கிறிஸ்து உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் எப்போது அறிவீர்கள்?

ஒரு கிறிஸ்துமஸ் செய்திமடல்

When-Will-You-Know-That-Christ-Is-With-Youஇயேசு இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு கிறிஸ்து உணர்வுநிலை எனும் தொட்டிலில் அவதரித்தார். அவருடைய உலகளாவிய கிறிஸ்து உணர்வுநிலை ஒவ்வொரு விவேகமுள்ள மனிதனிலும் மீண்டும் பிறக்கிறது. எங்கும் வியாபித்துள்ள கிறிஸ்துவின் பிறப்பை உங்களுக்குள் தரிசிப்பதற்காக உங்கள் ஆன்மாவை விரிவாக்க வரும் கிறிஸ்துமஸில் நீங்கள் தயாரா?

இயேசுவின் பிறந்த நாளை பரிசுகளுடனும் கொண்டாட்டங்களுடனும் அனுசரிப்பது அவருடைய வாழ்க்கையின் இலட்சியங்களுக்கு அளிக்கப்படும் ஓரளவு மரியாதையையும் கவனத்தையும் காட்டுகிறது. ஆனால் உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அனைத்து உயிரினங்களின் மீதான அன்பு என்ற ஒரு புதிய உணர்வுநிலையின் பிறப்பை உங்களுக்குள் அனுபவிக்கும் படியாக, இந்தக் கிறிஸ்துமஸின் புனித சந்தர்ப்பத்திற்காக தியானம் செய்து, உங்கள் மனத்தைத் தயார் செய்வதே உண்மையில் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதாகும். எங்கும் வியாபித்துள்ள கிறிஸ்து உணர்வுநிலையை உங்கள் அன்பால்-விரிவடைந்த நெஞ்சகத்தில் பொருத்தமாக வைத்திருக்க, உங்கள் மனத்தில் இருந்து அனைத்துக் கர்வத்தையும் பாரபட்சங்களையும் விரட்டி விடுங்கள்.

கிறிஸ்துமஸில், உங்கள் வலுவான இச்சாசக்தியைச் சபலங்களின் சோதனைகளால் வெல்ல முடியாவிட்டால், கிறிஸ்து உண்மையில் உங்களுக்குள் அவதரித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வரும் கிறிஸ்துமஸில் நீங்கள் அமைதியின்மை எனும் சிலுவையில் அறையப்படும்போது அகத்தே அமைதியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றால், கிறிஸ்து உங்களுடன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கிறிஸ்துமஸ் தினத்தில் படையெடுக்கும் எண்ணக் கூட்டங்களின் அமைதியின்மை இருந்தபோதிலும் ஆழ்ந்த ஆனந்தத்துடன் உங்களால் தியானம் செய்ய முடிந்தால், தியானத்தின் தெய்வீக ஆனந்த வடிவில் கிறிஸ்து உங்களுக்குள் வெளிப்பட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மற்றவர்களின் அக்கிரமத்தின் வாயிலாக வரும் சிலுவையேற்றம் உங்களைக் கோபப்பட வைக்க முடியாதபோது, நீங்கள் கிறிஸ்துவிற்காகத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் மீது மற்றவர்கள் வெறுப்பை உமிழ்ந்த போதிலும் நீங்கள் அனைவருக்காகவும் அன்பை உணரும்போது, கிறிஸ்துவிற்கான ஒரு பீடம் உங்களுக்குள் உருவாக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தியானத்தின் முடிவில்லாத ஆனந்தத்தின் பரவசத்தை உங்களால் எப்பொழுதும் அகத்தே உணரமுடியும் போது, கிறிஸ்து எப்போதும் உங்களுடன் இருக்கிறார் என்பதையும், உங்கள் மரணமற்ற உணர்வுநிலைக்குள் நீங்கள் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆண்டும் சாசுவதமாக உண்மையான கிறிஸ்துமஸ் அனுபவத்தைக் கொண்டாடுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

(பரமஹம்ஸ யோகானந்தரின்  தி செகன்ட் கமிங் ஆஃப் க்ரைஸ்ட்: தி ரிசரெக்ஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் விதின் யு நூலிலிருந்து சில பகுதிகள்:)

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp