ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் கிறிஸ்துமஸ் 2025 செய்தி

13 டிசம்பர், 2025

அன்பரே,

உங்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள பரமஹம்ஸ யோகானந்தருடைய எல்லா ஆன்மீகக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அன்பான, மனமார்ந்த, மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இந்தப் புனிதப் பருவத்தில் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் கொண்டாடும்போது, உங்களது தியானத்தின் அமைதியில் அன்பிற்குரிய இந்தத் திருஅவதாரத்தின் எல்லையற்ற கிறிஸ்து-அன்பை — உலகக் குடும்பம் முழுவதையும் தொடர்ந்து ஆசீர்வதித்து, ஆன்மீகமயமாக்கும் அன்பை — இன்னும் அதிகமாக ஆழ்ந்து உணர நான் பிரார்த்திக்கிறேன்.

இயேசு, பிரபஞ்சத்தைக் காக்கும் இறை-உணர்வுநிலையின் அளவிடற்கரிய மகிமையை தனக்குள்ளேயே கொண்டிருந்தார். இருப்பினும் மிகவும் ஆழமாக நம் மனத்தைத் தொடுவது என்னவெனில், மனித இனத்தின் மத்தியில் அவர் பணிவான எளிமையுடன் வாழ்ந்ததுதான். ஒவ்வோர் ஆன்மாவிற்கும் அனைத்தையும் அரவணைக்கும் கருணையைப் பரப்பிக்கொண்டு, எண்ணத்திலும் செயலிலும் நற்குணத்தின் உருவமாகத் திகழ்ந்தார். அவர் தனது எடுத்துக்காட்டின் வாயிலாக, எவ்வாறு நாமும்கூட நமது வாழ்க்கையை இறை-சித்தத்துடன் இசைவித்து ஒவ்வொரு சூழ்நிலையிலும் தெய்வத்தன்மையுடன் செயலாற்றி அன்பு, ஒளி மற்றும் அமைதியின் தூதுவர்களாக முடியும் என மெய்ப்பித்துக் காட்டினார். நமது ஆன்மீக மாற்றத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இறைவனுடனான தொடர்பின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு தூய எண்ணமும், சுயநலமற்ற ஒவ்வொரு செயலும் — குணமளித்தல் மற்றும் இணக்கத்தின் அலைகளைச் செலுத்தி, மனித இனத்தை மேம்படுத்தி அதனைப் புனிதப்படுத்துவதற்கு பங்காற்றுகின்றன.

இந்தக் கிறிஸ்துமஸ், நமது குரு பரமஹம்ஸ யோகானந்தருடைய உலக இறை-பணியின் ஆன்மீக மையமான எஸ் ஆர் எஃப் மதர் சென்டரின் 100-வது ஆண்டு விழா நிறைவைக் குறிக்கிறது. இந்தப் புனிதமான இடத்தில்தான் அவர், கிறிஸ்துவைப் போற்றுவதற்காக ஒரு வருடாந்திர முழு-நாள் கிறிஸ்துமஸ் தியான மரபைத் தொடங்கினார் — இது உலகளாவிய கிறிஸ்து உணர்வுநிலையின் பிறப்பை நமக்குள் உணர்வதற்கும், இயேசு, தனது உருவமாகவே கொண்டிருந்த ஆன்மப் பண்புகளான பணிவு, மன்னிப்பு, அனைவரிடமும் நிபந்தனையற்ற அன்பு ஆகியவற்றை மிகவும் முழுமையாக நம் வாழ்க்கையில் வெளிப்படுத்தவும் நமக்கு ஒரு வாய்ப்பாகும். இந்தத் தியானங்களில் ஒன்றில் பரமஹம்ஸர் கூறினார்: “நீங்கள் எப்போதும் அதிகரித்துவரும் தீவிரத்துடன் உங்களது பக்தியைத் தொடர்ந்து சமர்ப்பித்தால், இன்று நீங்கள் முன்பு ஒருபோதும் அனுபவித்திராத இறைவனின் இருப்பைக் கண்டு உணர்வீர்கள்.” உங்களுக்கும் அவ்வாறே ஆகட்டும்!

நீங்கள் ஆன்மாவைப் பேணும் தியான அக அமைதியில் உங்களை மூழ்குவித்து, கிறிஸ்துமஸ்-ன் பிற விழாக்களை குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கொண்டாடும்போது உங்களது பாதையில் குறுக்கிடுவோருக்கு அமைதி, நல்லெண்ணம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பரப்பியவண்ணம் கிறிஸ்துவின் அன்பு உங்களது இதயத்திலிருந்து பொங்கி வழியட்டும்.

மிகவும் அருளார்ந்த கிறிஸ்துமஸ்-காகவும், என்றும் புதிய ஆனந்தமும் மனநிறைவும் நிறைந்த புது வருடத்திற்காகவும் உங்களுக்கு எனது தெய்வீகத் தோழமையும் நல்வாழ்த்துகளும்.

இறைவன், கிறிஸ்து மற்றும் குருமார்களின் அன்பில்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர