YSS

2017- ஜன்மாஷ்டமிக்காக ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதாவிடம் இருந்து வந்த செய்தி

அன்புக்குரியவர்களே,

பகவான் கிருஷ்ணரின் அவதார நாளான ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களுடன் நாம் இணையும்போது, நமது இதயங்கள், அவரது வாழ்க்கை மற்றும் அமரத்துவ போதனைகள் எனும் தூயதடம் வாயிலாகப் பொழியும் இறைவனின் அன்பு மற்றும் ஆனந்தத்தின் வசீகர அழைப்பினால், புதிதாக எழுச்சியடைகின்றன. பகவத் கீதை என்னும் தெய்வீகக்கீதம் மூலம் பகவான் கிருஷ்ணர், பிறவிகள் தோறும் நாம் நாடிய சாசுவத ஆனந்தம், நமது கவனத்தை மாயையால் பிணைக்கப்பட்ட அகந்தையிலிருந்து நம் அகத்தே உள்ள சாசுவத ஆன்ம விடுதலை மற்றும் பேரின்பத்தின் மீது நாம் மட்டும் மீண்டும் குவித்தால், நம் கைக்கு எட்டும் தொலைவிலேயே உள்ளது என்பதை, என்றும் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் நிச்சயமற்ற புறவுலகில் மனநிறைவை நாடுவதிலேயே பழக்கப்பட்டு மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தை மட்டுமே காண்கிறோம். ஆனால் கீதையில் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கும் மற்றும் மாறிமாறி வரும் இன்ப துன்பங்கள் எனும் குறுகிய உலகப்பாதையில் பயணித்து சோர்வுற்ற அனைவருக்கும், எவ்வாறு அந்த சுழற்சியை உடைப்பது என்று தெரிவிக்கிறார்; அதாவது சுய-வரையறைப்படுத்தும், மற்றும் கர்மவினையை விளைவிக்கும் பழக்கங்களை வென்று நமது ஆன்ம ஏக்கங்களின் பேராதாரமான தெய்வீக புருஷனைப் பின்பற்றுவதன் மூலம் அந்த சுழற்சியை உடைத்தல்.

நமது உணர்வு நிலையின் அந்த மறுசீரமைப்பு, மற்றவர்களுடைய மற்றும் உலகத்தினுடைய நலத்திற்கான நமது மிகப்பெரிய கொடையாகும். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நினைவுபடுத்தியது போல், அகந்தையை முறியடிக்க தியானம் என்னும் ஆன்மீக செயல்பாடு அத்துடன் பொருள்சார் உலகில் தன்னலமற்ற செயல்பாடு என இரண்டுமே தேவை. தியானத்தில் ஆழ்ந்த அசைவற்ற நிலையில் இறைவனின் மாற்றமுறச் செய்யும் இருப்பின் மெய்ம்மை உணரப்படுகிறது; மேலும் நாம் தினசரி செயல்பாடுகளில் ஈடுபடும் போது இறைவனை இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் அகந்தையின் தாக்கத்தை எதிர்க்கும் வலிமையை நாம் ஏற்படுத்துகிறோம்.

ஆன்மீக மற்றும் லௌகீக செயல்பாடுகளின் முக்தியளிக்கும் சக்திக்கான தீர்வு நமது செயல் நோக்கமே. அகந்தைப் பொறுப்பிலிருந்து, செயல்களின் பலன்களுக்கு பற்றுடன் இருக்கும் வரை மாயையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு நாம் உட் பட்டுள்ளோம். ஆனால் நாம் இறைவனில் நிலைபெற்று அவனுக்காக மட்டுமே செயல்புரியும் போது, நமது வாழ்க்கை எத்துணை எளிமையாகவும் மகிழ்ச்சி மிக்கதாகவும் மாறுகிறது. நீங்கள் சொந்த லாபத்திற்காகவோ அல்லது மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்காகவோ ஏதோ ஒரு காரியத்தின் மீது கடினமாக உழைத்தால், பலனைப்பற்றிய கவலைகள் பெரும்பாலும் உங்கள் மனத்தை துக்கமுறச் செய்கின்றன. ஆனால் நீங்கள் அகமுகமாக எந்த ஒரு லௌகீக அல்லது ஆன்மீக முயற்சியை ஒரு பக்திக் கொடையாக இறைவனுக்கு அர்ப்பணித்தால் அந்த பணியை நிறைவேற்றுவதற்கான அதே உற்சாகம் உள்ளது; ஆனால் நீங்கள் சமநிலையான மனத்துடன், உங்கள் முயற்சிகள் மீது அவனது அருளாசிகளின் உத்தரவாதத்தோடு செயல் புரியலாம். இறைவன் கிருஷ்ணர் வாயிலாக அர்ஜுனனுக்கு உரைத்தான்: “அனைத்து செயல்களையும் என்னிடம் ஒப்படைத்து விடு. அகந்தை உணர்வும் எதிர்பார்ப்பும் இன்றி உன் கவனம் ஆன்மாவில் ஒருமுகப்பட்ட நிலையில் மிதமிஞ்சிய கவலையிலிருந்து விடுபட்டவனாய்,போரில் (செயல்பாட்டில்) ஈடுபடு.” இதைப்போலவே, நீங்கள் ஒரு பழக்கத்தை மாற்ற விரும்பினால், வெறித்தனமாக அதன்மீதே சிந்தனை செய்வதற்கு மாறாக, அது இறைவனின் திருப்பாதங்களில், அப்பழக்கத்தை முறியடிக்கும் உங்கள் சிரத்தை மிகுந்த முயற்சிகளோடு சமர்ப்பித்தால், அவனது உதவிக்கு நீங்கள் உட்படுகிறீர்கள். தியானத்தில் கூட, பலன்களுக்கான அமைதியற்ற கவலை உணர்வினால் பாதிக்கப்படாமல் உங்கள் மனப்பூர்வமான முயற்சிகளை அளித்தால், அவனது மறுமொழி அளிக்கும் அருள் ஆசைகளை ஏற்பதற்கு கூடுதல் திறனுள்ளாவீர்கள்.

உங்கள் தினசரி ஆன்மீக மற்றும் லௌகீகக் கடமைகளை பகவான் கிருஷ்ணர் உபதேசித்த தெய்வீக உணர்வுடன் ஆற்றுவதன் மூலம், அகந்தையின் சுமைகளான மன இறுக்கம் மற்றும் ஏமாற்றம் ஆகியவை உதிர்ந்துவிழ, இறைவனில் நிலைபெற்ற ஒரு இதயத்தின் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான ஆனந்தமிக்க உணர்வினால் அவை மாற்றீடு செய்யப்படுவதை நீங்கள் உணர்வதற்கு என்றும் என் பிரார்த்தணைகள் உங்களுக்கு உண்டு. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த லௌகீக உணர்வுநிலை உங்கள் மீதான அதிகாரத்தை இழக்கும், மேலும் நீங்கள் அசைக்க முடியாத அகஅமைதி மற்றும் தெய்வீக ஆனந்தமெனும் ஆன்ம வெற்றியை அடைவீர்கள்.

இறைவன் மற்றும் குருமார்களின் தெய்வீக அன்பில்,

ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதாபதிப்புரிமை © 2017 ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp