நியூஸ்லெட்டர் அண்ட் அப்பீல் – டிசம்பர் 2025

3 டிசம்பர், 2025
பரமஹம்ஸ யோகானந்தா - YSS வேண்டுகோள் நவம்பர் 2025

“இறைவன்தான்‌ என்‌ குரலின்‌ மூலமாக பேசுகிறார்‌ என்பது எனக்குத்‌ தெரியும்‌. இறைவனின்‌ குரல்தான்‌ யோகதா-வின்‌ குரல்‌. அதைப்‌ பின்பற்றுங்கள்‌. உயர்ந்த ஆன்மாக்கள்‌, இறைவனுக்கான ஏக்கத்துடன்‌ இருக்கும்‌ அவர்கள்‌, இப்பாதையைப்‌ பின்பற்றி, அவனுடைய சான்னித்தியத்தின்‌ அமிர்தத்தைப்‌ பருகுகின்றனர்‌. இந்தப்‌ போதனைகளை பயிற்சி செய்யுங்கள்‌, அதனால்‌ வாழ்க்கை எவ்வளவு அழகாகி விடுகிறது என்பதை நீங்களும்‌ காண்பீர்கள்‌.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

அன்பார்ந்த தெய்வீக ஆத்மனே,

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் அன்பு வணக்கங்களையும், தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் பிரார்த்தனைகள், நல்லெண்ணம் மற்றும் உறுதியான ஆதரவு மூலம் இந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற பல அருட்பேறுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த ஆண்டின் பல சிறப்பு சம்பவங்கள் பின்வருமாறு:

இவை அனைத்தும் உங்களைப் போன்ற பக்தர்களின் அன்பு மற்றும் தாராள மனப்பான்மையால் மட்டுமே சாத்தியமாகும். மனமார்ந்த நன்றியுடன், இந்த சாதனைகளின் மகிழ்ச்சியில் எங்களுடன் பங்கேற்கவும், அவர் வழங்கிய உன்னத கிரியா யோகா போதனைகள் மூலம் அனைத்து மனிதகுலத்தையும் ஆன்மீக ரீதியாக உயர்த்தும் குருதேவரின் தெய்வீகப் பணியை முன்னெடுத்துச் செல்வதில் எங்களுடன் பயணத்தைத் தொடரவும் உங்களை அழைக்கிறோம். உங்களது காணிக்கை — ஆன்லைனில் அல்லது உங்களது அருகிலுள்ள YSS ஆசிரமம், கேந்திரா அல்லது மண்டலியில் செலுத்தப்பட்டாலும் கூட — எண்ணற்ற ஆன்மாக்களுக்கு தெய்வீக அகத் தூண்டுதலையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் கொண்டு வர உதவுகிறது.

இறைவன் மற்றும் குருமார்களின் அருளாசிகள் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் எப்பொழுதும் வழிநடத்தி, வலுப்படுத்தட்டுமாக.

தெய்வீகத் தோழமையில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் அவுட்ரீச் பணிகள்

நொய்டா ஆசிரமத்தில் ஸ்வாமிஜியின் சத்சங்கத்திற்குப் பிறகு பக்தர்கள் அவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

YSS இந்த ஆண்டில் பல ஆன்மீக நிகழ்ச்சிகளையும், பரப்புரைச் செயல்பாடுகளையும் நடத்தியது:

  • நமது மரியாதைக்குரிய தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர், ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் பெங்களூரு, சென்னை, அகமதாபாத், நொய்டா, மற்றும் காத்மாண்டு வருகை, ஆயிரக்கணக்கான பக்தர்களை ஊக்குவித்து மேம்படுத்தியது
  • YSS கும்ப மேளா முகாமில் 2,500க்கும் மேற்பட்ட YSS/SRF பக்தர்கள் கலந்து கொண்டனர், தினசரி கூட்டு தியானங்கள், கீர்த்தனங்கள், சத்சங்கங்களை வழங்கியதுடன், ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு ஓர் இலவச மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சேவை செய்தது
  • இந்தியா மற்றும் நேபாளம் முழுவதிலும் உள்ள YSS ஆசிரமங்களிலும், நகரங்களிலும் சன்னியாசிகளால் நடத்தப்பட்ட சாதனா சங்கங்கள், பொது உரைகள் மற்றும் கிரியா தீட்சைகளில் கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் கலந்துகொண்டனர்
  • சர்வதேச யோகா தின நிகழ்வுகள், நேரில் நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரக்கணக்கானோரையும் ஆன்லைன் வாயிலாக 70,000-க்கும் மேற்பட்டோரையும் சென்றடைந்தன
  • இந்தியா முழுவதும் 40 புத்தகக் கண்காட்சிகளில் நாம் பங்கேற்றதன் மூலம், எண்ணற்ற இறை நாடுவோர்கள் குருதேவரின் போதனைகளை அறிந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பக்தர்களின் அனுபவப் பகிர்வுகள் கீழே பகிரப்பட்டுள்ளன:

ஆசிரமம் மற்றும் மையங்களின் மேம்பாடுகள்

தென்னிந்தியாவில் ஒரு ஆன்மீக சரணாலயம் உருவாக்குதல்:

2024 செப்டெம்பர் இல், நம் வணக்கத்திற்குரிய தலைவர் ஸ்வாமி சிதானந்தாஜி, YSS சென்னை ஏகாந்த வாச மையம் ஒரு முழுமையான YSS ஆசிரமமாக மேம்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஆசிரமம், இன்றும் எதிர்காலத்திலும் பல உண்மை நாடும் சாதகர்களை, இறைத் தொடர்பு, தோழமை மற்றும் தெய்வீக எழுச்சி பெற ஈர்க்கும் என்று நாங்கள் வேண்டுகிறோம்.

இந்த புனிதமான நோக்கத்தை நனவாக்க, திறமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களின் நிபுணத்துவத்துடன் ஒரு விரிவான மாஸ்டர் பிளேன் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை அன்னையின் மடியில் இருந்தபடியே, பக்தர்கள் ஆழ்ந்த தியானம், கல்வி மற்றும் குருதேவரின் போதனைகள் மீதான சிந்தனையில் மூழ்கித் திளைக்கக்கூடிய ஒரு அமைதி நிறைந்த, பசுமையான, அழகிய நிலப்பரப்பைக் கொண்ட வளாகத்தை உருவாக்குவதே நமது இலக்காகும்.

தியான மண்டபத்தின் கட்டடக்கலை சித்தரிப்பு
தங்குமிடத் தொகுதியின் கட்டடக்கலை சித்தரிப்பு

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வருகையின்போது, ​​ஸ்வாமி சிதானந்தாஜி சென்னை ஆசிரமத்தை நேரில் பார்வையிட்டார், மாஸ்டர் பிளேனை ஆய்வு செய்து, அந்தத் திட்டத்திற்கு ஆசி வழங்கினார்.

திட்டத்தின் அடிக்கட்டுமானப் பணிகள் மற்றும் முதல் கட்டப் பணிகளுக்கான மொத்த நிதித் தேவை ₹65 கோடி ஆகும். இந்த தெய்வீகக் நோக்கத்தை நனவாக்குவதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.

இந்த சிறப்பு மிக்க நிகழ்வில் ஸ்வாமி ஸ்மரணானந்தா
பக்தர்களிடையே உரையாற்றுகிறார்.

துனியில் புதிய தியான மந்திர்:

ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டம், துனி யோகதா சத்சங்க தியான கேந்திரா பக்தர்கள், அயராத அர்ப்பணிப்புடனும் உளமார்ந்த உற்சாகத்துடனும் ஓர் அழகிய புதிய தியான மந்திரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம், அது இந்த ஆண்டு ஜூலை 25 அன்று திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த பேறுபெற்ற நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இளையோர் திட்டங்கள் மற்றும் கல்வி

இளம் சாதகர் சங்கம்:

YSS, 23 முதல் 35 வயது வரையிலான இளம் சாதகர்களுக்கான தனது முதல் சாதனா சங்கத்தை, ராஞ்சி ஆசிரமத்தில் செப்டம்பர் 10 முதல் 14, 2025 வரை நடத்தியது. இதில் 200-க்கும் மேற்பட்ட சாதகர்கள் கலந்துகொண்டனர். வாழ்க்கையில் தெளிவு, வலிமை மற்றும் குறிக்கோளை வளர்த்துக் கொள்வதற்கான பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய போதனைகளில் இளைஞர்களிடையே பெருகி வரும் ஆழ்ந்த ஆர்வத்தை இந்த சிறப்புக் கூட்டம் பிரதிபலித்தது.

சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி வழிநடத்தப்பட்ட தியானங்கள், ஒரு குழுவாக YSS பாடங்கள் வாசித்தல், சத்சங்கங்கள், பயிலரங்குகள், சேவை செய்வதற்கான வாய்ப்புகள், பொழுதுபோக்கு மற்றும் இரவு நேர சுயபரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது — ஒவ்வொரு அம்சமும் குருஜியின் போதனைகளில் வேரூன்றிய ஒரு சமநிலை வாழ்க்கை முறையை ஊக்குவித்தது. சங்கம், இளம் சாதகர்களுக்கு குருஜியின் வழிகாட்டுதலில் மூழ்கித் திளைக்கவும், நீடித்த ஆன்மீக நட்புக்களை வளர்த்துக்கொள்ளவும், தங்கள் அக வாழ்வை வலுப்படுத்திக்கொள்ள பயனுள்ள வழிமுறைகளுடன் இல்லம் திரும்பவும் ஒரு பேறுபெற்ற வாய்ப்பை வழங்கியது.

குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம்கள் ராஞ்சி, நொய்டா, துவாரஹாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில்:

இந்த ஆண்டு, பரமஹம்ஸ யோகானந்தரின் எளிய மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை லட்சியத்தால் உத்வேகமளிக்கப்பட்டு, சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான வருடாந்திர கோடைக்கால முகாம்கள் ராஞ்சி, நொய்டா, துவாரஹாத் மற்றும் சென்னையில் உள்ள நமது ஆசிரமங்களில் மகிழ்ச்சியுடன் நடத்தப்பட்டன. அனுபவம் வாய்ந்த பக்தர்-ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ், குழந்தைகள் ஒருமுகப்படுதல், பண்பு வளர்ச்சி, இச்சா சக்தி மற்றும் சுயபரிசோதனை பற்றி அறிந்துகொள்ள “எப்படி-வாழ-வேண்டும்” வகுப்புகள் தொடரில் பங்கேற்றனர். அவர்களின் தினசரி நிகழ்ச்சிப் பட்டியலில் கூட்டு தியானங்கள், சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் மற்றும் ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் போன்ற படைப்பாற்றல்மிக்க செயல்பாடுகள் அடங்கியிருந்தன.

ராஞ்சி, ஜகந்நாத்பூரில் அமைந்துள்ள YSS கல்வி நிறுவனங்கள்:

ராஞ்சியில் உள்ள YSS கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், மாநில அளவில் சிறப்பான கல்வி சாதனைகளைப் புரிந்துள்ளனர். இந்தச் சாதனைகள், நமது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பிற்கு மட்டுமல்லாமல், ஆன்மீக பண்புகளில் வேரூன்றி, சிறந்து விளங்குவதற்காக இளம் மனங்களைத் தூண்டும் குருஜியின் எப்படி-வாழ-வேண்டும் கொள்கைகளின் மேம்படுத்தும் தாக்கத்திற்கும் ஒரு சான்றாக விளங்குகின்றன.

ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் அவுட்ரீச்

YSS வலைத்தளம் தற்போது பெங்காலி மற்றும் கன்னட மொழிகளில் கிடைக்கிறது:

YSS வலைத்தளத்தை, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளுடன் கூடுதலாக, இப்போது பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் அணுக முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் குருஜியின் போதனைகளும், வலைத்தளத்தில் உள்ள ஏராளமான ஆன்மீக வளங்களும் பல பக்தர்களுக்கு தங்கள் தாய்மொழியில் அணுகக் கூடியதாக இருக்கின்றன.

ஆன்லைன் தியான கேந்திராவில் விரிவுபடுத்தப்பட்ட சேவைகள்:

இந்தியா முழுவதிலும் உள்ள பக்தர்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்யும் பொருட்டு, ஆன்லைன் தியான கேந்திரா ஏற்கனவே உள்ள ஆங்கிலம், இந்தி, பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வழங்கப்படும் தியானங்களுடன், மலையாள மொழியில் பக்தர்களால் வழிநடத்தப்படும் தியானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறும் அடிப்படைப் பாட வாசிப்பு குழுவுடன், துணைப் பாடங்கள் வாசிப்பு புதிய குழு இப்போது ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையிலும் வழங்கப்படுகிறது.

இந்த முன்முயற்சிகள், YSS தியான மையத்திற்கு அருகில் வசிக்காத பல பக்தர்களின் இல்லங்களுக்கு குருதேவரின் போதனைகளைக் கொண்டு செல்ல உதவுகின்றன; இதன் மூலம் அவர்களுக்குக் கூட்டு தியானம் மற்றும் ஆன்மீக வாசிப்புகளின் அருட்பேறுகள் கிடைக்கின்றன.

புதிய வெளியீடுகள் மற்றும் மொழிபெயர்ப்புகள்

“இன்னர் பீஸ்” புத்தகம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது
  • பதினாறு YSS வெளியீடுகள் (அச்சு வடிவில்) பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டன.
  • ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் பெங்காலி, நேபாளி மற்றும் ஒடியா மொழிபெயர்ப்புகள் உட்பட ஏழு புதிய மின்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
  • YSS ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் மேலும் இரண்டு புதிய ஒலிப்புத்தகங்களை முறையே நேபாளி மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது.

சேவை மற்றும் மனிதநேயப் பணிகள்

உத்தரகாண்ட் நிவாரணப் பணிகள்:

உத்தரகாண்டில் ஏற்பட்ட மேக வெடிப்புகள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் விளைவாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மாநில அரசுக்கு நிதி உதவி வழங்கியது. செப்டம்பர் மாதத்தில், YSS சன்னியாசிகளான ஸ்வாமி ஈஸ்வரானந்தா மற்றும் ஸ்வாமி தைர்யானந்தா, டேராடூனில் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஸ்ரீ புஷ்கர் சிங் தாமியை சந்தித்து, நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சம் ரூபாய்க்கான ஒரு காசோலையை அளித்தனர்.

மருத்துவ முன்னெடுப்புகள்:

YSS சென்னை ஆசிரமத்திலிருந்து வெறும் 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சேவை மருத்துவ மையம், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. வாரத்தில் ஐந்து நாட்கள் செயல்படும் இது, இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குகிறது. மேலும், ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை அளித்துள்ளது.

YSS துவாரஹாத் ஆசிரமம் மூன்று மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து, பின்தங்கிய சமூகங்களுக்கு மிகவும் தேவையான சுகாதார சேவைகளை வழங்கியது. இந்த முகாம்களால் 2,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

வருடாந்திர உதவித்தொகை:

YSS, வசதி வாய்ப்புகள் குறைந்த பின்னணியைச் சேர்ந்த திறமையும் தகுதியும் வாய்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்குவதன் மூலம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது. கடந்த ஆண்டு, ₹75 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

முழு வேண்டுகோளையும் (ஆங்கிலத்தில்) படிக்க, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதரவு மிகவும் பாராட்டப்படுகிறது

குருஜியின் புனிதப் பணி தொடர்ந்து வளர்ந்து வருவதால், மெய்ப்பொருளை நாடி அக அமைதியைத் தேடும் உண்மையான சாதகர்களுக்குச் சேவை புரிய நமக்கு முன்பாகப் புதிய வாய்ப்புகள் விரிகின்றன. இறைவனின் அன்புக்கும் ஒளிக்கும் ஏங்கும் எண்ணற்ற ஆன்மாக்களுக்கு, குருஜியின் ஆன்ம விடுதலையளிக்கும் கிரியா யோகச் செய்தியைக் கொண்டு சேர்க்க உதவும் உங்களைப் போன்ற பக்தர்களின் உறுதியான அன்பாலும் தாராளமான ஆதரவாலும் மட்டுமே இந்த தெய்வீகப் பணி நிலைத்திருக்கிறது.

இந்த புனிதப் பணியில் எங்களுடன் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம். donateyss.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் நன்கொடை அளிப்பதன் மூலமாகவோ அல்லது உங்களுக்கு அருகிலுள்ள YSS ஆசிரமம், கேந்திரா அல்லது மண்டலிக்குச் செல்வதன் மூலமாகவோ நீங்கள் அளிக்கும் காணிக்கை, எண்ணற்ற ஆன்மாக்களுக்குத் அகத் தூண்டுதல், நம்பிக்கை மற்றும் ஆறுதலைக் கொண்டுவர எங்களுக்கு உதவுகிறது.

இந்த புனிதப் பணியின் வளர்ச்சிக்கு உங்கள் பிரார்த்தனைகளும், கூட்டு தியானங்கள், சேவை மற்றும் குருதேவரின் போதனைகளை தினசரி கடைப்பிடித்தல் ஆகியவற்றில் உங்கள் ஆர்வமிக்க பங்கேற்பும் எங்களால், மற்றும் இறைவனாலும் குருமார்களாலும் ஆழ்ந்து போற்றப்படுகின்றன. எந்த வடிவத்தில் இருந்தாலும், ஆதரவின் ஒவ்வொரு வெளிப்பாடும் நம் அன்புக்குரிய குருவின் அன்பையும் பேரானந்தத்தையும் உலகில் பரப்புவதற்கு ஒரு புனிதமான வழியாக மாறுகிறது.

இதைப் பகிர