ஸ்ரீ மிருணாளினி மாதாவிடம் இருந்து கிறிஸ்துமஸ் செய்திமடல்

"நீங்கள் உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான அன்பு என்ற ஒரு புதிய உணர்வுநிலையின் பிறப்பை அகத்துள் அனுபவிக்க, கிறிஸ்துமஸின் புனித சந்தர்ப்பத்திற்காக தியானம் செய்து உங்கள் மனத்தைத் தயார்செய்வது தான், உண்மையில் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதாகும்."

கிறிஸ்துமஸ் 2012

படைப்பில் இறைவனின் சர்வ வியாபகம் என்றழைக்கப்படும் எல்லையற்ற கிறிஸ்து அவதரித்த, ஒரு வரம்புக்குட்பட்ட குழந்தை வடிவத்தில் எம்பிரானாகிய இயேசுவின் பிறப்பை மகிமைப் படுத்தும் கிறிஸ்துமஸ் பருவத்தின் அருளாசிகளை உங்களுக்கு வழங்குகிறேன். இயேசுவில் வெளிப்படச் செய்யப்பட்ட உலகளாவிய கிறிஸ்து-அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவற்றை உங்கள் இதயத்திலும் ஆன்மாவிலும் நீங்கள் அனுபவிக்க வேண்டி நான் பிரார்த்தனை செய்கிறேன். இறைவனின் உணர்வுநிலையை-விரிவாக்கும் அன்பு மற்றும் ஒளி—இறைவன் தனது அவதாரங்கள் மூலம் பல யுகங்களாக அருளிய, கட்புலனாகாத ஆனால் இடைவிடாத ஆதரவு மற்றும் உற்ற உதவி—பற்றிய அக ஆன்மீக விழிப்புணர்வுடன் கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள். இந்தப் புனித காலத்தில் விசேஷ அன்புடனும் கருணையுடனும் வழங்கப்படும் ஆன்மீக மேம்பாடு எனும் இறைவனின் பரிசுகளை முழுமையாகப் பெற, அந்த அருளாசியில் உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் விசுவாசத்துடன் இசைவித்திருங்கள். உங்கள் கொண்டாட்டங்களின் அமைதி மற்றும் ஆனந்தத்தின் அதிர்வுகள், இயேசு நமக்கு பிறப்புரிமை என்று உறுதியளித்த, இறைவனை-பிரதிபலிக்கும் குணங்கள் மற்றும் வரையறை-கடந்த திறன்களின் உள்ளுணர்வு உறுதிப்பாட்டை உங்கள் இருப்பின் அமைதி மையத்தில் வழங்கியவாறு, அன்றாட கவலைகளின் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் சுமையை நீக்கும். அந்த அனுபூதிக்கான வழியை அவன் நமக்குக் காட்டினான்: இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக “உங்கள் முழு இதயத்தோடும், ஆன்மாவோடும், வலிமையோடும், மனத்தோடும்” நேசியுங்கள்; அடுத்ததாக, “உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டாரையும் நேசியுங்கள்”–இறைவனில் மூழ்கிய வழிபாடுமிக்க ஒரு தியான வாழ்க்கையை வாழுங்கள், மற்றும் ஆன்ம-குணங்களால் வழிநடத்தப்படும் இரக்கம், சேவை, நடத்தை ஆகியவற்றால் ஊடுருவப்பட்ட ஒரு செயற்பாட்டு வாழ்க்கையை வாழுங்கள்.

நமது குருதேவர், பரமஹம்ஸ யோகானந்தர், இயேசுவைப் பற்றி கூறினார்: “மனிதப் பார்வைக்கு அவர் பெத்லகேமில் பிறந்த சிறிய குழந்தை, மற்றும் நோயாளிகளைக் குணப்படுத்தி, இறந்தவர்களை உயிர்ப்பித்த இரட்சகர். தெய்வீகப் பார்வைக்கு அவர் எல்லா வெளியிடத்திலும் ஒவ்வொரு அணுவிலும் உள்ள கிறிஸ்து-விழிப்புணர்வு. உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவை அறிய நீங்கள் ஆசைப்பட வேண்டும்.” குருதேவர் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸுக்கு முன் ஒரு சிறப்புத் தியான-தினத்தை அனுசரிக்கும் வழக்கத்தைத் தொடங்கினார். ஐயன் இயேசுவுக்குள் கிறிஸ்துவின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்தறிவதற்கான பக்தி மற்றும் ஆன்ம-ஏக்கத்துடன், நீண்ட மற்றும் ஆழமான தியானத்தின் மூலம் “ஆன்மீகக் கிறிஸ்துமஸை” கொண்டாடியவாறு, நாம் மனிதப் புரிதலுக்கப்பால் கிறிஸ்து-அமைதி எனும் சாம்ராஜ்ஜியத்தின் கணநேர காட்சியைப் பார்க்கிறோம். நாமும் கூட, கிறிஸ்து வாழ்ந்த உணர்வுநிலையில்—அச்சமின்றி, ஆனந்தமாக—சூழ்நிலைகளாலோ அல்லது மயக்கும் ஆசைகள் மற்றும் பற்றுதல்கள் கொண்ட அகந்தையின் மோகத்தாலோ ஆளப்படாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையால் செறிவூட்டப் பட்டவர்களாக இருக்கிறோம். சுயநலமற்ற அன்பு மற்றும் சத்தியத்தில் நம் வாழ்க்கைகளை நங்கூரமிடுவது என்பது இந்த உலகில் வாழும்போது கூட பரம்பொருளுடன் நமது சாசுவதத் தொடர்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இந்த புனிதப் பருவத்தில் இறைவன், கிறிஸ்து, குருமார்கள் ஆகியோரின் கிறிஸ்துமஸ் அன்பு பரிசுகளாக நீங்கள் ஏராளமான அருளாசிகளைப் பெற வேண்டுகிறேன்.

எப்போதும் அவர்களுடைய இடைவிடாத அன்பிலும் அருளாசிகளிலும்,

ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2012 ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp