தி டிவைன் ரொமான்ஸ்-ஸின் தமிழ் மொழிபெயர்ப்பு சென்னையில் வெளியிடப்பட்டது

18 மார்ச், 2017

ஒய் எஸ் எஸ்-ஸின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக 2017 பிப்ரவரி 4 அன்று சென்னையில் நடந்த பொது விழாவில் குருதேவரது உரைகளின் தொகுப்பான தி டிவைன் ரொமான்ஸ் எனும் நூலில் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. பிரபல திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பத்ம விபூஷண் விருது பெற்றவர் மற்றும் யோகதா பக்தரான ரஜினிகாந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள அரங்கம் நிரம்பி வழிந்தது. விழாவில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஒய் எஸ் எஸ்-ஐச் சேர்ந்த சுவாமிகள் ஸ்மரணானந்தர், சுத்தானந்தர், பவித்திரானந்தர், மற்றும் பிரம்மச்சாரிகள் நிஷ்டானந்தர், நிரஞ்சனானந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஶ்ரீ ரஜினிகாந்த்  (இடமிருந்து இரண்டாவது) அவர்கள், ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் மற்றும் ஒரு பக்தருடன் புதியதாக வெளியிடப்பட்ட தி டிவைன் ரொமான்ஸ் நூலின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதியை அனைவருக்கும் தெரியுமாறு காட்டினார்.

சுவாமி சுத்தானந்தாஜி அவர்கள், 1917ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள திஹிகா என்ற கிராமத்தில் பரமஹம்ஸர் வெறும் ஏழு மாணவர்களுடன் “எப்படி வாழ வேண்டும்” வகை பள்ளி வடிவத்தில் ஒய் எஸ் எஸ்-ஐத் தொடங்கினார். தற்போது அது ஓர் உலக அமைப்பாக, இந்தியாவில் மட்டும் 200 தியான மையங்களும், ஆரம்பநிலை கல்வி முதல் முதுகலைக் கல்வி வரை வழங்கும் பல கல்வி நிறுவனங்களும் கொண்ட ஒன்றாக, வளர்ச்சி அடைந்துள்ளது, என்றும் தன் உரையில் கூறினார்.

தினசரி வாழ்க்கையில்  தெய்வீக அன்பை வெளிப்படுத்துதல் மற்றும் அனுபவித்தல். என்ற தலைப்பில் சுவாமி ஸ்மரணானந்தாஜி உரை நிகழ்த்தினார். தெய்வீக அன்பு எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பதால், இறைவன் பார்க்கப்பட வேண்டும் என்ற அவசியமின்றி அனுபவிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.

தலைமை விருந்தினரான ஸ்ரீ ரஜினிகாந்த், 1998-ஆம் ஆண்டு  ஒரு யோகியின் சுயசரிதம்  புத்தகத்தைப் படித்தபோது ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்-ஐ எவ்வாறு குருவாக உணர்ந்தார் என்பதை பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.  தி டிவைன் ரொமான்ஸ், என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பை அவர் வெளியிட்டு, அப்புத்தகத்தைப் பற்றிக் கூறும் போது,”என் வாழ்நாளில் நான் வெளியிடும் முதல் புத்தகம் இது. இப்புத்தகத்தை மதிப்பாய்வு செய்யும்போது, அதன் ஒவ்வொரு பக்கமும், இல்லை இல்லை ஒவ்வொரு வரியும் கூட பரமஹம்ஸ யோகானந்தரின் அன்பு மற்றும் ஞானம் தோய்ந்த அமுத மொழிகளால் நிரம்பப் பெற்றுள்ளதை நான் உடனடியாக உணர்ந்தேன்” என்று கூறினார். அவரது அறிமுக உரை பலத்த கைதட்டலை பெற்றது. சுவாமி சுத்தானந்தாஜி, திரு ரஜினிகாந்த்திற்கு யோக நிலையிலுள்ள கிருஷ்ணரின் சட்டம் போட்ட படத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடக அமைப்புகளால் மிக விரிவாக விளம்பரப்படுத்தப்பட்டது. முடிந்த சிறிது நேரத்திலேயே தி திவைன் ரொமான்ஸ் (தமிழ்) கிட்டத்தட்ட 500 பிரதிகள் விற்கப்பட்டன. நாற்பது பேர் குருதேவரின் போதனைகளில் ஆர்வம் காட்டி  யோகதா சத்சங்கப் பாடங்களுக்கு பதிவு செய்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதை வெற்றிகரமாக்கியதில் முழு உற்சாகத்தோடு தன் சேவையைப் புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் நாங்கள் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp