ரயில் பெயர் மாற்றம் மூலம் பரமஹம்ஸ யோகானந்தர் இந்திய உயர் அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டார்

25 ஜூன், 2015

ஜூன் 21 அன்று முதல்முதலாக சர்வதேச யோகா தினத்துடன் கூட இணைந்து, இந்தியா, ராஞ்சி மற்றும் கொல்கத்தாவின் ஹவுரா நிலையத்தை இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மாற்றியதன் வாயிலாக பரமஹம்ஸ யோகானந்தர் கௌரவிக்கப்பட்டார். ராஞ்சியில் தான், 1918 இல் தனது “எப்படி-வாழ-வேண்டும்” பாடசாலை மற்றும் ஆசிரமத்தை நிறுவினார், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஜூன் 25 ஆன்லைன் பதிப்பில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த ரயில் இப்போது “கிரியா யோகா எக்ஸ்பிரஸ்” என்று அழைக்கப்படுகிறது.”
ராஞ்சி அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டு உயர் அதிகாரிகள், யோகப் பயிற்சியினால் ஏற்படும் நடைமுறை மற்றும் பெரும் மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவும், உலகளவில் யோகத்தின் பயன்பாட்டில் முன்னோடி தாக்கத்திற்கு பரமஹம்ஸ யோகானந்தரின் பணிக்கு பாராட்டு தெரிவிக்கவும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) விற்கு தனித்தனியாக கடிதங்கள் அனுப்பி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினர்.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் மாண்புமிகு ரகுபர் தாஸ், YSS ராஞ்சி ஆசிரமத்திற்கு பின்வரும் கடிதத்தை அனுப்பினார்:

“இந்திய ரயில்வே அமைச்சகத்தால் ஹட்டியா-ஹவுரா-ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரியா யோகா எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பரமஹம்ஸ யோகானந்தரின் சாதனா பூமியான ராஞ்சிக்கு கிடைத்த அங்கீகாரத்தில் இது ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. இதற்காக, நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் நமது ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீக முன்னேற்றம், சுய ஒழுக்கம் மற்றும் உடல்-மனதின் உயிர்ச்சக்திக்கும் ஆகியவற்றிற்கு யோகத்தின் முக்கியத்துவம் பரவலாக அறியப்படுகிறது பரவலாக அறியப்படுகிறது. ராஞ்சியிலிருந்து தொடங்கி, பரமஹம்ஸ யோகானந்தர் தனது கிரியா யோக போதனைகளை பாரதத்திலும் உலகெங்கிலும் விரிவாகப் பரப்பியதோடு, மேலை நாடுகளில் யோகத்தைப் பற்றிய ஆர்வத்தைத் தட்டியெழுப்பினார் என்பது நமக்கு மிகப் பெருமை அளிக்கும் விஷயம்.

“பரமஹம்ஸ யோகானந்தரின் தன்னலமற்ற முயற்சிகளால் தான் உலகம் முழுவதும் கிரியா யோகத்தை பின்பற்றும் லட்சக்கணக்கானோர் இறைத் தொடர்பின் ஆனந்தத்தை அனுபவித்து வருகின்றனர். நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால், ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை உற்சாகமாகக் கொண்டாடியது. அவரது முயற்சிகள் யோகத்தின் பரவலுக்கு உண்மையாகவே ஒரு உந்துசக்தியாக அமையும்.

“இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் யோகத்தின் போதனைகளைப் பரப்பும் பணிக்காக ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க சொஸைடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இவ்வேளையில் அவர்களின் காலாண்டு இதழ் வெற்றிகரமாக வெளியாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

ஜார்கண்ட் கவர்னர், மாண்புமிகு திரௌபதி முர்முவிடம் இருந்து மற்றொரு பாராட்டுக் கடிதம் பெறப்பட்டது:

“யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா இன் முன்முயற்சியின் பேரில், யோகத்தின் செய்தியை எல்லா இடங்களிலும் பரப்ப உதவுவதற்காக ஹவுரா-ஹட்டியா-ஹௌரா எக்ஸ்பிரஸுக்கு ‘கிரியா யோகா எக்ஸ்பிரஸ்’ என்று இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம் பெயரிட்டுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

“யோகம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு சக்திவாய்ந்த வழிமுறையாக இருப்பது மட்டுமல்லாமல், அது உடல் நோய்களையும் குணப்படுத்துகிறது. இது ஒரு நபரின் உடல், மன மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு ஆற்றலை அளித்து மன அமைதியைத் தருகிறது. யோகத்தை பரவலாகப் பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான மக்கள், ஆரோக்கியமான சமூகம், ஆரோக்கியமான தேசம் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க முடியும். நமது தேசம் மேற்கொண்ட முன்முயற்சியின் காரணமாக, சர்வதேச யோகா தினம் உலகெங்கிலும் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது என்பதும் அந்தத் தருணத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் மக்கள் சுறுசுறுப்பாக பங்கேற்றதும் பெருமிதம் அளிக்கும் விஷயம் ஆகும்.

“யோகத்தின் செய்தியை தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரப்புவதற்காக பரமஹம்ஸ யோகானந்தர் நிறுவிய அமைப்பான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மேற்கொண்டுள்ள பணிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன்.”

ரயிலுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பெயர், அடையாளமாக பொருத்தமானது. ராஞ்சி பாடசாலை மற்றும் ஆசிரமத்தை நிறுவிய ஆண்டுகளில், பரமஹம்ஸர் ராஞ்சிக்கும் கொல்கத்தாவிற்கும் இடையே அடிக்கடி ரயிலில் பயணம் செய்தார். கிரியா யோகத்தை மேலை நாடுகளுக்கும், அதன் மூலம் உலகிற்கும் அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைக் குறித்துக்காட்டிய ஒரு தெய்வீகத் தரிசனத்திற்குப் பிறகு ஜூலை 1920ல் அவர் ராஞ்சியில் ரயிலேறியதுதான் அவரது மிக முக்கியமான பயணமாக இருக்கலாம்.

இதைப் பகிர