நன்றி-நவிலும் நாள் 2011

“தற்போது உங்களிடம் உள்ள நல்லவற்றைக் கவனித்துப் பாருங்கள்; அவனுடைய கருணையின் ஒவ்வொரு புதிய வெளிப்பாட்டையும் விழிப்புடனும் உயிர்ப்புடனும் கவனியுங்கள்.” — பரமஹம்ஸ யோகானந்தர்

நன்றி-நவிலும் நாளில் —ஒவ்வொரு நல்ல பரிசையும் வழங்குபவனாகிய இறைவனிடமிருந்து நாம் பெற்ற அனைத்திற்காகவும் அன்பான பாராட்டுடன் கொண்டாட குடும்பம் மற்றும் நண்பர்களை ஒன்றிணைக்கும் ஒரு நேரத்தில் — பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் எங்களுடைய இதயப்பூர்வமான நன்றியை உங்களுடன் இணைந்து இறைவனுக்கு வழங்குகிறோம். உங்களுடைய தெய்வீகத் தோழமை மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும் ஓர் அருளாசி என்பதை எப்போதும் உணர்ந்தவாறு, எங்களுடைய சிறப்பான நினைவுமலர்களையும் அன்பையும், மற்றும் உலகெங்கிலும் உள்ள நமது ஆன்மீகக் குடும்பத்திற்கான பிரார்த்தனைகளையும் உங்களுக்கு அனுப்புகிறோம்.

இறைவனின் தாராளக் கொடையைப் பற்றிச் சிந்திப்பதற்காக ஒரு தேசிய தினத்தை ஒதுக்கும் பாரம்பரியத்தை குருதேவர் மிகவும் பாராட்டினார்; மேலும் அவர் ஒவ்வொரு நாளும் நன்றி உணர்வுடன் வாழ எங்களை ஊக்குவித்தார். நாம் இறைனுக்கு நன்றி நவில்கிறோமோ, இல்லையோ அவன் நம்மைப் பேணிக்காக்கிறான். அவனது இருப்பு நம் வாழ்க்கையில் ஊடுருவியுள்ள எண்ணற்ற வழிகளைப் பற்றி நாம் அறியும்போது அந்த உறவு எவ்வளவு அதிகம் இனிமையானதாகவும் மாற்றவல்லதாகவும் உள்ளது. அவனுடைய படைப்பின் அற்புதங்களுக்கு நாம் கண்களைத் திறந்து, ஒவ்வொரு தயவின் வாயிலாகவும் இறைவனுடன் ஒத்திசைந்து இருக்கும் ஆன்மாக்களாலும் தேவைப்படும் சமயங்களில் ஒவ்வொரு ஆறுதலான நுண்ணறிவாலும் வெளிப்படுத்தப்பட்ட மேம்படுத்தும் ஒவ்வொரு சத்தியத்தின் வாயிலாகவும், அவனுடைய அன்பின் தாக்கத்தை நாம் உணரும்போது, அவன் நம் நல்வாழ்விற்காக எத்துணை ஆழமாக அக்கறை காட்டுகிறான் என்று உணர்ந்தறியத் தொடங்குகிறோம். மனப்பூர்வமான நன்றியுணர்வால் நம் உணர்வுநிலையின் புலனுணர்வுத்திறத்தை நாம் செம்மைப்படுத்தும்போது, அவனுடனான நமது தொடர்பு வலுப்படுத்தப்படுகிறது, மேலும் இந்த உலகின் இருமைகளின் எதிர்மறை வெளிப்பாடுகளினால் நாம் குறைவாகவே பாதிக்கப்படுகிறோம்.

“நமக்குக் கிடைத்த அருளாசிகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்தல்” என்ற நடைமுறை, நம்மில், மற்றவர்களில், மற்றும் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் — இறைவன் மீதான நமது நம்பிக்கையைச் சோதிப்பவற்றில் கூட— உள்ள நல்லனவற்றைத் தேடவும் கவனம் செலுத்தவும் நம் மனத்தைப் பயிற்றுவிக்கிறது. இவ்வாறு, அவனுடைய அருள் ஒரு பிரார்த்தனையின் மறுமொழியாக வந்தாலும் அல்லது நமது திறன்களை நீட்டித்து, ஆன்மீக வலிமையிலும் புரிதலிலும் வளர ஒரு வாய்ப்பாக வந்தாலும் சரி, நாம் அவனது வழிகாட்டலையும் அன்பையும் மிகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கவர்களாகிறோம். நாம் அனுகூலமானதைப் பார்த்து அதன் பின்னால் இருப்பது இறைவனின் கை என்றுணரும் போது, அவன் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ள நம்மால் பெற்றுக்கொள்ள முடிகின்ற அவனுடைய உதவியின் மதிப்புமிக்க நினைவுகளை நாம் சேமித்து வைக்கிறோம். அவனுடனான விசுவாசமும் இணக்கமும் அதிகரிக்கும் போது, அவன் நம்மிடம் ஒருபோதும் அலட்சியமாக இல்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.”நீங்கள் அவனையும் அவன் மறுமொழி அளிக்கும் பல வழிகளையும் கவனித்துக் கொண்டிருந்தால், உண்மையில் அவன் உங்களுக்கு எல்லா நேரத்திலும் பதிலளிக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று குருதேவர் கூறினார். அகக் கூட்டுறவின் அமைதியில், பொருள்சார் உலகத்தின் கவனச்சிதறல்கள் விலகி, நாம் அவனுடைய ஒளியிலும் அன்பிலும் ஆழ்ந்திருக்கும்போது, இறைவன் நம்மை எப்போதும் பேணிக் காக்கிறான் என்ற மிகப்பெரிய உறுதிப்பாடு வருகிறது. நமது உணர்வுநிலையின் அடியில் அவனது எல்லையற்ற பெருவாழ்வு மற்றும் பேரிருப்பு எனும் ஆதரவளிக்கும் பெருங்கடலை உணரும்போது, நாம் அதை அறியாவிட்டாலும், அவன் நமக்கு உயர்ந்த பொக்கிஷத்தை—சாசுவதப் பரிசாக தன்னையே–வழங்கியுள்ளான் என்பதைக் கண்டுணர்கிறோம்.

இந்த ஞான-உணர்வுத்திறனை வளர்ப்பது இதயத்தில் மாபெரும் தெய்வீகனுக்கான நன்றியை நிரப்புகிறது. அந்த நன்றியுணர்வு வார்த்தைகளினால் மட்டுமல்லாமல், கொடுப்பதற்கான—அவனை அறியவும் நேசிக்கவும் நாம் எடுக்கும் முயற்சிகளை நிபந்தனையின்றி அவனுக்கு வழங்குவதற்கான; மற்றும் பொருள்சார் அல்லது வேறு தேவையுள்ளவர்களை அணுகி உதவுவதற்கான—விருப்பமாகவும் நிரம்பி வழிகிறது. கொடுப்பதில் இருக்கும் தூய ஆனந்தத்தை—ஆன்மாவை-விரிவாக்கும் நன்றியுணர்வினால், அவனது அமோகம் நம் அக மற்றும் புற வாழ்க்கைகளில் மற்றும் நம் மூலம் அனைவருக்கும் தங்கு-தடையின்றிப் பாயும் போது கிடைக்கப் பெறும் ஆன்ம விடுதலையையும் பாதுகாப்புணர்வையும்–நீங்கள் கண்டுணர நான் என் சொந்த இதயத்திலிருந்து இந்த நன்றி-நவிலும் நாளில் பிரார்த்தனை செய்கிறேன்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட நன்றி-நவிலும் நாள் வாழ்த்துகள்,

ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2011 ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp