YSS

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1915இல், பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவில் செராம்பூர் நகரில் அவரது குரு சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வரிடமிருந்து சன்னியாசத்திற்கான சபதங்களை ஏற்று, இந்தியாவின் புராதன ‘சுவாமி’ சன்னியாசப் பரம்பரையில் தீட்சை பெற்றார். இந்நிகழ்ச்சி இருபத்திரெண்டு வயதே ஆன முகுந்தலால் கோஷின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை குறிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் — அப்பொழுது அவர் சுவாமி யோகானந்த கிரி ஆகியிருந்தார் — 20ம் நூற்றாண்டிலும் மற்றும் அதற்கு அப்பாலும் உலக ஆன்மீக எழுச்சியில் அவர் ஏற்படுத்த இருக்கும் தாக்கத்திற்கு முன்னறிவிப்பு செய்வதாகவும் அமைந்தது; அது அவர் ஏற்படுத்திய சன்னியாசப் பரம்பரையின் காரணத்தினால் மட்டுமல்ல.

பரமஹம்ஸ யோகானந்தர் இணைந்த புராதன சுவாமி பரம்பரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சன்னியாசிகளைக் கொண்ட யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசச் சமூகத்தில் செழித்து வளர்கிறது. இந்தச் சன்னியாசப் பரம்பரை ஒய்.எஸ்.எஸ் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் யோகத்தைப் பரவலாகப் பரப்புவதற்கும் உதவுகிறது.

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி, 2019 ஆம் ஆண்டு ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் உள்ள ஸ்மிருதி மந்திரில் ஸ்வாமி வரிசையில்        புதிய சன்னியாசி தீட்சை பெற்றவர்களுடன்
ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி, 2019 ஆம் ஆண்டு ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் உள்ள ஸ்மிருதி மந்திரில் ஸ்வாமி வரிசையில் புதிய சன்னியாசி தீட்சை பெற்றவர்களுடன்

தான் நிறுவிய சன்னியாசப் பரம்பரை பற்றி விவரித்தவாறு பரமஹம்ஸர் இவ்வாறு எழுதினார் : “என்னைப் பொறுத்தவரை, சுவாமி பரம்பரையின் சன்னியாசி என்னும் முழுமையான துறவு நிலை தான், எவ்வித உலக பந்த பாசங்களுக்கும் கட்டுப்படாமல் என் வாழ்வை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்னும் என் இதயத்தின் தீவிர விருப்பத்திற்கு சாத்தியமான ஒரே பதில்…

“ஒரு துறவி என்ற முறையில், என் வாழ்க்கை இறைவனுக்கான முழுமையான சேவைக்கும் மற்றும் அவரது அருள்மொழியினால் அனைவரது இதயங்களிலும் ஆன்மீக எழுச்சியூட்டுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்னுடைய பாதையைப் பின்பற்றும், மேலும் தியானம் மற்றும் கடமையுணர்வுடன் கூடிய செயற்பாடுகள் எனும் யோகக் கோட்பாடுகளின் வாயிலாக இறைவனை நாடி அவனுக்குச் சேவை செய்யும் ஒரு வாழ்வில் முழுமையான சன்னியாசத்திற்கான அழைப்பையும் உணரும் அவர்களுக்காக, என் குருவிடமிருந்து ஒரு சுவாமிக்கான புனித தீட்சை பெற்ற பொழுது நான் ஏற்றுக்கொண்ட சங்கரர் வழிவந்த சன்னியாச மரபை, ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்/ யோகதா சத்சங்க சொஸைடி -ன் சன்னியாச பரம்பரையில் நிலைபேறுடையதாக ஆக்கி உள்ளேன். என் மூலமாக இறைவன், என் குரு மற்றும் பரம குருமார்கள் தொடங்கியுள்ள ஆன்மீக நிறுவனப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன… .துறவு, இறைவனுக்கான அன்பு ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களால். “

சுவாமி சிதானந்தஜி (நடுவில், உரையாடுகிறார்) ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் இயல்பான ஒரு சன்னியாசிகள் குழுவில்

” நான் சுவாமி பரம்பரையில் சன்னியாசி ஆகிறேன் “

பரமஹம்ஸ யோகானந்தர்

“குருதேவா, வங்காள-நாக்பூர் ரயில்வேயில் நான் ஓர் உயர் பதவியை ஏற்க வேண்டுமென என் தகப்பனார் ஆவலுடன் இருக்கிறார். ஆனால் நான் அதைத் தீர்மானமாக மறுத்து விட்டேன்.” நான் நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்: “ஐயா, எனக்கு சுவாமி பரம்பரையில் சன்னியாசம் தந்தருள மாட்டீர்களா? நான் என் குருவைக் கெஞ்சியபடி நோக்கினேன். கடந்த சில வருடங்களாகவே என் தீர்மானத்தின் ஆழத்தைப் பரிசோதிப்பதற்காக வேண்டி அவர் இந்தக் கோரிக்கையை மறுத்தே வந்திருக்கிறார். எனினும் இன்று அவர் கருணையுடன் புன்னகைத்தார்.

“மிகவும் நல்லது, நாளை நான் உனக்கு சன்னியாச தீட்சை அளிக்கிறேன்.” அவர் அமைதியாகத் தொடர்ந்தார், “நீ சன்னியாசியாக வேண்டும் என்ற விருப்பத்தில் உறுதியாக இருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி. லாஹிரி மகாசயர் அடிக்கடி கூறுவார்: “நீ உன் வாழ்க்கையின் வசந்த காலமெனும் வாலிபப் பருவத்தில் கடவுளை அழைக்காவிடில், குளிர் காலமெனும் முதுமைப் பருவத்தில் அவர் வரமாட்டார்.”

“அன்பான குருதேவா, வணக்கத்திற்குரிய தங்களைப் போலவே சுவாமி பரம்பரையில் ஒருவனாக ஆகவேண்டுமென்ற என் வேட்கையை என்னால் என்றுமே விட முடிந்ததில்லை.” அளவு கடந்த அன்புடன் நான் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தேன்….

என் வாழ்வில் இறைவனுக்கு இரண்டாவது இடம் அளிப்பது என்பது என்னைப் பொறுத்த வரையில் நினைக்கவே முடியாதது. அவர்தான் இந்தப் பேரண்டத்தின் ஒரே உரிமையாளர். மனிதனின் ஒவ்வொரு பிறவியிலும் அவன் மீது அருட்கொடைகளை மௌனமாகப் பொழிபவர். அவைகளுக்குப் பதிலாக மனிதன் கடவுளுக்கு கொடுக்கக்கூடிய பரிசு ஒன்றே உண்டு – அதுதான் அவனது அன்பு. அதைக் கொடுப்பதற்கும் கொடுக்காமலிருப்பதற்கும் அவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது…

மறு நாள் நான் என் வாழ்வில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் நாட்களில் ஒன்றாகும். சூரியன் பளீரென்று ஒளி வீசிக் கொண்டிருந்தான். அன்று வியாழக்கிழமை என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஜூலை 1915-இல் நான் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று சில வாரங்கள் கழிந்திருந்தன. செராம்பூர் ஆசிரமத்தின் உள்ளிருந்த பால்கனியில் குருதேவர் ஒரு புது வெள்ளைப் பட்டுத்துணியை சன்னியாசிகளுக்கே உரிய காவி வண்ணத்தில் நனைத்தார். அந்தத் துணி உலர்ந்த பின்னர் அதை ஒரு சன்னியாசியின் உடையாக என் உடலைச் சுற்றி என் குரு அணிவித்தார்… .

நான் ஸ்ரீயுக்தேஸ்வரருக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கியதும் முதல் தடவையாக என் புதுப் பெயரை அவர் உச்சரித்த பொழுது என் இதயத்துள் நன்றி பெருக்கெடுத்தது. முகுந்தா என்னும் சிறுவன் ஒரு நாள் சன்னியாசி யோகானந்தாவாக மாறவேண்டும் என்று எவ்வளவு பிரியத்துடனும் அயராமலும் அவர் உழைத்திருக்கிறார்! நான் மகிழ்ச்சியுடன் ஆதிசங்கரரின் நீண்ட சம்ஸ்கிருத தோத்திரத்திலிருந்து சில அடிகளைப் பாடினேன்:

மனம், புத்தி, அகம் சித்தமில்ல;
வானம், புவி, உலோகமில்லை.
அவன் நான், அவன் நான், தூய ஆன்மா அவன் நான்!
உறப்பிறப்பு, குலம் யாதுமில்லை,
தாயும், தந்தையும் யாருமில்லை.
அவன் நான், ன அவன் நான், தூய ஆன்மா அவன் நான்!
சிறகடிக்கும் சிந்தனையும் கடந்தே, சீருருவம் அற்ற அருவமேயான்.
அனைத்துயிரின் அங்கமெல்லாம் ஊடுருவி யான் நிற்பேன் ;
பந்தமெனும் பயமேதும் எனக்கிங்கில்லை;
நான் சுதந்திரன், என்றுமே நான் சுதந்திரன்
நானே அவன், நானே அவன், நன்னருள் பெற்ற ஆத்மாவே நான்!

உண்மையில், கிரியா யோகத்தின் புராதன தியான விஞ்ஞானத்தை மேலை மற்றும் உலக நாடுகளில் பரப்புவதற்கான பரமஹம்ஸரின் குறிப்பிட்ட பணி, அமெரிக்காவில் அவரது சன்னியாச பரம்பரையின் வரலாறு காணாத வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. யோகானந்தரின் கிரியா யோக பணிக்கான சன்னியாச பரம்பரையின் வேர்கள், அவரது குரு ஸ்ரீயுக்தேஸ்வருக்கும் நவீன காலத்தில் கிரியா யோக பரம்பரையை தொடங்கிய மகாவதார் பாபாஜிக்கும் நடந்த சந்திப்பு வரை செல்கிறது. பாபாஜி, முதலில் இல்லற மற்றும் குடும்பத் தலைவரான லாஹிரி மகாசயருக்கு, பல நூற்றாண்டுகளாக மறைந்து விட்டிருந்த கிரியா யோக விஞ்ஞானத்தை மக்களிடையே கற்பிப்பதற்கான செயல்முறையை தொடங்குவதற்கு அனுமதி அளித்தார். ஸ்ரீ யுக்தேஷ்வரும் அவருடைய குரு லாஹிரி மகாசயரைப் போல 1894இல் அலகாபாத்தில் கும்பமேளாவில் மகாவதார் பாபாஜியை சந்திக்கும் வரை இல்லறத்தில் (அவரது மனைவியை இழந்த போதிலும்) இருந்தார். ஸ்ரீ யுக்தேஸ்வர் அந்த சந்திப்பை இவ்வாறு விவரிக்கிறார் : ” வரவேண்டும், சுவாமிஜி,” என்றார் பாபாஜி அன்புடன்.

“ஐயா, நான் சுவாமி இல்லை ,” என்றேன் அழுத்தமாக.”

“நான் யாருக்கு சுவாமி என்ற பட்டத்தை அளிக்க தெய்வீக வழி காட்டப்படுகிறேனோ, அவர்கள் அதை நிராகரிப்பதில்லை”. அம்மகான் எளிய முறையில் என்னிடம் கூறினாலும் அவருடைய சொற்களில், உண்மையின் ஆழ்ந்த திடநம்பிக்கை தொனித்தது. அக்கணமே ஒரு ஆன்மீக அருளாசியின் அலையால் நான் சூழப்பட்டேன்.

பாபாஜி அப்புதிய சுவாமியிடம் கூறினார்: “சில வருடங்களுக்குப் பிறகு நான் உங்களிடம் அனுப்பும் ஒரு சீடனுக்கு நீங்கள் மேலைநாடுகளில் யோகத்தைப் பரப்புவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.” அந்த சீடர் பரமஹம்ஸ யோகானந்தர் தான். இச்செய்தி பின்னாளில் மகாவதாராலேயே நேரிடையாக பரமஹம்ஸரிடம் கூறப்பட்டது. யோகானந்தரை ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் பயிற்சிக்கு அனுப்பும் முன்பு, அவரை ஒரு சுவாமியாக மாற்றியதன் மூலம், மேலை மற்றும் உலகெங்கிலும் கிரியா யோகத்தைப் பரப்பும் முக்கிய பணி, இந்தியாவின் புராதன சன்னியாச மரபைச் சேர்ந்த இறைவனுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சன்னியாசிகளால் நிறைவேற்றப்படுவதை பாபாஜி உறுதி செய்தார்

 

பரமஹம்ஸ யோகானந்தர், அப்பொழுதுதான் சன்னியாச , தீட்சையையும் ராஜரிஷி ஜனகானந்தர் என்ற சன்னியாச நாமத்தையும் வழங்கியிருந்த தனக்குப் பிடித்தமான சீடர் ஜேம்ஸ் ஜே. லின்னுக்கு தனது கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார்; எஸ்.ஆர்.எஃப்.-ஒய்.எஸ்.எஸ். சர்வதேச தலைமையகம், லாஸ் ஏஞ்சலீஸ், ஆகஸ்ட் 25, 1951

ஸ்ரீ தயா மாதா, ஸ்வாமி ஷியமானந்தர், அன்னை மையம், 1970 இல் சந்நியாசத்தின் காவி துணியை போர்த்துகிறார்

ஸ்ரீ தயா மாதா சன்னியாசத்திற்கான காவித் துணியை சுவாமி சியாமானந்தரின் மீது போர்த்துதல், மதர் சென்டர்,1970.

1925-இல் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சர்வதேச தலைமையகத்தை லாஸ் ஏஞ்சலீஸில் நிறுவிய பிறகு, பரமஹம்ஸர் மெல்ல மெல்ல, தங்கள் வாழ்க்கையை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விருப்பம் கொண்ட ஆண் பெண்களுக்கு பயிற்சி அளிக்க அவர்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஸ்ரீ தயா மாதா, ஸ்ரீ ஞான மாதா மற்றும் முழு ஈடுபாடு கொண்டுள்ள பிற ஆரம்பகால சீடர்களின் வருகையால், மவுண்ட் வாஷிங்டன் உச்சியில் அமைந்துள்ள ஆசிரமம் படிப்படியாக வளர்ந்து வரும் சன்னியாசிகள் குடும்பத்தின் இல்லமாக மாறியது. இந்த சன்னியாசிகளிடம் அவர் சன்னியாச வாழ்க்கையின் லட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை ஆழப் பதித்தார். அவற்றைத் தானும் கடைப்பிடித்து, மிகச் சிறந்த உதாரணமாக விளங்கினார். மேலும் குருதேவர் தன்னுடைய நெருங்கிய சீடர்களுக்கு – தனது ஸ்தாபனத்தின் எதிர்காலப் பொறுப்பை அவர் ஒப்படைத்த சீடர்களுக்கு — அவருடைய போதனைகளைப் பரப்புவதற்கும் மற்றும் அவர் தொடங்கிய உலகளாவிய ஆன்மீக மற்றும் மனிதநேய பணிகள் தொடர்வதற்கும் குறிப்பிட்ட வழிமுறைகளை அளித்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் ஆசிரமவாசிகளுக்கு அவர் அளித்த அதே ஆழ்ந்த ஆன்மீக போதனை மற்றும் ஒழுக்கநெறிகள் இன்றும் புதிய தலைமுறை ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளுக்குக் கற்பிக்கப்படுகிறது.

இவ்வாறு பரமஹம்ஸ யோகானந்தர் மூலம் இந்தியாவின் புராதன சன்னியாச சுவாமி பரம்பரை அமெரிக்காவில் தனது ஆழமான மற்றும் நிலையான வேர்களை ஊன்றியது. பரமஹம்ஸர் தகுதியுள்ள மேற்கத்தியர்களுக்குத் தீட்சை வழங்கியதுடன் கூட, பாரம்பரிய வழக்கத்தையும் இவ்வாறு மாற்றியமைத்தார் : ஆண் பெண் இருபாலாருக்கும் சமமாக சன்னியாச தீட்சை மற்றும் ஆன்மீகத் தலைமைப் பொறுப்புகளை கொடுத்தார். அது அவர் காலத்திய வழக்கத்திற்கு மாறான ஒரு நடைமுறை ஆகும். பரமஹம்ஸர் சன்னியாச தீட்சை அளித்த எஸ்.ஆர்.எஃப்.பின் முதல் சீடர் ஒரு பெண்மணி தான் — ஸ்ரீ தயா மாதா, பின்னாளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒய்.எஸ்.எஸ். /எஸ்.ஆர்.எஃப். -ன் ஆன்மீகத் தலைமை பொறுப்பேற்று நடத்தியவர்.

ஸ்ரீ தயா மாதா சங்கத் தலைவியாக இருந்த காலத்தில்தான் இந்தியாவின் சுவாமி பரம்பரையின் மூத்த தலைவரான – பூரி சங்கராச்சாரியார், ஜகத்குரு சுவாமி பாரதி கிருஷ்ண தீர்த்தர் – 1958ல் அவரது புரட்சிகரமான மூன்று மாத அமெரிக்கப் பயணத்தின் பொழுது ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் விருந்தாளியாக இருந்தார். இந்திய வரலாற்றில் ஒரு சங்கராச்சாரியார் (எட்டாம் நூற்றாண்டில் சுவாமி பரம்பரையை சீர்திருத்தி அமைத்த ஆதிசங்கரர் வழிவந்தவர்கள்) மேலை நாடுகளில் பயணம் செய்தது இதுவே முதல் முறை. மகான் சங்கராச்சாரியார் ஸ்ரீ தயா மாதா மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டிருந்தார் மற்றும் பாபாஜியின் அறிவுறுத்தல்படி பரமஹம்ஸ யோகானந்தர் தொடங்கிய ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் ஆசிரமங்களில் சுவாமி பரம்பரையை மேலும் விரிவுபடுத்துவதற்கு அவர் தன்னுடைய ஆசிகளை வழங்கினார். இந்தியா திரும்பிய பிறகு, அவர் பகிரங்கமாகக் கூறினார் : ”நான் ஸெல்ஃப்- ரியலைஸேஷன் ஃபெலோஷிப்பில் [யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா] உயர்ந்த ஆன்மீகம், சேவை மற்றும் அன்பு இருப்பதைக் கண்டேன். அவர்களுடைய பிரதிநிதிகள் இக்கொள்கைகளை உபதேசிப்பது மட்டுமல்லாமல் அதன்படியும் வாழ்கிறார்கள்”.

சங்கராச்சாரியாருடன் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா
கோவர்தன் மடம், பூரியைச் சேர்ந்த ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யார் பாரதி கிருஷ்ண தீர்த்தர், ஸ்ரீ தயா மாதாஜியுடன், ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேச தலைமையகத்தில், லாஸ் ஏஞ்சலீஸ், மார்ச் 1958.

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகப் பணியை வளர்த்தல்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த சன்னியாசிகள் பரமஹம்ஸரின் ஆன்மீகப்பணியை வெவ்வேறு விதமான சேவைகள் மூலம் மேலும் வளர்க்கின்றனர் — நாட்டின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வது, சரத் சங்கம் நிகழ்ச்சிகளில் சத்சங்கம் அளிப்பது, மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்துவது, அலுவலக வேலையில் ஈடுபடுவது சொஸைடியின் ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளை நிர்வகித்தல், ஒய் எஸ் எஸ் புத்தகங்கள் மற்றும் பதிவுகளின் வெளியீடு மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிடுதல், மற்றும் ஆன்மீக விஷயங்களில் நாடுபவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்.

YSS துணைத் தலைவர் சுவாமி ஸ்மர்ணானந்தர் ஒரு பக்தரிடம் பேசுகிறார்
A YSS monk distributes Essential Items to the Needy
சுவாமி கிருஷ்ணானந்தர்,  சுவாமி பவானந்தர் மற்றும் சுவாமி ஸ்மரணானந்தர் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவுடன், மதர் சென்டர்,  மௌண்ட் வாஷிங்டனில்
ஒய்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுவாமி ஈஸ்வரானந்தர் பக்தர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்
உத்தரகாண்டில் உள்ள துவாரஹத்தில் சோலார் விளக்குகளை விநியோகிக்கும் YSS சன்னியாசி
YSS monastics planning Ashram activities
YSS குருகிராம் தியான கேந்திராவின் அர்ப்பணிப்பின் போது பல்லக்கு சுமக்கும் YSS சன்னியாசிகள்
2019, அலகாபாத்தில் உள்ள கும்பமேளாவில் பிரபாத் ஃபெரியில் YSS சன்னியாசிகள்

"இறைவனே முதலில், இறைவனே எப்பொழுதும், இறைவன் மட்டுமே"

ஸ்ரீ மிருணாளினி மாதா

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப் – ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் நான்காவது தலைவர் (2011-2017) ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளுக்கு அறிவித்த கருத்துக்களிலிருந்து சில பகுதிகள்

Sri Sri Mrinalini Mata

அன்புடையீர்,
கடந்த சில வருடங்களாக நமது ஆசீர்வதிக்கப்பட்ட குருவின் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் (யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா) துரித வளர்ச்சியை நாம் காண்கிறோம்; இந்தப்பணி புதிய காலகட்டத்திற்குப் பரவியுள்ளது. பல வருடங்களுக்கு முன் சன்னியாசிகளாக வாழ்க்கையை அர்ப்பணிக்க வந்துள்ள நம்மிடம் குருதேவர் உரைத்ததை அடிக்கடி நினைவு கொண்டிருக்கிறோம் : ” நான் இந்த உடலை விட்டுச் சென்ற பின், இந்த நிறுவனம்தான் என்னுடைய உடல், நீங்கள் அனைவரும் தான் என்னுடைய கைகள், கால்கள் மற்றும் என்னுடைய வாக்கு”. என்ன ஒரு புனிதமான வாய்ப்பு, என்ன ஒரு மகத்தான விடுவிக்கும் அனுபவமாக அமைந்துள்ளது இந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை. இதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் குருதேவரின் ஒளிவீசும் அணுக்களைப் போல் மாறுகின்றனர்; ஒவ்வொருவரும் முழுமைக்கு ஒரு தேவையான பங்கை ஆற்றுகின்றனர், அதன் மூலம் குருதேவரின் தெய்வீக அன்பு நிறைந்த இந்த ஆன்மீக அமைப்பு தொடர்ந்து மக்களைச் சென்றடைய முடியும் .

இந்த உலகம் ஆன்மீகத்தரம் மற்றும் ஒழுக்க நெறிகளை பெருமளவு இழந்து விட்டது. சன்னியாசப் பாதையைத் தேர்ந்தெடுப்போர் அச்சாதாரண பொருள்சார்ந்த நியமங்களுக்கு மேலான ஒரு வாழ்வை வாழ்வதற்கான ஆன்மாவின் விருப்பத்திற்கும் திறனுக்கும் மறுமொழியளிக்கும் விதமாக அவ்வாறு செய்கின்றனர். ஒப்பீட்டளவில் வெகு சிலரே சன்னியாசத்தை ஏற்றுக்கொண்டாலும், ஒழுக்கமான கடுமுயற்சி நிறைந்த அந்த வாழ்க்கையை வாழ்வோர் பலரது பார்வைக்கு முன் உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க உதவுகிறார்கள். இறைவனுக்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட தூய்மையான வாழ்விலிருந்து, மக்கள் வித்தியாசமாக, சிறப்பாக ஏதோ ஒன்றை உணர்கிறார்கள். எளிமை, கீழ்ப்படிதல், பிரம்மச்சரியம், விசுவாசம் ஆகியவற்றிற்கான சங்கல்பங்களைக் கடைபிடிப்பது, விடாமுயற்சியுடன் தியானத்தில் ஈடுபடுவது மற்றும் பணிவுடன் தன்னை மேம்படுத்த முயற்சி செய்வது இவையாவும் சாதகரிடம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அவர் வாழும் சிறிய உடலமைப்பும் கூட அடையாளம் காணும் அளவிற்கு ஆன்மீகமயமாகி விடுகிறது. மற்றவர்களால் அது என்ன என்று கூற முடியாவிட்டாலும், அந்த சாதகரிடம் அவர்களை ஏதோ ஒரு விதத்தில் உயர்த்துகின்ற மற்றும் இறைவனைப் பற்றி அறிவிக்கின்ற ஒரு ஒளிவட்டம் இருப்பதை அவர்களால் உணர முடிகின்றது. அந்தப் பணிவான சாதகர் அதைக் காட்டிக் கொள்வதில்லை; உண்மையிலேயே அவர் அதைப் பற்றி அறியாமலும் இருந்திருக்கலாம்.

ஆன்மீகப் பாதைக்கு தன்னை அர்ப்பணிப்பதை விட பெரிய பணி எதுவும் இல்லை — ஒருவர் அடையக்கூடிய பெரியவெற்றி எதுவுமில்லை, நித்தியத்தின் பார்வையில் பெரிய மதிப்பு எதுவுமில்லை. வெற்றி பெறும் அந்த ஒருவர், ஆத்மார்த்தமாகச் சேவை செய்யும் அந்த ஒருவர், இறைவனுடனும் குருவுடனும் ஆன ஒத்திசைவில், அமைதியாக மற்றும் தனக்கே தெரியாமல் உலகில் ஆயிரக்கணக்கானவர்களை மாற்றுகிறார். ஒரு நாள் இறைவனின் சந்நிதானத்தில் தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து அவரால் கூற முடியும், “ஓ, இந்தச் சிறிய முக்கியத்துவமற்ற வாழ்க்கையை வைத்து ஜகன் மாதாவும் குருதேவரும் என்னவெல்லாம் செய்து இருக்கிறார்கள்! இந்த அனேக வருடங்களில் குருதேவரின் ஆன்மீகப் பணியின் வளர்ச்சிக்குக் காரணம் அவருடைய போதனைகள் மற்றும் கொள்கைகளின் வாழும் உதாரணங்களாக ஆவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அவருடைய ஆன்மீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் — சன்னியாசச் சமூகம் மற்றும் விசுவாசமுள்ள பல இல்லறச் சீடர்கள்.

குருதேவர்தான் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் (யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா) உயிர் மற்றும் இதயம். அவரது ஆசிரமங்களில் நமது அன்றாட வாழ்வின் மூலம் அவரது மெய்ப்பொருள் நம்முள் ஆழப்பதிய வைக்கப்படுகின்றன. குருதேவரின் சன்னியாசிகள், சன்னியாசினிகள் — அவர்களது கடமைகள் அவர்களை எங்கு கொண்டு சென்றாலும் சரி, அவர்களின் நடத்தையில், அவர்களது நடவடிக்கையில், அவர்களது சிந்தனையில், அவர்களது முழு உணர்வுநிலையில் — எப்பொழுதும் நினைவில் கொள்ளக்கற்றுக் கொள்கிறார்கள்: “நான் ஒரு லட்சியத்திற்கு, ‘இறைவனே முதலில், இறைவனே எப்பொழுதும், இறைவன் மட்டுமே’ என்ற எனது குருவிடம் வாழ்ந்த அதே ஆன்மீக அளவுகோலுக்கு, என்னை அளித்திருக்கிறேன்.” யாரை குருதேவர் தனது அருளாசிகள் மூலம் எப்பொழுதும் தொடர்பு கொள்கிறாரோ, யார் பிறருக்கு சேவை செய்வதற்கு அவர் பயன்படுத்தக்கூடிய ஒரு தகுதியான கருவியாக மாறுகிறாரோ, இறைவனது அன்பு, இறைவனைப் பற்றிய புரிதல் மற்றும் அவனது கருணை, இயேசுவின் மன்னிக்கும் தன்மை, கிருஷ்ணரின் ஞானம் — மிக அழகாக, மிக ஆனந்தமாக தன் சொந்த வாழ்க்கையில் வெளிப்படுத்தியுள்ள — இந்த அத்தனை தெய்வீக குணங்களையும் எவரது வாழ்க்கை மூலமாக குருதேவர் வெளிப்படுத்துகிறாரோ, அவர்தான் இந்த லட்சியத்திற்காக உண்மையிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர் ஆவார். அவர் நிறுவிய இந்த ஆசிரமங்களில், நமது முக்திக்காக உழைப்பது மட்டுமின்றி, அவ்வாறு செய்யும் போது மற்றவர்களின் முக்திக்காகவும், மனிதகுல முன்னேற்றத்திற்காகவும் குருதேவர் கொண்டு வந்த தெய்வீக அருளாசியை நீடித்திருக்கச் செய்யும் வாய்ப்பு பெற்ற நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.

அழைப்பு

திருமணம் ஆகாத, குடும்பக் கடமைகளற்ற மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியாவின் சன்னியாசச் சமூகத்தில் ஒரு சன்னியாசியாக இறைவனை அடையவும் மற்றும் அவனுக்கு சேவை செய்வதற்கும் தங்களை அர்ப்பணிக்க உண்மையான விருப்பம் உள்ள ஆண்கள், மேலும் விபரங்களுக்கு ஒய் எஸ் எஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp