YSS

2013 ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து நன்றி-நவிலும் நாள் செய்திமடல்

“எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிற்கும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் மற்றும் செயலாற்றுவதற்கும் வேண்டிய எல்லாச் சக்தியும் இறைவனிடமிருந்து வருகின்றது, மேலும் அவன் இப்பொழுது உங்களுடன் இருந்து உங்களை வழிநடத்தி ஊக்குவிக்கிறான் என்பதை உணர்ந்தறியுங்கள்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

நன்றி-நவிலும் நாளின் பாக்கியம் பெற்ற இந்த நேரத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலுள்ள எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள். நம் வாழ்வில் காணும் நல்ல மற்றும் அழகான எல்லாவற்றையும் மகிழ்ந்து அனுபவிப்பதற்காக நம் கண்களையும் இதயங்களையும் திறக்க நமக்கு அது ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும் — நமக்கும் தெய்வீகத்துக்குமிடையே ஒரு நிலையான புனிதப் பரிமாற்றத்தைப் பராமரிக்கும் அந்த அற்புதமான ஆன்மீக நடைமுறையின் ஒரு புதுப்பித்தல்: நன்றியுணர்வு. நன்றியுணர்வின் மூலம், நம்மை சாசுவதமாக நேசித்து, ஒவ்வொரு கணத்திலும் நம்மைப் பேணிக் காத்துக்கொண்டிருப்பவன், இயற்கையின் மிகச் சிறிய மற்றும் மிகவும் கம்பீரமான வெளிப்பாடுகளுக்குப் பின்னால், மகத்தான ஆன்மாக்களின் ஞானத்தில், நாம் பெறும் ஒவ்வொரு தயவிலும், மற்றும் நமது சொந்த உணர்வுநிலையின் ஆன்ம-மென் குரலில், வெளிப்படுத்தப்படுகிறான்.
நன்றியுணர்வு பற்றிய பொதுவான கருத்து என்னவெனில் நாம் எதிர்பார்க்காத சில அழகான எதிர்பாரா நிகழ்விற்கான அல்லது பரிசுக்கான ஒரு மறுமொழியாகும். ஆனால் ஒரு ஆன்மீக நடைமுறையாக நன்றியுணர்வு மிகவும் ஆழமானது. இறைவன் எங்கும் நிறைந்தவன் மற்றும் எல்லாவற்றிலும் இயங்குகிறான் என்ற செயற்படும் விழிப்புணர்வுக்கு இதயத்தை மீண்டும் மீண்டும் இசைவிப்பது தான் அது. அற்பமாகத் தோன்றும் எதையுமே கூட—நாம் “உரிமை” கொண்டாடும் ஒரு விஷயமாக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நல்ல மற்றும் அழகான விஷயங்கள் அனைத்தையும்—உணர்வுபூர்வமான பாராட்டுடன் கவனிப்பதன் மூலம் இந்த திறனை நாம் மேம்படுத்திக்கொள்ளலாம். நம் வாழ்க்கை உண்மையில் எவ்வளவு அருளாசிகள் நிறைந்தவை என்பதை கவனத்தில் கொள்வதுவே இறை-அனுபூதியின் ஒரு வடிவம் ஆகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மூலம் நம்மை நேசித்து, நம் வழியை எளிதாக்கும் மற்றும் நமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் எல்லாச் சிறிய விஷயங்களின் வாயிலாகவும் நம்மை கவனித்துக் கொள்பவன் அவனே என்பதை நாம் அறிகிறோம். ஆன்மீக அறியாமையை “நன்றி, இறைவா” என்று சொல்லும் பழக்கத்தால் மாற்றீடு செய்வதன் மூலம், இறைவனுடன் ஒரு நெருக்கமான தனிப்பட்ட தொடர்பை வளர்த்துக்கொள்கிறோம், இது அவனது அருட்கொடை நம் வாழ்க்கையில் இடைவிடாமல் பாய அனுமதிக்கிறது.

நல்லதைத் தேடுவதிலும், அளிப்பவனுக்கு நன்றி தெரிவிப்பதிலும் நாம் தொடர்ந்து நிலைத்திருந்தால், அவனுடைய ஆதரவளிக்கும் இருப்பின் உத்தரவாதம் நமக்கு எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையால் நமக்குச் சக்தியூட்டுகிறது, மேலும் வாழ்க்கை நமது பாதையில் சிரமங்கள் எனும் கற்களை வீசும் போது நம்மை வலுப்படுத்துகிறது. பயத்துடன் எதிர்வினையாற்றுவதற்கோ அல்லது ஓடிவிடுவதற்கோ பதிலாக, நாம் அவற்றை எடுத்து, அந்த அனுபவங்களில் உள்ளார்ந்த படிப்பினைகளையும் கருணையையும் தேடிப் பாராட்டினால், அவை அருளாசிகளாக மாறியிருப்பதைக் காண்போம். இறைவன் மீதான நமது நம்பிக்கை அதிகரிக்கும் போது, நம் நன்றி உணர்வுக்கு இனியும் ஒரு வெளிப்புற நோக்கம் தேவையில்லை. நமது வாழ்க்கையில் எல்லாவற்றிற்காகவும் ஆன இதய நன்றியுணர்வின் தொடர்ச்சியான அடியொழுக்கிலிருந்து இது எழுகிறது, ஏனென்றால் நமது ஆன்மாக்களை அவற்றின் இயல்பான தெய்வீகத்தன்மை, எவராலும் வெல்ல முடியாத தன்மை, பேரின்பம் ஆகியவற்றுக்கு விழிப்படையச் செய்ய அவன் எல்லாச் சூழ்நிலைகளின் வழியாகவும் பணியாற்றுகிறான் என்பதை நாம் அறிவோம்.

தெய்வீகக் கொடையாளருக்கான நன்றியுணர்வு மற்றவர்களுக்கான பரிவில் மற்றும் அவனது அமோகமான பெருந்தகைமையையும் அன்பான கருணையையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதின் ஆனந்தத்தில் பொங்கிப் பாய்கிறது. செயல்களில் அந்தக் குணங்களை வெளிப்படுத்துவதன் மூலம், மற்றவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கும் அத்தகைய நபராக நீங்கள் ஆகிறீர்கள்—மற்றும் இதையடுத்து அவர்கள் இந்த எல்லைக்குட்பட்ட உலகில் எல்லையற்றவனின் மெய்யான கருணையை அளிக்கும், அளிக்கும், அளிக்கும் தூய்மைப்படுத்தும் சுழற்சிக்குள் நுழைய ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் நன்றி-நவிலும் நாளின் அந்த உண்மையான ஆனந்தத்தைப் பெற வாழ்த்தும்,

ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2013 செல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp