பெங்களூருவில் சாலைக்குப் பெயர் சூட்டும் விழா

20 ஜனவரி, 2016

இந்த நகரத்தில் உள்ள ஒய் எஸ் எஸ் பக்தர்களின் முறையான வேண்டுகோளுக்கிணங்க, கர்நாடக மாநில அரசு, பெங்களூரு ஒய் எஸ் எஸ தியான மந்திர் அருகில் அமைந்துள்ள சாலைக்கு, நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்ட முடிவு செய்தது. இந்த நிகழ்வு, 1965 -ல் நிறுவப்பட்ட யோகதா சத்சங்க தியான கேந்திரா–பெங்களூருவின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவின் ஒரு பகுதியாக அமைந்தது .

2015 டிசம்பர் 30 அன்று, பெங்களூருவின் மையப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான சாலை, நமது கேந்திராவின் அருகே நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக “பரமஹம்ஸ யோகானந்தர் சாலை” என்று மறுபெயரிடப் பட்டது. இந் நிகழ்ச்சியை பெங்களூரு, சாந்திநகர் எம் எல் ஏ, ஸ்ரீ என்.ஏ. ஹரீஸ் தலைமையில், கர்நாடக நகர திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ கே.ஜே. ஜார்ஜ் துவக்கி வைத்தார். ஸ்ரீ பி.என். மஞ்சுநாத், பெங்களூரு மேயர், ஸ்ரீ ஆனந்த் குமார் எஸ், கார்ப்பரேட்டர், வார்டு எண் 80, பெங்களூரு – மேல்முறையீட்டுக் குழுத் தலைவர் உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில் ஒய் எஸ் எஸ் சார்பில் ஸ்வாமி சுத்தானந்தா மற்றும் ஸ்வாமி மாதவானந்தா கலந்துகொண்டனர்.

அனைத்து பிரமுகர்களும் இந்தியாவிற்கும் உலகிற்கும் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகப் பங்களிப்புகளைப் பற்றி பேசினர், மேலும் பெங்களூருவில் உள்ள ஒரு முக்கியமான சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி, அத்தகைய மகானின் நினைவை பொதுமக்கள் மனத்தில் வாழ வைப்பது மிகவும் பொருத்தமானது என்று கருதினர். ஸ்வாமி சுத்தானந்தா அவர்கள் 1935 – இல் மைசூர் மற்றும் பெங்களூருவிற்கு பரமஹம்ஸ யோகானந்தரின் வருகைகள் பற்றியும், அனைத்து மனித இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த அன்பு பற்றியும் பேசினார்.

சுமார் 600 பேர் கலந்துகொண்ட இவ்விழா, ஸ்வாமி சுத்தானந்தா அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவுடன் நிறைவடைந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ் விழா காலை 5:45 மணிக்கு ஆரத்தி சடங்குடன் துவக்கப்பட்டது, பிறகு குருதேவரின் திருவுருவப்படம் தாங்கப்பட்ட ஊர்வலம் தொடங்கியது. பஜனைகள் மற்றும் பிரபஞ்ச கீதங்கள் இதயப்பூர்வமான பக்தியுடன் பாடப்பட்டன.

இந்தியாவில் நமது அன்புக்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் பெயர் சூட்டப்பட்ட ஒரு சாலையைக் கொண்ட 13வது நகரமாக இப்போது பெங்களூரு விளங்குகிறது. கடந்த காலத்தில் இகத்புரி, ஜம்மு, கடப்பா, லலித்பூர், லக்னௌ, நாக்பூர், நொய்டா, நுஸ்விட், ராஜமந்திரி, ராஜ்கோட், ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் உள்ள சில முக்கிய சாலைகள் “பரமஹம்ஸ யோகானந்தர் பாதை” அல்லது “பரமஹம்ஸ யோகானந்தர் மார்க்கம்” என்று பெயரிடப்பட்டுள்ளன.

பெங்களூருவில் உள்ள “பரமஹம்ஸ யோகானந்தர் சாலை,” யோகதா சத்சங்க தியான மந்திருக்கு நேர் எதிரே உள்ளது மேலும் 3.3 கிமீ நீண்ட இச் சாலை, ஒரு முனையில் தேசிய நெடுஞ்சாலை நான்கையும், மறுமுனையில் இந்திராநகர் பிரதான சாலையையும் இணைக்கிறது.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp