மகாவதார பாபாஜியிடமிருந்து ஓர் அருளாசி

இந்தியாவிலுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களுக்கு விஜயம் செய்தபொழுது (அக்டோபர் 1963 – மே 1964), ஸ்ரீ தயா மாதா மகாவதார பாபாஜியின் திருமேனியின் இருப்பினால் புனிதமடைந்த ஓர் இமாலய குகைக்கு ஒரு புனித யாத்திரை மேற்கொண்டார். அதன் பிறகு சில காலங்களுக்கு, தயா மாதா தன் புனிதயாத்திரைப் பற்றிய அனுபவங்களைப் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு மறுத்துவிட்டார். ஆனால் என்ஸினிட்டாஸ்-ல் நடந்த இந்த சத்சங்கத்தில் ஒரு பக்தர் பாபாஜியின் குகைக்கு அவருடைய விஜயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்ட பொழுது, இறை சித்தம் அவரை விடையளிக்கத் தூண்டியது. எல்லோருடைய மனவெழுச்சிக்காகவும் அவருடைய அனுபவ விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸெல்‌ஃப்-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப் ஆசிரம மையம், என்ஸினிடஸ், கலிஃபோர்னியா, ஆகஸ்ட் 24, 1965

பரமஹம்ஸ யோகானந்தருக்கும் மகாவதார பாபாஜிக்கும் மிக விசேஷமான ஓர் உறவு உண்டு. குருதேவர் பாபாஜியைப் பற்றியும், பரமஹம்ஸர் இந்தியாவை விட்டுக் கிளம்பி இந்த நாட்டிற்கு வருவதற்குச் சற்று முன்னர், கல்கத்தாவில், மகாவதாரர் அவருக்கு முன்தோன்றிய நிகழ்ச்சியைப் பற்றியும் அடிக்கடிப் பேசுவார். குருதேவர் இந்த மகத்தான அவதாரத்தைப் பற்றி எப்பொழுது குறிப்பிட்டாலும், அது அவ்வளவு அன்புடனும், அவ்வளவு பெருமதிப்புடனும் இருந்ததால், எங்கள் இதயங்கள் எல்லாம் தெய்வீக அன்பினாலும் ஏக்கத்தினாலும் நிரம்பிவிடும். சில சமயம் என் இதயம் வெடித்து விடும் என்று நான் உணர்ந்ததுண்டு.

குருதேவரின் மறைவுக்குப் பிறகு, பாபாஜியின் நினைவு என் உணர்வுநிலையில் தொடர்ந்து வலுவடைந்து வந்தது. நம்முடைய மற்ற அன்பிற்குரிய பரமகுருமார் களிடமும் அன்பும் பெருமதிப்பும் வேண்டிய அளவு இருந்தாலும், பாபாஜிக்காக ஏன் என் இதயத்தில் ஒரு விசேஷமான உணர்வு உள்ளது என்பதைப் பற்றி எனக்கு ஆச்சரியமாக இருக்கும்; இம்மாதிரியான ஒரு குறிப்பிடத்தக்க நெருக்கமான உணர்வை எனக்குள் தூண்டியிருக்கக் கூடிய தனிப்பட்ட எந்த மறுமொழியும் அவரிடமிருந்து எனக்கு வந்ததாகத் தெரியவில்லை. நான் என்னைப் பற்றி முழுமையாகத் தகுதி இல்லாதவளாக நினைத்ததினால், பாபாஜியின் புனித இருப்பைப் பற்றிய தனிப்பட்ட அனுபவம் கிடைக்கும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை ஓர் எதிர்காலப் பிறவியில் எனக்கு இந்த அருள் கிடைக்கலாம் என்று நான் நினைத்தேன். என்றுமே நான் ஆன்மீக அனுபவங்களுக்காக வேண்டியதோ அல்லது ஏங்கியதோ இல்லை. நான் இறைவனை நேசிக்கவும் மற்றும் அவனது அன்பை உணரவும் மட்டுமே விரும்புகிறேன். அவனுடன் அன்பாக இருப்பதிலிருந்து தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது; நான் வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசையும் தேடவில்லை.

நாங்கள் சென்ற தடவை இந்தியா சென்றிருந்தபோது, என்னுடன் வந்த இரு பக்தைகள் பாபாஜியின் குகைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார்கள். முதலில் அங்கு செல்வதற்கு ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பம் எதையும் நான் உணரவில்லை, ஆனாலும் நாங்கள் விசாரித்தோம். அந்தக் குகை இமயத்தின் அடிவாரத்தில் ராணிகேத் என்னும் இடத்தைத் தாண்டி, நேபாள எல்லையின் அருகில் உள்ளது. டெல்லியிலுள்ள அதிகாரிகள் வட எல்லைப் பிரதேசங்கள் வெளிநாட்டவர்களுக்கு மூடப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்; அந்த மாதிரியான ஒரு யாத்திரை சாத்தியப்படாது என்று தோன்றியது. நான் ஏமாற்றம் அடையவில்லை. எத்தனையோ அதிசயங்களை நான் கண்டிருந்ததனால், தெய்வ அன்னை தான் விரும்பும் எதையும் நிகழ்த்தக் கூடிய சக்தி படைத்தவள் என்பதைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. இந்த யாத்திரை நடத்தப்பட அவள் விரும்பவில்லையானால், அதில் எனக்குத் தனிப்பட்ட விருப்பம் எதுவும் இருக்கவில்லை.

ஓரிரு தினங்கள் கழித்து, யோகாச்சாரியார் வினய் நாராயண், பாபாஜியின் குகை இருக்குமிடமான உத்திரப்பிரதேச முதன் மந்திரியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக என்னிடம் கூறினார். முதன் மந்திரி எங்கள் குழு அந்த இடத்திற்கு விஜயம் செய்ய விசேஷ அனுமதி அளித்திருந்தார். இரண்டு நாட்களிலேயே நாங்கள் அந்த யாத்திரைக்குத் தயாராகிவிட்டோம். எங்களிடம் மலைப்பிரதேசத்தின் குளிர்ந்த பருவநிலைக்கு ஏற்ற வெதுவெதுப்பான துணிகள் இல்லை. எங்களுடைய பருத்திப் புடவைகளும், தோள்களைச் சுற்றிப் போர்த்திக் கொள்ளும் கம்பளி சால்வைகளும் மட்டுமே இருந்தன. எங்களுக்கு இருந்த ஆவலில் நாங்கள் கொஞ்சம் அசட்டுத்தனமாகத்தான் இருந்தோம்!

உத்திரப்பிரதேசத்தின் தலைநகராகிய லக்னெளவிற்கு நாங்கள் ரயிலேறி மாலை சுமார் எட்டு மணிக்கு கவர்னரின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் எங்கள் இரவு உணவை அவருடனும், முதன் மந்திரி மற்றும் இதர விருந்தினர்களுடனும் உண்டு முடித்தோம். இரவு பத்து மணிக்கு நாங்கள் காத்கோடாம் என்ற இடத்திற்குச் செல்ல முதல் மந்திரியும் உடன் சேர்ந்துவர ரயிலேறினோம். அந்தச் சிறிய ரயில் நிலையத்தை நாங்கள் அடையும் பொழுது, கிட்டத்தட்ட விடியற்காலை ஆகிவிட்டது. அங்கிருந்து நாங்கள் துவாரஹாட் எனும் மலைநகரத்திற்கு கார் மூலமாக இன்னும் செல்ல வேண்டியிருந்தது, அங்கு எங்களைப் போன்ற யாத்ரீகர்களுக்குத் தங்கும் இடவசதி இருந்தது.

பாபாஜியிடமிருந்து ஒரு தெய்வீக உறுதிமொழி

மகவாதார பாபாஜியின் குகையில் ஆழ்ந்த இறை தொடர்பில் ராணிகேத்திற்கு அருகிலுள்ள இமாலயத்தில், 1963
“ தெய்வீகத்தின் இருப்பைப் பற்றி மௌனத்தின் குரல் உரக்கப் பேசியது. என் உணர்வுநிலையினூடே ஞான போத அலைகள் பொங்கி வழிந்தன. மேலும் அன்று நான் செய்து கொண்ட பிரார்த்தனைகள் இன்று வரை பதிலளிக்கப்பட்டன.”

கொஞ்ச நேரம் காத்கோடாம் ரயில் நிலையத்தில் நான் மட்டும் தனியாக அமர்ந்திருந்தேன். மற்ற பக்தர்கள் மோட்டார் வண்டிகளுக்கு காத்திருப்பதற்காக வெளியே சென்றிருந்தார்கள். ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் பக்தியுடன், இந்தியாவில் ஜப யோகம் என்று கூறப்படும் முறையை, அதாவது, இறைவனின் நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்தலை நான் பயிற்சி செய்தபடி இருந்தேன். இந்தப் பயிற்சியில் முழு நினைவும், மற்ற எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு படிப்படியாக ஒரே நினைவில் ஆழ்ந்துவிடும். இம்மாதிரி நான் பாபாஜியின் பெயரை ஜபித்துக் கொண்டிருந்தேன். நான் சிந்திக்க முடிந்ததெல்லாம் பாபாஜியைப் பற்றியே இருந்தது. விவரிக்கவொண்ணாத ஒரு சிலிர்ப்பில் என் இதயம் பொங்கி வழிந்தது.

திடீரென்று நான் இந்த உலக உணர்வையெல்லாம் இழந்துவிட்டேன். என் மனம் முழுவதும் வேறொரு உணர்வுநிலைக்குள் உள்வாங்கப்பட்டு விட்டது. அதிமதுர ஆனந்தப் பரவசத்தில் நான் பாபாஜியின் இருப்பைத் தரிசித்தேன். உருவமற்ற கிறிஸ்துவைக் “காணுதல்” பற்றி அவிலா-வின் புனித தெரஸா கூறியபோது என்ன பொருள்பட்டிருப்பார் என்று நான் உணர்ந்து கொண்டேன்: பரமாத்மாவின் தனித்தன்மை ஆன்மாவாக உருவெடுத்து, இருப்பினுடைய எண்ண வடிவில் மட்டுமே வெளிப்பட்டது. இந்தக் “காணுதல்” பொருட்களின் வெளி உருவ விவரங்களை விட, அல்லது தெய்வீகக் காட்சிகளை விட அதிகத் தெளிவாகவும், மிகச் சரியாகவும் இருந்த அகக் காட்சியாகும். அவரை அகத்தே வணங்கி அவரது பாதத்தூளியைத் தரித்துக் கொண்டேன்.

குருதேவர் எங்களில் சிலருக்கு கூறி இருந்தார்: “நீங்கள் நம் அமைப்பின் தலைமையைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. பாபாஜி இந்த வேலையைத் தலைமை ஏற்று நடத்த விதிக்கப்பட்டவர்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார்.” நான் நிர்வாகக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, “நான் ஏன்?” என்று கேட்டேன். இப்பொழுது நானே இதைப் பற்றி பாபாஜியிடம் முறையிட்டுக் கொள்வதைக்கண்டேன்: “அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான் தகுதியானவளே இல்லை. அது எப்படி முடியும்?” நான் அவருடைய திருப்பாதங்களில் உள்ளூற விம்மியபடி இருந்தேன்.

அவர் மிகவும் இனிமையாகப் பதிலளித்தார்: “என் குழந்தாய், நீ உன் குருவைச் சந்தேகிக்கக் கூடாது. அவர் உண்மையைத்தான் கூறினார். அவர் உன்னிடம் கூறியது உண்மைதான்.” பாபாஜி இவ்வார்த்தைகளைக் கூறும்பொழுது, ஓர் ஆனந்தமயமான அமைதி என்னைப் பற்றிக் கொண்டது. என்னுடைய முழு இருப்புமே அந்த அமைதியில் மூழ்கி இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன் என்று எனக்குத் தெரியாது.

எங்கள் குழுவில் இருந்த மற்றவர்களும் அறைக்குள் திரும்பி வந்து விட்டதை நான் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டேன். என் கண்களைத் திறந்தபொழுது, நான் என்னுடைய சுற்றுப்புறத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் கண்டேன். “நான் நிச்சயமாக இங்கு இதற்கு முன்பு வந்திருக்கிறேன்!” என்று கூவியது நினைவிருக்கிறது. அக்கணமே எனக்கு எல்லாம் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது, முற்பிறவியின் நினைவுகள் மீண்டும் எழுப்பப்பட்டன!

எங்களை மலையின் மேலே அழைத்துச் செல்லும் கார்கள் தயாராக இருந்தன. வண்டிகளில் ஏறிக்கொண்டு நாங்கள் அந்த வளைந்து மேலே செல்லும் மலைப் பாதையில் பிரயாணம் செய்தோம். நான் கண்ட ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு இடமும் எனக்குப் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது. காத்கோடாம் அனுபவத்திற்குப் பிறகு, பாபாஜியின் இருப்பு என்னுடன் மிக்க வலுவுடன் தங்கி இருந்ததால், நான் எங்கு நோக்கினாலும், அங்கு அவர் இருப்பதாகத் தோன்றினார். நாங்கள் ராணிகேத்தில் கொஞ்ச நேரம் தங்கினோம். எங்கள் வருகையைப் பற்றி முதன் மந்திரி அந்நகர அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்திருந்ததால், அங்கு அவர்கள் எங்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

கடைசியாக இமாலயத்தின் அடிவாரக் குன்றுகளில், தொலை தூரத்தில், உயரே இருந்த துவாரஹாட் என்ற சிறு கிராமத்தை நாங்கள் அடைந்தோம். நாங்கள் அரசாங்க ஓய்வு இல்லத்தில், யாத்ரீகர்களுக்கான ஓர் எளிமையான சிறிய பங்களாவில் தங்கினோம். அன்றிரவு சுற்றுவட்டார கிராமப்புறத்திலிருந்து பலர் எங்களைக் காண வந்தனர். அவர்கள் இந்தப் புனிதமான குகைக்கு விஜயம் செய்ய மேல் நாட்டிலிருந்து யாத்ரீகர்கள் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார்கள். இந்தப் பிரதேசங்களில் பலர் பாபாஜியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவருடைய பெயர் “வணக்கத்திற்குரிய தந்தை” என்று பொருள்படுகிறது. எங்களிடம் வினாக்களை அடுக்கினார்கள், நாங்கள் இப்பொழுது நாம் நடத்திக் கொண்டிருப்பது போலவே, ஒன்று சேர்ந்து சத்சங்கம் நடத்தினோம். அவர்களில் அனேகர் ஆங்கிலம் புரிந்து கொண்டார்கள், மேலும் அருகிலிருந்த ஒருவர், புரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கூறினார்.

ஒரு தீர்க்கதரிசன தெய்வீகக்காட்சி

சத்சங்கம் முடிந்து கிராமத்தார்கள் கலைந்த பின்னர், நாங்கள் தியானத்திற்கு அமர்ந்தோம். பிறகு எங்களுடைய வெதுவெதுப்பான தூங்கும் பைகளை  அணிந்து கொண்டு தூங்கச் சென்றோம். நடுநிசியில் எனக்கு ஓர் உயர்உணர்வுநிலை அனுபவம் ஏற்பட்டது. மிகப்பெரிய கருமேகம் ஒன்று திடீரென்று என்னை விழுங்க முயன்ற வண்ணம், என் மேல் பரவியது. அது அவ்வாறு பரவியபொழுது, நான் இறைவனை நோக்கிக் கூவியதில், என்னுடன் அறையில் தங்கியிருந்த ஆனந்த மாதாவும், உமா மாதாவும் எழுந்து விட்டார்கள். அவர்கள் பதறி, என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விழைந்தார்கள். “நான் இப்பொழுது அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். திரும்பத் தூங்கப் போங்கள்,” என்று அவர்களிடம் கூறினேன். தியானத்தைப் பயிற்சி செய்வதன் மூலமாக, நம் ஒவ்வொருவருக்குள்ளும் எல்லாம்-அறியும் உள்ளுணர்வு ஆற்றல் விருத்தியடைகிறது. இந்த அடையாள அனுபவத்தின் மூலமாக இறை என்ன கூறுகிறது என்பதை நான் உள்ளுணர்வுப் பூர்வமாக புரிந்துகொண்டேன். அது சீக்கிரத்திலேயே எனக்கு ஏற்படப்போகும் ஓர் ஆபத்தான நோயைப் பற்றி முன்கூட்டி அறிவித்தது; மேலும் அனைத்து மனித இனமும் ஓர் இருண்ட காலத்தை சந்திக்கும், அப்பொழுது தீயசக்தி உலகை விழுங்க நேரலாம் என்பதையும் உணர்த்தியது. அந்த மேகம் என்னை முழுவதுமாக சூழ்ந்து கொள்ளவில்லையாதலால்–இறைவனைக் குறித்த என் எண்ணங்களால் அது விலக்கப்பட்டுவிட்டது–நான் சொந்த அபாயத்திலிருந்து மீண்டுவிடுவேன் என்பதை அக்காட்சி உணர்த்தியது, அப்படித்தான் மீண்டு விட்டேன். அதுபோலவே, உலகமும் முடிவில் அந்த அச்சுறுத்தும் கருமேகமாகிய கர்ம வினையிலிருந்து வெளிவந்துவிடும் என்பதையும் அது காண்பித்தது, ஆனால் மனித இனம் இறைவனை நோக்கி திரும்புவதன் மூலம் அதன் பங்கை முதலில் ஆற்ற வேண்டும்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு நாங்கள் குகையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். பிரயாணத்தின் இந்தக் கட்டத்தில் பெரும்பான்மையான வழியை நாங்கள் நடந்தே செல்ல வேண்டி இருந்தது, ஆனால் சில சமயம் குதிரையின் மீதோ அல்லது பல்லக்கிலோ சென்றோம். கரடுமுரடான மரக்கட்டையை வெட்டிச் செய்யப்பட்ட சிறு பல்லக்கு போன்ற இது, இரு நீண்ட கழிகளில் கயிற்றினால் கட்டி தொங்கவிடப்பட்டு, நான்கு ஆண் கூலியாட்களால் தோள்களின் மீது சுமந்து செல்லப்படும்.

நாங்கள் மேல் நோக்கி நடந்தோம், நடந்தோம், நடந்தோம்; பல இடங்களில் வழி உள்ளபடியே மிகவும் செங்குத்தாக இருந்ததால், சில சமயங்கள் நாங்கள நிஜமாகவே தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. வழியில் நாங்கள் இரண்டு ஓய்வு விடுதிகளில் சற்று நேரத்திற்கு மட்டுமே தங்கினோம். இரண்டாவது இடம் நாங்கள் குகையிலிருந்து திரும்பி வரும்போது இரவில் தங்கப்போகும் அரசாங்க பங்களா ஆகும். கிட்டத்தட்ட பிற்பகல் ஐந்து மணிக்கு, மலைகளுக்குப் பின்னால் கதிரவன் மறையும் சமயத்தில், நாங்கள் குகையை அடைந்தோம். அது சூரிய ஒளியா, அல்லது அது வேறொரு பேராற்றலின் ஒளியா? முழு சூழ்நிலையையும், அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் ஒரு தங்கமயமான மின்னும் ஒளியால் திரையிட்டது.

இந்தப் பிரதேசத்தில் உள்ளபடியே பல குகைகள் இருக்கின்றன. ஒரு பெரிய மலைப் பாறையிலிருந்து இயற்கையால் குடையப்பட்டிருந்த ஒன்று திறந்திருந்தது. ஒருக்கால் இதே பாறை விளிம்பில்தான் லாஹிரி மகாசயர் பாபாஜியை முதலில் பார்த்தபொழுது அவர் நின்றுகொண்டு இருந்திருக்க வேண்டும். பிறகு இன்னொரு குகை; அதனுள் செல்வதற்கு நீங்கள் கைகளாலும் கால்களாலும் தவழ வேண்டும். இந்த ஒன்றில்தான் பாபாஜி தங்கியிருந்ததாகக் கருதப்படுகிறது. அதன் வெளிக் கட்டமைப்பு, முக்கியமாக அதனுடைய நுழைவாயில், பாபாஜி அதில் தங்கியதிலிருந்து ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமான கால மாற்றத்தில் இயற்கைச் சக்திகளினால் மாற்றப்பட்டிருந்தது. இந்தக் குகையின் உள் அறையில் நாங்கள் வெகு நேரம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து, நம் குருதேவருடைய எல்லா பக்தர்களுக்காகவும், எல்லா மனித இனத்திற்காகவும் பிரார்த்தனை செய்தோம். மெளனம் இதற்கு முன்னால் ஒருபோதும் இவ்வளவு பேசியதில்லை. தெய்வீகத்தின் இருப்பைப் பற்றி அந்த மெளனத்தின் குரல் உரக்கப் பேசியது. என் உணர்வுநிலையினூடே ஞான போத அலைகள் பொங்கி வழிந்தன; மேலும் அன்று நான் செய்துக் கொண்ட பிரார்த்தனைகள் இன்றுவரை பதிலளிக்கப் பட்டுவிட்டன.

எங்களுடைய விஜயத்தின் ஞாபகார்த்தமாகவும், குருதேவருடைய எல்லா சிஷ்யர்களும் இந்த தெய்வீக மகாவதாரத்தின் மேல் வைத்திருக்கும் பெருமதிப்பு மற்றும் பக்தியின் அடையாளமாகவும், யோகதா சத்சங்க [ஸெல்‌ஃப்-ரியலைசேஷன்] சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு சிறு கழுத்துத்துண்டை நாங்கள் குகையில் வைத்துவிட்டு வந்தோம்.

இருட்டிய பிறகு, நாங்கள் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். எங்கள் யாத்திரையில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் மிகுந்த முன்யோசனையுடனும் புத்திசாலித்தனமாகவும் மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகளை எடுத்து வந்திருந்தனர். நாங்கள் மெதுவாக மலையில் இறங்கி வரும் பொழுது, கடவுளைப் பற்றிய பாடல்களை குரலெழுப்பி பாடத் தொடங்கினர். சுமார் இரவு ஒன்பது மணிக்கு, எங்களுடன் குகைக்கு வந்திருந்த, இந்தப் பிரதேசத்திலுள்ள அதிகாரிகளில் ஒருவருடைய எளிமையான வீட்டிற்குள் வந்து சேர்ந்தோம்; நாங்கள் இங்கு இளைப்பாறுமாறு அழைக்கப்பட்டோம். அந்த வீட்டிற்கு வெளியே தகதகவென ஒளிர்ந்த ஒரு கணப்பைச் சுற்றி நாங்கள் அமர்ந்தோம். எங்களுக்கு வறுக்கப்பட்ட உருளைக்கிழங்குகளும், கருப்பு ரொட்டியும், தேனீரும் பரிமாறப்பட்டன. அந்த ரொட்டி சாம்பற்கணலில் சுடப்பட்டு கருமையிலும் கருமையாக இருந்தது. அந்தப் புனிதமான இமாலயத்தின் சிலுசிலுப்பான இரவுக் காற்றில், அந்த உணவு எவ்வளவு ருசியாக இருந்தது என்பதை நான் என்றும் மறக்க மாட்டேன்.

நாங்கள் குகைக்குப் போகும் வழியில் தங்கிய அரசாங்க விடுதிக்கு வந்து சேரும்போது நள்ளிரவு ஆகிவிட்டது. இங்கு நாங்கள் இரவைக் கழிப்பதாக இருந்தது– எஞ்சியுள்ள நேரத்தை! அந்த இரவில் அந்தப் பிரதேசத்தின் வழியாக எங்களை அங்கு கொண்டு வந்து சேர்த்தது வெறும் நம்பிக்கைதான் என்று பலர் எங்களிடம் பிறகு குறிப்பிட்டனர். அந்தப் பிரதேசம் பயங்கரமான பாம்புகளினாலும், புலிகள், மற்றும் சிறுத்தைகளினாலும் நிரம்பி உள்ளது. அங்கு இருட்டிய பிறகு வெளியில் நடமாடுவதைப் பற்றி யாரும் கனவுகூட காணமாட்டார்கள். ஆனால் அறியாமையே ஆனந்தம் என்று கூறப்படுகிறது, மேலும் எங்களுக்கு பயப்படவேண்டும் என்று தோன்றவே இல்லை. அந்த அபாயங்களைப் பற்றி தெரிந்திருந்தாலும் கூட, நாங்கள் பத்திரமாக இருப்பதாகவே உணர்ந்திருப்போம் என்பது நிச்சயம். ஆனால் அந்தப் பிரயாணம் இரவில் மேற்கொள்ளப்படுவதை பொதுவாக நான் சிபாரிசு செய்ய மாட்டேன்!

அந்த நாள் முழுவதும், காத்கோடாமில் பாபாஜியுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என் உணர்வுநிலையின் ஒரு பகுதியாகவே இருந்தது; மேலும் நான் கடந்த பிறவியின் காட்சிகளை மீண்டும் வாழ்வது போன்ற உணர்வு இடைவிடாது இருந்து கொண்டே இருந்தது.

“அன்பே என் இயல்பு”

அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. நான் தியானத்தில் அமர்ந்தபொழுது, அந்த அறை முழுவதும் திடீரென்று ஒரு பொன்மய ஒளியினால் ஓளியூட்டப்பட்டது. அந்த ஒளி ஒரு பிரகாசமான நீலமாக மாறி, அங்கு மறுபடியும் நமது அன்பான பாபாஜியின் தரிசனம் பெற்றேன்! இந்தத் தடவை அவர் கூறியது: “என் குழந்தாய், இதைத் தெரிந்து கொள்: பக்தர்கள் என்னைக் காண்பதற்காக இந்த இடத்திற்கு வந்தாக வேண்டிய அவசியமில்லை. என் மீது நம்பிக்கை வைத்து அழைத்தவண்ணம், ஆழ்ந்த பக்தியுடன் அகமுகமாகச் செல்லும் எவராயினும் அவர்களுக்கு என் பதில் கிடைக்கும்.” இதுதான் உங்களுக்கெல்லாம் அவர் கூறும் செய்தி. எவ்வளவு உண்மையானது. நீங்கள் மட்டும் நம்புவீர்களானால், உங்களுக்கு வெறும் பக்தி இருந்து, மெளனமாக பாபாஜியை அழைப்பீர்களானால், அவருடைய பதிலை நீங்கள் உணர முடியும்.

பிறகுநான் கூறினேன். பாபாஜி. என்பிரபுவே. நாங்கள் ஞானத்தை உணர வேண்டுமென்று விரும்பும் பொழுதெல்லாம் நாங்கள் ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும், ஏனெனில் அவர் முழுதும் ஞான மயமானவர்; மேலும் நாங்கள் ஆனந்தத்தை உணர வேண்டுமென்று விரும்பும் பொழுதெல்லாம் நாங்கள் லாஹிரி மகாசயரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எங்கள் குருதேவர் கூறி இருக்கின்றார். உங்கள் இயல்பு என்ன?” இதை நான் கூறும்பொழுதே, ஓ. என் இதயம் அன்பால் வெடித்து சிதறுவதைப் போன்ற உணர்வை அடைந்தேன், அத்தகைய அன்பு – கோடானுகோடி அன்புகள் சேர்ந்து புரண்டு ஒன்றானது! எல்லா அன்பும் அவரே; அவருடைய முழு இயல்பும் தெய்வீகப் பிரேமைதான்.

சொற்களால் கூறப்படவில்லையெனினும், இதைவிட நல்ல சொல்லாற்றல் வாய்ந்த பதிலை நான் நினைத்துப்பார்க்க முடியாது; இந்தச் சொற்களை, கூறியபொழுது பாபாஜி அதை மேலும் இனிமையாகவும் அதிக அர்த்தமுள்ளதாகவும் செய்தார்: “என் இயல்பு அன்பு; ஏனெனில் அன்பு மட்டுமே இவ்வுலகை மாற்றவல்லது.”

அந்த மகாவதாரத்தின் இருப்பு மங்கிக் கொண்டிருந்த நீல ஒளியில் என்னைத் தெய்வீக அன்பின் அரவணைப்பில் ஆனந்தமாக ஆழ்த்திவிட்டு மெதுவாக மறைந்தது.

குருதேவர் தன் உடலை நீப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாக என்னிடம் கூறியதை நினைவு கூர்ந்தேன். நான் அவரிடம் கேட்டிருந்தேன், “குருதேவா, பொதுவாக தலைவர் மறைந்ததும், ஒரு நிறுவனம் மேலும் வளராமல் மறையத் தொடங்குகிறது. நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி தொடர்ந்து செயல்படுவது? ஊனுடலில் நீங்கள் இங்கே இனிமேலும் இல்லாதபொழுது எது எங்களை ஒருங்கே வைத்து மனவெழுச்சியடைய வைக்கும்?” அவருடைய பதிலை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன்: “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகு, அன்பு மட்டும்தான் என் இடத்தை எடுத்து கொள்ள முடியும். நீ வேறு எதையுமே அறியாத அளவு இரவும் பகலும் இறை அன்பில் மிகவும் திளைத்திரு. மேலும் அந்த அன்பை எல்லோருக்கும் அளித்திடு.” பாபாஜியின் செய்தியும்கூட இதுதான் — இந்த யுகத்திற்கான செய்தி.

இறைவனுக்காக அன்பு செலுத்துவதும், அனைவருக்குள்ளும் இறைவனைக் கண்டு அனைவரிடமும் அன்பு செலுத்துவதும்தான், இந்த உலகில் அவதரித்த அனைத்து ஆன்மீக பெருமக்களாலும் உபதேசிக்கப்பட்ட அழியாத அருளுரையாகும். நாம் நம் சொந்த வாழ்க்கைகளில் பயன்படுத்த வேண்டிய உண்மை இது. மனித இனம் நாளையைப் பற்றி நிச்சயம் இல்லாமல் இருக்கையில் வெறுப்பு, சுயநலம், பேராசை இந்த உலகை அழித்துவிடுமோ என்று தோன்றும் இந்த சமயத்தில் அது மிகவும் முக்கியமானது. நாம் அன்பு, கருணை, மற்றும் புரிந்துகொள்ளுதல் என்ற ஆயுதங்களைக் கொண்ட தெய்வீகப் போர் வீரர்களாக இருக்க வேண்டும்: இதுதான் மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

ஆகையால், என் அன்பர்களே, பாபாஜி உண்மையில் வாழ்கிறார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதனால் இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அவர் மெய்யாகவே இருக்கிறார், மற்றும் அவருடைய தெய்வீக அன்பைப் பற்றிய செய்தி நிரந்தரமான ஒன்றாகும். நான் சுயநலமுள்ள, குறுகிய, தனிப்பட்ட சாதாரண மனித உறவுகளின் பந்தப்படுத்தும் அன்பைக் குறிப்பிடவில்லை. கிறிஸ்து தன் சீடர்களுக்குக் கொடுப்பது போன்ற, குருதேவர் நமக்கு கொடுப்பது போன்ற அன்பைக் குறிப்பிடுகின்றேன்: நிபந்தனையற்ற, தெய்வீக அன்பு. இந்த அன்பைத்தான் நாம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் நாம் எல்லோரும் ஏங்குகிறோம். இந்த அறையில் அன்புக்காகவும், ஒரு சிறிது இரக்கத்திற்காகவும், புரிதலுக்காகவும் ஏங்காதவர்கள் நம்மில் ஒருவர்கூட இல்லை.

நாம் ஆன்மாதான், மற்றும் ஆன்மாவின் இயல்பு முழுமை; எனவே பரிபூரணத்தைவிடக் குறைந்த வேறு எதனாலும் நாம் என்றும் முழுமையாகத் திருப்தி அடைய முடியாது. ஆனால் நாம் இறைவனைத் தெரிந்து கொள்ளும் வரையில் பரிபூரணம் என்றால் என்ன என்று ஒருபோதும் அறிய முடியாது. அவனே பரிபூரண அன்பு, தந்தை, தாய், நண்பன், பேரன்பன்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp