தெய்வத்தாயின் முன்னிலையில் வாழுதல்

பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான-மரபுரிமையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை

தெய்வீக தாயாக சித்தரிக்கிறார்

இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதில் இறைவன் இரண்டு அம்சங்களை வெளிப்படுத்தினான்: ஆண்தன்மையுடைய அல்லது தந்தையின், மற்றும் பெண்தன்மையுடைய அல்லது அன்னையின் அம்சங்கள். நீங்கள் கண்களை மூடிப் பரந்த, வரம்பற்ற வெளியைக் காட்சிப்படுத்திப் பார்த்தால், நீங்கள் உணர்ச்சியில் மூழ்கி மயக்கதில் ஆழ்ந்து விடுகிறீர்கள்—நீங்கள் தூய ஞானத்தைத் தவிர வேறெதையும் உணர மாட்டீர்கள். அந்த மறைந்துள்ள, எல்லையற்ற கோளமே தெய்வத்தந்தை; அதில் படைப்பில்லை, நட்சத்திரங்களோ அல்லது கோள்களோ இல்லை, தூய ஞானம் மட்டுமே உண்டு. மற்றும் பேரியற்கையில் நீங்கள் வைரம்போல்-மினுமினுக்கும் நட்சத்திரங்கள், பால் வழி, மலர்கள், பறவைகள், மேகங்கள், மேன்மை, மென்மை, இரக்கம் ஆகியவை நிறைந்த அன்னையின் அம்சத்தை தரிசிக்கிறீர்கள். உலகின் அழகு இறைவனின் படைப்புத்திறன்மிக்க அன்னையின் இயல்புணர்வைக் குறித்துக் காட்டுகிறது, மற்றும் நாம் பேரியற்கையில் உள்ள எல்லா நல்லவைகளையும் பார்க்கும் போது, நாம் நம்மகத்தே மென்மையின் ஓர் உணர்வை அனுபவிக்கிறோம்—நம்மால் இறைவனைப் பேரியற்கையில் தெய்வ அன்னையாகக் காணவும் உணரவும் முடியும்.

ஓர் அடம்பிடிக்கும் குழந்தையைப் போல, தெய்வ அன்னையை அவள், “சரி, உனக்கு என்ன வேண்டும்?,” என்று கூறும் வரை இடைவிடாது அழைத்துக் கொண்டே இருங்கள். அவள் படைப்பில் மிகவும் மும்முரமாக இருக்கிறாள், அவள் உடனடியாகப் பதிலளிக்க மாட்டாள்; ஆனால் அவளுக்காக அழுது, அழுது புலம்பும் சுட்டிக் குழந்தையிடம் அவள் வருவாள்.

தெய்வ அன்னை உங்களைத் திரும்பப் பெற மிகவும் ஆவலுடன் இருக்கிறாள், ஆனால் முதலில் நீங்கள் அவளை மட்டுமே விரும்புகிறீர்கள் என்பதை அவளுக்கு நிரூபிக்க வேண்டும். நீங்கள் அவசரத்துடனும் இடைவிடாமலும் அழ வேண்டும்; பின்னர் அவள் புன்னகைக்கிறாள் மற்றும் உடனடியாக உன்னுடன் இருக்கிறாள். தெய்வீகப் பரம்பொருளுக்குப் பாரபட்சம் கிடையாது; தெய்வ அன்னை எல்லோரையும் நேசிக்கிறாள். ஆனால் அவளுடைய பக்தர்கள் அவளுடைய அன்பைப் போற்றுகின்றனர், அவளுடைய அன்பிற்கு மறுமொழி அளிக்கின்றனர். ஒரு சிறிய அன்பையோ, அல்லது ஒரு சிறிய பணத்தையோ பெற்றிருக்கும் மக்களின் மீதான விளைவை நான் காண்கிறேன்—எத்துணை மகிழ்ச்சியாக அவர்கள் இருக்கின்றனர்! ஆனால் அவர்களால் தெய்வ அன்னையில் என்னே வலிமை, என்னே ஆனந்தம், என்னே அன்பு இருக்கிறது என்பதைப் பார்க்க முடிந்தால், அவர்கள் மற்ற எல்லாவற்றிலும் இருந்து பறந்துவிடுவார்கள்.

தெய்வ அன்னையே, நான் உன் குரலை ரோஜாவின் பேசும் நறுமணத்தில் கேட்டேன். நான் உன் குரலை என் பக்தியின் தெளிவற்ற மென்குரல்களில் கேட்டேன். நான் உன் குரலை என் இரைச்சல்மிகுந்த எண்ணங்களின் ஆரவாரத்திற்குக் கீழே கேட்டேன். நட்பின் குரல் வாயிலாகப் பேசியது உன் அன்பே. நான் உன்னுடைய மிருதுத்தன்மையை ஆம்பல் மலரின் மென்மையில் தொட்டேன்.

தெய்வ அன்னையே, விடியலை உடைத்து உன் ஒளி முகத்தைக் காட்டுவாய்! ஆதவனை உடைத்து உன் சக்தி முகத்தைக் காட்டுவாய்! இரவை உடைத்து உன் நிலா முகத்தைக் காட்டுவாய்! என் எண்ணங்களை உடைத்து உன் ஞான முகத்தைக் காட்டுவாய்! என் உணர்வுகளை உடைத்து உன் அன்பு முகத்தைக் காட்டுவாய்! என் செருக்கை உடைத்து உன் பணிவு முகத்தைக் காட்டுவாய்! என் விவேகத்தை உடைத்து உன் முழுநிறைவு முகத்தைக் காட்டுவாய்!

நான் உன்னை என் தனிமை எனும் காட்டில் அழைத்த போது, நீ உன் ஆனந்தத்தால் என்னை வரவேற்க விடியலின் ஊடாக திடீரெனத் தோன்றவே செய்தாய். நீ உன் சக்தியை என் வாழ்வெனும் மயிர்க்கண்களில் ஊற்ற ஆதவனின் உருக்கிய கதவிலிருந்து தோன்றவே செய்தாய். நீ உன் பேசும் மௌனத்தின் வெள்ளிக் கதிர்களை வெளிப்படுத்த இரவைக் கிழித்தெறியவே செய்தாய்! 

மற்றவர்கள் தமது நேரத்தை வீணடிக்கும் போது, நீங்கள் தியானம் செய்யுங்கள், மற்றும் தியானத்தில் அந்த மௌனம் உங்களிடம் பேசும் என்பதை நீங்கள் காண்பீர்கள்…. எல்லா இடங்களிலும் தெய்வீகப் பரம்பொருள் தெய்வ அன்னையாக வெளிப்படுவதை நான் பார்க்கிறேன். உறைவிக்கப்பட்ட நீர் பனிக்கட்டியாகிறது, மற்றும் அதுபோல கட்புலனாகாப் பரம்பொருள் என் பக்தியின் உறைவால் உருவமாக உறைவிக்கப்படலாம். நான் நேற்றிரவு தரிசித்த தெய்வ அன்னையின் அழகான கண்களை உங்களால் பார்க்க மட்டும் முடிந்திருந்தால். என் இதயம் நிலைபேறான ஆனந்தத்தால் நிரப்பப்பட்டுள்ளது. என்னைப் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்த அந்தக் கண்களில் நான் தரிசித்த ஆனந்தத்தையும் அன்பையும் என் இதயம் எனும் அந்தக் கிண்ணத்தில் அடக்க முடியாது. நான் அவளிடம் கூறினேன், “ஓ! மற்றும் மக்கள் உன்னை போலி என்று அழைக்கின்றனர்!” மற்றும் தெய்வ அன்னை புன்னகைத்தாள். “நீதான் மெய் மற்றும் மற்ற எல்லாம் போலி,” நான் கூறினேன், மற்றும் தெய்வ அன்னை மீண்டும் புன்னகைத்தாள். நான் பிரார்த்தனை செய்தேன், “தெய்வ அன்னையே, அனைவருக்கும் நீ மெய்யாக இருப்பாய்.”

இரண்டு வகையான சாதகர்கள் இருக்கின்றனர்: வானரக்குட்டியைப் போன்றவர்கள் மற்றும் பூனைக்குட்டியைப் போன்றவர்கள். வானரக்குட்டி அன்னையைத் தொற்றிக் கொள்கின்றன; ஆனல் அவள் குதிக்கும்போது அது கீழே விழக்கூடும். சிறு பூனைக்குட்டி அன்னையால் எடுத்துச் செல்லப்படுகிறது, அவள் எங்கே தன்னை வைத்தாலும் அது மனநிறைவடைகிறது. பூனைக்குட்டிக்குத் தன் அன்னையிடம் முழு நம்பிக்கை உள்ளது. நான் பெருமளவு அதைப் போன்றவன்; நான் தெய்வத்தாய்க்கு எல்லாப் பொறுப்பையும் கொடுக்கிறேன். ஆனால் அந்த மனோபாவத்தைத் தக்கவைப்பதற்கு வலிமையான இச்சாசக்தி தேவை. எல்லாச் சூழ்நிலைகளிலும்—நலத்திலோ அல்லது நோயிலோ, செல்வவளத்திலோ அல்லது ஏழ்மையிலோ, சூரிய ஒளியிலோ அல்லது இருண்ட மேகங்களிலோ—உங்களுடைய உணர்வுகள் உலையாமல் இருக்க வேண்டும். நீங்கள் துன்பமெனும் கரியடுப்பில் இருந்தாலும்கூட உங்களை தெய்வத்தாய் ஏன் அங்கு வைத்தாள் என்று வியக்காதீர்கள். எது சிறந்தது என்று அவளுக்குத் தெரியும் என்ற நம்பிக்கை உங்களிடம் உள்ளது. சிலநேரங்களில் பேரிடராகத் தோன்றும் ஒன்று உங்களுக்கான அருளாசியாக மாறுகிறது….

துக்கம் என்பது தெய்வத்தாயின் கை சீராட்ட நீள்வதின் ஒரு நிழலேயன்றி வேறில்லை. அதை மறந்து விடாதீர்கள். சிலநேரங்களில், தெய்வத்தாய் உங்களைச் சீராட்டப் போகும்போது, அவளுடைய கை உங்களைத் தொடுமுன் ஒரு நிழல் அதனால் ஏற்படுகிறது. ஆகவே இடுக்கண் வரும்போது, அவள் உங்களைத் தண்டிப்பதாக எண்ணாதீர்கள்; உங்களை அவளுக்கு அருகாமையில் கொண்டுவர அவள் நீட்டும் போது உங்களை நிழலால் மறைக்கும் அவளுடைய கை ஏதேனும் அருளாசியைப் பிடித்திருக்கிறது.

நீங்கள் இறைவனின் பேரண்ட நாடகத்தை அனுபவித்து அதன்பின் அவனில் உங்களுடைய வீட்டிற்குத் திரும்பவே நீங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டீர்கள்….நான் கூறுகிறேன், “இறைவா, இது உன் நாடகம், அது அவ்வாறே இருக்கட்டும். ஆனால் உன்னுடைய விருப்பத்தின்படி செய்வதைத் தவிர, அதில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு அக்கறையில்லை. என்னால் முடிந்த அளவு விரைவாக, உன் வேலையை நான் செய்துவிட்டு உன்னுடைய இந்த நாடகத்திலிருந்து வெளியேறிவிடுவேன்; ஆனால் நகைச்சுவைகளும் கொடுங்கனவுகளும் நிறைந்த இந்த மாய நாடகத்திலிருந்து வெளியே மற்றவர்களையும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.”…

ஆனால் உங்களுக்கு அது இருக்கிற வரை, உங்கள் மனத்தில் ஒரே சிந்தனைப் போக்கை மட்டுமே வைத்திருங்கள்—இறைவன்….கண்களை மூடி, இறைவனை நினைத்து, தெய்வத்தாய்க்கு உங்கள் ஆன்மாவிலிருந்து ஓர் அழைப்பு விடுங்கள். இதை உங்களால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்யமுடியும். நீங்கள் வேறு என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, உங்களால் மானசீகமாக இறைவனுடன் உரையாட முடியும்: “என் இறைவா, நான் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் உன்னை மட்டுமே அன்றி வேறெதையும் விரும்பவில்லை. நான் எப்போதும் உன்னுடன் இருக்க ஏங்குகிறேன். நீ என்னை உன் பிரதிபிம்பத்தில் படைத்தாய்; மற்றும் என் வீடு உன்னுடன் இருக்கிறது. என்னை உன்னிடமிருந்து விலக்கி வைக்க உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை உன் பேரண்ட நாடகத்தின் மாயைகளால் சபலப்பட்டு நான் தவறு செய்திருக்கக்கூடும்; ஆனால் நீ என் அன்னையாக, என் தந்தையாக, என் நண்பனாக இருப்பதால், நீ என்னை மன்னித்துத் திரும்ப ஏற்றுக் கொள்வாய் என்று எனக்குத் தெரியும். நான் பெருவீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன். நான் உன்னிடம் வர விரும்புகிறேன்.”…

இதைப் பகிர

Facebook
X
WhatsApp