YSS

ஜன்மாஷ்டமி 2016 – ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா அவர்களிடமிருந்து வந்த செய்தி.

அன்பிற்குரியவர்களே!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார நாளான ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுகையில் நாம், தெய்வீக அன்பு, அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டு மற்றும் தன் சீடர் அர்ஜுனனுக்கு புனித மறை நூல் பகவத் கீதை வாயிலாக அவர் போதித்த, யுகம் யுகங்களாக பரப்பப்பட்டு வரும், சாசுவதஞானம் ஆகியவற்றால் எழுச்சியூட்டப்பட்டுள்ள உலகெங்கிலுமுள்ள ஆன்மாக்களுடன் ஒன்றிணைகிறோம். தர்மத்தின் மீட்பாளர் மற்றும் சாதுக்களின் பாதுகாவலர் என்ற தன் பாத்திரத்தின் வாயிலாகக் கிருஷ்ணர், மாயையால் முற்றுகையிடப்பட்டிருக்கும் இறைவனின் குழந்தைகளுக்கு, அவர்கள் என்றும் இறைவனின் பாதுகாப்பில் உள்ளார்கள் என்றும் மேலும் இறைவனது உதவி மற்றும் நம் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாம் ஒவ்வொருவரும் ஆன்மா விடுதலை அடைய முடியும் என்றுமான உத்தரவாதத்தை கொணர்ந்தார்.

குருக்ஷேத்திரப் போரின் போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழிகாட்டியது போல், இறைவன் நமக்கும் உயரிய குருமார்கள் மூலம் வழிகாட்டுவான்.ஆனால் நம் அகத்தே உள்ள தெய்வீக சக்தியைக் கண்டுபிடித்து அதன் மூலம் வெற்றியாளராவதற்கு, நாம் நமது சொந்த தன்முனைப்பைக்கூட நம்மைப் பிணைக்கும் புலன்களின் இழுவிசை மற்றும் லௌகீகப் பழக்கங்கள் மற்றும் சுபாவங்கள் ஆகியவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும். முதல்படிநிலையானது அந்த தடைகளை அடையாளம் காணுதல். குருதேவர், அவரைச் சுற்றி இருந்த எங்களுக்கு, எங்கள் முன்னேற்றத்திற்கு தடையாயிருக்கும் குணங்களைக் காட்டுவதற்குப் பெரும்பாலும் சாதாரணச் சூழ்நிலையைகளையே பயன்படுத்தினார். உங்களுக்கும் குருதேவர், அவர் உங்கள் முன் காட்டும் கண்ணாடியில் நீங்கள் அச்சமின்றி உற்றுநோக்கினால், அதைச் செய்வார். நமது குறைகளை ஒப்புக் கொள்ளுதல், நம்மைத் தாழ்த்தி கொள்ளுவதென்றாகாது. உண்மையில், நாம் ஒரு பிரபஞ்சமாக இந்நிலையில் வாழ்கிறோம் என்று உணர்வது கூட, குருதேவர் எமக்குக் கூறினார். நமது “மிகவும் அரிதான உண்மையின் முதலாவது கணநேரக்காட்சி” ஆகும். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதே ஆன்ம விடுதலையின் தொடக்கமாகும், ஏனெனில் அது நமக்கு நம் அகத்திறன்களை ஒரு திட்டவட்டமான இலக்கின் மீது ஒருமுகப்படுத்தவும் அத்துடன் எண்ணம் மற்றும் இச்சா சக்தியின் ஆற்றலை தீவிரமாக அந்த மாற்றங்களை ஏற்படுத்தப் பயன்படுத்தவும் வல்லமை அளிக்கிறது.

யோக விஞ்ஞானம், நமது ஆன்மாவின் மிக உன்னத பண்புகளை வெளிக்கொணர்வதில் ஒரு விலைமதிப்பற்ற கருவியாகும். குருதேவர் கூறியிருப்பது போல்,”மாயையிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறை என்னும் யோகத்தை கற்று அதை பயிற்சி செய்வது, ஒரு இணையற்ற பொக்கிஷத்தை உடைமையாகக் கொண்டிருப்பதற்கொப்பாகும்.” குருதேவரின் போதனைகளிலுள்ள நன்னடத்தைக்கான கோட்பாடுகள் சிரத்தையுடன் பயன்படுத்தப்படும்போது, அவை நம்முடைய மற்றும் பிறருடைய மிக உயர்ந்த நல்வாழ்விற்கு உகந்தவற்றைச் செய்வதற்கு நம்மை வழிநடத்துகின்றன. அவர் நமக்களித்துள்ள தியான உத்திகளின் சிரத்தைமிகுந்த பயிற்சி, அனைத்து உண்மையின் பேராதாரத்துடனான தொடர்பின் வாயிலாக, நமது உணர்வு நிலையை மிகவும் உள்ளார்ந்தவாறு மாற்றுகிறது.

சுய ஒழுக்கம் மற்றும் விருப்பார்வம் ஆகியவை யோகாவின் ஒரு பகுதியாகும், ஆனாலும் முக்கியமான மற்றொன்று,அன்பு. பிருந்தாவனத்தில், கிருஷ்ணரை கோபர்கள் மற்றும் கோபியர்களுடனும், அவரது முன்னிலையில் அவர்கள் உணரும் ஆனந்தத்துடனும் நினைத்துப் பார்க்கும்போது, கிருஷ்ணர் அத்துணை மாசற்றவாறு தன் உருவமாகக் கொண்டிருந்த இறைவனின் எழில் மற்றும் அதிவசீகரத் தன்மையைக் கண்டு நம் இதயங்கள் புதிதாகக் கிளர்ச்சி அடைகின்றன. இறைவனின் அந்த காந்த விசைதான், நாம் அவனை நாட நம்மை ஈர்த்து, நமது ஆன்மீகப்பயிற்சிகளுக்குப் புத்துயிரையும் மற்றும் நாம் பயிற்சிகளில் விடாமுயற்சியுடனிருக்க வலிமையையும் அளிக்கிறது. கிருஷ்ணரின் இளம் தோழர்களை அவரது வேய்ங்குழலின் அழைப்பைப் பின்பற்றுவதற்காக பிற அனைத்தையும் கைவிட எழுச்சியூட்டிய அதே பேரார்வத்துடன் உங்கள் தினசரி தியானங்களை அணுகினால், இறைவனுடன் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய இனிமையான தனிப்பட்ட உறவை உங்கள் இதயமும் மனம் திறந்து கொள்ளும்.

இறைவனை அறிவதற்கும் நேசிப்பதற்குமான ஓர் என்றும் அதிகரித்துக்கொண்டிருக்கும் ஆசையை அவன் உங்களுக்கு வழங்கியருளட்டும்.

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

காப்புரிமை@2016 ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப், அனைத்து உரிமைகளும் பிரத்யேகமானவை.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp