இறைவனை அறிதல்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துப் படைப்புகளிலிருந்து சில பகுதிகள்

Rose with dew drops advertising God's beauty

“இறைவனைப் பற்றி எல்லா நேரங்களிலும் சிந்தித்துக் கொண்டிருப்பது நடைமுறைக்கேற்றதாக அரிதாகவே தோன்றுகிறது,” என்று ஒரு வருகையாளர் குறிப்பிட்டார். பரமஹம்ஸ யோகானந்தர் பதிலளித்தார்:

“உலகம் உங்களுடன் ஒத்துப்போகிறது, ஆனால் உலகம் ஒரு மகிழ்ச்சியான இடமா? இறைவனைக் கைவிடும் மனிதரை உண்மையான ஆனந்தம் தவிர்க்கிறது, ஏனெனில் அவனேதான் பேரின்பம். பூமியில் அவனுடைய பக்தர்கள் அமைதி எனும் ஓர் அக விண்ணுலகில் வாழ்கின்றனர்; ஆனால் அவனை மறப்போர் பாதுகாப்பின்மை மற்றும் ஏமாற்றம் எனும் ஒரு சுயமாக-உருவாக்கப்பட்ட நரகத்தில் தமது நாட்களைக் கடத்துகின்றனர். இறைவனை “நண்பர்களாக்கிக்” கொள்வது மெய்யாகவே நடைமுறைக்கேற்றதாகும்.

அவனுடைய தோழமையைப் பேணிவளருங்கள். உங்களுடைய மிகவும் பிரியமான நண்பனை நீங்கள் அறிவதைப் போலவேதான் இறைவனை அறிவதும் சாத்தியமாகும். அதுதான் உண்மை.

முதலில் இறைவனைப் பற்றிய ஒரு சரியான கருத்துப்படிவத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்—எதன் வாயிலாக அவனுடன் ஓர் உறவை ஏற்படுத்திக்கொள்ள உங்களால் முடிகிறதோ, அந்த ஒரு திட்டவட்டமான கருத்தை—அதன்பின் மனக்கருத்துருவம் உண்மையான உணர்வாக மாறும் வரை நீங்கள் தியானம் செய்யவும் பிரார்த்தனை செய்யவும் வேண்டும். பின்னர் நீங்கள் அவனை அறிவீர்கள். நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இறைவன் வருவான்.

தமது மாபெரும் படைப்பாளியை அறியாமை எனும் புகையாலும் தண்டனை எனும் நெருப்பாலும் மனிதரை அதிகார மனப்பான்மையுடன் சோதனை செய்யும் ஒருவனாக, மற்றும் மனிதரின் செயல்களை இரக்கமற்ற நுண்ணாய்வால் மதிப்பீடு செய்யும் ஒருவனாக சித்தரிப்போர் உள்ளனர். அவர்கள் இவ்வாறு ஓர் அன்பான, கருணையுள்ள தெய்வத்தந்தையாக இருக்கும் இறைவனைப் பற்றிய உண்மையான கருத்துப்படிவத்தை ஒரு கண்டிப்பான, இரக்கமற்ற, மற்றும் பழவாங்கும் உணர்வுள்ள கொடுங்கோலன் என்ற ஒரு தவறான உருவமாக திரிக்கின்றனர். ஆனால் இறைவனுடனான கூட்டுறவில் இருப்போர், எல்லா அன்பின் மற்றும் நன்மையின் அளவிறுதியற்ற பாத்திரமாக இருக்கும் கருணையின் பேரிருப்பாக அல்லாமல் வேறுவிதமாக அவனைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனம் என்று அறிவர்.

இறைவன் நிலைபேறான பேரின்பம் ஆகும். அவனுடைய இருப்பு அன்பு, ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகும். அவன் அருவம், உருவம் இரண்டாகவும் இருக்கிறான், மற்றும் தான் விரும்பும் எந்த வழியிலும் தன்னை வெளிப்படுத்துகிறான். அவன் மகான்களுக்கு முன், அவரவர் மிகவும் விருப்பப்படும் வடிவில், காட்சியளிக்கிறான்: ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்துவைப் பார்க்கிறார், ஓர் இந்து கிருஷ்ணனையோ அல்லது தெய்வ அன்னையையோ தரிசிக்கிறார், மற்றும் அது போல. அருவ வழிபாட்டிற்கு மாறும் பக்தர்கள் இறைவனை ஓர் எல்லையற்ற பேரொளியாக அல்லது ஓம், ஆதி வார்த்தை, புனித ஆவி எனும் அற்புதமான ஒலியாக உணருகிறார். தெய்வீகத்தின் மற்ற ஒவ்வொரு அம்சத்தையும்—அன்பு, ஞானம், அமரத்துவம்—முழுமையாகக் கொண்டிருக்கும் அந்தப் பேரின்பத்தை உணருவதே ஒரு மனிதரால் பெறமுடிகின்ற மிக உயர்ந்த அனுபவம் ஆகும்.

ஆனால் என்னால் இறைவனின் இயல்பை வார்த்தைகளில் எப்படி அறிவிக்க முடியும்? அவன் வருணனைக்குள் அடங்காதவன், விவரிக்க முடியாதவன். உங்களால் ஆழ்ந்த தியானத்தில் மட்டுமே அவனுடைய தனித்துவமான சாரத்தை அறிய முடியும்.

உறுதிமொழி

சங்கல்பத் தத்துவமும் அறிவுறுத்தல்களும்

“ஒவ்வோர் எண்ணம் மற்றும் செயற்பாடு எனும் ஆலயத்திலும் நான் உன்னைக் காணும் படியாக என்னை ஆசீர்வதிப்பாய். அகத்தே உன்னைக் கண்ட பின், நான் உன்னைப் புறத்தே, எல்லா மக்களிடமும் எல்லா நிலைமைகளிலும் காண்பேன்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்,
மெடாஃபிஸிகல் மெடிடேஷன்ஸ்

மேலும் ஆய்வு செய்வீர்

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp