YSS

குரு பூர்ணிமா — 2015 ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் செய்தி

அன்புள்ளவர்களே,

ஜூலை 31, 2015

குருவுக்கு மரியாதை செலுத்தும் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பின்பற்றும், உலகெங்கிலும் உள்ள பக்தர்களால் கொண்டாடப்படும் இப் புனித குரு பூர்ணிமா நன்னாளில், நாம் நமது அன்புக்குரிய குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் திருப்பாதங்களில் நமது இதயங்களின் பக்தியையும் நன்றியையும் சமர்ப்பிக்கிறோம். மாயையின் இருளிலிருந்து நாம் இறைவனில் காணவேண்டிய ஒளிக்கும் சுதந்திரத்திற்குமான பயணத்தில் நமது நிரந்தர நண்பனாகவும் வழிகாட்டியாகவும் இருக்க அவனுடைய அன்பின் இத்தகைய ஒரு தூய வழித்தடமான குருவிடம் இறைவன் நம்மை ஈர்த்ததில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். குருவின் அன்பு மற்றும் ஞானத்திற்காக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது இதயத்தையும் மனத்தையும் புதிதாகத் திறந்துவைக்க பிரார்த்திக்கிறேன், அதனால் அவர் உங்களுக்காக மிகவும் நேசிக்கும் விருப்பத்தை — உங்களது ஆன்மாவின் தெய்வீக அன்பனுடன் நீங்கள் ஐக்கியமாதலை — நிறைவேற்ற இயலும்.

பல பிறவிகளாக நீங்கள் அகந்தை எனும் சிறிய கூண்டில் — அதன் வரம்புகளையும், உங்கள் மகிழ்ச்சியின் மீதான அதன் நிபந்தனைகளையும், இந்த உலகின் கணிக்க முடியாத சூழ்நிலைகளுக்கு அது பாதிப்படைவதையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்திருக்கலாம். ஆன்மாவின் வீர குணங்களை எழுப்ப குருதேவர் வருகிறார், இதன் மூலம் நம் உள்ளார்ந்த தெய்வீகத்தின் வெளிப்பாட்டைத் தடுக்கும் அனைத்தையும் நாம் வெல்ல முடியும். குருதேவர் தனது சொந்த குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் பற்றி கூறியது போல்: “அவர் என்னிடம் பரிபூரணத்தை விரும்பினார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதுவே அவருடைய மகிழ்ச்சி. நான் இறைவனை அறிய வேண்டும், என் இதயம் விரும்பிய தெய்வீகத் தாயுடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.” அதுவே நமக்காக நமது குருவின் ஆசையும் கூட. அவர் கொடுத்துள்ள சாதனாவானது, விசுவாசத்துடன் பயிற்சி செய்யப்படும் போது, தவறாமல் அந்த இலக்கை நோக்கி இட்டுச்செல்கிறது, மேலும் அவர், “இறைவன் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளான், நான் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று உறுதியளித்தார். அவருடைய வாக்குறுதியில் உள்ளார்ந்துள்ள ஒரு நிபந்தனையற்ற அன்பு, அது இடம் மற்றும் காலத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்து, இறை-உணர்வை அடையும் வரை உங்களைக் கண்காணிக்கும். சீடரின் பங்கு, குருவின் அன்பை அதன் அனைத்து பாவனைகளிலும் அறிந்துகொண்டு ஏற்றுக் கொள்வதாகும் — அவருடைய வழிகாட்டுதலின் வார்த்தைகளில், பதிலளிக்கப்பட்ட பிரார்த்தனைகளில், குறிப்பாக சவால்கள் மற்றும் இன்னல்களில் ஒருவரின் விசுவாசம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்ப்பதற்கும், மாறுவதற்கும் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. எங்களில் குருதேவருடன் இருந்தவர்கள், நாங்கள் ஒரு புதிய அளவில் ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்துவிட்டோம் என்று நினைக்கும் போது, அவர் “தடையை நீக்குவார்” என்று பெரும்பாலும் கண்டோம். “என்னால் முடியாது” என்ற எண்ணத்தை எங்கள் உணர்வில் இருந்து தடை செய்ய நாங்கள் கற்றுக்கொண்டோம், உங்களிடமும் அவர் அதையே கேட்கிறார் — ஏனென்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் உயர வேண்டும் என்ற விருப்பத்தால், நீங்கள் அவருடைய முழுமையான அருளாசியைப் பெறுவீர்கள். மனித இயல்பு எதிர்த்தால், திறமையாக பகுத்தறியும் மனதைப் புறக்கணித்து, இதயத்தினுடைய பக்தியின் அமைதியான குரலைக் கேட்க வேண்டிய நேரம் அதுதான். இது அவரை நம்பி அவரிடம் சரணடையும்படி நம்மைத் தூண்டுகிறது. சரணாகதிதான், குருவின் தூய்மைப்படுத்தும், மாற்றமடையச் செய்யும் சக்திக்கு நமது உணர்வுநிலையில் ஒவ்வொரு மூடிய கதவையும் திறக்கும் திறவுகோல்.

குருதேவருக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு, உங்கள் சொந்த இரட்சிப்பில் அவருடன் ஒத்துழைப்பது. அவருடைய தரங்கள் உயர்ந்தவை, இருப்பினும் அவர் உங்களுக்கு எல்லையற்ற இரக்கத்துடன் வழிகாட்டுவார், ஏனெனில் அவர் உங்களுக்குள் இருக்கும் இறைப் பிரதிபிம்பத்தைக் கண்டு கௌரவிக்கிறார், நீங்களும் கூட அதை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் போதித்த உண்மைகளைப் பயன்படுத்தவும், மாயை எட்டும் தொலைவிற்கு அப்பால் உள்ள ஆன்ம அமைதியில் தினமும் அவருடன் உங்களை இசைவித்துக் கொள்ளவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அங்கு சிறிய “நான்” எனும் வரம்புகளைத் துறந்து, உங்களது உண்மையான தெய்வீக ஆன்மாவாக மாற உதவுவதற்கு, அவருடைய இருப்பையும் இறைவனின் சக்தியையும் அவர் மூலம் பாய்வதை நீங்கள் மிகவும் கண்கூடாக உணர முடியும். ஜெய் குரு!

இறைவன் மற்றும் குருதேவரின் அன்பு மற்றும் இடைவிடாத அருளாசிகளில்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2015 ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெல்லோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்யேகமானவை.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp