ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் இந்திய விஜயம் – 2023 குறித்த ஊடகச் செய்திகள்

6 மே, 2023

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் (YSS/SRF) இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி சமீபத்தில் 2023 பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இந்த பயணத்தின் போது, ராஞ்சி, நொய்டா மற்றும் தக்ஷிணேஸ்வர் YSS ஆசிரமங்களுக்கு சுவாமிஜி விஜயம் செய்தார், மேலும் ஹைதராபாத்தில் YSS சங்கம் 2023 க்கு தலைமை தாங்கினார்.

சுவாமிஜியின் இந்திய வருகையின் போது வெளியான ஊடகச் செய்திகளின் சில சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சிந்தன் வித் ஸ்வாமி சிதானந்தாஜி த பயனியர் இல் வெளியான நேர்காணல் தொடர்

சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரையும், உலகத்தையும் பாதிக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஸ்வாமிஜியை “தி பயனியர்” என்ற ஆங்கில நாளிதழ் நேர்காணல் செய்தது. இந்த பத்து பகுதித் தொடரின் அனைத்துக் கட்டுரைகளும் (கீழே வழங்கப்பட்டுள்ளன) “தி பயனியர்” இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

பகுதி 10: உத்வேகம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை எனில் அதற்கு மதிப்பேதுமில்லை

கேள்வி: ஸவாமிஜி, இந்தியாவில் ராமாயணம், கீதை, உபநிடதங்கள் போன்ற மறைநூல்களை வாசிக்கும் மரபு உள்ளது. இந்த போதனைகளில் உள்ள ஞானம் யோகானந்தரின் போதனைகளில் உள்ளதா? இதை கற்பவர்கள் அனைவரும் அந்த மறை நூல்களை படிக்க வேண்டுமா?
மேலும், சில நேரங்களில் யாராவது ஒரு புத்தகத்தைப் படிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட ஊக்கமளிக்கும் உரையைக் கேட்க பரிந்துரைக்கிறார்கள். ஒரு பக்தன் வேறு பாதைகளைப் பார்க்காமல் இருப்பதும், அல்லது பிற ஆன்மீக நூல்கள் படிப்பதில் ஆர்வம் காட்டாததும் ஆன்மீக கர்வமா?

ஸ்வாமி சிதானந்தஜி: இல்லை! அது விசுவாசம்! அது உண்மையில் ஒருவர் பாதையில் எங்கு இருக்கிறார் என்பதைப் பொறுத்தது. நீங்கள் போதனைகளை ஆராய்ந்து ஒப்பிடும் கட்டத்தில் இருக்கும்போது இயல்பாகவே, அந்த சொற்பொழிவைக் கேட்டு பார்ப்போம், அது அர்த்தமுள்ளதா, அல்லது இது இன்னும் அர்த்தமுள்ளதா என்று பார்ப்போம் என்று நினைக்கலாம். அது சரி தான். ஆனால், குருவுடன் அந்த உறவை ஏற்படுத்திக் கொண்ட கிரியாபன் சீடர்களுக்கு, ஆன்மீக சக்தி, ஒரு வழியாக மட்டுமே வருகிறது, அந்த தடம் தான் இறைவனால் நியமிக்கப்பட்ட ஒருவரது குரு என்று யோகானந்தர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இப்போது, அதையும் சமநிலையுடனும், பொது அறிவுடனும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது அச்சப்படவோ அல்லது விஷயங்களைத் தவிர்க்கவோ வேண்டும் என்பதல்ல. மற்றவர்களின் எழுச்சியூட்டும் கதைகள் அல்லது மனதைத் தூண்ட உதவும் விஞ்ஞான தகவல்களிலிருந்து நீங்கள் பெறக்கூடிய அற்புதமான உத்வேகம் மற்றும் ஊக்கம் நிறைய உள்ளது, இது நமது குரு கற்பித்ததைத் தான் உறுதிப்படுத்துகிறது. உங்கள் குருவின் பயிற்சியை நீங்கள் ஏற்றுக்கொண்ட பிறகு மற்ற ஆன்மீக அறிவுறுத்தல்கள் அல்லது வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது இல்லை.

முதலாவதாக, யோகானந்தரின் பக்தர்களாக, நீங்கள் ஏற்கனவே மறை நூலாகிய ‘கீதை’ படித்து வருகிறீர்கள்; மேற்கில் மறை நூலாகிய, கிறிஸ்துவின் வேத வாக்கியம் படிக்கப்படுகிறது. இவை இரண்டும் அற்புதமான சாத்திரங்கள். “நீங்கள் மறை நூல்களை படிப்பதை விட்டுவிடுங்கள்” என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் எல்லா சாத்திரங்களையும் படிப்பது அவசியமா? இல்லை! ஏனெனில் குருதேவர் பக்தனுக்குத் தேவையான அனைத்தையும் சாத்திரங்களிலிருந்து வடிகட்டி, அதை ஒரு நடைமுறை பயிற்சியாக மாற்றியுள்ளார். பலர் (இது தான் உலகின் வழியாக இருக்கிறது), சில சாத்திரங்களை படித்துவிட்டு, “சரி, நான் என் கடமையை நிறைவேற்றிவிட்டேன்” என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நீங்கள் விரும்புவதை அளிக்கப் போவதில்லை. உங்கள் ஆன்ம உணர்வுநிலையை, இறைவனுடனான உங்கள் வாழ்வின் ஆற்றல்மிக்க உறவின் உணர்வை நீங்கள் விரும்புகிறீர்கள். ஒரு புத்தகத்தை, ஒரு மறை நூலைப் படிப்பதன் மூலம் கூட நீங்கள் அதைப் பெறப் போவதில்லை.

எனவே, சாத்திரங்களைப் படிப்பதில் தவறில்லை. அவை அற்புதமானவை, அவற்றில் நிறைய ஊக்கமளிக்கும் சாதனங்கள் உள்ளன, சரியான நடத்தை பற்றிய பல சாசுவதமாக பயனளிக்கும் கோட்பாடுகள் மற்றும் ஆழ்ந்த ஆன்மீக உண்மைகள் மற்றும் பல உள்ளன, எனவே, அவற்றைப் படிக்க வேண்டியது அவசியமில்லை என்று நான் கூறுவேன், ஆனால்YSS பாடங்களைப் படிப்பதையும் உண்மையில் தியானம் செய்வதையும் விட ஒரு பக்தர் அதிக நேரம் செலவழிக்காமல் இருக்கும் பட்சத்தில், வாசிப்பதில் தவறேதுமில்லை. நீங்கள் ஒரு மணி நேரம் படித்தால், அதை விட இரண்டு மடங்கு நேரம் உங்கள் சிந்தனைகளை எழுதி, அதைப் பற்றி இன்னும் நீண்ட நேரம் ஆழமாக சிந்தியுங்கள் என்று குருதேவர் கூறியுள்ளார். மிகவும் முக்கியமானது தியானம். புத்தகங்களைப் வாசிப்பது தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும், ஆனால் இறுதியில், உத்வேகம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என்றால் அதற்கு மதிப்பேதுமில்லை.”

பகுதி 9: ஆன்மீகப் போராளியாக இருங்கள், உங்களுக்குள் இருக்கும் கௌரவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்

கேள்வி: “தன் முயற்சியை ஒரு போதும் கைவிடாத ஒரு பாவி ஒரு மகானாகிறார். என்று யோகானந்தர் கூறினார். ஆனால், சில சமயங்களில், ஒரு நபர் முதன்முதலில் ஆன்மீகத்தில் பயணிக்கத் தொடங்கும் போது, தாங்கள் உண்மையில் அதற்குத் துளியும் தயாராக இல்லை என்ற எண்ணம் ஏற்படக்கூடும். நம்முடைய லௌகீக பழக்கவழக்கங்களிலும், உலகியல் வழிகளிலும் நாம் ஆழமாக வேரூன்றியிருப்பதால், “இங்கே இந்த மகான்கள் மத்தியில் நான் ஒரு பாவியாக இருக்கிறேன்!” என்று நினைத்து ஆன்மீகப் பயணத்தைத் தொடங்க ஒருவர் சோர்வடையலாம்.”

 

ஸ்வாமி சிதானந்த கிரி: இது அனைத்து மனிதர்களும், குறிப்பாக ஆன்மீகப் பாதையில் உள்ளவர்கள் அனுபவிக்கும் ஒரு உலகளாவிய மாயை. நம் அனைவருக்குமே கொஞ்சம் பணிவு இருக்கிறது, தவறாக வழிநடத்தப்படும் பணிவானது, குறைந்த சுயமதிப்பீடாகவோ, தன்னைப் பற்றியே தவறாக நினைத்தலாகவோ மாறக் கூடும்.

ஆனால் ஒருமுறை யோகானந்தரிடம் ஒருவர், ஒரு யோகியின் சுயசரிதத்தில் மிகவும் ஊக்கமளிக்கும் விஷயம் என்ன என்று கேட்டதற்கு, அவர் கூறினார், “என் குரு ஸ்ரீ யுக்தேஸ்வரின் இந்த வார்த்தைகள்: ‘கடந்ததை மறந்து விடு, எல்லா மனிதர்களின் கடந்த கால வாழ்க்கைகளும் பல அவமானங்களால் இருள் படர்ந்தவைதான். இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.’” இது கவனம் செலுத்துவதற்கான ஒரு நேர்மறையான வழியாகும்.

 

இது கொஞ்சம் கடுமையானதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், “மற்றவர்கள் என்னை விட முன்னேறியவர்கள், நான் மட்டுமே இந்த பாதையில் முற்றிலும் தோல்வியுற்றேன்” என்று மக்கள் உறுதிப்படுத்திக் கொள்ளும்போது, ஒரு வகையில், முயற்சியின்மைக்கு அதுவே ஒரு சாக்காகிவிடும். அந்தப் போக்கை, “நிறுத்து! நான் உன் பேச்சைக் கேட்கவில்லை! வெளியேறு!”, என விரட்டிட வேண்டும், இது எப்படியெனில், உங்கள் வீட்டு வாசலில் நின்று, “ஓ, நீங்கள் ஒரு பயங்கரமான நபர், நீங்கள் நல்லவர் அல்ல” என்று ஒரு பித்தன் கூறுவதை எதிர்கொள்வதைப் போல எதிர்கொள்ள வேண்டும்.

 

அகந்தையுடன் பிணைக்கப்பட்டுள்ள இந்த மாயைகள் உங்களிடம் உள்ளன, அவற்றின் முதன்மை நோக்கம் ஆன்மீக முயற்சியில் இருந்து உங்களைத் தடுப்பது. உங்களைப் பற்றிய மனச்சோர்வு பொதுவாக ஆன்மீக முயற்சியில் இருந்து உங்களைத் தடுக்கும் மிகச் சிறந்த வழியாகும். நீங்கள் அதை எதிர்கொள்ளத் தான் வேண்டும், ஒரு ஆன்மீக போர்வீரராக இருக்க வேண்டும். பகவத் கீதை (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) பற்றிய தனது முதல் அத்தியாயத்தில் பரமஹம்ஸ யோகானந்தர் குறிப்பிடும் கௌரவர் போராளிகளே அவைகள். மேலும் அவை உங்கள் சிந்தனை செயல்முறைகளை கட்டுப்படுத்தி உங்களை திசை திருப்பி, நீங்கள் வெற்றிகரமான ஆன்மீக இயல்பை உறுதி செய்வதை தடுப்பவை.

 

ஆனால் அது தானாக வராது. அதற்கு மனஉறுதி வேண்டும், திடமான நோக்கம், மன வலிமை வேண்டும். ஆனால் ஒருவர் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால், “நான் சரியில்லை, மற்றவர்கள் அனைவரும் சிறந்தவர்கள்” என்று தங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்வதுதான். அப்படி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, குருதேவரின் புத்தகங்களில் ஒன்றான ஒளி உள்ள இடத்தினிலே அல்லது மெடாஃபிஸிகல் மெடிடேஷன்ஸ் போன்றவற்றிலிருந்து சிறந்த நேர்மறை கருத்து ஒன்றை தேர்வு செய்யுங்கள். இதற்குத் தான் குருதேவர், “நான் இறைவனின் குழந்தை, நான் இறைவனின் பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளேன்” என்று அந்த நேர்மறையான உறுதிமொழிகளை எங்களுக்கு வழங்கினார். நம்மைப் பற்றிய தவறான கருத்துக்களை அகற்றுவதற்கு முயற்சி தேவை. அது தியானம் மற்றும் நேர்மறை உறுதிமொழிகளால் சாதிக்கப்படுகிறது.

பகுதி 8: ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் அதிகரிக்கும் போது சமூகம் பரிணாம வளர்ச்சி அடையும்

கேள்வி: இறைவனை அறிவதற்கான எளிய வழி அன்பின் வழி என்கிறார் யோகானந்தர். தியானப் பாதை எப்படி “அன்பின் வழி” ஆக இருக்க முடியும் ? இந்த “நிபந்தனையற்ற” அன்பை உணரவும் வெளிப்படுத்தவும் யோகம் நம்மை வழிநடத்த முடியுமா?

ஸ்வாமி சிதானந்த கிரி: “ஆமாம்! ஆம்! ஆம்! இறுதியில் எல்லா உயிர்களிலும் நம் இருப்பை உணர வைக்கிறது தியானம் , ஏனென்றால் நமக்குள் இறைவன் இருப்பதை நாம் உணர்கிறோம், பின்னர் அந்த உணர்வுநிலை விரிவடையும்போது, முதலில் ஆழ்மன அல்லது சூட்சும நிலையிலும், பின்னர் மிகவும் வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும், மற்றவர்களில் இறைவனின் இருப்பை நாம் உணர்கிறோம். இறைவன் பிரபஞ்சத்தில் மிகவும் அன்பானவன். இறைவன் என்றால் என்ன என்பதை மட்டும் அனைவரும் அறிந்திருந்தால்… இறைவன் இனிமையானவன், ஆனந்தமயவானவன், சேவையே வடிவானவன், நம் மரியாதையையும் பாசத்தையும் இயல்பாகவே ஈர்க்கும் இவற்றைப் போன்ற மேலும் அற்புதமான குணங்களை கொண்டவன். எனவே, அந்த அன்பை தனக்குள் உணர்வதற்கான திறவுகோல், தயா மாதாஜி மீண்டும் மீண்டும் கூறியது போல அன்பின் மூலத்திற்குச் செல்வதாகும். அதுவே அவரது வாழ்வின் மையக் கருத்தாக இருந்தது. “நான் அன்பை விரும்பினேன், மனித குறைபாடுகளால் களங்கப்படாத அன்பை உணர விரும்பினேன்” என்று அவர் கூறினார். “அந்த அன்பைக் அறிய நான் இறைவனை நாட ஆரம்பத்திலேயே முடிவு செய்தேன்” என்றார். இறைவனிடம் எப்படிச் செல்வது? தியானத்தின் மூலமாக! அவரது நூல் அன்பு மட்டுமே (ஒன்லி லவ்) முழுவதுமாக இதைப் பற்றியதே.

கேள்வி: சுவாமிஜி, மதவாத வன்முறையையும் வெறுப்பையும் நாம் எப்படி எதிர்கொள்வது?

ஸ்வாமி சிதானந்த கிரி: “முதலாவதாக, எங்கள் குருவின் (யோகானந்தர்) மரபுகளிலும், போதனைகளிலும் காணப்படும் உலகளாவிய தன்மை, புரிதல் மற்றும் பிற மத மரபுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவது.

“மதவெறி வன்முறையைத் தாங்களாகவே திடீரென நிறுத்தப் போகிறோம் என்று தனிப்பட்ட பக்தர்கள் உணர்வது என்பது ஒரு லட்சியத் திட்டம் எனலாம். இது படிப்படியாக மாற வேண்டிய ஒன்று. ஆனால் நாம் ஒவ்வொருவரும் அதற்கு பங்களிக்க முடியும். முதலாவதாக, மரியாதை மற்றும் புரிதலுக்கு முன்மாதிரியாக விளங்கி, மதங்களுக்கிடையேயான அடிப்படை ஒற்றுமைகளை மையமாகக் கொண்ட நமது குருதேவரின் பல்வேறு எழுத்துக்கள் அல்லது புத்தகங்களை முடிந்தவரை பலருடன் பகிர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, குருதேவரின் புத்தகம்: சமய விஞ்ஞானம், மனிதனின் நிரந்தரத் தேடலில் சில அத்தியாயங்கள் அல்லது அது போன்ற பிற புத்தகங்கள், இதனால் அதிகமான இந்த கருத்துக்கள் சமூகத்தில் உடுருவிப் பரவும். பின்னர், மற்றொரு பாதையைப் பின்பற்றுபவர்களைப் பற்றி யாராவது இழிவான அல்லது அவமதிக்கும் முறையில் பேசும் சூழ்நிலையில் இருக்க நேர்ந்தால், மரியாதையுடனும் மென்மையாகவும் எதிர்த்து, இந்த உலகில் ஏற்கெனவே போதுமான வெறுப்பு உள்ளது, இது மேலும் அதிகமாக்கத்தான் உதவும் என்று சொல்லுங்கள். நாம் மற்றவர்களை திருத்துபவர்களாகவோ அல்லது ஒழுங்குபடுத்துபவர்களாகவோ மாற வேண்டியதில்லை, ஆனால் யாராவது உங்களைச் சுற்றி அவ்வாறு நடந்துகொண்டால் நீங்கள் அதை எதிர்க்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த கேள்விக்கான பதில் உண்மையில் அதிகமான பக்தர்கள் YSS பாடங்களில் நாம். கற்றுக் கொள்ளும் உலகளாவிய கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ஆகும். காலப்போக்கில் சமூகத்தில் ஒரு பரிணாம மாற்றம் ஏற்படுவதை அறிவீர்கள். ஆனால் தனிப்பட்ட பக்தர்களை, அதற்கான வழிவகைகள் இல்லாத பட்சத்தில், அவர்கள் வெளியே சென்று மதவாத வன்முறையை நேரடியாக எதிர்கொள்வதை நான் ஊக்குவிக்க மாட்டேன்.

பகுதி 7: கூட்டு தியானம் உண்மையான சத்சங்கம்

கேள்வி: சமீபத்தில் ஹைதராபாத்தில் YSS நடத்திய சங்கத்தில் சுமார் 3200 பக்தர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் போது பெற்ற அருளாசிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல பக்தர்கள் என்ன செய்யலாம்?

ஸ்வாமி சிதானந்த கிரி: மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கக் கூடியதை விட இப்போதைய எனது பதில் வேறுபட்டதாக இருக்கும், ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். சத்சங்கத்தின்- ஆன்மீகக் கூட்டமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

பரமஹம்ஸ யோகானந்தர், ‘மன உறுதியை விடச் சுற்றுசூழல் வலிமையானது’ என்று குறிப்பிட்டார். நாம் நம்மை சுற்றி இருப்போரைப் போல ஆகிவிடுகிறோம். வியாபாரத்திலோ, விளையாட்டிலோ அல்லது எந்தத் துறையிலோ நாம் வெற்றி பெற விரும்பினாலும், நீங்கள் பழகும் நபர்களைப் போல ஆகிவிடுவீர்கள். குழு உணர்வு நமது தனிப்பட்ட முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது. யோகானந்தரின் பணியின் தொடக்கத்திலிருந்தே, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பக்தர்கள் கூட்டு தியானத்திற்கு ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இது சத்சங்கத்தை தக்க வைப்பதற்கான ஒரு வழி.

இரண்டாவது விஷயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று பரவியபோது உருவானது, அனைத்து தியான மையங்கள் மற்றும் ஆசிரமங்கள் பூட்டப்பட வேண்டியிருந்ததால் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்தது. ஊரடங்குக்கு சில மாதங்களுக்கு முன்பு, வீடியோ கான்பரன்சிங் மூலம், ஆன்லைன் தியான மையத்தை நாங்கள் திறந்து வைத்தோம், இதில் பக்தர்கள் ஆன்லைன் கூட்டு தியானங்கள் மற்றும் சத்சங்கங்களில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த மூன்று வருட தனிமையின் போது உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு அது ஒரு உண்மையான உயிர்காக்கும் கருவியாக மாறியது.நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாவிட்டாலும், அந்த சக்தியைப் பயன்படுத்தி சரியான சூழலை உருவாக்கவும் அந்த தொழில்நுட்பத்தை சத்சங்கத்திற்குப் பயன்படுத்துவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு இப்போது உள்ளது.

பரமஹம்ஸ யோகானந்தர் போன்ற ஒரு முக்தி அடைந்த மனிதருடன் ஆழ்ந்த ஆன்மீக உறவை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, நீங்கள் ஒருபோதும் தனியாக தியானிக்க மாட்டீர்கள், ஏனென்றால், பக்தரை இறைவனுக்கு அறிமுகப்படுத்தும் குருவின் உதவியால் பக்தரின் முயற்சிகள் எப்போதும் வலுப்படுத்தப்படுகின்றன. ஒருவகையில் அது சத்சங்கத்தின் மிகவும் மதிப்புமிக்க வடிவம் – குருவுடனான சத்சங்கம் – ஏனென்றால், நான் ஒரு தியான மையத்திற்கு அருகிலோ, கணினியின் முன்போ, எங்கு இருந்தாலும், அது அந்த வெளிப்புற சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு சத்சங்கம் முழுவதுமாகக் கிடைக்கிறது.

“இந்த புனித தங்குமிடத்தில், ஆன்மாவின் சரணாலயத்தில், பக்தனுக்கும் குருவுக்கும் இடையில் இருக்கும் சத்சங்கம் ஒரு நொடி கூட இல்லாமல் போகாது. அது எப்பொழுதும் இங்கு இருக்கிறது (கூடஸ்தா மையத்தைச் சுட்டிக் காட்டி).”

பகுதி 6: வெற்றி பெற நீங்கள் வாழ்க்கைக்கான ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்

கேள்வி: சுவாமிஜி, இளைஞர்கள் உண்மையான வெற்றியை அடைய ஏதாவது ஆலோசனைகள் தருவீர்களா?

ஸ்வாமி சிதானந்த கிரி: “முதலில், எனக்கு ஒரு உடல் உள்ளது, எனக்கு ஒரு மனம் உள்ளது, ஆனால் நான் ஆத்மன் – ஒரு ஆன்மா என்பதை உணருங்கள். உண்மையான வெற்றி என்பது ஒருவர் தனது வாழ்க்கையையும் குறிக்கோள்களையும் ஒழுங்கமைத்து அவற்றுக்கு சரியான நேரத்தை ஒதுக்குவதாகும். நீங்கள் பருப்பொருளைப் புறக்கணிக்க முடியாது, அறிவார்ந்த வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியைப் புறக்கணிக்க முடியாது, மேலும் ஆன்மீக உணர்வுநிலை மேம்பாட்டை நீங்கள் நிச்சயமாக புறக்கணிக்க முடியாது. 

“ஒவ்வொன்றிற்ககும் நேரத்தைக் ஒதுக்கும் வாழ்க்கை முறையின் மூலம் உண்மையான வெற்றி கிடைக்கிறது. யோகதா சத்சங்க பாடங்களில் நீங்கள் அதைத்தான் காண்கிறீர்கள். சமநிலை வாழ்க்கைக்கான பாதை வரைபடம்: உடலின் ஆரோக்கியம், கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியில் மனதின் செயல்திறன், மற்றும் பகுத்தறிவு அனைத்தும் மிகவும் முக்கியம்.

“தியானம் செய்ய கற்றுக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் காலையிலும் 10 நிமிடங்கள் மாலையிலும் இருக்கலாம். (அது ஒரு விதத்தில் நியாயமற்றது ஏனென்றால் ஒருமுறை அவர்கள் அதை 10 நிமிடங்கள் செய்தால், பின்னர் 20 நிமிடங்கள் செய்ய விரும்புவார்கள், 20 நிமிடங்கள் செய்தால், நீண்ட நேரம் செய்ய விரும்புவார்கள்… அப்படித்தான் தியானம் செயல்படுகிறது!) 

“ஆனால் விஷயம் என்னவென்றால்… வெற்றிகரமாக இருக்க நீங்கள் வாழ்க்கையில் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்… வெற்றி தானாகவே வந்தடையும் வரை காத்திருந்து வெற்றி பெற போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை கட்டமைக்க வேண்டும். அதை நீங்கள் கவனிக்க வேண்டும், உங்கள் நேரம் செலவிடுவதை உங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொணர்ந்து, நேரத்தை உங்கள் இலக்குகளுக்காக நன்கு பயன்படுத்த வேண்டும்.”

பகுதி 5: உங்கள் குழந்தை உங்களிடம் எதிர்பார்க்க கூடிய ஒரு முன்மாதிரியாக இருங்கள்!

கேள்வி: பரமஹம்ஸ யோகானந்தரின் யோக-தியான போதனைகளில் குழந்தைகளை நாம் எவ்வாறு ஈடுபடுத்தலாம்? YSS மற்றும் SRF இல் குழந்தைகளை தியானத்திற்கு அறிமுகப்படுத்தும் எழுத்து வடிவ தொகுப்பு உள்ளதா?

ஸ்வாமி சிதானந்த கிரி “பெற்றோர்கள் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்து, தம் குழந்தைகளிடம் அவர்கள் காண விரும்பும் பண்புகளின் மாதிரியாக தாங்களே இருப்பதன் மூலம் இந்த போதனைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். குழந்தைகளிடம், ‘நான் சொல்வதைச் செய், நான் செய்வதைப் போல் அல்ல.’ என்று சொல்ல முடியாது. அது ஒருபோதும் எடுபடாது. மாறாக, பேச்சைத் தவிர்த்து , கருணை, கண்ணியம், பிறர் மீதான மரியாதை, மன உறுதி ஆகியவற்றை உள்ளடக்கி, ‘என் வாழ்க்கை நிச்சயமாக நான் அதை உருவாக்கும் விதத்தில் தான்’ என்று ஒரு வழியில் வாழ்பவர், தன் குழந்தைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

“…இயல்பிலேயே எப்போதும் கற்கும் உணர்வில் இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் மூளை மற்றும் நரம்புகள் அந்த ஆரம்ப ஆண்டுகளில் கற்கவும் கிரகிக்கவும் அதி வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஒரு குழந்தையின் மனம், எதிர்மறை அல்லது நேர்மறையாக உருவாக்கத்தக்க வகையில் மிகவும் நெகிழ்வாக, மிக மென்மையாக இருக்கும். இன்றைய உலகில் பெற்றோர்களின் பொறுப்புகள் போதுமான அளவு வலியுறுத்தப்படவில்லை என்பதால் நான் இதை மிகவும் உறுதியாக உணர்கிறேன். நீங்கள் ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டு வரப் போகிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். நீங்கள் அனைத்து சமீபத்திய வீடியோ கேம்ஸ், ஆடைகள், இந்த ஃபேஷன், அந்த வகை கேஜெட்கள் வாங்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இல்லை, உங்கள் குழந்தை எதிர்பார்க்கும் வகையில் முன்மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும்.”

இன்றைய பெண்களின் நிலையை ஒரு நிலைமாறும் கட்டம் எனலாம்

கேள்வி: இந்தியாவில் (ஒருவேளை உலக அளவிலும் கூட), தாய் என்பவள், குடும்பம், வீட்டுக் கடமைகள், வேலை மற்றும் அனைத்து வகையான எதிர்பார்ப்புகள் என்று பொதுவாக குடும்பத்தின் மையமாக இருக்கிறாள். யோகானந்தர் பரிந்துரைக்கும் நாள் தோறும் இருமுறை தியானம் செய்வதை பெண்கள் தங்கள் பல பொறுப்புக்களை சமாளித்து, நல்லிணக்கத்துடன் எவ்வாறு பின்பற்ற முடியும்?

ஸ்வாமி சிதானந்த கிரி: “அது ஒரு கடமைகள் பட்டியல், இல்லையா? இதை இச்சூழலுக்குக் கொண்டு வர ஒன்றைச் சொல்கிறேன். இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள பிற வளர்ந்த நாடுகளிலும் இன்று பெண்களின் நிலைமை ஒரு நிலைமாறும் கட்டத்தில் உள்ளது. பெண்களிடம் இத்தனை வேலைகள் கேட்கப்படுவது, அவர்களை மிகவும் அடக்கி, ‘நீ வீட்டில் இருந்து சமைத்து, சுத்தம் செய்து’ என்று ஒதுக்கி வைத்திருந்த தலைமுறையிலிருந்து வருகிறது. இது காட்டுமிராண்டித்தனமானது, பழமையானது. அதே நேரத்தில், பெண்கள் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சொந்த நலன்களை வெளிப்படுத்துவதற்கான மாற்று வழிகளை, ஆராயக்கூடிய ஒரு இடைநிலை கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் உண்மையான ஆன்மீக சமநிலை வாழ்க்கை என்பது ஆண்களும் பெண்களும் தங்கள் சமநிலை பங்காற்றலை உணர்ந்து, வீட்டில் மற்றும் வணிக உலகில் ஒரு இணக்கமான வாழ்க்கையை உருவாக்குவதாகும்.”

“நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன், பெண்கள் அதை எவ்வாறு பொறுத்துக்கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக, பெண்கள் நிறைய பொறுப்புகளை சுமக்க வேண்டியிருப்பதால், ஆண்களை விட வலிமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு அல்லது மூன்று அதிக சாதனை புரியும் குழந்தைகள், இரண்டு அல்லது மூன்று நல்ல பெரிய வீடுகள், சரியான உடல், சரியான ஆரோக்கியம் மற்றும் பலவற்றைக் கொண்ட ஒரு கார்ப்பரேட் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியதில்லை. இவை நிலையற்று பதட்டங்களின் தொகுப்பாக இருக்கும், துரதிர்ஷ்டவசமாக சமூகம் சரியான சமநிலையைக் கண்டறியும் பாதையில் தான் இன்னும் உள்ளது. ஆனால், அதை எப்படி அடைவது என்று நமக்கு இன்னும் தெரியவில்லை. நீங்கள் விவரிப்பது இந்த நிலைமையைத் தான், அது தற்போதைய நிலையை முறியடிக்கும் வரை சகித்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது.”

பகுதி 4: வளர்ந்து வரும் உலகளாவிய ஆன்மீக நாகரிகத்துடன் இணைக்கப்பட்ட இந்தியாவின் ஆன்மீகம்

கேள்வி: சுவாமிஜி, வளர்ந்து வரும் உலகளாவிய ஆன்மீக நாகரிகத்தில் இந்தியாவின் ஆன்மீகம் என்ன பங்கு வகிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஸ்வாமி சிதானந்த கிரி: “இது எங்கள் குரு பரமஹம்ஸ யோகானந்தரின் மனதிற்குகந்த பணியாயிருந்தைப் போல், எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. மேலும் அவர் நிறைவேற்ற அனுப்பப்பட்ட முக்கிய பணிகளில் ஒன்று. இந்தியாவின் ஆன்மீகத்தைப் பற்றி பேசுகையில், கீதை, யோக சூத்திரங்கள் மற்றும் உபநிடதங்கள் தோன்றிய நாகரிகத்தின் பொற்காலத்திற்குச் செல்வோம். இது எந்த ஒரு சமயத்தைச் சார்ந்த அல்லது ஒரு இனத்தைச் சார்ந்த ஒருவருக்கானது இல்லை, அது உலகெங்கிலும் மனித நிலையைப் பற்றி பேசும், உண்மையான உலகளாவிய போதனை என்பதை காண்கிறீர்கள். அதனால்தான் உபநிடதங்களில் ‘உலகம் ஒரே குடும்பம்’ [‘வாசுதைவ குடும்பகம்’], ‘ரிஷிகள் பல பெயர்களில் அழைத்தாலும் உண்மை ஒன்று’ [‘ஏகம் சத், விப்ர பஹுத வதந்தி’’] என்ற இனிய வாசகங்கள் உள்ளன.

“எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’, எல்லா உயிர்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும் என்பதே இலட்சிய மார்க்கமாக இருக்க வேண்டும். ‘எல்லா இந்தியர்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’, ‘எல்லா இந்துக்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், ஆனால் முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் அல்ல’ என்று அது சொல்லவில்லை, ஏனென்றால் நாம் ஒரே இறைவனின் அந்த தீப்பொறியை நம் ஒவ்வொருவரிடமும் கொண்டுள்ளோம். இது நாம் ஒருவரை ஒருவர் சகோதர சகோதரிகளாக பாவிப்பது அல்லது ஒருவரை ஒருவர் அழித்து கூடவே திட்டத்தையும் அழிப்பது என நாம் காணும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்:.

“உலகம் இந்தியாவை மிகவும் போற்றுதலுடன் எதிபார்க்கிறது.”

“இந்தியாவின் பங்கைப் பொறுத்தவரை, இந்தியா உலகிற்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய விஷயம், இந்தியாவின் சொந்த தெய்வீக மற்றும் சாசுவத பாரம்பரியத்தின் மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குவது, ஏனெனில் உலகம் இந்தியாவை மிகவும் போற்றுதலுடன் எதிபார்க்கிறது. நீங்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றிருக்கவில்லை என்றால், ஒரு யோகியின் சுயசரிதம் படித்த பலர் உள்ள, அல்லது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தலைமுறையில் வளர்ந்த ஒரு நபராக, உலகம் இந்தியாவை பார்க்கும் விதமே இது என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிற்கும் இது பொருந்தும். ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவை மனிதகுலத்தின் பெரிய சகோதரராக மதிக்கிறார்கள்.

“உலகளாவிய ஆன்மீக நாகரிகம் இரண்டு வழிகளில் நடக்கிறது என்பதில் சந்தேகமில்லை – ஒன்று பொருள்சார் வழி – தொழில்நுட்பம், தகவல்தொடர்பு மற்றும் பயணம் மூலம். சில தலைமுறைகளுக்கு முந்தைய அமெரிக்க இந்தியப் பயணம் மிகவும் விரிவானது, பலருக்கு அது சாத்தியமற்றது. ஆனால் இப்போது மக்கள் பெங்களூரு அல்லது சிகாகோவிற்கு விமானத்தில் செல்லலாம். எனவே, உலகம் சுருங்கி விட்டது. இது இனி தனிப்பட்ட நாடுகள் மற்றும் கலாச்சாரங்களின் மாறுபட்ட தொகுப்பு அல்ல.

“இணையம் உண்மையில் மனித சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியுள்ளது. இது மனித குடும்பமெனும் ஒரே உடலை ஒன்றிணைக்கும் நரம்பு மண்டலம் போல ஆகிவிட்டது. நீங்கள் மக்களுடன் நெருங்கி வரும்போது, நீங்கள் ஒருவருக்கொருவர் பழகுவது நல்லது. நீங்கள் ஒரே குடும்பத்தில் இருப்பது போல் இருக்கிறது, துரதிருஷ்டவசமாக, குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். மனித இனம் அதைச் செய்தால் அது சில தலைமுறைகளுக்கு மேல் நீடிக்காது.

“நூறு ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பேரழிவுக்கான திறன் நம்மிடம் உள்ளது. தொழில்நுட்ப சக்தியின் அதிகரிப்பு மற்றும் உலகின் சுருக்கம் ஆகியவற்றுடன், வரலாற்றுப் பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு, நாம் உண்மையில் ஒரே குடும்பமாக இருக்கிறோம். அதே அளவு ‘ஆன்மீக வளர்ச்சி’யும், ஆன்மீக முதிர்ச்சியும் நமக்கு இருக்க வேண்டும். அப்போது நாம் சுயக்கட்டுப்பாட்டுடன் கூடவே, நமக்குப் பிடிக்காதவர்களைத் தவிர்க்க முயற்சிக்காமல் இருப்போம். மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு, அமைதி மற்றும் வெற்றிக்கான உந்துதல் எனக்கு இருப்பதைப் போலவே, மற்ற மனிதர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்பதை அறியும் ஆன்மீக முதிர்ச்சி நமக்கு இருக்க வேண்டும். தன்னை சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் தான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இல்லை என்பதை மக்கள் இறுதியில் உணர்ந்து கொள்வார்கள். நீங்கள் அவர்களைத் தவிர்த்துவிட்டு, அது வேறு நாட்டிலே நடந்தது என்று கூறி விட முடியாது, ஏனெனில் அது ஒட்டுமொத்தமாக உலகை பாதிக்கிறது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் என்ன நடந்தது என்று பாருங்கள். இதுவே நூறு ஆண்டுகளுக்கு முன்பு எனும் போது இரண்டு அண்டை நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தன என்பதாக மட்டும் இருந்திருக்கும். இப்போது பிரதமர் மோடி முதல் ஜனாதிபதி பிடன் மற்றும் இடையில் உள்ள அனைவரும் 21 ஆம் நூற்றாண்டில் நாம் செயல்படும் விதம் இதுவல்ல என்று கூறினர். ஆன்மீகம், பொருள்சார் தொழில்நுட்பத்துடன் இணைந்து வளர வேண்டும்.

பகுதி 3: தியானம் உயிர் வாழ்வதற்கான திறன்

கேள்வி: மக்கள் தங்கள் பரபரப்பான வாழ்க்கையில் தியானத்திற்கு எவ்வாறு நேரம் ஒதுக்குகிறார்கள்?

ஸ்வாமி சிதானந்த கிரி: “உலகம் மேலும் மேலும், சிக்கலானதாகி பொருள் சார்ந்ததாக மாறி வருவதால், தியானம் உயிர்வாழ்வதற்கான திறன் என்பதை மக்கள் உணர்கிறார்கள். அந்த வகையான அக அமைதிக் கேணி அல்லது நீரூற்று உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அலைக்கழிக்கப்படுவீர்கள். அந்த அமைதியைத் தான் தியானம் நமக்குக் கொண்டு வருகிறது.

“மக்களை எது ஊக்குவிக்கும், அவர்கள் எப்படி நேரம் ஒதுக்க முடியும் என்பதைப் பொறுத்தவரை, அவர்களுக்கு தூங்க, சாப்பிட, மற்றும் இம்மாதிரி வெவ்வேறு செயல்பாடுகளுக்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறது, என்று நீங்கள் அவர்களிடம் கேட்கலாம். இதற்குக் காரணம் அதை அவர்கள் ஒரு தேவையாக கருதுகிறார்கள். சமூகம் எவ்வளவுக்கு எவ்வளவு வெறி கொள்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, ஐரோப்பா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில், மற்றும் நிச்சயமாக, இந்தியாவில், அதிக மக்கள் ‘என் மனிதத்தன்மையையும் மனநலத்தையும் பேணவேண்டுமெனில் , நான் அந்த ஆன்ம விழிப்புணர்வைத் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.’ என்பதை உணர்கிறார்கள்.’”

தியானம்: முயற்சி செய்து சீர்தூக்கிப் பாருங்கள்!

கேள்வி: இன்றைய சமுதாயம் இளைஞர்களுக்கு புலன் உணர்வு ஈடுபாடு மட்டுமே வாழ்க்கையை அனுபவிப்பதற்கான ஒரே வழி என்று கற்பிக்கிறது, அதேசமயம் தியானம் மற்றும் யோகமானது, அதற்கு நேர்மாறாக சுய கட்டுப்பாடு மற்றும் அகமுகமாதல் தான் மகிழ்ச்சிக்கான வழி என்று கற்பிக்கிறது- யோகானந்தரின் போதனைகள் இந்த குழப்பத்தைத் தீர்க்குமா?

ஸ்வாமி சிதானந்த கிரி: “பரமஹம்ஸ யோகானந்தர் எப்போதும் ‘முயற்சி செய்து சீர்தூக்கிப் பாருங்கள்!’ என்று கூறுவார், ஒரு ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியின் போக்கில், ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில், ‘புலன்களை திருப்திப்படுத்துவதனால் எனக்கு திருப்தி கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் நான் அந்த புலன்கள் அல்ல என்று நினைக்கிறான்.’ நாம் அனைவரும் அதைக் கடந்து வந்திருக்கிறோம், பால் உணர்வு அல்லது மது அல்லது செல்வத்தை நாடிக் கொண்டிருக்கும் மக்களை விமர்சிப்பதில்லை. ஒருவர் ஆன்மீகப் பாதையில் தன்னை தீவிரமாக அர்ப்பணித்துக் கொண்டார் எனில் அவர் புலனுணர்வுகளை வெகுவாக நுகர்ந்ததன் காரணமாக இறுதியில், வெறுமையில் தள்ளப்பட்டதனால் தான்.

“மறுபுறம், அந்த நிலைக்கு வராத ஒருவரை நம்ப வைப்பது மிகவும் கடினம். ‘அப்படிச் செய்யாதே, அது உனக்குக் கேடு’ என்று யாரிடமும் சொல்லிவிட முடியாது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்கள் தாயார் உங்களிடம் இது போன்ற ஒன்றைச் சொல்லி திரும்பி சென்றவுடனேயே நீங்கள் அதைச் செய்ய விரும்பியதைப் போலத்தான் இதுவும். அது வேலை செய்யாது, இது இப்படி இருக்க வேண்டும்: ‘தியானத்தை முயற்சி செய்து பின்னர் சீர்தூக்கிப் பாருங்கள்.’


ஆன்ம-அனுபூதியின் மிக உயர்ந்த நிலைகள்

கேள்வி: எங்கிருந்து தொடங்குவது?

ஸ்வாமி சிதானந்த கிரி: “பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதம்’, அல்லது ஒளி உள்ள இடத்தினிலே’ போன்ற நூல்களை அவர்களுக்குக் கொடுக்கிறோம். பின்னர் எங்கள் குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் விட்டுச் சென்ற அற்புதமான ஆன்ம -அனுபூதிக்கான யோகதா சத்சங்க பாடங்களின் முன்னுரையைப் படிக்க ஊக்குவிக்கிறோம். அதன் அறிமுகம் ‘ஆன்ம-அனுபூதி மூலம் அதி உன்னத சாதனைகள்’ ஆகும். எனவே தலைப்பில் கூட, ‘உங்கள் வாழ்க்கையில் ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? இதைப் பார்த்து என்ன உணர்கிறீர்கள் என்று கூறுகிறது’. YSS பாடங்கள் தினமும் தியானம் செய்யும் வழக்கத்திற்கான வழிமுறைகளை வழங்குகின்றன மற்றும் சில மாதங்களில் உத்திகள் கற்பிக்கப்படுகின்றன, மேலும் ஒன்பது முதல் பத்து மாதங்களுக்குப் பிறகு, உங்களை ஒரு உண்மையான தியானிப்பாளராக உருவாக்கத் தேவையான சாதனங்களை அளிக்கின்றன.”

பகுதி 2: பொருள் ரீதியான வெற்றி, உணர்ச்சி ரீதியான சமநிலை, மற்றும் ஆன்மீக நலத்திற்காக தியானத்தைப் பயன்படுத்துதல்

கேள்வி: சுவாமிஜி, யோகானந்தர் தனது போதனைகளில், ஒரு மனிதன் அல்லது இளைஞன் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய பாதையை குறிப்பிடுகிறாரா? மனிதர்கள் வெற்றி அடைவதைப் பொறுத்தவரை கற்பித்தல் எதை விளக்குகிறது? யோகானந்தரின் போதனைகள் இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற உதவுமா?

ஸ்வாமி சிதானந்த கிரி: “மனிதர்களாகிய நாம் வெற்றிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளோம். ஆனால், அந்த திறன்களை, அந்த கருவிகளை எவ்வாறு இயக்குவது என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் அவரது (பரமஹம்ஸ யோகானந்தரின்) போதனைகள் வெளிக்கொண்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் அடிப்படை சமநிலை என்ற கருத்துதான், அதாவது நமது இயல்புக்கு ஒரு பொருள் சார்ந்த அம்சம் உள்ளது: நமக்கு ஒரு உடல் உள்ளது, அதற்கு உணவளிக்க வேண்டும், அது நலம் குன்றும் போது கவனித்துக் கொள்ள வேண்டும், குணப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… மற்றும் இந்த பிரச்சினைகள் அனைத்தும் வாழ்க்கையின் பொருள் சார் பக்கத்துடன் தொடர்புடையவை. ஆனால், மனித குலத்தின் பெரும்பகுதி அங்கேயே நின்றுவிடும்.

“அதைவிட முக்கியமானது, நமக்கு உளவியல் ரீதியான, உணர்ச்சி ரீதியான, அதைவிட உயர்ந்ததான ஆன்மீகப் பரிமாணம் இருக்கிறது. எனவே, வெற்றிக்கான அவரது (யோகானந்தரின்) பாதை சரியான சமநிலையைக் கண்டறிவதாகும், அங்கு நீங்கள் பொருள்சார் வெற்றியையும் வளத்தையும் காணலாம், உணர்ச்சி ரீதியான சமநிலை மற்றும் உள் அமைதியைக் கொண்டிருப்பீர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்மீக ரீதியாக வாழ்க்கையை உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்ப வழிநடத்த ஞானம் உங்களிடம் இருக்கும் – பணம் சம்பாதிப்பது, குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், நான் தெய்வீக இருப்பின் ஒரு தீப்பொறி என்பதை உணரும் உயர்ந்த நோக்கம். நான் இந்த பௌதிக உடலில் வாழும் ஆன்மா, மற்றும் எனது இறுதி நோக்கம் எனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையான உணர்தல் மற்றும் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பது.”

சுவாமிஜி மேலும் கூறியதாவது: “இப்போது, நீங்கள் அந்த கோட்பாட்டுடன் இருக்கும் போது, வாழ்க்கை மிகவும் உற்சாகமாக மாறும், ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கான கொடையின் ஒரு பகுதியாக இருக்கும் திறமை மற்றும் இயற்கைத் திறன்கள் மற்றும் வல்லமையின் முழு தொகுப்பையும் நீங்கள் அணுகுகிறீர்கள், ஆனால் அவை உணர்வுபூர்வ கவனம் மற்றும் முயற்சியால் எழுப்பப்படும் வரை முற்றிலும் செயலற்றவையாக இருக்கும். இதைத்தான் யோகானந்தர் நமக்குக் கற்பிக்கிறார். தியானத்தின் மூலம், மன உறுதி மற்றும் ஒருமுகப்படுத்தலை வளர்ப்பதன் மூலம், ஒரு முழுமையான மனிதனை உருவாக்கும் இந்த குணங்கள் அனைத்தையும் வளர்ப்பதன் மூலம், நீங்கள் மிக உயர்ந்த பொருள் வெற்றி, உளவியல் மற்றும் உணர்வு ரீதியான ஆரோக்கியம், சமநிலை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீக ரீதியான ஆரோக்கியத்தைக் காணலாம் என்று அவர் கூறுகிறார்.

“அவர் 1920 களில் அமெரிக்காவிற்கு வந்தபோது, அமெரிக்க வரலாற்றில் இந்த கட்டம் “குரல் கொடுக்கும் இருபதுகள்’’ என்று அழைக்கப்பட்டது, அமெரிக்கா முற்றிலும் உற்சாகமாக இருந்தது, மேலும் அதன் முதலாளித்துவ தத்துவத்துடன் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பல வெற்றிகரமான தொழில் அதிபர்கள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை சந்தித்தார்,. தங்களது வாழ்க்கையில் இல்லாத ஒன்றை யோகானந்தர் தந்துள்ளார் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

“நான் உங்களுக்கு வேடிக்கையான ஒரு சிறுகதை சொல்கிறேன்: அவர் நியூயார்க் நகரில் ஒரு சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தபோது, ஒருவர் அவருடன் நேர்காணல் வேண்டினார். அவர் இவரது ஹோட்டல் அறைக்கு வந்தார், யோகானந்தர் எதுவும் பேசுவதற்கு முன், அவர் சவாலான முறையில், “நான் மிகவும் பணக்காரன், நான் மிகவும் ஆரோக்கியமானவன்” என்று கூறினார். அதாவது, ‘நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள்?’ என்று அர்த்தத்தில். உடனே யோகானந்தர், “ஆமாம், ஆனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

பின்னர் அந்த மனிதர், ‘அவர் என்னைக் வெளிக்கொணர்ந்தார்!’ என்று கூறினார். மேலும் அவர் தனது மீதமுள்ள வாழ்நாளை ஒரு கிரியா யோகியாக கழித்தார். வெளிப்புறமாக, ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், ஆனால் அகத்துள் ஞான ஒளி பெற்ற யோகியாக இருந்தார்.”

பகுதி 1: வரும் தலைமுறை மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்ததாக இருக்கும்

கேள்வி: சுவாமிஜி, உங்கள் கருத்துப்படி, பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் இன்றைய இளைஞர்களிடையே எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

ஸ்வாமி சிதானந்த கிரி: “மனிதர்கள் அடிப்படையில் ஆன்மாக்கள் என்று புரியும்போது, நீங்கள் ஒரு பிறவியைப் வைத்து மட்டுமே பார்க்க முடியாது. ‘இளைஞர்கள்’ என்று நாம் அழைப்பவர்கள் பழைய ஆன்மாக்கள். மகிழ்ச்சிக்கான உந்துதல், பாதுகாப்பு, அன்பு மற்றும் பல உள்ளார்ந்த உந்துதல்களை நிறைவேற்ற ஒவ்வொரு வகையான போராட்டத்தையும், அபிலாஷையையும் கடந்து வந்துள்ளனர் – அவர்கள் அந்த [நிறைவை] கண்டறிய பல பிறவிகளை கழித்துள்ளனர். இறுதியில் அவர்கள் வந்துள்ளனர். பிறவி எடுத்தவர்களில், லட்சக் கணக்கானவர்கள் கடந்த பிறவிகளிலிருந்து பரிணாம வளர்ச்சியின் அந்த கட்டத்தில் இருக்கின்றனர்.

“பகவத் கீதையில் கிருஷ்ணர் அதைப் பற்றிப் பேசுகிறார். அர்ஜுனனிடம், ‘இறுதி இலக்கை அடையாமல் இந்த பிறவி முடிந்தால் கவலைப்படாதீர்கள், ஏனெனில் யோக தியானத்தில் எந்த முயற்சியும் வீணாகாது’ என்று கூறுகிறார். அந்த பக்தன் மீண்டும் அந்த நிலையிலிருந்து தொடரும் சூழலில் மறுபிறவி எடுக்கிறான். எனவே, நீங்கள் ‘இளைஞர்கள்’ என்று அழைப்பவர்கள் ஞானிகள், அநேகமாக எல்லாவற்றையும் கடந்து வந்த, ‘அங்கே இருந்தோம், அதைச் செய்தோம்’ போன்ற உணர்வுடன் இருந்தவர்கள். அவர்கள் திரும்பி வந்து, “நான் இனி நேரத்தை, பிறப்புகளை வீணாக்க மாட்டேன், என் ஆன்மாவின் ஆற்றலையும் என் ஆன்மாவில் இருக்கும் அந்த தெய்வீக தொடர்புக்கான ஏக்கங்களையும் உண்மையிலேயே பூர்த்தி செய்யும் ஒன்றை நான் தேடுவேன்” என்று கூறுகிறார்கள்.

“எல்லா உயிர்களும் மேல்நோக்கி பரிணாம வளர்ச்சி அடைவதைப் போலவே, மனிதர்களும் அடிப்படை மனித திறன்களிலிருந்து பரிணாம வளர்ச்சியின் உயர் நிலைகளுக்கு உயர்கிறார்கள், தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் மேலும் மேலும் திறன்களை வெளிப்படுத்துகிறார்கள். சாஸ்திரங்களில் யுகங்கள் எனப்படும் பரிணாம வளர்ச்சி மற்றும் கீழிறங்கும் சுழற்சிகளை ஒட்டுமொத்த மனிதகுலமும் கடக்கிறது. அவை ஏறி இறங்குகின்றன; இப்போது, நாம் உயரும் யுகத்தில் இருக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இப்போது பிறவி எடுக்கும் ஆன்மாக்கள் தங்கள் பெற்றோர்களின் பெற்றோர்கள் மேலும் அவர்களின் பெற்றோர்களை விட உயர்ந்த பரிணாம நிலைக்கு வருகின்றனர். இன்றைய குழந்தைகளைப் பாருங்கள்; இந்த இயல்பான உணர்வு இருக்கிறது… ‘இல்லை, தோலின் நிறத்திற்காக மட்டும் நான் ஒருவரை வெறுக்கப் போவதில்லை’, மேலும் உலகின் அனைத்து நாடுகளிலும் கடந்த தலைமுறைகளில் வேரூன்றியிருந்த பிற மனித அறியாமையை அவர்கள் இயல்பாக நிராகரிப்பார்கள்.

“அவர்கள் கொஞ்சம் முன்கூட்டியே தயார் நிலையில் வருவதைப் போல உள்ளது, மேலும் [பரமஹம்ஸ யோகானந்தர் வழங்கிய] இந்த தியானக் கருத்திற்கு ஆட்படும்போது, அது அவர்களுக்கு முழுமையான அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் பரிணாம ஏணியின் அந்த ஏற்கும் படிநிலையில் உள்ளனர். இந்த பாதை, உலகளாவிய ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, இது “என் மதம் உங்கள் மதத்திற்கு எதிராக” என்ற கருத்தோடு எந்த தொடர்பும் இல்லாதது, அதே சமயம் மனித குடும்பத்தை பிளவுபடுத்துவதை விட ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய பாதையாகும். நீங்கள் என் வயதில் இதை அதிகமாகப் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் திரும்பிப் பார்த்து,, ‘ஓ, அந்த தலைமுறைகளில் மக்கள் எப்படி இப்படி இருந்திருக்க முடியும்?’ என்று கேட்பீர்கள்.”

தூர்தர்ஷன் இந்தியா உடனான நேர்காணல்

டிடி நியூஸ் நடத்தும் ஸ்வாமிஜியின் நேர்காணலைப் பார்க்க உங்களை அழைக்கிறோம், அதில் உலகம் சந்திக்கும் எத்தகைய சிரமங்களையும் சமநிலையுடன் எதிர்கொள்வதற்கும், நமது சொந்த உள்ளார்ந்த தெய்வீக குணங்களைக் கண்டறிவதற்கும் தியானம் மற்றும் உலகளாவிய ஆன்மீகம் எவ்வளவு இன்றியமையாதது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

Play Video

ராஞ்சி, நொய்டா மற்றும் தக்ஷினேஸ்வரில் உள்ள YSS ஆசிரமங்களுக்கு ஸ்வாமி சிதானந்தாஜி விஜயம் செய்தபோது வந்த சில ஊடகச் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். கூடுதலாக, YSS சங்கம் 2023 க்கான சுவாமிஜியின் ஹைதராபாத் வருகையும் பத்திரிகைகளால் விரிவாகக் குறிப்பிடப்பட்டது.

ராஞ்சி

இந்துஸ்தான் டைம்ஸ் இந்தி, ராஞ்சி, ஜார்க்கண்ட்
த பைனியர், ராஞ்சி, ஜார்க்கண்ட்

ஹைதராபாத்

தக்ஷிணேஷ்வர்

த டெலிக்ராஃப்
ஆஜ் கல் பெங்காலி

சுவாமிஜி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் புகைப்படங்களைக் காண கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

இதைப் பகிர