YSS

யோகானந்தரின் பணிக்கு உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி

22 மார்ச், 2022

பரமஹம்ஸ-யோகானந்தரின்-வலைப்பதிவு-க்கு அன்பான-ஆதரவு

அன்பிற்குரிய தெய்வீக ஆத்மாக்களே,

நமது அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அவர்களால் யோகதா சத்சங்க சங்க சொஸைடி ஆஃப் இந்தியா நிறுவப்பட்டதன் 105-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும். இறை அன்பு என்ற அவரது இலட்சியத்தை முன்மாதிரியாகக் கொண்ட உங்கள் அனைவரின் மூலமும் அவரது உணர்வு தொடர்ந்து வாழ்கிறது.

சமீப காலமாக உலகம் கடந்து வந்த மிகவும் சவாலான காலகட்டங்களில் இதுவும் ஒன்று என வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய இந்த ஒரு வருடத்தில், நமது அன்பிற்குரிய குருதேவரின் தெய்வீக ஆன்மீக குடும்பத்தின் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களான உங்கள் அனைவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழ வைத்தது. உங்கள் முக்கிய பங்களிப்புகள்-மெய்ப்பொருளை நாடும் ஏராளமானவர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் கிரியா யோக போதனைகளைச் சென்றடையச் செய்தல் மற்றும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மனிதாபிமான செயல்பாடுகள் மேற்கொள்ளுதல் போன்ற குருதேவரின் பணியை மேலும் மேம்படுத்த எங்களுக்கு உதவியது –

ஆன்லைனில் ஒன்றாக தியானம் செய்வதற்கு கிடைக்கப் பெறும் அருளாசிகள்

ஜனவரி 31, 2021 அன்று, நமது அன்புக்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி அவர்கள் ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திராவைத் தொடங்கி வைத்தார், இது, பக்தர்களும் நண்பர்களும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மற்றவர்களுடன் கூட்டுத் தியானத்தில் ஒன்றிணைவதற்கான பேறுபெற்ற வாய்ப்பை வழங்குகிறது. கடந்த ஆண்டில், ஆன்லைன் தியான கேந்திராவின் செயல்பாடுகள் பன்மடங்கு வளர்ந்துள்ளன – சங்கங்கள், ஏகாந்த வாச தியானங்கள், பகவத் கீதை சொற்பொழிவுகள், ஒரு யோகியின் சுயசரிதம் இணைந்து படித்தல் மற்றும் பல – மிகப்பெரிய அளவில் ஏற்புகளையும், பாராட்டுகளையும் அன்பையும் வெளிக்கொணர்ந்தது. ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு வாரமும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வழங்கப்படும் நிகழ்வுகளுக்காக ஆன்லைனில் இணைகிறார்கள்.

பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் உச்சக்கட்டத்தின் போது ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் தினமும் நடத்தப்பட்ட ஆன்லைன் குணமளிக்கும் பிரார்த்தனை சேவைகள், அந்த கடினமான காலகட்டத்தில் போராடும் பல பக்தர்களுக்கு ஒரு ஆன்மீக உயிர்நாடியாக – ஆறுதல், ஆதரவு மற்றும் குணப்படுத்துதலுக்கான நிலையான ஆதாரமாக இருப்பதை உறுதி செய்தது.

நூற்றுக்கணக்கான தன்னார்வ பக்தர்களின் ஒருங்கிணைந்த உதவியுடன் இந்த நிகழ்வுகள் வழங்குதல் அனைத்தும் சாத்தியமாகியுள்ளன.

கடந்த ஆண்டில் நாம் இணைந்து நிறைவேற்றியவை

உங்கள் தாராள உதவி, பல ஒய் எஸ் எஸ் புத்தகங்கள் மற்றும் ஆடியோ பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு வழிவகுத்துள்ளது. இது, அதிக மக்களுக்கு அவற்றை ஆன்லைனில் அணுக ஏதுவாக்கியுள்ளது. பல பக்தர்கள் சன்னியாசிகளின் வழிகாட்டுதலின் கீழ், தற்போதுள்ள ஒய் எஸ் எஸ் வலைத்தளத்தைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல், முழு வலைத்தளத்தையும் மொழிபெயர்த்து, இந்திய மொழி பதிப்புகளை உருவாக்கவும் அயராது உழைத்தனர். தற்போது, ஒய் எஸ் எஸ் வலைத்தளம் இந்தி மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

எங்கள் வேண்டுகோள்களுக்கு உங்களின் இதயப்பூர்வ அன்பான மறுமொழி, நாடு முழுவதும் கோவிட்-நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதை ஒய் எஸ் எஸ் -க்கு சாத்தியமாக்கியது. இந்த பேரிடரின் போது நீங்கள் பல உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளீர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆறுதல் அளித்தீர்கள். ஏழை மற்றும் வறியவர்களுக்கு கோவிட் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க துணிவுடன் உதவிய அந்த தன்னார்வலர்களுக்கு எங்கள் சிறப்பு நன்றி. இத்தகைய தன்னலமற்ற சேவையின் காரணமாக, பல மாநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள உள்ளூர் அரசாங்க அதிகாரிகளால் ஒய் எஸ் எஸ் அடையாளம் காணப்பட்டது. நன்றி!

கடந்த ஆண்டு ஒய் எஸ் எஸ் -ன் முக்கிய கவனம் செலுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று, பாடங்களின் புதிய பதிப்பை இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதாகும். இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்காளம் ஆகிய நான்கு முக்கிய மொழிகளில் பல சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னோக்குப் பார்வை

சமீபத்தில், ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் மற்றும் கேந்திரங்கள், வருகையாளர்களுக்கு, தனிநபர் தியானங்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, விரைவில், கூட்டுத் தியானங்கள் மற்றும் பிற நிகழ்வுகளும் தொடங்கும். நாடு முழுவதும் ஆன்மீக நிகழ்வுகளுக்கான சன்னியாசிகளின் பயணங்கள் மீண்டும் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

“நமது அன்புக்குரிய குருதேவரின் வார்த்தைகளில் தெய்வீக நம்பிக்கையையும் பாதுகாப்பையும் நாம் காணலாம்: “நீங்கள் இறைவனுடன் வாழ்ந்தீர்களானால், வாழ்வு மற்றும் சாவு, ஆரோக்கியம் மற்றும் நோய் ஆகிய மாயையிலிருந்து குணப்படுத்தப்படுவீர்கள். இறைவனில் இருங்கள். அவனது அன்பை உணருங்கள். எதற்கும் அஞ்சாதீர்கள். இறைவனின் கோட்டையில் மட்டுமே நாம் பாதுகாப்பைக் காண முடியும். அவனது இருப்பில் இருப்பதை விட பாதுகாப்பான ஆனந்தப் புகலிடம் வேறு எங்கும் இல்லை. நீங்கள் அவனுடன் இருக்கும் பொழுது, உங்களை எதுவும் தொட முடியாது.”

நமது குருதேவரின் போற்றுதலுக்குரிய பணிக்காக நீங்கள் செய்யும் அனைத்தையும் நாங்கள் மதிப்புமிக்கதாகக் கருதுகிறோம். இறைவன் மற்றும் குருதேவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற நீங்கள் முயற்சிக்கும் போது, உங்களை சூழும் அவர்களின் அன்பை ஒவ்வொரு நாளும் உணர்வீர்களாக.

தெய்வீகத் தோழமையில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp