாவதார பாபாஜி — உண்மையிலேயே பிரமிப்புமிக்க ஒரு ஆன்மீக ஆளுமையைப் பற்றி உலகம் அறிந்துகொண்டது. பரமஹம்ஸர் தனது சுயசரிதத்தில் எழுதுகிறார்: “ஒரு வரலாற்று நிபுணருக்குப் பிரியமானவைகளான, பாபாஜியின் குடும்பம், பிறந்த இடம் இவைகளை அறுதியிட்டுக் கூறும் எந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.” அவர் தொடர்ந்து கூறுகிறார், “முழுமையாக விடுதலை அடைந்து விட்ட ஒரு மகானின் பரம்பரைப் பெயரைப் பற்றி நமக்குத் தெரியாவிட்டால்தான் என்ன?”
“…பொதுவாக அவர் பேச்சு இந்தியில் இருக்கிறது. ஆனால் அவர் எம்மொழியிலும் சுலபமாக உரையாடுகிறார். பாபாஜி (வணக்கத்திற்குரிய தந்தை) என்ற எளிய பெயரையே அவர் ஏற்றுக்கொண்டிருந்தாலும், அவரது சீடர்கள் அவரை ‘மகா அவதார்’ (பெரும் அவதாரம்) மற்றும் மகா யோகி, என்றும் அழைக்கின்றனர் உயர்ந்த யோகி என்றும் அழைக்கின்றனர்.”
மகாவதார பாபாஜியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும், யோகானந்தர் தனது ஒரு யோகியின் சுயசரிதம் நூலில், மரணமற்ற அந்த அவதாரம் எண்ணற்ற யுகங்கள் இந்தியாவின் தொலைதூர இமயமலைப் பகுதிகளில் வசித்து வருவதாகவும், அருட்பேறு பெற்ற சிலருக்கு மட்டுமே தன்னை அரிதாக வெளிப்படுத்திக் கொள்வதாகவும் எழுதியுள்ளார்.
அமரத்துவ குருவின் உடலில் முதுமையின் சுவடு எதுவும் இல்லை; அவர் இருபத்தைந்து வயதுக்கு மிகாத ஓர் இளைஞராகத் தோன்றுகிறார். சிவந்த மேனியும், நடுத்தர உடல்வாகு மற்றும் உயரமும் கொண்ட பாபாஜியின் அழகான, வலிமையான உடல் ஒருவிதத் தனித்துவமான ஒளியை வீசுகிறது. அவரது கண்கள் கருமையாகவும், அமைதியாகவும், கனிவுடனும் திகழ்கின்றன; அவரது நீண்ட, பளபளப்பான தலைமுடி தாமிர நிறத்தில் உள்ளது.
பாபாஜி விரும்பும்போது மட்டுமே மற்றவர்களால் அவரைக் காணவோ அல்லது அடையாளம் கண்டுகொள்ளவோ முடியும்… இந்த உலகச் சுழற்சி காலம் முழுவதும் தன் உடலில் நிலைத்திருக்க இறைவன் பாபாஜியைத் தேர்ந்தெடுத்துள்ளார். பல யுகங்கள் கடந்து சென்றாலும், நூற்றாண்டுகளின் நாடகத்தை பார்த்தவாறு, மரணமற்ற அந்த ஞானி இந்தப் பூவுலக மேடையில் தொடர்ந்து வீற்றிருப்பார்.
இந்தியாவில் பாபாஜியின் பணி, இறைத்தூதர்கள் தங்கள் சிறப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்குத் துணைபுரிவதே ஆகும். எனவே, ‘மகாவதார்’ (மகா அவதாரம்) என்ற சாத்திர வகைப்பாட்டிற்கு அவர் தகுதி பெறுகிறார். ஸ்வாமி அமைப்பை மறுசீரமைத்த சங்கரருக்கும், இடைக்காலத்தின் புகழ்பெற்ற ஞானியான கபீருக்கும் தான் யோக தீட்சை அளித்ததாக அவர் கூறியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவரது முதன்மைச் சீடராகத் திகழ்ந்தவர், நமக்குத் தெரிந்தபடி, இழந்த கிரியா’ யோகக் கலையை மீண்டும் உயிர்ப்பித்த லாஹிரி மகாசயர் ஆவார்.
“பாபாஜியின் ஆன்மீக நிலை மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது, ஸ்ரீ யுக்தேஸ்வர் எனக்கு விளக்கினார். மனிதனின் குறுகிய பார்வை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நட்சத்திரமாகிய அவரை ஊடுருவி பார்க்க முடியாது. அந்த அவதாரம் அடைந்துள்ள நிலையை ஒருவன் ஊகிக்க முயல்வது கூட வீண்தான். அது கற்பனைக்கு அப்பாற்பட்டது.”
— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர், ஒரு யோகியின் சுயசரிதம்
“பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித்தாலும்… அந்த பக்தன் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசியை ஈர்க்கிறான்.”
— லாஹிரி மகாசயர் ஒரு யோகியின் சுயசரிதம் நூலில்
பரமஹம்ஸரின் ஆன்மீக உன்னதமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலிலிருந்து மகாவதார பாபாஜியின் ஆன்மீக மகத்துவம் , மற்றும் அவரது சிறப்பான பங்களிப்பு ஆகியவற்றை ஆழமாக விவரிக்கும், அத்தியாயத்தைப் படிக்க உங்களை அழைக்கிறோம். உலகின் உயர்விற்காக செயல்பட்டு, கிரியா யோகப் பாதையில் உள்ள சாதகர்களுக்குத் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்துள்ள இந்த மகான் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
மகாவதார பாபாஜியின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் சன்னியாசிகள் வழ்ங்கும் ஆன்லைன் உரைகளைக் காணுமாறு உங்களை அழைக்கிறோம். இவை ஆங்கிலம், இந்தி, பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றன.
மரணமற்ற கிரியா யோக குரு: மகாவதார பாபாஜி
1:07:34
1:14:14
53:59
54:07
58:58
1:07:20
கிரியா யோக விஞ்ஞானத்தின் மறுமலர்ச்சி
கிரியா யோகம், மனிதகுலத்திற்கு அளிக்கப்பட்ட, ஆன்ம-அனுபூதிக்கான மிகவும் பண்டைய மற்றும் நடைமுறை உத்திகளில் ஒன்றாகும். இது முதுகுத்தண்டில் உள்ள உயிர்சக்தி — பிராணன் — மீது நேரடியாக செயல்பட்டு, சாதாரண முறைகளால் செய்ய முடியாத வகையில் ஆன்மீக பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. குருதேவர் இதை இறைவனை அடைவதற்கான மிக உயர்ந்த பாதை என்று விவரித்தார். கிரியா யோகம் அனைத்து மனித துயரங்களுக்கும் ஒரு சர்வ நிவாரணியாகும். கடந்த யுகங்களில் பகவான் கிருஷ்ணரால் கீதையிலும், பதஞ்சலியால் யோக சூத்திரங்களிலும் இது போற்றப்பட்டது.

பகவத் கீதையில், பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறினார்:
“நான் அழிவற்ற இந்த யோகத்தை விவஸ்வத்துக்கு (சூரிய தேவன்) அளித்தேன்; விவஸ்வத் இந்த ஞானத்தை மனுவிற்கு (இந்து தர்ம சாஸ்திரத்தை வகுத்தவர்) அளித்தார்; மனு இதனை இக்ஷ்வாகுவிடம் (சத்திரியர்களின் சூரிய வம்சத்தை நிறுவியவர்) கூறினார். இவ்வாறு முறையான வரிசையில் தொடர்ச்சியாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் (அரச முனிவர்கள்) அறிந்திருந்தனர். ஆனால், ஓ பகைவர்களை அழிப்பவனே (அர்ஜுனா)! நீண்ட கால ஓட்டத்தில் இந்த யோகம் பூமியில் இருந்து மறைந்து போனது.” — IV:1–2
ஆனால் இந்த புனித விஞ்ஞானம் மறைந்து போனது. பொருள்சார் நீண்ட இருண்ட யுகங்களில், இந்த உத்தி மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டது. பல தலைமுறை உண்மையான சாதகர்கள் விடுதலைக்கான இந்தத் திறவுகோலைப் பெறாமலே இருந்தனர்.
பின்னர், இந்த யுகத்தில், அசாதாரணமான நிகழ்வு ஒன்று நடந்தது.
பாபாஜி இந்த உத்தியை மீண்டும் உயிர்ப்பித்தார். இந்த மறுமலர்ச்சியைத் தொடங்க, கிரியா யோகம் அனைவரையும் — இல்லறத்தார்களையும், துறவிகளையும் — சமமாக சென்றடைய அவர் ஒரு சிறந்த இல்லற யோகியை தனது கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.
அந்த இல்லற யோகி லாஹிரி மகாசயர் ஆவார்.
இருப்பினும், பாபாஜி அவருக்கு ஒரு தொன்மையான விதியையும் விதித்தார்: இறைவனைத் தேடும் முயற்சியில் அனைத்தையும் தியாகம் செய்ய உறுதிபூண்டவர்களுக்கு மட்டுமே கிரியா யோகம் கற்பிக்கப்பட வேண்டும். மூவகை துன்பங்களால் பீடிக்கப்பட்டு, சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியிருக்கும் உலக மக்கள் மீது கொண்ட ஆழ்ந்த கருணையினால் உந்தப்பட்ட லாஹிரி மகாசயர், தனது குருவிடம் அந்த இறுக்கமான கடுமையான நிபந்தனைகளை தளர்த்துமாறு வேண்டினார்; இதன் மூலம், முழுமையான உள்நிலைத் துறவுக்கு இன்னும் தயாராகாத ஆனால் உண்மையான சாதகர்களும் கூட கிரியா யோகத்தின் விடுதலை அளிக்கும் அருளைப் பெற முடியும் என்று அவர் கருதினார்.
“அப்படியே ஆகட்டும்,” பாபாஜி கூறினார், “உன் மூலம் இறைவனின் விருப்பமே வெளியிடப்பட்டது. உன்னிடம் பணிவுடன் உதவியை நாடுவோர் யாவருக்கும் கிரியாவை அளி.”
பாபாஜி மேலும் கூறினார், “உன் சீடர்கள் ஒவ்வொருவருக்கும் பகவத் கீதையில் கூறப்பட்ட இந்த மகத்தான வாக்குறுதியை திரும்பவும் எடுத்துக் கூறு: ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத். [இந்த தர்மத்தின் (அறநெறிச் சடங்கு அல்லது நற்செயல்) சிறிதளவு பயிற்சிகூட பெரும் பயத்திலிருந்து (மஹதோ பயாத்) மாபெரும் துன்பங்களை இயல்பாகவே கொண்ட திரும்பத் திரும்ப உண்டாகும் பிறப்பு, இறப்பு என்ற சூழல்களிலிருந்து உன்னைக் காக்கும்.]”
உலகெங்கிலும் கிரியா யோகத்தின் பரவல்
லாஹிரி மஹாசயர் மீண்டும் உலக வாழ்க்கைக்குத் திரும்பினார் — அதாவது தனது குடும்பம், அலுவலகப் பணி மற்றும் சாதாரண வாழ்க்கைக்கு. வாரணாசியில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே, எவ்வித ஆரவாரமோ அல்லது பகிரங்க அறிவிப்போ இன்றி, உண்மையான பக்தர்களுக்கு கிரியா யோக தீட்சை அளிக்கத் தொடங்கினார். அவரது மிகச்சிறந்த சீடர்களில் ஒருவர் ஸ்ரீ பிரியா நாத் கரார் என்ற இளைஞர்; இவரே பிற்காலத்தில் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி என்று அறியப்பட்டார்.

ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜி ஆழ்ந்த ஆன்மீக மெய்ஞானம் பெற்ற ஒரு மாபெரும் ஞானியாகத் திகழ்ந்தார். பரமஹம்ஸ யோகானந்தர் அவரைப் பிற்காலத்தில் விவரித்தபடி, ஒரு ஞானாவதாரம், அல்லது “ஞானத்தின் அவதாரம்”; அவரது கூர்மையான நுண்ணறிவும் கடுமையான ஆன்மீக ஒழுக்கமும் பல சாதகர்களை இறைவனிடம் வழிநடத்தின.
ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜி, 1894 ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற ஒரு கும்பமேளாவில் பாபாஜியை நேரில் சந்தித்தார். தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பாபாஜி அவரிடம் பின்வருமாறு கூறினார்:
“கிழக்கும் மேற்கும் இணைந்து, செயற்பாடும் ஆன்மீகமும் ஒன்றிணைந்த ஒரு பொன்னான நடுப்பாதையை நிறுவ வேண்டும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விழிப்பூட்டப்படக் காத்திருக்கும் வருங்கால மகான்களை நான் காண்கிறேன். ஸ்வாமிஜி, வரவிருக்கும் இந்த இணக்கமான பரிமாற்றத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், மேற்கில் யோகத்தைப் பரப்புவதற்காக நீங்கள் பயிற்றுவிக்கக்கூடிய ஒரு சீடரை நான் உங்களிடம் அனுப்புவேன்.”
அந்த சீடரே முகுந்த லால் கோஷ்; பின்னர் அவர் பரமஹம்ஸ யோகானந்தராக அறியப்பட்டார்.
இவ்வாறு, கிரியா யோகத்தின் புனித ஜோதி மீண்டும் ஒரு முறை – ஸ்ரீ யுக்தேஸ்வரிடமிருந்து கடல்களைக் கடந்து அதை எடுத்துச் செல்லவிருந்த இளம் சன்னியாசியிடம் சென்றது.
பரமஹம்ஸ யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வரின் கண்டிப்பான அதே சமயம் அன்பு நிறைந்த வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றார். அவர் கிரியா யோகத்தில் தீட்சை பெற்றதுடன், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரால் சன்னியாசத்திலும் தீட்சை பெற்றார். குரு பரம்பரையின் வழியாகக் கிடைக்கப்பெறும் தொடர்ச்சியான ஆன்ம அனுபூதி இடையறாத ஓட்டத்தை அவர் பெற்றார்.
1920 ஆம் ஆண்டில் ஒரு நாள், ராஞ்சியில் உள்ள தனது ஆசிரமத்திலும் பள்ளியிலும் தியானத்தில் இருந்தபோது, மேற்கில் தனது பணியைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அவருக்குக் காட்டும் ஒரு தெய்வீக தரிசனம் யோகானந்தஜிக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார்; அங்கு, அதே ஆண்டு இறுதியில் பாஸ்டனில் நடைபெறவுள்ள சமயத் தலைவர்களின் சர்வதேச மகாசபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜி அந்த நேரம் மிகவும் சரியானது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, “உனக்கான அனைத்துக் கதவுகளும் திறந்திருக்கின்றன. இதுவே சரியான தருணம்; இதைத் தவறவிட்டால் வேறு வாய்ப்பில்லை,” என்று கூறினார்.
யோகானந்தர் புறப்படுவதற்குச் சற்று முன்பு, இந்த யுகத்திற்கு பண்டைய விஞ்ஞான உத்தியாகிய கிரியா யோகத்தை மீண்டும் உயிர்ப்பித்த மரணமற்ற குருவான மகாவதார பாபாஜி அவரை சந்திக்க வந்தார். “மேலை நாடுகளில் கிரியா யோகத்தை பரப்ப நான் உன்னைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” பாபாஜி யோகானந்தரிடம் கூறினார். “வெகுகாலத்திற்கு முன் நான் உன் குரு யுக்தேஸ்வரைக் கும்பமேளாவில் சந்தித்தேன். அப்பொழுது நான் அவரிடம் பயிற்சி பெறுவதற்காக உன்னை அனுப்புவதாகக் கூறினேன். ஆன்ம அனுபூதி அளிக்கும் விஞ்ஞான உத்தியான கிரியா யோகம், இறுதியில் எல்லா நாடுகளிலும் பரவும், மேலும் மனிதனின் தனிப்பட்ட, எல்லை கடந்த இறை ஞானத்தின் மூலமாக தேசங்களை இணக்கமாக்க உதவும்.”
அந்த இளம் ஸ்வாமி 1920 செப்டம்பரில் பாஸ்டன் நகரை வந்தடைந்தார். கிரியா யோகத்தைப் பற்றியோ அல்லது இந்தியாவின் பண்டைய ஞானம் எனும் ஆன்மீகப் பொக்கிஷத்தைப் பற்றியோ அறியாத ஒரு நாட்டிற்கு அவர் சென்றார்; அங்கு பாபாஜியின் புனிதப் பொறுப்பை இன்றுவரை செழித்து வளரும் உலகளாவிய ஒரு இயக்கமாக அவர் மாற்றினார்.
யோகானந்தரின் முதல் உரை, சர்வதேச சமய மிதவாதிகளின் பேரவையில் “சமய விஞ்ஞானம்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டது; அது மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. அதே ஆண்டில், இந்தியாவின் பண்டைய யோக விஞ்ஞானம் மற்றும் தத்துவம் மற்றும் காலங்காலமாகத் தொடரும் தியான மரபு குறித்த தனது போதனைகளை உலகெங்கிலும் பரப்ப, அவர் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் அமைப்பை நிறுவினார்.
பரமஹம்ஸ யோகானந்தர், பாபாஜியின் உலகளாவிய பணியை நிறைவேற்றுவதற்கான இரட்டை ஊடகங்களாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) மற்றும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF) ஆகியவற்றை நிறுவினார். YSS, பரமஹம்ஸரின் பணியை இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் மேற்கொள்கிறது; அதே சமயம் SRF, அவரது பணியை உலகின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.
மேற்கத்திய நாடுகளில் தனது பணியின் ஆரம்ப ஆண்டுகளிலேயே, பாபாஜி வகுத்த நிபந்தனைகளின்படி கிரியா யோக தீட்சை பெற ஆர்வமுள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் வகையிலான யோகக் கோட்பாடுகள் மற்றும் உத்திகளில் ஒரு முறையான பயிற்சித் திட்டத்தை பரமஹம்ஸர் உருவாக்கத் தொடங்கினார். அவர் யோகதா சத்சங்க/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்கள் எனும் விரிவான வீட்டிலிருந்தே கற்கும் பயிற்சித் திட்டத்தை உருவாக்கினார்; இது கிரியா யோக தியானத்தின் விஞ்ஞான உத்திகள் மற்றும் சமநிலை வாழ்க்கைக்கான கொள்கைகளை உள்ளடக்கிய, உலகில் எங்கிருந்தாலும் எந்த நேர்மையான சாதகரையும் சென்றடைய வடிவமைக்கப்பட்ட விரிவான வீட்டிலிருந்தே கற்கும் பாடத்திட்டமாகும்.
இந்தப் பாடங்கள் வெறும் அஞ்சல் வழிக் கற்றல் சாதனங்கள் மட்டுமல்ல. அவை குரு பரம்பரையின் உயிரோட்டமிக்க அதிர்வுகளை தாங்கி வருகின்றன. அவற்றின் வாயிலாக, பாபாஜியால் மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்ட கிரியா யோக உத்திகள், அவற்றின் மூல வடிவில் மற்றும் கலப்படம் அற்றும்— சிதைக்கப்படாமலும், துல்லியமாகப் பாதுகாக்கப்பட்டும் — பரப்பப்படுகின்றன. இவ்வாறு, நமது குருவான யோகானந்தர், தேடுபவருக்கும் குரு-பரம்பரைக்கும் இடையே நேருக்கு நேர் சந்திப்பு அவசியமின்றி, நேரடியான மற்றும் தனிப்பட்ட உறவை சாத்தியமாக்கித் தந்துள்ளார்.
இந்த பாடங்கள் மூலம், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர், ஆன்ம-அனுபூதி அளிக்கும் கிரியா யோக உத்தியை உண்மையான ஆன்மீக நாட்டம் கொண்ட ஒவ்வொருவருக்கும் உலகளாவிய அளவில் கிடைக்கச் செய்துள்ளார்.
YSS/SRF பாடங்கள் ஒரு உண்மையான நுழைவாயிலை வழங்குகின்றன. மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசயர், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் ஆகிய குருமார்கள் பரம்பரை வழியாகப் பாதுகாக்கப்பட்டு பரப்பப்படும் கிரியா யோகப் புனித போதனைகளை அவை வழங்குகின்றன இது ஏதேனும் ஒரு அமைப்பின் உரிமைக்கோரல் காரணமாக அல்ல; ஆனால் இந்த போதனைகள் உலகிற்கு வழங்கப்பட வேண்டும் என்று பாபாஜி தீர்மானித்த வழித்தடம் இதுவே என்பதாலாகும்.
“ஒரு பிரத்யேக தெய்வீக அருளாணையின்படி, கிருஷ்ணர், கிறைஸ்ட், மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசயர் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் மூலம், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா போதனைகளில் பிரதிபலிக்கப்படும் கிருஷ்ணரின் மூல யோகம் மற்றும் கிறைஸ்ட் இன் மூல கிறிஸ்தவம் ஆகியவற்றின் வாயிலாக கிரியா யோக விஞ்ஞானத்தை உலகெங்கிலும் பரப்ப நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.”
— பரமஹம்ஸ யோகானந்தர்
பிரிவினை, மதவெறி வெறுப்புகள், சமயச்சார்பின்மை ஆகியவற்றை இவ்வுலகம் கைவிட வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை பாபாஜி முன்கூட்டியே உணர்ந்திருந்தார். ஏனெனில் இந்த மேல்நோக்கி பரிணமித்து வரும் யுகத்தில் விஞ்ஞான அறிவும் தொழில்நுட்பமும் முன்னேறுவதுடன் கூடவே, மனிதகுலம் ஒன்று சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். மேலை நாடுகளுக்கு கிரியா யோகத்தை கொண்டு சென்றதன் மூலம், ஆன்மீகத் தாயகமான இந்தியாவில் எப்போதும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட உண்மையின்’ சாராம்சமானது, காலப்போக்கில் உலகம் முழுவதும் ஒரு பேரொளியைப் போலப் பரவி, அமைதி, பரஸ்பர புரிதல், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை படிப்படியாக நிலைநாட்டும்.
YSS/SRF இந்தியா மற்றும் உலகெங்கிலும் ஏராளமான ஆசிரமங்கள், தியான மையங்கள் மற்றும் ஏகாந்த வாச மையங்களை நிறுவியுள்ளது. இவை ஆன்மீகப் புகலிடங்களாகச் செயல்பட்டு, பண்டைய கிரியா யோக விஞ்ஞான உத்திகளைப் பரப்புவதோடு, லட்சக்கணக்கானோருக்கு ஆன்ம-அனுபூதிப் பயணத்தில் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றன.
YSS மற்றும் SRF இணைந்து 175 நாடுகளுக்கும் மேலாக பக்தர்களுக்குச் சேவை புரிகின்றன. பாபாஜியைப் பற்றி உலகம் முதன்முதலில் அறிந்து கொள்ளக் காரணமாக அமைந்த பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், இது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எண்ணற்ற கிரியா யோகிகள் இந்த புனித உத்தியை தினமும் தங்கள் வீடுகளிலோ அல்லது உலகெங்கிலும் உள்ள YSS/SRF தியான மையங்கள் மற்றும் ஆசிரமங்களிலோ பயிற்சி செய்கின்றனர்.
“இந்த இறைப்பணி பாபாஜி, லாஹிரி மகாசயர் மற்றும் என் குருதேவர் ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜி மூலமாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், உலகிற்கும் இறைவனால் அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது மென்மையான தென்றலாகத் தொடங்குவதைக் காண்பீர்கள். படிப்படியாக இது ஒரு வலுவான காற்றாக மாறும். காலப்போக்கில் அது ஒரு பெரும் புயலாக—இந்த மாய உலகத்தின் அசுத்தங்களை அடித்துச் சென்று மகத்தான நன்மைகளைச் செய்யும் ஒரு சக்தியாக—மாறும்.”
— பரமஹம்ஸ யோகானந்தர்
மகாவதார பாபாஜி குகை
1861 ஆம் ஆண்டில் மகாவதார பாபாஜியால் கிரியா யோகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது, நவீன யுகத்தின் ஆன்மிக வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த தெய்வீக நிகழ்வு, இமயமலையின் குமாவோன் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் துனாகிரி மலைகளின் மடியில் இருக்கும் ஒரு சிறிய குகையில் நடைபெற்றது. இந்தப் புனிதக் குகையில்தான் மகாவதார பாபாஜி, தனது உயர்ந்த சீடரான லாஹிரி மகாசயருக்கு, பண்டைய விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தில் தீட்சை அளித்தார். அனைத்து கிரியா யோகிகளும் தங்கள் பரம்பரையை இந்த நிகழ்விலிருந்தே தொடங்குவதாகக் கருதுகின்றனர்.
மகாவதார் பாபாஜி மற்றும் லாஹிரி மகாசயரின் அருளாசிகள் இன்றும் இந்தப் புனிதக் குகையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊடுருவியுள்ளன.
இந்தக் குகையில் லாஹிரி மஹாசயர் தனது தெய்வீக குருவை முதன்முதலில் சந்தித்த அற்புதக் கதை, அவரது முற்பிறவி நினைவுகள் மீட்கப்பட்ட நிகழ்வு மற்றும் இந்தக் குகையின் வரலாற்றுச் சிறப்பு ஆகியவற்றை அறிந்துகொள்ள, ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் “இமயத்தில் ஒரு அரண்மனையைத் தோற்றுவித்தல்” என்ற 34-வது அத்தியாயத்தைப் படிக்குமாறு வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இமயமலையில் உள்ள மகாவதார பாபாஜி குகைக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், துவாராஹாத், யோகதா சத்சங்க சாகா ஆசிரமத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மகாவதார பாபாஜியிடமிருந்துஓர் அருளாசி
1955 முதல் 2010 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை YSS/SRF-இன் மூன்றாவது தலைவராகவும் சங்கமாதாவாகவும் இருந்த ஸ்ரீ தயா மாதா, 1963–64 ஆம் ஆண்டுகளில் மகாவதார் பாபாஜியின் குகைக்கு சென்றிருந்தபோது, அந்த மகத்தான குருவுடன் ஒரு தெய்வீக அனுபவத்தைப் பெற்றார்; அதை அவர் தனது அன்பு மட்டுமே என்ற புத்தகத்தில் மிகவும் தெளிவாக விவரித்துள்ளார். அதன் ஒரு பகுதி கீழே பகிரப்பட்டுள்ளது:
“…அந்த அறை முழுவதும் திடீரென்று ஒரு பொன்மய ஒளியினால் ஒளியூட்டப்பட்டது. அந்த ஒளி ஒரு பிரகாசமான நீலமாக மாறி, அங்கு மறுபடியும் நமது அன்பான பாபாஜியின் தரிசனம் பெற்றேன்! இந்த தடவை அவர் கூறியது: ‘என் குழந்தாய், இதைத் தெரிந்து கொள்: பக்தர்கள் என்னை காண்பதற்காக இந்த இடத்திற்கு வந்தாக வேண்டிய அவசியம் இல்லை. என் மீது நம்பிக்கை வைத்து அழைத்த வண்ணம் ஆழ்ந்த பக்தியுடன் அகமுகமாகச் செல்லும் எவராயினும் அவர்களுக்கு என் பதில் கிடைக்கும்.’…
“பிறகு நான் கூறினேன், ‘பாபாஜி, என் பிரபுவே, நாங்கள் ஞானத்தை உணர வேண்டும் என்று விரும்பும் பொழுதெல்லாம் நாங்கள் ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் ஏனெனில் அவர் முழுதும் ஞானமயமானவர்; மேலும் நாங்கள் ஆனந்தத்தை உணர வேண்டும் என்று விரும்பும் பொழுதெல்லாம் நாங்கள் லாஹிரி மகாசயரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எங்கள் குருதேவர் கூறியிருக்கின்றார். உங்கள் இயல்பு என்ன?’ இதை நான் கூறும்பொழுதே, ஓ, என் இதயம் அன்பால் வெடித்து சிதறுவதைப் போன்ற உணர்வை அடைந்தேன். அத்தகைய அன்பு — கோடானு கோடி அன்புகள் சேர்ந்து புரண்டு ஒன்றானது! எல்லா அன்பும் அவரே; அவருடைய முழு இயல்பும் தெய்வீகப் பிரேமை தான்.
“சொற்களால் கூறப்படவில்லையெனினும் இதைவிட நல்ல சொல்லாற்றல் வாய்ந்த பதிலை நான் நினைத்துப் பார்க்க முடியாது; இந்த சொற்களை கூறிய பொழுது பாபாஜி அதை மேலும் இனிமையாகவும் அதிக அர்த்தமுள்ளதாகவும் செய்தார்: ‘என் இயல்பு அன்பு; ஏனெனில் அன்பு மட்டுமே இவ்வுலகை மாற்றவல்லது.’”
மகாவதார பாபாஜி பற்றிய கதைகள் (ஒரு யோகியின் சுயசரிதம் நூலிலிருந்து)
ஒரு யோகியின் சுயசரிதம், அத்தியாயம் 33-ல், பரமஹம்ஸ யோகானந்தர் மகாவதார பாபாஜியின் வாழ்க்கையைப் பற்றிய சில சுவாரஸ்யமான கதைகளை விவரித்துள்ளார். அவற்றில் மூன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு கதைகள் பரமஹம்ஸ யோகானந்தரின் சம்ஸ்கிருத ஆசிரியரான ஸ்வாமி கேவலானந்தரால் கூறப்பட்டவை. இவர் இமயமலையில் பாபாஜியுடன் சில காலம் கழித்தவர். மூன்றாவது கதை ஒரு யோகியின் சுயசரிதத்தில் “தூக்கமற்ற மகான்” என்று குறிப்பிடப்படும் ஸ்ரீ ராம கோபால் மஜும்தார், யோகானந்தருக்குக் கூறியது.
கேவலானந்தாஜி பரமஹம்ஸரிடம் கூறினார்:
“பாபாஜியின் வாழ்க்கையில் நடந்த இரு அற்புதமான சம்பவங்களைப் பற்றி நான் அறிவேன்” கேவலானந்தர் தொடர்ந்தார். “ஒரு புனித வேதச் சடங்கிற்காக ஓர் இரவு அவருடைய சீடர்கள் சுடர் விட்டெரியும் பெருந்தீ உள்ள அக்னி குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். குருவானவர் திடீரென்று ஒரு பெரிய கொள்ளிக் கட்டையை எடுத்து அக்னிக்கருகில் அமர்ந்திருந்த ஒரு சீடனின் வெறும் தோளில் லேசாகத் தட்டினார்.
“‘ஐயா, எவ்வளவு கொடூரம்!’ அங்கிருந்த லாஹிரி மகாசயர் இந்த ஆட்சேபணையை வெளியிட்டார்.
“‘அவனுடைய முந்தைய கர்ம வினைப்படி உன் கண் எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப் போவதை நீ பார்க்க வேண்டுமா?’
“இந்த வார்த்தைகளுடன் பாபாஜி தன் குணப்படுத்தும் கரத்தை உருக்குலைந்திருந்த தன் சீடனின் தோளின் மேல் வைத்தார். ‘வேதனை நிறைந்த மரணத்திலிருந்து உன்னை நான் இன்றிரவு விடுவித்து விட்டேன். இந்நெருப்பினால் உனக்கு நேர்ந்த சிறு துன்பத்தின் மூலமாக கர்மவினையின் விதியானது திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது.’”
“இன்னொரு சமயத்தில் பாபாஜியின் புனிதமான குழுவில் அன்னியன் ஒருவனின் வரவினால் இடையூறு விளைந்தது. குருவின் கூடாரத்திற்கருகே ஏறுவதற்கரிய ஒரு பாறையின் விளிம்பின் மீது வியக்கத்தக்கத் திறனுடன் அவன் ஏறிவந்து விட்டான்.
“‘ஐயா, தாங்கள் தான் மகா பாபாஜியாக இருக்க வேண்டும்.’ அம்மனிதனின் முகம் விண்டுரைக்க இயலாத ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. ‘செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப் பாறைகளில் மாதக் கணக்கில் இடைவிடாமல் தங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தயை செய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ள மன்றாடுகிறேன்.’
“மகா குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவைச் சுட்டிக் காட்டினான். ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். இறைவனை அடைய உங்கள் வழிகாட்டுதலை நான் பெறாவிடில் இனி வாழ்ந்து பயனில்லை.’
“‘அப்படியானால் குதி,’ ‘உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது,’ பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.
“அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத்தான பாறையைத் தாண்டிக் குதித்து விட்டான். அதிர்ச்சியுற்ற தன் சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலைக் கொண்டு வரும்படி பாபாஜி கட்டளையிட்டார். அவர்கள் உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன் திரும்பியவுடன் குருதேவர் தன் கையை இறந்துவிட்ட அம்மனிதனின் மீது வைத்தார். ஆ! அவன் தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
“‘நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்.’ உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். ‘நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய். மரணம் உன்னை மறுபடி தீண்டாது; அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்.’ பிறகு அவர் புறப்படுதலைக் குறிக்கும் வழக்கமான வார்த்தைகளைக் கூறினார், ‘டேரா டண்டா உடாவோ’; அக்குழு முழுவதும் அம்மலையிலிருந்து மறைந்து விட்டது.”
“தூக்கமற்ற மகான்” ராம் கோபாலிடம் நான் ரன்பாஜ்பூரில் விஜயம் செய்திருந்த பொழுது, பாபாஜியுடன் அவருக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பைப் பற்றிய அற்புதமான கதையை விவரித்தார்.
“நான் சில சமயங்களில் தனிமையான என் குகையை விட்டு காசியிலுள்ள லாஹிரி மகாசயரின் திருவடிகளில் அமர்வதற்காகச் செல்வதுண்டு,” ராம் கோபால் கூறினார். “ஒரு நள்ளிரவு நான் சீடர்கள் குழுவில் மெளனமாகத் தியானித்துக் கொண்டிருந்த பொழுது குருதேவர் வியப்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
“‘ராம் கோபால்,’ உடனே தசாஸ்வமேத படித்துறைக்குச் செல்,’ என்றார் அவர்.
“நான் அந்தத் தனிமையான இடத்தை விரைவில் சென்றடைந்தேன். நிலவின் ஒளியும் விண்மீன்களின் பிரகாசமும் சேர்ந்து இரவு பளிச்சென்று இருந்தது. நான் சற்று நேரம்வரை மெளனமாகப் பொறுமையுடன் அமர்ந்திருந்த பிறகு என் காலடிக்கு அருகேயிருந்த ஒரு பெரிய கற்பாறை மீது என் கவனம் ஈர்க்கப்பட்டது. பூமிக்கு அடியிலுள்ள ஒரு குகை தெரியும்படியாக அப்பாறை மெதுவாக மேலெழும்பியது. புரிந்து கொள்ளமுடியாத ஏதோ ஒரு வகையினால், அப்பாறை அந்தரத்தில் நிலையாக நின்றபொழுது பேரழகு வாய்ந்த ஓர் இளம் பெண்ணின் போர்த்திய உருவம் அக்குகைக் குள்ளிருந்து வெளியாகி காற்றில் உயரே எழும்பியது. ஒரு மென்மையான ஒளிவட்டம் தன்னைச் சூழ அம்மாது மெதுவாகக் கீழே இறங்கி என் முன் ஆழ்ந்த பரவச நிலையில் அசைவற்று நின்றார். பிறகு அவர் மெல்ல அசைந்தார். மேலும் இனிமையாகப் பேசலானார்.
“‘நான் மாதாஜி, பாபாஜியின் சகோதரி. நான் அவரையும் லாஹிரி மகாசயரையும் ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டி இன்றிரவு என் குகைக்கு வரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன், என்றார்.’
“கங்கை நதி மீது ஒரு தெளிவற்ற ஒளி வேகமாக மிதக்கலாயிற்று; அந்த விசித்திர ஒளி இருண்ட நீரில் பிரதிபலிக்கப்பட்டது. அவ்வொளி அருகில் நெருங்கி வந்து, குருடாக்கும் ஒரு பிரகாசத்துடன் மாதாஜியின் பக்கத்தில் தோன்றிய அக்கணமே லாஹிரி மகாசயரின் உருவமாக மாறியது. அவர் வினயத்துடன் அந்த யோகினியின் அடி பணிந்தார்.
“நான் என் திக்பிரமையிலிருந்து விடுபடுவதற்கு முன்னே ஆகாயத்தில் ஒரு மாய ஒளி வட்டமாகத் திரண்டு வருவதைக் கண்டு நான் மேலும் வியப்பிலாழ்ந்தேன். அத்தீச்சுடர் சுழல் வேகமாக இறங்கி எங்கள் குழுவை நெருங்கி தன்னை ஓர் எழில் பெற்ற வாலிப தேகத்தினுள் உருமாற்றிக் கொண்டது. அவர்தான் பாபாஜி என்பதை நான் உடனே புரிந்து கொண்டேன். அவர் லாஹிரி மகாசயரை விட வயதில் மிகக் குறைந்தவராக இருந்தாலும், தன் சீடரைப் போலவே காணப்பட்டார். மேலும் நீண்ட ஒளிபொருந்திய கேசம் கொண்டிருந்தார்.
“லாஹிரி மகாசயர், மாதாஜி, நான் ஆகிய எல்லோரும் அந்த மகாகுருவின் பாதங்களில் விழுந்து வணங்கினோம். நான் அவரது தெய்வீக உடலைத் தீண்டியபொழுது கட்புலனாகாத பேரின்பமய மகிமையின் உணர்வு என் உடலின் ஒவ்வோர் இழையையும் புல்லரிக்கச் செய்தது.
“‘அருள் பெற்ற சகோதரியே, நான் என் உருவத்தைத் துறந்து எல்லையற்ற சாகரத்தில் மூழ்கிவிட உத்தேசித்துள்ளேன், என்றார் பாபாஜி.’
“‘அன்பார்ந்த குருதேவா, நான் ஏற்கனவே தங்கள் திட்டத்தைக் கண்டு கொண்டேன். நான் இன்றிரவு அதைப் பற்றி உங்களிடம் பேச விழைகிறேன். தாங்கள் தேகத்தை எதற்காக விடவேண்டும்?’ மகிமை பொருந்திய மாதாஜி அவரை வேண்டியவாறு நோக்கினார்.
“’என்னுடைய ஆத்ம சாகரத்தில் நான் கண்ணுக்குப் புலப்படும் அல்லது புலப்படாத அலையாயிருப்பதனால் வேறுபாடு யாது?’
“மாதாஜி விந்தையான சாதுர்யத்துடன் பதிலளித்தார். ‘மரணமற்ற குருவே, அதில் எந்தவித வேறுபாடும் இல்லையெனில் தயவு செய்து தங்கள் உருவத்தை என்றுமே துறக்க வேண்டாம்.’
“‘அப்படியே ஆகட்டும்,’ என்றார் பாபாஜி கம்பீரமாக. ‘நான் என் ஸ்தூல உடலை இனி என்றுமே விட மாட்டேன். இவ்வுலகில் குறைந்த பட்சம் ஒரு சிலருக்காவது அது காணப்படுமாறு இருக்கும். இறைவன் உன் வாய் மூலமாக அவனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளான்.’
“நான் மிகுந்த பயபக்தியுடன் இவ்வுயர்ந்த மகான்களின் உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்தபொழுது அந்த மகாகுரு கருணை நிரம்பிய பார்வையுடன் என்னிடம் திரும்பினார்.
“‘ராம் கோபால், பயப்படாதே, அவர் கூறினார். இந்த அழியா வாக்குறுதிக் காட்சியில் நீ ஒரு சாட்சியாகும் அருளைப் பெற்றிருக்கிறாய்.’
“அவருடைய இனிய குரலின் நாதம் மெல்ல அடங்கும் போதே அவருடைய திருவுருவமும் லாஹிரி மகாசயருடையதும் மெல்ல மேலெழும்பி கங்கையின் மேலாகப் பின்னோக்கிச் சென்றன. அவ்விரவின் ஆகாய வெளியில் அவர்கள் மறையும் பொழுது கண்ணைக் கூசச் செய்யும் ஓர் ஒளி வட்டம் அவர்கள் உடலைச் சூழ்ந்திருந்தது. மாதாஜியின் திருவுருவம் குகையை நோக்கி மிதந்து இறங்கியது. ஏதோ கண்ணுக்குத் தெரியாத கைகளினால் இயங்குவது போன்று அந்தப் பாறை அக்குகையின் மேல் மூடிக் கொண்டது.
“அளவற்ற ஊக்கமடைந்து, நான் லாஹிரி மகாசயரின் இருப்பிடத்திற்குத் திரும்பினேன்.”
மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ்
மகாவதார் பாபாஜி மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் ஆகியோருக்கு இடையிலான புனிதமான சந்திப்பை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25-ஆம் தேதி மகாவதார் பாபாஜி ஸ்மிருதி திவாஸ் கடைபிடிக்கப்படுகிறது; இச்சந்திப்பின்போதுதான், கிரியா யோக போதனைகளை உலகம் முழுவதும் பரப்பும் பணியை பாபாஜி பரமஹம்ஸருக்கு வழங்கினார்.
இந்தப் புனித நாளை முன்னிட்டு, YSS ஆசிரமங்கள் மற்றும் மையங்களில் தியானம், ஊக்கமளிக்கும் வாசிப்பு மற்றும் கீர்த்தனம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நினைவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும், பக்தர்கள் ஆன்லைனில் பங்கேற்பதற்காக YSS ஆசிரமங்கள் ஒன்றிலிருந்து இது நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

















