இந்த வலைப்பதிவு இடுகை, 2025 ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் உலகப் பேரவையில், YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள் வழங்கிய சத்சங்கத்திலிருந்து தொகுக்கப்பட்ட பகுதியாகும். இந்த உரையின் முழுப் பதிப்பான, “லெளகீக உலகில உயிர்வாழ்வதற்கும், முன்னேற்றமடைவதற்கும், வெற்றி பெறுவதற்கும் எப்படி-வாழ-வேண்டும் திறன்கள்” என்பதை SRF யூடியூப் சேனலில் காணலாம்.

மீள்தன்மை, உற்சாகம் மற்றும் சீடத்துவத்தின் உண்மையான பொருள் ஆகிய ஒரு முக்கிய அம்சத்தின் மீது கவனம் செலுத்துவதற்காக, பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பரமஹம்ஸாஜி இக்கதையை 1941 ஆம் ஆண்டு, “மனிதனின் நிரந்தரத் தேடல்” என்ற தனது உரையில் கூறினார்.
அவர் கூறினார்: “கடந்த கோடைக் காலத்தில் நான் ஒரு மடாலயத்தில் தங்கினேன். அங்கு மத குருமார்களில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒர் அற்புதமான ஆன்மா. நான் அவரிடம், ஒரு சன்னியாசியாக ஆன்மீகப் பாதையில் எவ்வளவு காலமாக அவர் இருந்து வருகிறார் என வினவினேன்.
‘கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள்,’ அவர் பதிலளித்தார்.
பிறகு நான் வினவினேன்: ‘நீங்கள் கிறிஸ்துவைப் பார்க்கிறீர்களா?’
‘எனக்கு அந்த அருகதை இல்லை,’ அவர் விடையளித்தார். ‘ஒருவேளை இறப்பிற்குப் பிறகு அவர் என்னிடம் வரக்கூடும்.’
‘இல்லை,’ நான் அவருக்கு உறுதி அளித்தேன், ‘நீங்கள் உங்கள் மனத்தில் தீர்மானம் செய்து கொண்டால், இன்றிரவிலிருந்தே நீங்கள் அவரைப் பார்க்க முடியும்.’”
பரமஹம்ஸர் கூறினார், “அவர் கண்களில் கண்ணீர் ததும்பின; அவர் மெளனமாக இருந்தார்.”
““நீங்கள் உங்கள் மனத்தில் தீர்மானம் செய்து கொண்டால், இன்றிரவிலிருந்தே நீங்கள் அவரைப் பார்க்க முடியும்.” அவர், “மனத்தில் தீர்மானம் செய்து கொள்வது” என்பதை, இச்சா சக்தியின் உச்சகட்ட முயற்சி அல்லது மேலும் கடுமையாக முயற்சி செய்வது என்றோ மட்டும் குறிப்பிடவில்லை. நிச்சயமாக, ஒரு தீவிரமான முயற்சியை மேற்கொள்வது அதன் ஒரு பகுதிதான்; ஆனால் மிக முக்கியமாக, நம்மில் பலருக்கு, நாம் தகுதியானவர்கள் என்றும், அந்தப் பேற்றைப் பெற முடியும் என்றும், அந்த ஆன்மீக உணர்வுநிலையை அடைய முடியும் என்றும் நம் மனத்தில் தீர்மானம் கொள்வது தான் இதன் பொருள்.
நாம் தகுதியற்றவர்கள் என்று நம்மைப் பற்றிக் கருதுவதனால் மட்டுமே, தியானத்திலும் நமது ஆன்மீக வாழ்விலும் எத்தனை அருளாசிகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றன? நீங்கள் தகுதியானவர். “உங்கள் மனத்தில் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்,” நமது குரு கூறினார், “இன்றிரவு முதல்.”
சற்றே கற்பனை செய்து பாருங்கள்: ஓர் அறையில் யாரோ ஒருவர் தாழ்ந்த குரலில், உங்களை எவ்வளவு நேசிக்கிறார்கள், உங்களைப் பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணுகிறார்கள், உங்களை எவ்வளவு மதிக்கிறார்கள் மற்றும் போற்றுகிறார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்களோ அதே சமயம், “இல்லை, இல்லை, நான் நல்லவன் இல்லை; இல்லை, இல்லை, நான் நல்லவன் இல்லை” என்று கூறி அந்தக் குரலை முற்றிலுமாக அமுக்கிவிடுகிறீர்கள். உங்களால் இதனை தொடர்பு படுத்தி உணர முடிகிறதா? இறைவன் மற்றும் குருவுடனான நமது உறவில் நாம் அடிக்கடி தவறுதலாகச் செய்வது இதைத்தான்.
பரமஹம்ஸாஜியின் “பிரபஞ்ச கீதங்கள்” எனக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கின்றன, மேலும் அவற்றிலிருந்து நான் எவ்வளவு பலன் பெறுகிறேன் என்பதை நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். நீங்களும் அவ்வாறே பலன் பெறுகிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்திலிருந்தே, என்னை வலுவாக ஈர்த்தது — ஏனென்றால் எனக்கு அது மிகவும் தேவைப்பட்டது, மேலும் அதுவரை என் மனோபாவத்தில் இருந்த ஒரு பெரிய இடைவெளியை உண்மையிலேயே நிரப்பியது — அந்த அழகிய கீதம் “எந்தன் இதயக் கதவினை” தான்:
“எந்தன் இதயக் கதவினைத் திறந்து வைப்பேன் உனக்காக.
வருவாயா, நீ வருவாயா? ஒரே முறை என்னிடம் வருவாயா?
எந்தன் நாட்கள் பறக்குமா இறைவா உன்னைக் காணாமல்?
இரவும் பகலும், இரவும் பகலும், உனை எதிர்பார்க்கிறேன் இரவும் பகலும்.”
அந்தப் பாடல் என்னுடைய ஆரம்பகாலப் பயணத்தின் பல வருடங்களை இந்தப் பாதையில் கொண்டு சென்றது.
ஆனால், தகுதியானவர் என்ற இந்த எண்ணம் குறித்து நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால்: ஒரு காலகட்டத்தில் நான் உணர்ந்தேன், “அந்த பாடலின் முழுப் பொருளில் பாதிதான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.” ஏனென்றால், நம் பக்தி, ஆழ்ந்த ஏக்கம், பேராவல், விடாமுயற்சி ஆகியவற்றை அதிகரிக்க அந்த பாடலைப் பயன்படுத்துவது எவ்வளவு சக்திவாய்ந்ததோ — “வருவாயா, நீ வருவாயா? ஒரே முறை என்னிடம் வருவாயா?” — அதன் மறுபாதி என்னவென்றால், உண்மையில் தெய்வத் தாயும் அதே பாடலை நமக்காகப் பாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை நாம் உணரும்போது தான்.
இதை நீங்கள் நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். இதை மாற்றி, நீங்கள் அவளை அழைப்பதற்குப் பதிலாக, அவள் உங்களை அழைக்கிறாள் என்று கருதுங்கள். அதைப் பற்றி சிந்தியுங்கள்! அவள் நம் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாள், “என் அன்புக் குழந்தைகளே, என் இதயக் கதவை உங்களுக்காக அகலத் திறந்து வைத்திருக்கிறேன். வருவாயா நீ, வருவாயா? ஒரே முறை, என்னிடம் வருவாயா?” ஏனெனில் நாம் அவளிடம் ஒரு முறையேனும் வந்துவிட்டால், ஒருபோதும் அவளை விட்டு விலக விரும்ப மாட்டோம் என்று அவள் அறிவாள்.
பின்னர், நமது ஆன்மா பதிலளித்து இவ்வாறு சொல்கிறது: “எந்தன் நாட்கள் பறக்குமா, தாயே, உன்னைக் காணாமல்?” அவளோ நேரடியாகப் பதிலளிக்காமல், மீண்டும் மீண்டும் கூறுகிறாள்: “இரவும் பகலும், இரவும் பகலும், உனை எதிர்பார்க்கிறேன் இரவும் பகலும்.”
அதை உங்கள் தியானப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் தகுதியற்றவர் என்ற மாயையை அது என்ன செய்கிறது என்று பாருங்கள்.

“லைட் த லேம்ப் ஆஃப் தை லவ்” (YSS மற்றும் SRF இன் பல கீர்த்தனைப் பதிவுகளுடன், YSS புக் ஸ்டோர் இல் கிடைக்கிறது) என்ற பதிவிலிருந்து SRF சன்னியாசினிகளின் கீர்த்தனைக் குழுவினர் “டோர் ஆஃப் மை ஹார்ட்” என்ற பாடலைப் பாடுவதை நீங்கள் கீழே கேட்கலாம்.