YSS

கிறிஸ்து உணர்வு நிலையைப் பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

அருளியவர் பரமஹம்ஸ யோகானந்தர்

1935 -இல் இந்தியாவிலிருந்து, ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப்பின் அனைத்து மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கும், பரமஹம்ஸரது புனித தேச (ஜெரூசலம்) விஜயத்திற்குப் பின் சிறிது காலத்திற்குள்ளேயே எழுதப்பட்டது.

உயர் குருமார்களின் ஞானத்தினால் வலுவூட்டப்பட்டு, ஜெரூசலம் மற்றும் இந்தியாவிலிருந்து பரம்பொருளின் ஒரு புதிய செய்தியை நான் உங்களுக்குக் கொணர்கிறேன். இவ்வாறு தெய்வத்தின் ஒரு கருவியாகத் திகழ என் ஆன்மா பேறு பெற்றுள்ளது.

எண்ணமெனும் எழுதுகோல், ஆகாயம் எனும் கருமை நிறப் பக்கத்தில் எழுதி பரம்பொருள் – உண்மையை மிகச்சிறியதாக தெரியச் செய்கிறது. எனது (எண்ண) உற்று எழுதுகோல் கண்ணிற்குப் புலனாகாத எண்ணங்களை கண்ணிற்குப் புலனாகும்படிச் செய்கிறது. இந்தப் பக்கத்தின் (ஆகாயம்) மேல் நான், அனைவரும் இறைவனின் மகிமையைக் காண்பதற்காக, இறைவனை மை, எண்ணங்கள் மற்றும் ஆன்ம அனுபூதி கொண்டு விவரிக்கிறேன்.

பேருண்மையானது, எண்ணங்கள் மற்றும் வார்த்தைகள் எனும் ஜன்னல் ஊடாக இயல்பாக வெளிப்படுவது போல், இறைவன் கிறிஸ்து அறிவுத்திறன் மற்றும் அதிர்வுறும் படைப்பு ஊடாக வெளிப்படுகிறான். தேசங்கள் எனும் ஜெபமணிகள் கிறிஸ்து அமைதி எனும் கிறிஸ்து உணர்வு நிலையின் உலகளாவிய ஞானம் எனும் நூலினால் ஒன்றாகக் கோர்த்து வைக்கப்படவில்லை என்றால், சுயநலம் எனும் பாறைகள் மேல் மோதிச் சிதறி அவை உடைந்து துண்டு துண்டாகிவிடும். கிறிஸ்மஸ்ஸின் கிறிஸ்து, எல்லா இன்னல்களும் ஒன்று மற்றொன்றிற்கான இதய அன்பில் கொண்டாடப்பட வேண்டும்.

நான் புதிய சர்வதேசப் புரிதல் எனும் தொட்டிலில் கிறிஸ்து பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இதன் மூலம் போர் எனும் கரிய இரவிலிருந்து கிறிஸ்து அன்பு எனும் விண்மீன் ஒரு புதிய ஐக்கிய உலகத்தை ஒளியூட்டட்டும். கிறிஸ்துவானவர், அனைத்து நாடுகளிலும் ஒற்றுமை எனும் அன்பாக, அனைத்து மனிதர்களிலும் ஆன்மீகக் குறிக்கோளாக உண்மையான நண்பர்களில் தெய்வீக நண்பனாக, இப்பாதையின் மாணவர்களில் ஆன்ம – அனுபூதியாக மற்றும் அனைத்து ஆழ்ந்த பக்தர்களில் சாசுவத, என்றும் புதிய ஆனந்தம் மற்றும் நிரந்தர ஞானமாகப் பிறக்க வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.

பூமியுடன் பிணைக்கும் உடமைகள் மற்றும் மகிமை அனைத்தும் மங்கிப் போய்விடும். ஆனால் இறைவனுடன் பிணைக்கும் உடமைகள் ஒப்பற்ற பயன்பாட்டுடன் சேவை புரிந்த வண்ணம் சாசுவதம் ஊடாக நிலைத்து நிற்கும். மாற்றம் எனும் பீடத்தில், ஏன் லெளகீக சுகத்தை வழிபடவேண்டும். அழிவின்மை எனும் பீடத்தில், ஆன்மீக ஆறுதலை வழிபட கற்றுக்கொள்ளுங்கள். புவி உலக செல்வங்களை அழிவுறமுடியாத விண்ணுலக பொக்கிஷமாக மாற்றுவதற்கான மிகச்சிறந்த வழி அவற்றை ஆன்மீக சேவைக்காகப் பயன்படுத்துவது தான். கிறிஸ்துவை அறிவதற்கு கிறிஸ்துவைப் போன்று வாழ வேண்டும். அனைத்து நல்ல செயல்களிலும், ஒவ்வொரு லௌகீக மற்றும் ஆன்மீக சேவையிலும் மற்றும் தியானம் எனும் தொட்டிலிலும் அழிவற்ற பிரபஞ்ச கிறிஸ்து புதிதாகப் பிறக்கிறார்.

இறையியல் பற்றியப் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் ஒருவராலும் கிறிஸ்துவைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியாது; ஒருவர், அவரது முன்னிலையை தியானம் எனும் அந்தரங்க அறையில் உணரவேண்டும். பக்தி எனும் மென்மையான குச்சிகளால் நெய்யப்பட்ட தியானத்துடன் இசைந்த எண்ணங்கள் எனும் தொட்டிலில் அக அமைதியாகிய கூவும் புறாவால் தாலாட்டப்பட்டுள்ள புதிதாகப் பிறந்த கிறிஸ்துவைக் காணுங்கள்.

இந்த இருபது நூற்றாண்டுகளில் 1935 தடவைகள் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டுள்ளது — இருப்பினும் எவ்வாறு மிகச்சிலரே இயேசு பிறப்பின் உண்மையான மகத்துவத்தை அறிந்துள்ளனர்! ஒவ்வொரு வருடமும் இறைவனும் தேவதைகளும் இந்த நிகழ்வை அனைவரது நன்மைக்கான விண்ணுலகக் கொண்டாட்டங்களால் அங்கீகரிக்கின்றனர். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும், முந்தைய வாரங்களில் ஆழ் தியானங்கள் மூலம், வரப் போகும் இந்த கிறிஸ்துமஸைக் கொண்டாட, அவரது உணர்வு நிலையைத் தயார் செய்யுங்கள். உங்கள் தியானம் எனும் குக்கிராமத்தில் புதிதாகப் பிறந்த கிறிஸ்து உணர்வு நிலையின் வருகை, விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் ஆன்மாவிற்கு வசீகரமாகவும், எழுச்சியூட்டுவதாகவும் மற்றும் விரிவடையச் செய்வதாகவும் திகழும். உங்கள் தியான உணர்வு நிலை எனும் முதுகுத்தண்டு கிறிஸ்துமஸ் மரத்தை,* தெய்வீக கிறிஸ்துவைப் பற்றிய புதிய புரிதல்கள், என்றும் மின்னிக் கொண்டிருக்கும் ஞானமெனும் விண்மீன்கள் மற்றும் தெய்வீக அன்பெனும் தாமரைகள் ஆகியவற்றால் அலங்கரித்து கிறிஸ்துவின் வருகைக்காகத் தயாராகுங்கள். இந்த அகக் கிறிஸ்துமஸ் மரத்தின் காலடியில் உங்கள் அனைத்து உலக ஆசைகளையும், என்றென்றைக்குமாக உங்கள் அகத்தே உள்ள கிறிஸ்து ஆனந்தத்திற்கு பரிசு அளிக்கும் வகையில், கிடத்துங்கள்.

பிறகு கிறிஸ்துமஸ் காலையில் எழுந்தவுடன், கிறிஸ்துவானவர் பல கிளைகள் கொண்ட உங்கள் உணர்வு நிலை எனும் கிறிஸ்துமஸ் மரத்தை, உங்கள் பரிசுகளை பெற்றுக் கொண்டு, உங்களுக்கு சாசுவதத்தின் பொன்னிழைகளால் கோர்க்கப்பட்ட அவரது அழிக்கமுடியாத கொடைகளான சர்வ வியாபகம், சர்வ ஞானம், தெய்வீக அன்பு, பிரபஞ்சப் பேரொளி, என்றும் விழிதிருந்தல் மற்றும் என்றும் புதிய ஆனந்தம் ஆகியவற்றை உங்களுக்கு அளிப்பதற்காக அருகில் ஈர்ப்பார்.


*ஆழ்ந்து தியானித்துக் கொண்டிருக்கும் பக்தர்களின் அகப் பார்வையில் விளக்குகளாக வெளிப்படும் ஆன்மீக அறிவுத்திறன் மற்றும் உயிர் சக்தி சார்ந்த மனிதனின் ஏழு மூளை முதுகுத்தண்டு மையங்களைக் குறிக்கிறது. இந்து மறை நூல்களில் இந்த மையங்கள் பெரும்பாலும் தாமரைகள் என்று விவரிக்கப்படுகின்றன;

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp