YSS

நவ பாரதத்தின் மகாவதார பாபாஜி

பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதத்தி-லிருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது (அத்தியாயம் 33)

பத்ரிநாராயணுக்கருகில் வடக்கு இமயமலையின் செங்குத்தானப் பாறைகளில் லாஹிரி மகாசயரின் குருவான பாபாஜி வாழும் பேற்றை இன்னும் பெற்றிருக்கின்றன. தனிமையில் வாழும் அந்த மகான் தன் ஸ்தூல ரூபத்தைப் பல நூற்றாண்டுகளாக, ஒருக்கால் பல்லாயிரம் ஆண்டுகளாகவோ வைத்துக் கொண்டிருக்கிறார். மரணமற்ற பாபாஜி ஓர் அவதாரமாவார். இந்த சமஸ்கிருதச் சொல் “இறங்கிவருதல்” எனப் பொருள்படும் அதன் மூலச் சொற்கள் அவ, “கீழே” த்ரி, “செல்லுதல்,”. இந்து சமய நூல்களில், அவதாரம் எனில் தெய்வம் தேகத்தைத் தாங்கி இறங்கிவருதல் என்பதாம்.

“பாபாஜியின் ஆன்மீக நிலை மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது, ஸ்ரீ யுக்தேஸ்வர் எனக்கு விளக்கினார்.” மனிதனின் குறுகிய பார்வை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நட்சத்திரமாகிய அவரை ஊடுருவி பார்க்க முடியாது. அந்த அவதாரம் அடைந்துள்ள நிலையை ஒருவன் ஊகிக்க முயல்வது கூட வீண்தான். அது கற்பனைக்கு அப்பாற்பட்டது.”

உபநிஷதங்கள் ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையையும் நுட்பமாகப் பிரித்து வகைப்படுத்தி இருக்கின்றன. ஒரு சித்தர் (“பூரணத்துவம் அடைந்தவர்”) என்பவர் ஜீவன் முக்தர் (“வாழும் பொழுதே முக்தியடைந்தவர்”) என்ற நிலையிலிருந்து பராமுக்தர் “‘தலையாய முக்திமரணத்தின் மீது முழு ஆதிக்கம்”) நிலைக்கு முன்னேறியவர். இந்த இரண்டாவது நிலையிலுள்ளவர் மாயையின் வலையிலிருந்தும் அதனுடைய பிறவிச் சுழற்சியிலிருந்தும் முழுவதுமாக தப்பி விட்டவராவார். ஆதலால் பராமுக்தர் அரிதாகவே ஸ்தூல தேகத்திற்குத் திரும்புகிறார். ஒருவேளை அப்படித் திரும்பினால் பூவுலகிற்கு வானுலக அருளின் சாதனமாக தெய்வீக நியமனம் பெற்ற ஓர் அவதாரமாகிறார். ஓர் அவதார புருஷர் உலக நடப்பிற்கு உட்பட்டவரல்லர். ஒளி பிம்பமாகத் தோன்றும் அவரது பரிசுத்தமான தேகம் இயற்கைக்கு எவ்வகையிலும் கடன்படுவதிலிருந்து விடுதலை பெற்றுள்ளது.

சாதாரணப் பார்வை ஓர் அவதாரத்தின் உருவத்தில் எவ்வித அசாதாரணத் தன்மையையும் காண்பதில்லை, ஆனால் சில வேளைகளில், அதன் நிழலும் விழுவதில்லை. தரை மீது எந்த அடிச்சுவட்டையும் ஏற்படுத்துவதில்லை. இவைகள் இருளிலிருந்தும் உலகத்தளையிலிருந்தும் உள் விடுதலையைப் பெற்றதற்கான வெளி அடையாள நிரூபணங்களாகும். பிறப்பு, இறப்பு ஆகிய சார்புகளின் பின்னே உள்ள உண்மையை அவரைப் போன்ற இறைமனிதன் மட்டுமே அறிகிறார்.  மிகத் தவறாக உணர்ந்து கொள்ளப்பட்ட உமர் கய்யாம், ரூபையாத் என்ற அவருடைய அமரகாவியத்தில் இந்த முக்தியடைந்த மனிதனைப் பற்றிப் பாடுகிறார்:

“ஆ, என்றும் குன்றுதலறியா என் பேரின்ப நிலா,
நின்று தோன்றித் திரும்பத் தோன்றி நிற்கும் தேவ நிலா;
என்றும் இனித் தோன்றித் தேடித் தேடித் திரியும் வெண்ணிலா
எந்தனை இந்த நந்தவனத்தில் வீணே!”

என்றும் “குன்றுதலறியா என் பேரின்ப நிலா” இறைவனேயாகும். அவன் என்றுமுள்ள வடமீன், என்றும் காலமயக்கம் இல்லாதவன். நின்று தோன்றித் திரும்பத் தோன்றி நிற்கும் தேவ நிலா என்பது குறித்த காலத்தில் திரும்ப நிகழ்தல் என்னும் விதிக்கு கட்டுண்ட வெளிப் பிரபஞ்சமே. அப்பாரசீக மகான் ஆத்மஅனுபூதியின் மூலம் இப்பூவுலகிற்கு இயற்கையின் நந்தவனம் அல்லது மாயைக்கு கட்டாயம் திரும்பி வருதலிலிருந்து தன்னை என்றென்றும் விடுவித்துக் கொண்டு விட்டார். என்றும் இனித்தோன்றித் தேடித் தேடித் திரியும் வெண்ணிலா எந்தனைவீணே! முழுமையாக விடுப்பட்ட ஒன்றை வியப்புற்ற பிரபஞ்சமே தேடி ஏமாறியது!

கிறிஸ்து தனது சுதந்திரத்தை வேறு விதமாக வெளியிடுகிறார். எழுத்தன் ஒருவன் வந்து, போதகரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு, நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.!

எங்கும் நிறையும் தன்மையினால் பரவெளியில் உலவும் கிறிஸ்துவை எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளில் அன்றி வேறு எங்கு பின் தொடர முடியும்?

கிருஷ்ணன், ராமன், புத்தர், பதஞ்சலி ஆகியோர் பாரதத்தின் தொன்மையான அவதாரங்கள். தென்னிந்திய அவதாரமான அகத்தியரைப் பற்றி மிகுந்த அளவில் தமிழில் கவிதை இலக்கியம் உருவாகி உள்ளது. அவர் கிறிஸ்துவ சகாப்தத்திற்கு முன்னும் பின்னுமாகிய நூற்றாண்டுகளில் அனேக அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். மேலும் இன்றுவரை அவர் ஸ்தூல உருவத்துடன் இருந்து வருவதாகப் புகழப்படுகிறார்.

பாரதத்தில் பாபாஜியின் நோக்கம், தீர்க்கதரிசிகளுக்கு அவர்களுடைய சிறப்புக் காரியங்களை நடத்த உதவுவதாகும். எனவே அவர் சமயநூல்களில் வகைப்படுத்தியுள்ள மகாவதாரம் என்ற பிரிவிற்குப் பொருந்தியவராகிறார். சன்னியாச பரம்பரையைத் திருத்தியமைத்த ஆதிசங்கரருக்கும் புகழ்பெற்ற மத்திய கால மகானான கபீருக்கும் பாபாஜி யோக தீட்சையை அளித்ததாகக் கூறியுள்ளார். நமக்குத் தெரிந்த வரையில், கிரியா கலையை மறுமலர்ச்சி பெறச் செய்த “லாஹிரி மகாசயர், பாபாஜியின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கிய சீடராவார்.

பாபாஜி கிறிஸ்துவுடன் என்றும் தொடர்புள்ளவர்; அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் இந்த யுகத்திற்கான முக்தியளிக்கும் ஆன்மீக யுக்தியையும் திட்டமிட்டுள்ளார்கள். பூரண அனுபூதி பெற்ற இவ்விரு குருமார்களின்உடலுடன் ஒருவரும், உடலின்றி ஒருவரும்பணியானது, யுத்தங்கள், இனத் துவேஷம், மத உட்பிரிவுகள், எறிந்தவனையே திரும்பத் தாக்கும் (Boomerang) லோகாயதத் தீமைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக உலக நாடுகளை ஊக்குவித்தலாகும். பாபாஜி நவீன காலத்தின் போக்கை, முக்கியமாக மேலை நாகரிகத்தின் செல்வாக்கையும் சிக்கல்களையும் நன்கு அறிந்தவர். மேலும் ஆத்ம விடுதலைக்கான யோகத்தை மேலை மற்றும் கீழை நாடுகளில் சமமாகப் பரப்ப வேண்டிய அவசியத்தை உணர்கிறார்.

வரலாற்று ஏடுகளில் பாபாஜியை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லையே என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்க வேண்டியதில்லை. அந்த மகான் எந்த நூற்றாண்டிலும் வெளிப்படையாகத் தென்பட்டதில்லை; அவருடைய சகாப்தங்களுக்கேற்ற திட்டங்களில் தவறாகக் கணிக்கப்படும் விளம்பர வெளிச்சங்களுக்கு இடமில்லை. தனித்த ஆனால் மெளன சக்தியான படைப்பவனைப் போலவே பாபாஜி எளிய மறைவிலேயே செயல்படுகிறார்.

கிறிஸ்து மற்றும் கிருஷ்ணனைப் போன்ற பெரிய தீர்க்கதரிசிகள் ஒரு திட்டவட்டமான, பிரமிக்கத்தக்க குறிக்கோளுக்காக இப்பூவுலகிற்கு வருகிறார்கள்; அது நிறைவேறியவுடனே புறப்பட்டும் விடுகிறார்கள். பாபாஜியைப் போன்ற மற்ற அவதாரங்கள், ஏதாவதொரு ஒப்பற்ற வரலாற்று நிகழ்ச்சியை விட பல நூற்றாண்டுகளாக மனிதனின் மெதுவான பரிணாம வளர்ச்சியில் அதிகமாக அக்கறை காட்டும் வேலையை ” “மேற்கொள்ளுகிறார்கள். அம்மாதிரியான மகான்கள் மக்களின் ஸ்தூல பார்வையிலிருந்து எப்பொழுதும் தங்களை திரையிட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நினைத்த மாத்திரத்தில் மறைந்து விடும் திறன் பெற்றுள்ளார்கள். இக்காரணங்களினாலும், அவர்கள் பொதுவாக தங்களைப் பற்றி மெளனத்தைக் கடைபிடிக்கும் படி தங்கள் சீடர்களுக்கு உத்தரவிடுவதாலும் ஆன்மீகச் சிகரமாக விளங்கும் பலர் உலகிற்குத் தெரியாமலேயே இருந்து விடுகிறார்கள். நான் இந்தப் பக்கங்களில் பாபாஜியின் வாழ்க்கையைப் பற்றிய வெறும் ஒரு குறிப்பு—மக்களுக்குத் தெரிவிப்பதற்கு ஏற்றது மற்றும் உபயோகமானது என்று அவர் நினைத்த மிகச் சில உண்மைகளை மட்டுமே இங்கு கொடுக்கிறேன்.

ஒரு வரலாற்று நிபுணருக்குப் பிரியமானவைகளான, பாபாஜியின் குடும்பம், பிறந்த இடம் இவைகளை அறுதியிட்டுக் கூறும் எந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக அவர் பேச்சு இந்தியில் இருக்கிறது. ஆனால் அவர் எம்மொழியிலும் சுலபமாக உரையாடுகிறார். பாபாஜி (வணக்கத்திற்குரிய தந்தை) என்ற எளிய பெயரையே அவர் ஏற்றுள்ளார்; லாஹிரி மகாசயரின் சீடர்களால் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையைக் குறிக்கும் பட்டங்கள்: மகாமுனி பாபாஜி மகராஜ் (உயர்ந்த பேரானந்தப் பெருமான்), மகாயோகி (உயர்ந்த யோகி) மற்றும் த்ரயம்பக் பாபா அல்லது சிவ பாபா (சிவ அவதாரங்களின் பட்டங்கள்) முதலியன. முழுமையாக விடுதலை அடைந்து விட்ட ஒரு மகானின் பரம்பரைப் பெயரைப் பற்றி நமக்குத் தெரியாவிட்டால்தான் என்ன?

பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித்தாலும் அந்த பக்தன் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசியை ஈர்க்கிறான், என்று லாஹிரி மகாசயர் கூறியுள்ளார்.

சிரஞ்சீவித் தன்மை பெற்ற இந்த குரு, அவரது உடலில் வயதைக் குறிக்கும் அடையாளங்களைப் பெறவில்லை. அவர் இருபத்தைந்து வயதிற்கு மேற்படாத இளைஞராகவே தோற்றமளிக்கிறார். சிவந்த நிறமும் நடுத்தர உயரமும் பருமனுமுள்ள பாபாஜியின் எழிலும் வலுவும் கொண்ட தேகம், காணக்கூடிய பிரகாசத்தை வீசுகிறது. அவருடைய கண்கள் கருமையும் சாந்தமும் கருணையும் கொண்டுள்ளன; நீளமான, ” “ஒளிரும் கேசம் தாமிர நிறத்திலுள்ளது. சில சமயங்களில் அவருடைய முகம் லாஹிரி மகாசயருடையதை மிகவும் ஒத்திருக்கிறது. லாஹிரி மகாசயர் தன் வயதான காலத்தில், இளவயதுத் தோற்றத்துடனிருக்கும் பாபாஜியின் தகப்பனார் என்று கூறப்படுமளவிற்கு சில சமயங்களில் இவ்வுருவ ஒற்றுமை மிக ஆச்சரியகரமாக இருந்தது.

மகானாகிய எனது சமஸ்கிருத ஆசிரியர் ஸ்வாமி கேவலானந்தர் இமாலயத்தில் பாபாஜியுடன் சில காலம் கழித்திருக்கிறார்.

இணையற்ற அந்த மகான் தன் குழுவுடன் மலைகளில் இடம் விட்டு இடமாகச் சென்று கொண்டிருப்பார், என்று ஸ்வாமி கேவலானந்தர் என்னிடம் கூறினார். “அவருடைய சிறு குழு, மிக அதிக முன்னேற்றமடைந்த இரண்டு அமெரிக்க சீடர்களைக் கொண்டுள்ளது. சில காலம் ஓரிடத்தில் தங்கியிருந்த பிறகு சொல்வாராம்: டேரா டண்டா உடாவோ (நம் கூடாரத்தையும் தண்டத்தையும் எடுத்துக் கொள்ளலாம்). அவர் “டண்டா”வை (மூங்கில் தண்டம்) எடுத்துச்செல்வார். அவரது சொற்கள் தன் குழுவுடன் அக்கணமே வேறு இடத்திற்குச் செல்வதற்கான ஒரு ” குறிப்பு ஆகும். அவர் எப்பொழுதுமே இம்முறையிலான சூட்சுமப் பயணத்தை மேற்கொள்ளுவார் என்பதில்லை. சில சமயங்களில் அவர் கால் நடையாகவே சிகரம் சிகரமாகச் செல்வதுண்டு.

பாபாஜி தான் விரும்பும் பொழுது மட்டுமே மற்றவர்கள் அவரைக் காண்பதோ அல்லது அடையாளம் கண்டுகொள்வதோ சாத்தியம். அவர் தன் வெவ்வேறு பக்தர்களுக்கு சிறு மாறுதல்களுடன் அனேக உருவங்களில் சில சமயங்களில் தாடி, மீசையுடன் சில சமயங்களில் அவை இல்லாமலும் தரிசனம் தந்திருப்பதாக அறிகிறோம். சிதைவு அடைய முடியாத அவரது உடலிற்கு உணவு ஏதும் அவசியமில்லை. ஆதலால் அவர் அரிதாகவே உண்கிறார். சமுதாய வழக்கத்திற்கேற்ப அவரிடம் வரும் சீடர்களிடமிருந்து எப்பொழுதாவது பழங்களையும், பாலும் நெய்யும் கலந்து சமைத்த அன்னத்தையும் ஏற்றுக் கொள்வதுண்டு.

பாபாஜியின் வாழ்க்கையில் நடந்த இரு அற்புதமான சம்பவங்களைப் பற்றி நான் அறிவேன், கேவலானந்தர் தொடர்ந்தார். ஒரு புனித வேதச் சடங்கிற்காக ஓர் இரவு அவருடைய சீடர்கள் சுடர் விட்டெரியும் பெருந்தீ உள்ள அக்னி “குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். குருவானவர் திடீரென்று ஒரு பெரிய கொள்ளிக் கட்டையை எடுத்து அக்னிக்கருகில் அமர்ந்திருந்த ஒரு சீடனின் வெறும் தோளில் லேசாகத் தட்டினார்.

ஐயா, எவ்வளவு கொடூரம்! அங்கிருந்த லாஹிரி மகாசயர் இந்த ஆட்சேபணையை வெளியிட்டார்.

அவனுடைய முந்தைய கர்ம வினைப்படி உன் கண் எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப் போவதை நீ பார்க்க வேண்டுமா?

இந்த வார்த்தைகளுடன் பாபாஜி தன் குணப்படுத்தும் கரத்தை உருக்குலைந்திருந்த தன் சீடனின் தோளின் மேல் வைத்தார். வேதனை நிறைந்த மரணத்திலிருந்து உன்னை நான் இன்றிரவு விடுவித்து விட்டேன். இந்நெருப்பினால் உனக்கு நேர்ந்த சிறு துன்பத்தின் மூலமாக கர்மவினையின் விதியானது திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது.

இன்னொரு சமயத்தில் பாபாஜியின் புனிதமான குழுவில் அன்னியன் ஒருவனின் வரவினால் இடையூறு விளைந்தது. குருவின் கூடாரத்திற்கருகே ஏறுவதற்கரிய ஒரு பாறையின் விளிம்பின் மீது வியக்கத்தக்கத் திறனுடன் அவன் ஏறிவந்து விட்டான்.

ஐயா, தாங்கள் தான் மகா பாபாஜியாக இருக்க வேண்டும், அம்மனிதனின் முகம் விண்டுரைக்க இயலாத ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப் பாறைகளில் மாதக் கணக்கில் இடைவிடாமல் தங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தயை செய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ள மன்றாடுகிறேன்.

மகா குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவைச் சுட்டிக் காட்டினான். நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டுதலை நான் பெறாவிடில் இனி வாழ்ந்து பயனில்லை.

அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது, பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.

அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத்தான பாறையைத் தாண்டிக் குதித்து விட்டான். அதிர்ச்சியுற்ற தன் சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலைக் கொண்டு வரும்படி பாபாஜி கட்டளையிட்டார். அவர்கள் உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன் திரும்பியவுடன் குருதேவர் தன் கையை இறந்துவிட்ட அம்மனிதனின் மீது வைத்தார். ஆ! அவன் தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய். உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய். மரணம் உன்னை மறுபடி தீண்டாது; அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன். பிறகு அவர் புறப்படுதலைக் குறிக்கும் வழக்கமான வார்த்தைகளைக் கூறினார், டேரா டண்டா உடாவோ; அக்குழு முழுவதும் அம்மலையிலிருந்து மறைந்து விட்டது.

ஓர் அவதார புருஷர் எங்கும் நிறைந்த பரம்பொருளிலேயே திளைப்பதால் அவருக்கு எந்தத் தொலைவும் அசாத்தியமானதல்ல. எனவே பல நூற்றாண்டுகளாக பாபாஜி தம் ஸ்தூல உடலைத் தாங்கி இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள் நோக்கமாக இருக்கிறது: மனித வர்க்கத்திற்கு அதன் சொந்த சாத்தியக் கூறுகளை ஒரு வலுவான உதாரணத்தினால் எடுத்துக் காண்பிக்கும் விருப்பமாகும். மனிதன் தெய்வீகத்தைத் தேக வடிவில் ஒரு கணநேரமாவது தரிசிக்க அருளப்படாவிட்டால், அவன் மாயையின் பொய்த் தோற்றத்திலேயே உழன்று கொண்டு மரணத்தை வெல்ல இயலாதவன் ஆகிவிடுவான்.

இயேசுவிற்கு முதலிலிருந்தே தன் வாழ்க்கைச் சம்பவங்களின் நிகழ்வு நிரல் தெரிந்தே இருந்தது. அவர் தம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஏற்றது அவருக்காக அல்ல; எந்த கர்ம வினையின் கட்டாயத்தினாலும் அல்ல. ஆனால் சிந்தனையுள்ள மனிதர்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவேதான். விவிலிய போதனையாளர் நால்வர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் பின்னால் வரும் தலைமுறைகளுக்காகவே விவரிக்க முடியாத அந்த நாடகத்தை ஏட்டில் பதித்தார்கள்.

பாபாஜிக்கும்கூட இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய சார்புகள் கிடையா. ஆரம்பத்திலிருந்தே அவருடைய வாழ்வின் கட்டங்களையும் அவர் அறிந்திருந்தார். மக்களின் வரையறைக்குட்பட்ட அறிவிற்கேற்றபடி தன்னை அமைத்துக் கொண்டு, ஒன்று அல்லது பல சாட்சிகளின் முன்னிலையில் அவர் தம் தெய்வீக வாழ்வின் பல அங்கங்களை நிகழ்த்தி இருக்கிறார். அந்த முறையில்தான், சரீரத்தின் அழிவற்ற தன்மையின் சாத்தியத்தைத் தான் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பாபாஜி கருதியபொழுது லாஹிரி மகாசயரின் சீடர் ஒருவர் அங்கு இருந்தார். உண்மையைத் தேடும் மற்ற இதயங்களை ஊக்குவிக்கவேண்டி, கடைசியாக இது தெரிந்து “கொள்ளப்படும் என்று இந்த வாக்குறுதியை அவர் ராம் கோபால் மஜும்தாருக்கு முன்னால் கூறியருளினார். மகான்கள் இயற்கையாகத் தோன்றும் சம்பவங்களின் தொடரில் ஈடுபடுவதும், பேசுவதும் மக்களின் நலனைக் கருதியேதான். கிறிஸ்து கூறியது போல: பிதாவே… நீர் எப்பொழுதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்: ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

தூக்கமற்ற யோகியான ராம் கோபாலிடம் நான் ரன்பாஜ்பூரில் விஜயம் செய்திருந்த பொழுது, பாபாஜியுடன் அவருக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பைப் பற்றிய அற்புதமான கதையை விவரித்தார்.

நான் சில சமயங்களில் தனிமையான என் குகையை விட்டு காசியிலுள்ள லாஹிரி மகாசயரின் திருவடிகளில் அமர்வதற்காகச் செல்வதுண்டு, ராம் கோபால் கூறினார். ஒரு நள்ளிரவு நான் சீடர்கள் குழுவில் மெளனமாகத் தியானித்துக் கொண்டிருந்த பொழுது குருதேவர் வியப்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

ராம் கோபால், உடனே தசாஸ்வமேத படித்துறைக்குச் செல், என்றார் அவர்.

நான் அந்தத் தனிமையான இடத்தை விரைவில் சென்றடைந்தேன். நிலவின் ஒளியும் விண்மீன்களின் பிரகாசமும் சேர்ந்து இரவு பளிச்சென்று இருந்தது. நான் சற்று நேரம்வரை மெளனமாகப் பொறுமையுடன் அமர்ந்திருந்த பிறகு என் காலடிக்கு அருகேயிருந்த ஒரு பெரிய கற்பாறை மீது என் கவனம் ஈர்க்கப்பட்டது. பூமிக்கு அடியிலுள்ள ஒரு குகை தெரியும்படியாக அப்பாறை மெதுவாக மேலெழும்பியது. புரிந்து கொள்ளமுடியாத ஏதோ ஒரு வகையினால், அப்பாறை அந்தரத்தில் நிலையாக நின்றபொழுது பேரழகு வாய்ந்த ஓர் இளம் பெண்ணின் போர்த்திய உருவம் அக்குகைக் குள்ளிருந்து வெளியாகி காற்றில் உயரே எழும்பியது. ஒரு மென்மையான ஒளிவட்டம் தன்னைச் சூழ அம்மாது மெதுவாகக் கீழே இறங்கி என் முன் ஆழ்ந்த பரவச நிலையில் அசைவற்று நின்றார். பிறகு அவர் மெல்ல அசைந்தார். மேலும் இனிமையாகப் பேசலானார்.

நான் மாதாஜி, பாபாஜியின் சகோதரி, நான் அவரையும் லாஹிரி மகாசயரையும் ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டி இன்றிரவு என் குகைக்கு வரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன், என்றார்.

கங்கை நதி மீது ஒரு தெளிவற்ற ஒளி வேகமாக மிதக்கலாயிற்று; அந்த விசித்திர ஒளி இருண்ட நீரில் பிரதிபலிக்கப்பட்டது. அவ்வொளி அருகில் நெருங்கி வந்து, குருடாக்கும் ஒரு பிரகாசத்துடன் மாதாஜியின் பக்கத்தில் தோன்றிய அக்கணமே லாஹிரி மகாசயரின் உருவமாக மாறியது. அவர் வினயத்துடன் அந்த யோகினியின் அடிபணிந்தார்.

நான் என் திக்பிரமையிலிருந்து விடுபடுவதற்கு முன்னே ஆகாயத்தில் ஒரு மாய ஒளி வட்டமாகத்திரண்டு வருவதைக் கண்டு நான் மேலும் வியப்பிலாழ்ந்தேன். அத்தீச்சுடர் சுழல் வேகமாக இறங்கி எங்கள் குழுவை நெருங்கி தன்னை ஓர் எழில் பெற்ற வாலிப தேகத்தினுள் உருமாற்றிக் கொண்டது. அவர்தான் பாபாஜி என்பதை நான் உடனே புரிந்து கொண்டேன். அவர் லாஹிரி மகாசயரைவிட வயதில் மிகக் குறைந்தவராக இருந்தாலும், தன் சீடரைப் போலவே காணப்பட்டார். மேலும் நீண்ட ஒளிபொருந்திய கேசம் கொண்டிருந்தார்.

லாஹிரி மகாசயர், மாதாஜி, நான் ஆகிய எல்லோரும் அந்த மகாகுருவின் பாதங்களில் விழுந்து வணங்கினோம். நான் அவரது தெய்வீக உடலைத் தீண்டியபொழுது கட்புலனாகாத பேரின்பமய மகிமையின் உணர்வு என் உடலின் ஒவ்வோர் இழையையும் புல்லரிக்கச் செய்தது.

அருள் பெற்ற சகோதரியே, நான் என் உருவத்தைத் துறந்து எல்லையற்ற சாகரத்தில் மூழ்கிவிட உத்தேசித்துள்ளேன், என்றார் பாபாஜி.

அன்பார்ந்த குருதேவா, நான் ஏற்கனவே தங்கள் திட்டத்தைக் கண்டு கொண்டேன். நான் இன்றிரவு அதைப் பற்றி உங்களிடம் பேச விழைகிறேன். தாங்கள் தேகத்தை எதற்காக விடவேண்டும்? மகிமை பொருந்திய மாதாஜி அவரை வேண்டியவாறு நோக்கினார்.

என்னுடைய ஆத்ம சாகரத்தில் நான் கண்ணுக்குப் புலப்படும் அல்லது புலப்படாத அலையாயிருப்பதனால் வேறுபாடு யாது?

மாதாஜி விந்தையான சாதுர்யத்துடன் பதிலளித்தார். மரணமற்ற குருவே, அதில் எந்தவித வேறுபாடும் இல்லையெனில் தயவு செய்து தங்கள் உருவத்தை என்றுமே துறக்க வேண்டாம்.

அப்படியே ஆகட்டும், என்றார் பாபாஜி கம்பீரமாக. நான் என் ஸ்தூல உடலை இனி என்றுமே விட மாட்டேன். இவ்வுலகில் குறைந்த பட்சம் ஒரு சிலருக்காவது அது காணப்படுமாறு இருக்கும். இறைவன் உன் வாய் மூலமாக அவனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளான்.

நான் மிகுந்த பயபக்தியுடன் இவ்வுயர்ந்த மகான்களின் உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்தபொழுது அந்த மகாகுரு கருணை நிரம்பிய பார்வையுடன் என்னிடம் திரும்பினார்.

ராம் கோபால், பயப்படாதே, அவர் கூறினார். இந்த அழியா வாக்குறுதிக் காட்சியில் நீ ஒரு சாட்சியாகும் அருளைப் பெற்றிருக்கிறாய்.

அவருடைய இனிய குரலின் நாதம் மெல்ல அடங்கும் போதே அவருடைய திருவுருவமும் லாஹிரி மகாசயருடையதும் மெல்ல மேலெழும்பி கங்கையின் மேலாகப் பின்னோக்கிச் சென்றன. அவ்விரவின் ஆகாய வெளியில் அவர்கள் மறையும் பொழுது கண்ணைக் கூசச் செய்யும் ஓர் ஒளி வட்டம் அவர்கள் உடலைச் சூழ்ந்திருந்தது. மாதாஜியின் திருவுருவம் குகையை நோக்கி மிதந்து இறங்கியது. ஏதோ கண்ணுக்குத் தெரியாத கைகளினால் இயங்குவது போன்று அந்தப் பாறை அக்குகையின் மேல் மூடிக் கொண்டது.

அளவற்ற ஊக்கமடைந்து, நான் லாஹிரி மகாசயரின் இருப்பிடத்திற்குத் திரும்பினேன். நான் அந்த வைகறை “வேளையில் அவர் முன் வணங்கும்பொழுது என் குரு என்னை நோக்கி ஒரு பொருள் பொதிந்த புன்னகை செய்தார்.

ராம் கோபால், நான் உனக்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நீ அடிக்கடி என்னிடம் சொல்லியபடி பாபாஜி, மாதாஜி இருவரையும் சந்திக்க வேண்டுமென்ற உன் விருப்பம் கடைசியில் மிக வியக்கத்தக்க வகையில் நிறைவேறியது.

நான் நடு இரவில் அவ்விடம் விட்டுக் கிளம்பியதிலிருந்து லாஹிரி மகாசயர் தன் மேடையிலிருந்து அசையவேயில்லை என்று என் சக சீடர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

ஒரு சீடர் என்னிடம், நீ தசாஸ்வமேத படித்துறைக்குச் சென்றபிறகு அவர் அழிவற்ற நிலை பற்றி ஓர் அரிய பிரசங்கம் செய்தார், என்று என்னிடம் கூறினார். முற்றுமுணர்ந்த ஒரு மனிதன் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட தேகங்களிலோ தோன்ற முடியும் எனச் சாத்திர செய்யுட்களில் கூறப்பட்டிருக்கும் உண்மையை முதன் முதலாக முழுவதுமாக உணர்ந்து கொண்டேன்.

பின்னர் லாஹிரி மகாசயர் இந்த மண்ணுலகம் சம்பந்தப்பட்ட மறைந்துள்ள தெய்வீகத் திட்டங்களின் இயல் கடந்த பல கருத்துக்களை விளக்கிக் கூறினார். இந்தக் குறிப்பிட்ட உலக காலச் சுழற்சி முடியும்வரை பாபாஜி தனது உடலுடன் இருக்க வேண்டுமென இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யுகங்கள் வரும், யுகங்கள் போகும்இருப்பினும் இந்த மரணமற்ற மகான் நூற்றாண்டுகளின் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இந்த மண்ணுலக மேடையில் இருப்பார், என்று ராம் கோபால் கூறி முடித்தார்.

பாபாஜி
ஒரு மகாவதார், “தெய்வீக அவதாரம்”
லாஹிரி மஹாசயாரின் குரு

நவீன இந்தியாவின் சிறந்த யோகி-கிறிஸ்துவின் உண்மையான தோற்றத்தை வரைய ஒரு கலைஞருக்கு யோகானந்தாஜி உதவினார்.

மகாவதார் பாபாஜி தனது பிறந்த இடம் மற்றும் பிறந்த தேதி பற்றிய எந்த வரம்புக்குட்பட்ட உண்மைகளையும் தனது சீடர்களுக்கு வெளிப்படுத்த மறுத்துவிட்டார். அவர் பல நூற்றாண்டுகளாக இமயமலை பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் வாழ்ந்தார்.

“யாராவது பாபாஜியின் பெயரை பயபக்தியுடன் உச்சரிக்கும்போதெல்லாம், அந்த பக்தர் உடனடி ஆன்மீக ஆசீர்வாதத்தை ஈர்க்கிறார்” என்று லாஹிரி மகாசயா கூறினார்.”

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp