ஜன்மாஷ்டமிக்காக சுவாமி சிதானந்த கிரியிடம் இருந்து வந்த செய்தி -2018

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார நாளான ஜன்மாஷ்டமி, அவரது மேன்மையான வாழ்க்கையின் ஒளியினாலும் மகிமையினாலும் மனம் கவரப்பட்ட, உலகெங்கிலுமுள்ள நம் அனைவர் மத்தியிலும் பெரிதும் மகிழ்ந்து,கொண்டாடப்பட வேண்டிய நேரம் இது. தர்மத்தை மீட்டெடுப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் நம் இதயங்களில் இறைவனது அன்பு மற்றும் ஆனந்தத்தின் ஒரு மொத்த வடிவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிருந்தாவனத்தின் கோபர்களும் கோபியர்களும் கிருஷ்ணரது வேய்ங்குழல் இன்னிசை கீதங்களில் மயக்கமுற்று ஈர்க்கப்பட்டது போல், அவரது சாசுவத இருப்பின் தெய்வீக அழகு நம் ஆன்மாக்களை, புனித பகவத் கீதையின் மூலம் இன்று கூட நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கும், அவர் அர்ஜுனனுக்கு தெரிவித்த காலத்தை வென்ற உண்மைகளின் வழிகாட்டுதல் வாயிலாக என்றென்றும் இறைவனை நோக்கி அழைத்துச் செல்லட்டும். பிறவிகள் தோறும் நாம் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் என்றும் மாறிக்கொண்டிருக்கும் இருமையின் தளத்தில் நாடிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவை அங்கு பெறப்பட முடியாது; ஆனால் இறைவன், மாறி மாறி வரும் மாயையின் அலைகள் எனும் இன்பம், துன்பம், இலாபம், நஷ்டம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்க்கையை நாம் மேலோட்டமாகவே வாழ உத்தேசிக்கவில்லை. அவன் நம்மை நம் இருப்பிற்குள் ஆழ்ந்துமூழ்கி நம் ஆன்மாவின் நிலைகுலையாத அமைதி மற்றும் தெய்வீகத்தை நாம் காண விரும்புகிறான். அர்ஜுனனை கிருஷ்ணர் மூலம் வழிநடத்தியது போல், உங்கள் உண்மையான இயல்பை நீங்கள் அறிந்து கொள்ள அவன் உதவுவான். அந்தப் பயணம் சுய விழிப்புணர்வை வளர்ப்பதன் வாயிலாகத் துவங்குகிறது. உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்,”நான் என் பழக்கங்கள், புலன் ஆசைகள் மற்றும் அகந்தையின் விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றைப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறேனா? அல்லது நான் உணர்வுபூர்வமாக ஆன்மாவின் விவேகத்தால் வழிநடத்தப்பட முயற்சி செய்கிறேனா?”உங்கள் அகத்தே நீங்கள் நினைப்பதை விட உங்கள் வாழ்க்கைக்கும் இச்சா சக்திக்கும் பொறுப்பேற்க அதிக வலிமை உள்ளது. அர்ஜுனன் பலவீனத்தால் தாக்குண்ட நேரங்களில், கிருஷ்ணர் அவருக்கு, துணிவு மிகுந்த அவரது உண்மையான ஆன்மாவையும் மாயைக்கு எதிரான போரில், ஒரு தெய்வீகப் போர்வீரன் என்ற முறையில் முயற்சியைக் கைவிடக்கூடாத அவரது கடமையையும் நினைவூட்டினார். நீங்களும் கூட உங்கள் குரு மற்றும் உங்கள் சொந்த ஆன்மாவின் விவேகமிக்க வழிகாட்டுதலைப் பின்பற்றினால் அதிகமாக அமைதியையும் சுதந்திரத்தின் ஒரு ஆனந்த உணர்வையும் உணர்வீர்கள். அமைதியின்மையை விளைவிக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்கள் நம்மைப்பிணைத்து வைக்கின்றன; அமைதியை அளிக்கும் எண்ணங்களும் செயல்களும் நம்மை விடுகின்றன. நமது குருதேவர் ஸ்ரீ ஶ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் கூறியுள்ளது போல்,”அமைதி ஆன்மாவிலிருந்து வெளிப்படுகிறது மற்றும் அந்தப்புனித அகச்சூழ்நிலையில் தான் உண்மையான ஆனந்தம் மலர்ச்சியுறுகிறது.” கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இறைவனது இருப்பின் முழுஅனுபவம் குருவால் அளிக்கப்பட்ட தியான வழிமுறைகளை சிரத்தையுடனும் பக்தியுடனும் பயிற்சி செய்வதன் வாயிலாக வருகிறது என்று போதித்தார். உடல் மற்றும் மனத்தின் அமைதியின்மை குறையும்போது, உங்கள் இதயத்திலும், ஆன்மாவிலும், அனைத்து ஆனந்தம், அனைத்து அன்பு, காரியத்தை நிறைவேற்றும் அனைத்து சக்தி ஆகியவற்றின் அடித்தளமான இறைவனை உணர்வீர்கள். இறைவனில் நிலைபெற்றபின், முன்னறிந்து கூறமுடியாத இவ்வுலகிலிருந்து இனிமேலும் ஒரு சிறிய ஆனந்தத்திற்காக நீங்கள் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஆனந்தம், ஒரு அகவெழுச்சியூட்டும் தாக்கத்தைப் பரவச்செய்து மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். மனித உணர்வு நிலையைத் தெய்வீக உணர்வு நிலையாக மாற்ற காலமும் முயற்சியும் பிடிக்கும்; ஆனால் குருதேவர் நமக்கு உறுதியளித்துள்ளார்: “இறைவனுடன் ஐக்கியத்தை நாடி ஆழ்தியானத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு கணமும், சமநிலைப்பட்ட மனத்தை பயிற்சி செய்வதற்கும் செயல்களின் பலன்களுக்கான ஆசையைத் துறப்பதற்கும் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் அதன் வெகுமானத்தைக் கொணர்கிறது – அதாவது துன்பத்தைக்களைந்து, அமைதியையும் ஆனந்தத்தையும் நிலைநாட்டுதல் மற்றும் கர்மவினையை மட்டுப்படுத்தி தீர்மானமான செயல்களில் இறைவனது வழிகாட்டும் ஞானத்துடன் உயரிய இணக்கத்தின் மூலம் பிழைகளைக் குறைத்தல் எனும் வெகுமானங்கள்”. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, வெற்றிக்கான வழி காட்டியது போல் அவர் ஆன்ம விடுதலையை நோக்கிய உங்கள் பயணத்திலும் வழிகாட்ட நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!

சுவாமி சிதானந்த கிரி

காப்புரிமை 2018 ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதைப் பகிர