எளிமையை இதயத்தில் இருத்துதல்

பரமஹம்ஸ யோகானந்தரின் மரபுரிமை செல்வம் எனும் நூலில் இருந்து

தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்.

ஒரு ஏரிக்கு அருகில் தியானம்

ஒரு எளிமையான வாழ்க்கை மிக ஆனந்தமான ஒரு வாழ்க்கை. மகிழ்ச்சி என்பது வெளிப்புற சூழ்நிலைகளைச் சார்ந்ததல்ல; மாறாக அது வாழ்க்கையின் எளிமையான ஆனந்தங்களில், அனைத்திற்கும் மேலாக ஆழ்தியானத்தின் என்றும் புதிய பேரின்பத்தில் கண்டுணரப்பட வேண்டும்….

எளிமையான உண்மையான மற்றும் நீடித்திருக்கும் ஆன்ம –ஆனந்தங்களைப் பற்றிக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருங்கள். அவை ஆழ்ந்த சிந்தனை, உள்முகநோக்கு, ஆன்மீக அகத்தூண்டுதல் மற்றும் தியானம் ஆகியவற்றின் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன.

நவீன வாழ்க்கை மிகவும் அதிருப்திகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது இல்லை.அங்கே அனேக விஷயங்கள், மிதமிஞ்சிய ஆசைகள் உள்ளன. அதிகமான நேர்த்தியான கார்கள் மற்றும் உடைகள் மேலும் பொழுதுபோக்குகள் அத்துடன் அதிகமான கவலைகள்! “தேவைகள்” என்றழைக்கப்படும் இவற்றிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள், மேலும் அதிகநேரம் இறைவனுடன் செலவிடுங்கள். உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குங்கள். உங்கள் ஆன்மாவில் உங்கள் ஆன்மாவால் மகிழ்ச்சியாக இருங்கள்.

நவீன மனிதனின் இன்பம் என்பது மேலும் மேலும் பொருட்களை வாங்குவதில் உள்ளது, இதனால் மற்றவர்களுக்கு என்ன நேருகிறது என்பதைப் பற்றி கவலையில்லை. ஆனால் இம்மாதிரி அதிக ஆடம்பரங்கள் இன்றி மிகக்குறைந்த கவலைகளுடன் எளிமையாக வாழ்வது மேம்பட்டதில்லையா? நீங்கள் பெற்றிருப்பதை உங்களால் அனுபவிக்க முடியாத அளவுவரை உங்களை பெரும் முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்வதில் எந்த இன்பமும் இல்லை. . . . . மனித இனம் அநேக பொருட்களை விரும்பும் உணர்வு நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ள தொடங்கும் ஒரு காலம் வரும். எளிமையான வாழ்க்கையில் அதிக பாதுகாப்பும் அமைதியும் காணப்படும்.

மன அழுத்தம் மற்றும் நிதிநிலை தொடர்பான கவலைகளை குறைப்பதற்கு வாழ்க்கையை எளிமையாக்குங்கள்

பல வசதிகள் கொண்ட லெளகீக வாழ்க்கை கண்களுக்கும் அகந்தையின் அந்தஸ்து உணர்வுநிலைக்கு மட்டுமே இன்பம் தருவதாக உள்ளது, ஆனால் மிகச் சிலரே ‘லெளகீக வசதிகளுக்கு அளிக்க வேண்டிய விலையை அறிகின்றனர். பொருளாதாரஅடிமைத்தனம், மனக்கலக்கம், வியாபாரக் கவலைகள், நேர்மையற்ற போட்டி, சச்சரவுகள், சுதந்திரமின்மை, நோய், துன்பம், முதுமை மற்றும் மரணம் ஆகியவை உலகியல் ரீதியாக நெருங்கிய வாழ்க்கையின் விளைவுகளாகும். வாழ்க்கையில் அழகு, இயற்கை மற்றும் இறைவனின் அனேக வெளிப்பாடுகள் ஆகியவற்றின் மதிப்பை உணர்வதற்கு நேரம் இல்லாதபோது, இழப்புகள் அதிகமாகவே உள்ளன.

உங்களுக்கு உண்மையாகத் தேவைப்படும் அளவைவிட பெரியதாக அல்லாமல், சரியாகப் போதுமான அளவுடைய ஒரு வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுங்கள், முடியுமானால் வரிகளும் மற்ற வாழ்க்கை செலவினங்களும் நியாயமாக உள்ள ஒரு நகரப் பகுதியைத் தேர்ந்தெடுங்கள். பொய்யான மற்றும் ஊதாரித்தனமான இன்பங்களை நாடாமல் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டு இறைவன் கொடுத்திருப்பதை அனுபவியுங்கள். இறைவனது இரகசிய இயல்பில், மனிதனின் மனத்தை வசீகரிப்பதற்கு ஏராளமாக உள்ளன. உங்கள் ஓய்வு நேரத்தை உயர்தரப் புத்தகங்களைப் படிப்பதற்கு தியானம் செய்வதற்கும் பயன்படுத்தி ஒரு சிக்கலற்ற வாழ்க்கையை அனுபவியுங்கள். எளிமையான வாழ்க்கை, குறைந்த கவலைகள், மற்றும் இறைவனை நாடுவதற்கான நேரம் –இவை, ஒரு பெரிய வீடு, இரண்டு கார்கள், செலுத்த வேண்டிய தவணைத் தொகைகள் மற்றும் உங்களால் மீட்க முடியாத அடமானம் ஆகியவற்றைப் பெற்று இருப்பதைவிட மேம்பட்டதல்லவா?

இறைவன் அவனது எல்லையில்லாக் கருணையில், நமது வாழ்க்கையின் பலவிதமான அனுபவங்கள் மூலமாக நமக்கு அவனது ஆனந்தம், அவனது அகத்தூண்டுதல், உண்மையான வாழ்க்கை, உண்மையான ஞானம், உண்மையான மகிழ்ச்சி மற்றும் உண்மையானப் புரிதலை அளிக்கிறான். ஆனால் இறைவனது மகிமை, ஆன்மாவின் அமைதியில், அவனுடன் தொடர்பு கொள்வதற்காக மனம் எடுக்கும் அக முயற்சியின் தீவிரத்தில் வெளிப்படுகிறது. வெளிப்புறத்தில் மாயை மிக வலுவாக உள்ளது; வெகு சில மனிதர்களே வெளிப்புறச் சூழ்நிலையின் தாக்கங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். உலகமானது அதன் எல்லையற்ற சிக்கல்கள் மற்றும் பல்வேறு வகையான அனுபவங்களுடன் நகர்ந்து கொண்டே உள்ளது. ஒவ்வொரு வாழ்க்கையும் புதியது மற்றும் ஒவ்வொரு வாழ்க்கையும் வேறுபட்ட விதத்தில் வாழப்பட வேண்டும். இருப்பினும் அனைத்து வாழ்க்கையின் அடித்தளத்திலும் இருப்பது, நம்மிடம் எப்போதும் மலர்கள் மூலமாகவும், மறை நூல்கள் மூலமாகவும் மற்றும் நம் மனசாட்சி மூலமாகவும் – அதாவது அழகாக இருக்கும் அனைத்து விஷயம் மற்றும் வாழ்க்கையை வாழத் தகுதியாக்கும் அனைத்தின் மூலமாகவும் என்றும் பேசிக் கொண்டிருக்கும், இறைவனின் மௌனக் குரலாகும்.

முக்கியமான விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

பொன்னான ஆன்மீக வாய்ப்புகளை முட்டாளின் பொன் எனும் லெளகீக மினுமினுப்பில் விரையம் செய்யாதீர்கள். நான் பெயரிட்டிருக்கும் “தேவையற்ற தேவைகள்” இனம் சார்ந்த தேகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இடைவிடாத பரப்புகளில் நேரம் செலவிடப்பட்டால், பின் இறைவனுக்கான நேரம் எங்கே கிடைக்கும்? மாறாக வாழ்க்கையை எளிமைப்படுத்தி சேமிக்கப்பட்ட அந்த நேரத்தை, இறைத் தொடர்பிற்கான தியானத்திலும், வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான அமைதி மற்றும் மகிழ்ச்சியை அடைவதில் உள்ள உண்மையான முன்னேற்றத்திலும் பயன்படுத்துங்கள்.

இறைவன் எளிமையானவன் மற்ற அனைத்தும் சிக்கலானவை.

இறை உணர்விலும், அனைத்துப் படைப்பின் ஊடாக ஒரு பெரும் கடலைப் போன்று பாய்ந்து செல்லும் எல்லையற்றவனின் அனுபூதியிலும் நிலை பெற்றிருங்கள். வாழ்க்கையின் இந்த குறுகிய காலத்தில் இறை-அனுபூதி பெறுவதற்காக முயற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாகும். ஆனந்தம்இடைவிடாமல் பொழியும்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp