YSS

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் புத்தாண்டுச் செய்தி: 2014

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் புத்தாண்டு செய்தி

புத்தாண்டு 2014

“உங்களை மாற்றிக்கொள்ள உள்முகமாக தீர்மானியுங்கள், உங்கள் மனஉறுதிக்கேற்ப உங்கள் விதியை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

புத்தாண்டை நாம் வரவேற்கும் அதே சமயம், குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் எமது பிரார்த்தனைகளில் உலகெங்கிலும் உள்ள ஆன்மீகக் குடும்பத்தைக் குறிப்பாக நினைவு கூறுகிறோம்; உங்களுடைய வாழ்க்கைகளில் அகஅமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும், உங்களது தகுதியான இலக்குகளை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றிபெறவும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். கிறிஸ்துமஸ் பருவத்தில் உங்களுடைய அன்பான எண்ணங்கள், விடுமுறை வாழ்த்துக்கள், நினைவுகூரல்கள் ஆகியவற்றுக்காகவும் கடந்த ஆண்டில் நீங்கள் செய்த பல அன்புச்செயல்களுக்காகவும் நாங்கள் நன்றி கூறுகிறோம். இறைவனில் மற்றும் குருதேவரின் இலட்சியங்களில் மற்றும் அவர்களின் சாசுவத அன்பில் நம்மை ஒன்றிணைக்கும் தெய்வீகத் தோழமையை எங்கள் இதயங்களில் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றுகிறோம்.

இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி நம் அன்புக்குரிய ஸ்ரீ தயா மாதாவின் நூறாவது பிறந்த நாள் நிறைவைக் குறிக்கிறது. அவருடைய தெய்வீக வாழ்க்கை நம் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது, மற்றும் இந்த உலகத்திற்கு அப்பால் உள்ள ஒளி மற்றும் ஆனந்தப் பேரின்ப மண்டலங்களில் அவருடைய ஆன்மா சுதந்திரமாக இருந்தாலும், கீழை மற்றும் மேலைநாடுகள் இரண்டிலும் குருதேவரின் ஆன்மீகக் குடும்பத்தின் மீது அவர் பொழிந்த அன்பும் அக்கறையும் இன்னும் நம்முடன் உள்ளன. குருதேவரின், “அன்பால் மட்டுமே என் இடத்தை நிரப்ப முடியும்” என்ற வார்த்தைகள் அவரிடம் முழு வெளிப்பாட்டைக் கண்டன, மற்றும் அவரது அழகான உதாரணத்தின் வாயிலாக எப்போதும் நம் உணர்வுநிலையில் ஒத்திசைவாக அதிரும். அந்த அன்பும் அவரது ஆக்கப்பூர்வமான உணர்வும் இறைவன் மீதான நம்பிக்கையும் இந்தப் புதிய வருடத்தில் எப்போதும் உங்களுக்கு உத்வேகமூட்டட்டும்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் நம் வாழ்வில் ஒரு புதிய ஆரம்பத்தின் அருளாசிகளை வழங்குகிறது, நமது உன்னதமான பேரார்வங்களுக்கு புத்துயிரூட்டவும், அவற்றை உருப்பெறச் செய்ய நமது மன உறுதிக்குச் சக்தியூட்டவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் எதிர்காலத்திற்கான திறன்களை ஆராய, கடந்த கால அனுபவங்கள் மற்றும் படிவங்களுக்கு அப்பால் பார்ப்பதன் மூலம், நமது கண்ணோட்டத்தை விரிவாக்க அது நம்மைத் தூண்டுகிறது. அந்த எதிர்காலத்தை ஆனந்தமாக, அச்சமின்றி, மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்புகளுடன் எதிர்கொள்ளும் அகப்பாதுகாப்பு, தன்னுடைய பிரதிபிம்பத்தில் நம்மை உருவாக்கிய மாபெரும் ஒருவனில் நம் வாழ்க்கையை நங்கூரமிடும்போது வருகிறது. குருதேவர் எங்களிடம் கூறினார், “நாம் ஒவ்வொருவரும் இறைவனின் குழந்தை. நாம் அவனுடைய மெய்ப்பொருளிலிருந்து அதன் முழுமையான தூய்மை மற்றும் மகிமை மற்றும் ஆனந்தத்தில் பிறந்தோம். அந்தப் பாரம்பரியம் மறுக்க முடியாதது.” நாம் ஒரு பலவீனமான மனித உயிர் அல்ல, ஆனால் நம் மனதையும் விருப்பாற்றலையும் ஆளுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ள ஓர் அசாத்திய ஆன்மா என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டில் நுழைந்து, அந்தத் தேர்ந்தெடுக்கும் திறனை விவேகத்துடன் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தால், எந்தப் பழக்கமோ அல்லது சூழ்நிலையோ நம் வழியில் தடையாக நிற்க முடியாது. நமது திறன்களை நீட்டிக்கச் செய்யும் அல்லது நமது புரிதலுக்குச் சவால் விடும் சூழ்நிலைகள் கூட, நமது உணர்வுநிலைக்குள் ஆழ்ந்து சென்று, நமது ஆன்மாவின் முழுச் சக்தியையும் வெளிக்கொணர எது தேவையோ, அதை நமக்குக் கொண்டு வரும் என்பதை நாம் காண்போம்.

தியானத்தில் நாம் இறைவனின் இருப்பை உணரும்போது, நமது உணர்வுநிலையானது, அவனுடைய ஒளியையும் அருளையும் தேவையற்ற படிவங்களைக் கரைக்க அனுமதித்தவாறு, மேலும் இணக்கமானதாக மாறுகிறது. அவனைப் பற்றிய சிந்தனையில் நாம் அதிக அளவில் வாழும்போது, அந்த எல்லையற்ற பேராதாரத்திலிருந்து ஆனந்தமும் ஆற்றலும் நமக்குப் பாய்கின்றன, மேலும் “இறைவனால் எதையும் செய்ய முடியும், அவனது வற்றாத இயல்புடன் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டால் உங்களாலும் அதே போல் செய்ய முடியும்.” என்ற குருதேவரின் வார்த்தைகளை நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம். உங்கள் விசுவாசம் மற்றும் உறுதியால், நீங்கள் அந்த உண்மையை உணர்ந்தறிந்து, உங்கள் சொந்த வெற்றிகரமான வாழ்க்கையின் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்க முடியும்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இறைவனின் அருளாசிகள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா
பதிப்புரிமை © 2013 ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp