உறுதியளிக்கும் மற்றும் நம்பிக்கை தரும் செய்தி

12 செப்டம்பர், 2025

அன்பர்களே,

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அவர்களின் பெயரால் உங்கள் ஒவ்வொருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

நேபாளத்தில் நிலவிவரும் உள்நாட்டுக் கலவரம் பற்றிய செய்திகளை, அங்கு ஏற்பட்ட உயிர் இழப்புகள், வீடுகள் மற்றும் நிறுவனங்களின் அழிவு, அத்துடன் சமூகம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலை குறித்து என் இதயத்தில் எழும் ஆழ்ந்த கவலையுடன் கவனித்து வருகிறேன். எனது பிரார்த்தனைகள் முழு தேசத்துடனும், குறிப்பாக நேபாளத்தில் உள்ள குருஜியின் அன்பான, அர்ப்பணிப்பு உணர்வுள்ள பக்தர்களுடனும் உள்ளன. அவர்களில் பலரை நான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனது வருகையின் போது சந்தித்ததில் மகிழ்ச்சி மற்றும் உத்வேகம் அடைந்தேன். இந்த சவாலான காலங்களில், அவரது தெய்வீகப் பாதுகாப்பிலும் எல்லையற்ற கருணையிலும் நம்பிக்கை கொண்டு, நமக்குள் உள்ளார்ந்திருக்கும் இறை அமைதியின் இருப்பில் அகமுகமாக நிலைத்திருக்க நினைவில் கொள்வோம். புனித இமயமலையின் மடியில் அமைந்துள்ள இந்த அழகான நாட்டை அவரது பாதுகாக்கும் இருப்பு சூழட்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் குருதேவரின் உலகளாவிய ஆன்மீகக் குடும்பத்தின் நேசத்திற்குரிய அங்கமாக இருக்கிறீர்கள்; முழு தேசமும் தெய்வீக ஒளியால் சூழப்பட்டதாக மனக்காட்சி காண்பதில் நீங்கள் என்னுடனும் குருஜியின் ஆசிரமங்களில் உள்ள சன்னியாசிகளுடனும் இணைகிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். SRF/YSS உலகளாவிய பிரார்த்தனைக் குழுவின் ஒரு பகுதியாக குருஜியின் யோக ரீதியாக குணப்படுத்தும் உத்தியைப் பயிற்சி செய்யும்போது, புனித ஓம் அதிர்வு அன்பின் சக்திவாய்ந்த அலையாகப் பரவி, சுமூக நிலமையை மீட்டெடுக்கவும், நல்லெண்ணத்தை ஊக்குவிக்கவும், புரிதல் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் உதவுகிறது என்பதை நாம் உணர்வுபூர்வமாக உணரலாம். நமது ஆழ்ந்த ஏக்கத்தின் அவசியத்துடனும் உண்மையான நம்பிக்கையுடனும் பிரார்த்திப்பதன் மூலம், ஆழ்ந்த, எல்லையற்ற அமைதி மற்றும் இணக்கத்தின் ஆற்றலுடன் தெய்வீக உதவி உலகிற்குள் பாய்வதற்கான ஒரு தடத்தைத் திறக்கிறோம்.

நம் குருதேவர் மற்றும் பரமகுருமார்களின் கருணையும் அருளாசிகளும், இந்த கொந்தளிப்பான சூழ்நிலைகளை அனுபவிக்கும் உங்கள் அனைவருக்கும் ஆன்மீக பலத்திற்கும் ஆறுதலுக்கும் உயிர்ப்புள்ள ஆதாரமாக இருக்கட்டும். நான் உங்கள் ஒவ்வொருவரையும் என் இதயத்தில் வைத்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும், தெய்வீகத்தின் அன்பான அரவணைப்பில் நீங்கள் பாதுகாப்பையும் துணிவையும் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கிறேன்.

இறைவன் மற்றும் குருதேவரின் தொடர்ச்சியான அருளாசிகளுடன்,

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர