2025 ஆம் ஆண்டு, பரமஹம்ஸ யோகானந்தர் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேச தலைமையகத்தை நிறுவியதன் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அவர் அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து, கற்பித்து, இறைவனுடன் தொடர்பு கொண்டிருந்தார், அதை அவர் 1925 அக்டோபரில் அர்ப்பணித்தார்.
லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் சிகரத்தின் மேல் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேச தலைமையகம், ஒரு பெரிய அமைப்பின் நிர்வாக மையத்தை விட எப்போதும் மேலானதாகவே இருந்து வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பரமஹம்ஸ யோகானந்தரால் இது ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்தே, மதர் சென்டர் (பரமஹம்ஸர் அன்புடன் அழைத்தபடி) ஒரு ஆசிரமமாக, ஒரு “வாழ்க்கைப் பாடசாலையாக,” உலகம் முழுவதிலுமிருந்து எண்ணற்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு புனித யாத்திரை ஸ்தலமாக — மேலும் சத்தியத்தை நாடுபவர்கள் மற்றும் ஞானம் பெற்ற குருவின் அர்ப்பணிப்புள்ள சீடர்களைக் கொண்ட ஒரு பன்முக ஆன்மீகக் குடும்பத்திற்கும் மற்றும் அவரது கிரியா யோகா போதனைகளுக்கும் தாயகமாக இருந்து வருகிறது.
1925 இல் மவுண்ட் வாஷிங்டன் மையத்தின் அர்ப்பணிப்பின் போது, பரமஹம்ஸரின் எழுச்சியூட்டும் கருத்துகள் மற்றும் இறைவனின் அருளாசிகளுக்கான அவரது பிரார்த்தனை ஆகியவற்றின் சில பகுதிகள் பின்வருமாறு. இந்த வார்த்தைகள் முதன்முதலில், “உடல், மனம் மற்றும் ஆன்மாவின் குணப்படுத்துதலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட” YSS இதழாகிய யோகதா சத்சங்கா வின் 2024 ஆம் ஆண்டு பதிப்பில் வெளியான “மவுண்ட் வாஷிங்டனில் குரு மற்றும் அவரது சீடர்களுடன்” என்ற கட்டுரையில் வெளியிடப்பட்டன.

மதர் சென்டர் அர்ப்பணிப்பின் போது பரமஹம்ஸர் ஆற்றும் உரை:
மெய்ப்பொருள் ஆட்சி புரியப் போகும் நம் இல்லத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இங்கு நீங்கள் கோட்பாடுகளுக்கு அஞ்சத் தேவையில்லை. இங்கு எந்த பிடிவாதக் கோட்பாடும் ஆட்சி செய்யாது. உண்மை அனைத்து இருண்ட மற்றும் பிரிவினைவாத மதக் கோட்பாடுகளையும் அகற்றும். சத்தியத்தின் ஒளியில், சகிப்புத்தன்மையின் ஒளியில், பரஸ்பர புரிதலின் ஒளியில், உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
இந்த நிறுவனத்தை உருவாக்க எனக்கு உதவிய அனைவரையும் நான் குறிப்பாக வரவேற்கிறேன், மேலும் எங்களுடன் செயலிலும், நல்லெண்ணத்திலும், சிந்தனையிலும் கூட ஒத்துழைத்த உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது பங்கை நான் செய்கிறேன்; உங்கள் பங்கைச் செய்வது உங்கள் பொறுப்பாகும்.
உலகிற்கு ஞான ஒளியூட்டும் — பூமியில் உள்ள அனைத்து தேசங்களிலிருந்தும் இருளை அகற்றி, நீக்கி — அத்தகைய பகுத்தறிவு கல்வியின் சாரத்தை இங்கு வளர்ப்பதில் ஒத்துழைப்போம். அந்த உணர்வில் நாம் ஒன்றுபடுவோம், கைகோர்ப்போம், ஒத்துழைப்போம் — பொருள் ரீதியாக மட்டுமல்ல, ஆன்மாக்களின் சங்கமாக; மற்றும் அந்த அடித்தளத்தின் மீது ஒரு உண்மையான லீக் ஆஃப் நேஷன்ஸ் கட்டமைக்கப்படும்.
நான் இப்போது ஒரு பிரார்த்தனை செய்வேன் — ஒரு வழக்கப்படியான பிரார்த்தனை அல்ல, மாறாக என் ஆன்மாவிலிருந்து வெளிப்படுவது. தயவுசெய்து நேராக அமர்ந்து, உங்கள் உடலையும் மனதையும் தளர்த்திக் கொள்ளுங்கள், ஒன்றுபட்ட இதயங்களுடனும் ஆன்மாக்களுடனும் பிரார்த்திப்போம். நான் பிரார்த்திக்கும் போது, மிகுந்த பக்தியுடன் என்னுடன் மனரீதியாக இணையுங்கள்.
“ஓ பரம்பொருளே! மகிமைமிகு பிரகாசிக்கும் ஒளியே நீ வருவாயாக, இங்கு வியாபித்திரு! உமது சத்திய ஒளியால் எங்களை நிரப்புவாயாக; உமது சாசுவத ஒளியால் எங்கள் அகத்தின் அனைத்து இருளையும் அகற்றுவாயாக!
“ஓ கட்புலனாகாத ஒளியே, அகத்துள் ஆழ்ந்து செல்பவர்களுக்குப் புலப்படுவாயாக! இந்த புனித தருணத்தில் எமக்குத் துணை வருவாயாக! எம் அகத்துள் உனது நிரந்தர ஒளியைப் பிரகாசிக்கச் செய்வாயாக. உண்மையாகிய தீபச்சுடரை உயர்த்திப் பிடிக்க எங்களுக்குக் கற்பிப்பாயாக, அது அனைத்து இருளையும் மறையச் செய்யும்! உனது ஒளி இருக்கும் இடத்தில், இருள் நிலைத்திருக்க முடியாது.
“வா, பரம்பொருளே, வா! உமது சத்திய ஜோதியால் ஒவ்வொரு ஆன்மாவையும் கொழுந்துவிட்டெரியச்செய், அதனால் அனைவரும் கிறிஸ்து உணர்வால் அகத் தூண்டுதல் பெறுவர் — கிறிஸ்து இறைவனின் குழந்தை என்பது போல், நாங்கள் ஒவ்வொருவரும் இறைவனின் குழந்தை என்பதை உணர முடியும்! இயேசு, கிருஷ்ணர், புத்தர் போல், உமது உண்மையான குழந்தைகளாக எங்கள் வாழ்க்கையையும் மறுவடிவமைக்க எங்களுக்குக் கற்றுக் கொடு! அவர்கள் உமது உலகளாவிய ஒரே சத்தியத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
“வாராய், பரம்பொருளே, வாராய்! எங்கள் ஒவ்வொரு உயிரணுவின் பீடத்திலும் இறங்கி அருள்வாய். எங்கள் இரத்தம் உமது வல்லமையால் நிறைவுறட்டும்! உமது ஜீவ இருப்பை நாங்கள் உணர்வோமாக!
“அமரத்துவ ஆற்றலால் எங்களை ஆட்கொள்வாயாக, ஓ பரம்பொருளே! சேவை உணர்வால் எங்களை ஆட்கொள்வாயாக! சகிப்புத்தன்மை மற்றும் அனைவருக்குமான அன்பினால் எங்களை ஆட்கொள்வாயாக! மேலும் எங்களுக்கு எதிராக சிந்திக்கும் அனைவரிடமும், உனது சர்வ-சக்தி வாய்ந்த அன்பால் தீய எண்ணத்தை அழித்தொழிக்க எங்களுக்குக் கற்றுக் கொடுப்பாயாக! நாங்கள் இருளில் ஒருமுகப்படாமல், உனது ஒளியிலும், ஓ பரம்பொருளே, உனது எங்கும் நிறைந்த அன்பிலும் ஒருமுகப்படுவோமாக! இருளில் கவனம் செலுத்தாமல், உமது ஒளியில் கவனம் செலுத்துவோமாக, ஓ பரம்பொருளே, உமது எங்கும் நிறைந்த அன்பில் கவனம் செலுத்துவோமாக!
“உன் அன்பு என்னுள் ஆட்சி செய்கிறது. என் ஆன்மா உனது அன்பினால் அதிர்வுறுகிறது! என் ஆன்மா உனது அன்பினால் நிறைவுற்றுள்ளது! என் ஆன்மா உனது அமரத்துவ இருப்பிலிருந்து, நிரந்தரமான பேரானந்த நீரூற்றிலிருந்து மலர்கிறது!
“உமது ஒளியை எங்களுக்குத் தந்தருளும்; என்றும் புதிய உற்சாகத்தை எங்களுக்குத் தாரும். ஒவ்வொரு நாளும் உமது உணர்வுநிலையில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கட்டும்! ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் மேன்மையான வழிகளில் உமது இருப்பை உணர எங்களுக்கு கற்றுக்கொடுப்பீராக — என்றும் புதிய பேரானந்தத்தை! உம்முடைய ஜீவ நீரூற்றை எங்களுக்குள் வெளிப்படுத்துவாயாக; அதில் இருந்து அருந்துபவர் எவராயினும் அவர் வாழ்வின் வறட்சியை உணருவார்!
“எங்களை ஆசீர்வதியும், ஓ பரம்பொருளே! லாஸ் ஏஞ்ஜலீஸை ஆசீர்வதியும்! என் அமெரிக்காவை, என் இந்தியாவை, என் உலகத்தை ஆசீர்வதியும்!
“எங்களை ஆசீர்வதியும்! எங்களை ஆசீர்வதியும்! எங்களை ஆசீர்வதியும்!”
[நிகழ்ச்சியின் பின்னர், மவுண்ட் வாஷிங்டன் மையத்திற்கான தனது தொலைநோக்கு பார்வையைப் பற்றி பரமஹம்ஸர் இவ்வாறு கூறினார்:]
அதன் நோக்கம் சரியான கல்வி, ஆன்மீகக் கல்வி. சரியான கல்வி அறிவுத்திறனை வளர்ப்பது மட்டுமல்லாமல், உடலில் வலிமையை வளர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆன்மாவை உண்மையின் சுகந்தத்தால் நிரப்புகிறது. இது உங்கள் ஆன்மாவை ஞானமயமாக்கும். இந்த மையம் உங்களுக்கு விஞ்ஞான முறைகளில் கல்வி புகட்டும், அதன் மூலம் உடல் பூரண நலத்துடன் இருக்கும், மனம் மிகவும் திறமையானதாக மாறும், எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களை, உங்கள் ஆன்மாவை — தற்போதைய நாகரீகத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கான கொள்கைகள் உங்களுக்குக் கற்பிக்கப்படும்.

இந்த நிறுவனம் நீங்கள் உள்முகப்பட்டு, இறைவனை வெளிக்கொணர உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். இறைவனைக் கண்டறிய வனத்திற்கோ மலைகளுக்கோ ஓடிவிட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் சொல்வது என்னவென்றால், நாடுபவர்கள் நகரங்களை விட்டு வெளியேறி காட்டிற்குச் சென்றால், நாம் காட்டில் நகரங்களைக் உருவாக்க வேண்டியிருக்கும்! இங்கு கற்பிக்கப்படவிருக்கும் ஆன்மீகக் கல்வி, நான் செய்வது போல், இறைவனிடம் கூற உங்களுக்கு உதவும்:
“நான் நினைத்தேன், உனது இருப்பு சிற்றாற்றின் அருகிலோ,
அல்லது வெகு தொலைவில் பள்ளத்தாக்கிலோ மலைச்சரிவிலோ இருப்பதாக;
ஆனால் இப்போது நான் உன்னை ஒவ்வொரு தென்றலிலும் காண்கிறேன்,
மற்றும் அமைதியான நிலவொளியில் உனது இருப்பை உணர்கிறேன்.
“எங்கும் நீயே உள்ளாய்!
மேலும் நான் அதிகம் உன்னை எனக்குள்ளேயே காண்கிறேன்.
நீ வெகு தொலைவில் இருப்பதாக நான் முன்பு நினைத்தேன்,
ஆனால் யோகதாவின்* உதயத்துடன் ஒவ்வொரு நாளும் உன்னை உணர்கிறேன்,
உன் சக்தி என் உணர்வுகள் ஊடாய்ப் பாய்கிறது, நீ என் சிந்தனையில் இருக்கிறாய், நீ என்னில் இருக்கிறாய்.
மற்றும் அங்கே, அகத்தினுள், நான் உன்னைத் தேடுவேன், உணர்வேன், உன்னுடன் தொடர்பு கொள்வேன்!”
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிறுவனம் மிக உயர்ந்த ஆன்மீகத் தரங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கான வழிகளை உங்களுக்கு எடுத்துக்காட்டும். அனைவரும் “எப்படி-வாழ-வேண்டும்” கொள்கைகளைப் புரிந்துகொள்ளக் கற்பிக்கப்பட வேண்டும், அதன் மூலம் அவர்கள் தானாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆன்மீகமே மகிழ்ச்சி; ஆன்மீகமற்றவர்கள் ஒருபோதும் நிரந்தர மகிழ்ச்சி அடைவதில்லை. அதனால்தான் இந்த நிறுவனம் இந்த சிந்தனையை அதிர்வுறச் செய்யும். என் தேகம் மறைந்தாலும், எனது இந்த விருப்பம் இங்கு எப்போதும் அதிர்வுறும — ஒரு கண்ணுக்குப் புலப்படாத அதிர்வு இடைவிடாமல் ஒலிபரப்பும்: “வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள், அனைவரும்! துயரப்படுபவர்களே, நோயுற்றவர்களே, இருளில் தொலைந்தவர்களே, உடல், மன மற்றும் ஆன்மீகப் பிணிகளிலிருந்து குணமடையுங்கள்!”
* அமெரிக்காவில் தனது பணியின் ஆரம்ப காலங்களில், பரமஹம்ஸ யோகானந்தர் தனது உடல், மன மற்றும் ஆன்மீக வளர்ச்சி குறித்த தனது போதனைகளுக்கான ஒரு பொதுவான சொல்லாக “யோகதா” என்ற சொல்லைப் பயன்படுத்தினார்; மேலும் அவரது அமைப்பு யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்பட்டது. 1930 களின் முற்பகுதியில் அவர் அமைப்பின பெயரை ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் என்று மொழிபெயர்த்தார். (இந்தியாவில் அவரது பணிக்கு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா என்ற முந்தைய பெயரே இன்றும் பயன்படுத்தப்படுகிறது.) அப்போதிருந்து, அவர் முன்னர் “யோகதா போதனைகள்” (அல்லது வெறும் “யோகதா”) என்று அழைக்கப்பட்டவற்றை “SRF போதனைகள்” அல்லது “ஸெல்ஃப்-ரியலைசேஷன்-போதனைகள்” என்று குறிப்பிட்டார்.
யோகதா சத்சங்க இதழின் 2025 ஆம் ஆண்டு வெளியீட்டில், ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மதர் சென்டர் நிறுவப்பட்டதன் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் கட்டுரைகளின் ஒரு பிரிவு இடம்பெற்றுள்ளது.