ஸ்ரீ தயா மாதாவின் “எ பிளேஸ் ஆஃப் டிவைன் கம்யூனியன்”

3 அக்டோபர், 2025

ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF மதர் சென்டர்) சர்வதேச தலைமையகம் 1925 ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தரால் கையகப்படுத்தப்பட்டு, அதே ஆண்டில் அக்டோபர் 25 அன்று அவரால் அதிகாரபூர்வமாக அர்ப்பணிக்கப்பட்டது. மதர் சென்டரின் 100வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் உலகம் முழுவதும் பரவிய இந்த மையத்தின் ஆரம்பகால வரலாற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு மதர் சென்டர் தேவாலயத்தில் ஸ்ரீ தயா மாதா நினைவுகூரி ஆற்றிய உரையின் பகுதிகள் பின்வருமாறு, இந்த பகுதிகள் யோகதா சத்சங்க இதழின் 2025 ஆம் ஆண்டு பதிப்பில் வெளியிடப்பட்டன.

இந்தப் பதிவில், தயா மாதா சில சமயங்களில் YSS/SRF இன் குருவும் நிறுவனருமான பரமஹம்ஸ யோகானந்தரை, ஒருவரின் குரு மற்றும் தன் சுயத்தை வென்றவரை ஒரு பக்தியுடன் கூடிய பதமான “மாஸ்டர்” என்றோ, அல்லது “குருஜி” என்றோ குறிப்பிடுகிறார்.

லோடஸ்-ஆரஞ்சு-லைன்ஆர்ட்

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய பணியின் வரலாறானது — மற்றும் மவுண்ட் வாஷிங்டனில் நம் தலைமையகத்தை அவர் நிறுவியது — அன்பு நிறைந்த தியாகம் மற்றும் இறைவனிடம் அசைக்க முடியாத திடநம்பிக்கை ஆகியவற்றின் கதையாகும்.

அவருடைய ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் நீங்கள் படித்தது போல, 1920 இல் தான் அமெரிக்காவிற்கு வர வேண்டும் என்று சமாதியில் அவருக்கு இறைவன் உணர்த்திய அன்றே, அவர் ராஞ்சியில் உள்ள தனது அன்புக்குரிய பள்ளி மற்றும் ஆசிரமத்தை விட்டு புறப்பட்டார் — எந்த முன்னேற்பாடும் இல்லாமல், இறைவன் கேட்டதை சாதிப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லாமல்; அவர் அங்கிருந்து வெளியேறினார். அதுவே அவருடைய வழி: இறைவனிடம் முழுமையாக சரணடைதல். குருஜி முதன்முதலில் வந்தபோது இந்த நாட்டில் யாரையும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவரிடம் தெய்வீக உற்சாகமும், இறைவனிடம் முழுமையான, தூய்மையான குழந்தை போன்ற திடநம்பிக்கையும் இருந்தது — மேலும் அவர் எங்கு சென்றாலும் ஆன்மாக்களைத் தன்பால் ஈர்த்த ஒரு அபாரமான ஆன்மீக ஈர்ப்புசக்தியும் இருந்தது.

இறைத் தூதர்களின் நகரத்திற்கு வருகை

1924-ல், பாஸ்டன் மற்றும் பிற கிழக்குக் கடற்கரை நகரங்களில் பல ஆண்டுகள் வெற்றிகரமாகக் கற்பித்த பிறகு, அவர் பல கண்டம் கடந்த விரிவுரைப் பயணங்களில் முதலாவதைத் தொடங்கினார். லாஸ் ஏஞ்ஜலீஸ் இந்தப் பயணத்தின் இறுதி இடமாக இருந்தது; அவர் இங்கு 1925 ஜனவரியில் வந்து சேர்ந்தார்.

அந்த சொற்பொழிவுத் தொடரின் முடிவில், குருஜி தனக்கு உதவி செய்து கொண்டிருந்த சில சீடர்களிடம் கூறினார்: “இறைத் தூதர்களின் நகரமான லாஸ் ஏஞ்ஜலீஸில், நாம் ஒரு மையத்தை நிறுவ ஓர் இடத்தைத் தேடுவோம். இங்கே ஓர் அற்புதமான ஆன்மீக அதிர்வை நான் உணர்கிறேன்.” லாஸ் ஏஞ்ஜலீஸ் அதன் ஆன்மீகத் திறனில் அமெரிக்காவின் பனாரஸ் என்று அவர் பல ஆண்டுகளாக அடிக்கடி கூறுவார் — இந்தியாவின் அந்தப் புனித நகரத்துடன் ஒப்பிடப்படுவது இந்த நகரத்திற்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு ஆகும்.

ஒரு மையத்திற்கு பொருத்தமான இடத்தைக் கண்டறிய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு நாள் குருஜியும் அவருடைய சில மாணவர்களும் மவுண்ட் வாஷிங்டன் உச்சிக்கு இட்டுச் சென்ற வளைந்து செல்லும் சாலையில், விற்பனைக்கு இருந்த ஒரு சொத்தைப் பார்க்க காரில் சென்றனர். அது சான் ரஃபேல் அவென்யூவில் இருந்த ஒரு சிறிய மரச்சட்டக் கட்டடம் (பின்னர் உள்ளூர் நூலகத்தின் ஒரு கிளையாகப் பயன்படுத்தப்பட்டது). மாஸ்டர் அந்த சிறிய வீட்டை அக்கறையற்ற ஒரு பார்வையாகப் பார்த்து, ஒரு சாத்தியக்கூறாக அதை உடனடியாக நிராகரித்தார். அவருடைய தோழர்கள் அது சிறந்ததாக இருக்கும் என்று வாதிட்டனர், ஆனால் குருஜிக்கு அவர்களின் கண்ணோட்டம் மிகவும் குறுகியதாக இருந்தது. அவர் தனது சிந்தனையில் பரந்த மற்றும் தொலைநோக்கு கொண்டவராக இருந்தார்; மேலும், இறைவன் இந்தப் பணிக்கு இன்னும் சிறந்த ஒன்றைத் திட்டமிட்டிருக்கிறான் என்பதையும் அவர் அறிந்திருந்தார்!

“இந்த இடம் நமக்கானது போல உணர்கிறேன்!”

அவர்கள் கிளம்பும்போது, மேலே வரும் வழியில் குருதேவரின் கவனத்தை ஈர்த்த இந்த இடங்களைக் கடந்து சென்றனர். இடத்தைப் பார்க்க காரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் – ஒரு காலத்தில் நாகரீகமான மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலாக இருந்த ஒரு பெரிய பழைய கட்டடம். (அது லாஸ் ஏஞ்ஜலீஸின் முந்தைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்தது, பரபரப்பான நகரத்தின் ஓயாத சலசலப்பில் இருந்து விலகி இருக்க மக்கள் வந்து தங்கும் ஒரு ரிசார்ட். அப்போது மவுண்ட் வாஷிங்டன் கிட்டத்தட்ட ஒரு வனப்பகுதியாக இருந்தது. இப்போது பாலைவனத்திற்கோ அல்லது வேறு சில எழில் சூழ்ந்த இடத்திற்கோ செல்வது போல, மக்கள் விடுமுறைக்கு இங்கு வந்தனர். அக்காலத்தில் இருந்த சில தலைசிறந்த டென்னிஸ் வீரர்கள், முக்கிய சாலையின் கீழே இருந்த டென்னிஸ் மைதானத்தில் கண்காட்சி டென்னிஸ் போட்டிகள் நடத்தி வந்தனர்.)

மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலின் அஞ்சல் அட்டைப் படம், 1909 ஆம் ஆண்டு காலகட்டம்

“உள்ளே செல்வோம்,” குருஜி கூறினார். அவருடன் இருந்த ஒரு பக்தர், மிகவும் நடைமுறை சிந்தனை கொண்ட சீடர், “ஓ, மாஸ்டர், அந்த அளவு பெரிய கட்டடம் உங்களுக்குத் தேவையில்லை!” என்றார்.

அவர் கவனம் செலுத்தவில்லை. டென்னிஸ் மைதானத்திற்கு மேல் நின்று, கட்டடத்தின் மீது தன் பார்வையை செலுத்தி, “இந்த இடம் நம்முடையது போல உணர்கிறேன்!” என்றார்.

அந்த பக்தர் தடுக்கும் வாதங்களை முன்வைத்தார் — அத்தகைய ஒரு பெரிய மையத்திற்கான பராமரிப்புச் செலவுகள்; பல மக்கள் ஒன்றாக வாழ்வதால், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி செயல்பட விரும்பக்கூடும் என்பதால் வரும் பிரச்சனைகள். ஆனால் மாஸ்டரின் சிந்தனைகளை ஆட்கொண்டது பிரச்சனைகள் அல்ல, மாறாக உள்ளுறை ஆற்றலே ஆகும். அது அவரது மனதில் உறுதியையும் தைரியத்தையும் நிரப்பியது. மேலும், இறைவனின் கட்டளையைப் பின்பற்றி இந்தப் பணியை மேற்கொள்ள தைரியம் தேவைப்பட்டது.

சற்றும் தயங்காமல், அவர் அந்த விசாலமான எஸ்டேட்டை வாங்கத் தேர்ந்தெடுத்தார். அவரது தாராள மனப்பான்மை கொண்ட மாணவர்களின உதவியுடனும், குருதேவர் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டு அடமானங்களுடனும், 1925 ஆம் ஆண்டில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் மதர் சென்டர் உருவானது….

பரமஹம்ஸ-யோகானந்தர்-புதிதாக-வாங்கிய-கட்டத்திற்கு-முன்னால்-1925-இல்
அவரது பணிக்காக அந்த நிலப்பகுதியை வாங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு, 1925 ஆம் ஆண்டில், மதர் சென்டர் மைதானத்தில், பரமஹம்ஸர்.

ஆரம்ப காலப் போராட்டங்கள்

இந்த முன்னோடிப் பணியை நிறுவுவதில் குருஜி சந்தித்த போராட்டங்கள் பல. ஒரு சமயம் மவுண்ட் வாஷிங்டன் சொத்தின் அடமான நிலுவைத்தொகை செலுத்தப்பட வேண்டியிருந்ததையும், அதை செலுத்த எங்களிடம் நிதி இல்லை என்பதையும் நான் நினைவு கூர்கிறேன். மில்வாக்கியைச் சேர்ந்த ஒரு பெரிய செல்வந்தர் அப்போது இங்கு தங்கியிருந்தார். அவர் ஒரு லெளகீக மனிதராக இருந்தபோதிலும், யோகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார், மற்றும் போதனை பெறுவதற்காக இங்கு வந்திருந்தார். அடமானம் குறித்த மாஸ்டரின் இந்த சிரமத்தை அவர் அறிந்து, கிழக்கிலிருந்து இந்த தனித்துவமான போதனையை வணிக ரீதியாக லாபகரமாக மாற்ற மாஸ்டர் அனுமதித்தால், அடமானத்தை அடைக்க அவர் பணத்தை வழங்குவதாக ஒரு திட்டத்துடன் அவரை அணுகினார்.

அந்த ஆரம்ப வருடங்களில் எங்களிடம் ஒரு சென்ட் கூட மிச்சமிருக்கவில்லை. எங்கள் இரவு உணவில் லெட்யூஸ் சூப் மட்டுமே இருந்த பல சந்தர்ப்பங்கள் இருந்தன. சாதாரண நிலையில் உள்ள ஒரு குரு, மிகவும் தேவையான நிதியைப் பெறுவதற்கான அந்த சலுகையை ஏற்றுக்கொண்டு, பின்னர் அந்த ஒப்பந்தத்தில் இருந்து ஒருவேளை வெளியேற முயன்றிருப்பார். ஆனால் குருதேவரோ அப்படியில்லை. அந்த மனிதனின் முன்மொழிவு பற்றி அவர் எங்களிடம் பேசிய மாலையை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். “இது தெய்வத் தாயின் சோதனை,” என்று அவர் கூறினார். “இதோ, அடமானச் சுமையிலிருந்தும், இந்தக் கட்டடத்தையும் இங்கு வாழும் அனைத்து மக்களையும் பராமரிக்கும் கவலையிலிருந்தும் என்னை விடுவிக்க முன்வந்திருக்கிறார் ஒருவர்; ஆம் என்று சொல்வது எளிதாக இருக்கும். ஆனால், என் லட்சியங்களை என்னால் சமரசம் செய்துகொள்ள முடியாது. பணத்திற்காக நான் என் லட்சியங்களைத் தாழ்த்துவதை விட, இந்தப் பணி இல்லாமலேயே போவது நல்லது,” என்று கூறினார். மேலும் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

ஜேம்ஸ் ஜே. லின்னை சந்தித்ததிலும், அடமானத்தை செலுத்தியதிலும் ஏற்பட்ட ஆனந்தம்

இந்த அனுபவத்திற்குப் பிறகு உடனடியாக, 1932 பிப்ரவரி மாதம், குருதேவர் கன்சாஸ் நகரில் தொடர் வகுப்புகளை வழங்கினார். கலந்துகொண்டவர்களில் ஒருவர் ஒரு பணக்கார தொழிலதிபரும், உண்மையை ஆழ்ந்து தேடுபவருமான திரு. ஜேம்ஸ் ஜே. லின் ஆவார். குருஜி அவரைக் கண்ட கணமே, இந்த பக்தர் பல பிறவிகளில் தன்னுடன் இருந்தவர் என்பதை உணர்ந்தார். இவர்தான் பிற்காலத்தில் ராஜரிஷி ஜனகானந்தா என்று அறியப்பட்ட அவரது அன்புக்குரிய சீடர்.

பரமஹம்ஸ-யோகானந்தர்-ஜேம்ஸ்-லின்-1933
பரமஹம்ஸ யோகானந்தர், ஜேம்ஸ் ஜே. லின் உடன் மதர் சென்டரில், 1933.

இந்தக் கட்டத்தில், அடமானதாரரால் காலக்கெடு பெருந்தன்மையுடன் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், குருஜிக்கு அடமானக் கடனை அடைப்பதற்கான வழி இன்னும் கிடைத்திருக்கவில்லை, அவருடைய தாராள மனப்பான்மையுடனும் பக்தியுடனும், ராஜரிஷி ஜனகானந்தர் மாஸ்டருக்கு இந்த ஒரு தவணைக்கான நிதியை வழங்கியது மட்டுமல்லாமல், மவுண்ட் வாஷிங்டன் சொத்தின் முழு அடமானத்தையும் செலுத்திவிட்டார். மாஸ்டர் முந்தைய சோதனையை எதிர்த்து நின்றதாலும், வனாந்தரத்தில் கிறிஸ்து தனது சோதனையை எதிர்த்தது போலவே, தனது கொள்கைகளைக் குறைக்காததாலும், தெய்வத் தாய் அவருக்குத் தேவையான அனைத்தையும், இன்னும் சிறந்த வழியில் வழங்கினார்.

அடமானப் பத்திரம் குருதேவரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டபோது நாங்கள் என்ன ஒரு பேரானந்தம் அடைந்தோம்! நாங்கள் டெம்பில் ஆஃப் லீவ்ஸ் அருகே ஒரு ஒரு பெருந்தீ மூட்டி, அந்த ஆவணத்தை தீயில் இட்டோம். மாஸ்டர், மிகுந்த நடைமுறை அறிவு கொண்டவர் என்பதால், சமையலறையிலிருந்து நிறைய உருளைக்கிழங்குகளைக் கொண்டு வந்து, கங்குகளின் அடியில் வைத்தார். அதன் பிறகு நாங்கள் நெருப்பைச் சுற்றி அமர்ந்து சுவையான சுட்ட உருளைக்கிழங்குகளை உண்டோம்.

நாடுபவர்கள் பலருக்கு ஒரு புனிதத் தலம் மற்றும் ஓர் ஆன்மீக இல்லம்

குருஜியின் அன்புக்குரிய மவுண்ட் வாஷிங்டனில் நான் கழித்த ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​என் இதயத்தில் ஏராளமான நினைவுகள் பொங்கி வழிகின்றன. அந்த இடத்தை அவர் நிறுவுவதற்காகத் தன்னையே அர்ப்பணித்தார். உலகம் முழுவதும் உள்ள அவரது எண்ணற்ற சீடர்களின் ஆன்மீக இல்லமான இதை ஒரு புனித ஆலயமாகப் பாதுகாப்பது நமது புனிதமான பாக்கியம்.

இப்பகுதிகள் முழுவதிலும் குருஜி பரவச நிலையில் தியானித்தார், அடிக்கடி தெய்வத் தாயின், அல்லது நமது மகத்தான குருமார்களின், அல்லது பிற மகான்களின் தரிசனம் பெறும் பேறு பெற்றார். மவுண்ட் வாஷிங்டன் தேவாலயத்தில், அசிஸியின் புனித பிரான்சிஸின் தரிசனம் “இறைவா! இறைவா! இறைவா!” எனும் அவரது கவிதைக்கு அகத் தூண்டுதல் அளித்தது.

இங்கேயும் அவர், ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில், கிறிஸ்துவுடன் ஆழ்ந்த மற்றும் நீண்ட இறைத் தொடர்பிற்காக ஒரு முழு நாளை அர்ப்பணிக்கும் யோசனையை அறிமுகப்படுத்தினார் — இது 1931-ல், ஆசிரமத்தில் எனது முதல் கிறிஸ்துமஸ் சமயத்தில் தொடங்கியது. — மேலும், இந்த வழக்கம் மவுண்ட் வாஷிங்டனில் இருந்து உலகம் முழுவதும் பரவும் என்று அவர் முன்னறிவித்தார், அது உண்மையிலேயே பரவியுள்ளது.

மற்ற சமயங்களில், அவர் எங்களை நீண்ட நேரம் பேரின்பம் நிறைந்த பக்திப்பாடல்களுக்கு வழிநடத்தினார், சில சமயங்களில் அவர் இயற்றிய இறைவன் மீதான அன்பின் புதிய சில பாடல்களை முதலில் கேட்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.

உண்மையிலேயே, கிழக்கிலும் மேற்கிலும் நான் தரிசித்த அனைத்து புனித யாத்திரை இடங்களிலும் அவர் இங்கே விட்டுச் சென்ற தெய்வீக அதிர்வுகள் தனித்துவமானவை. நான் இந்த மைதானத்தில் முதன்முதலில் கால் பதித்ததிலிருந்து இத்தனை ஆண்டுகளாக, ஒரு மாபெரும் ஆனந்தப் பரவசத்தை உணராமல் நுழைவாயில் வழியாக வந்ததில்லை.

லோடஸ்-ஆரஞ்சு-லைன்ஆர்ட்

SRF வலைத்தளத்தில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சர்வதேச தலைமையகத்தின் வர்சுவல் உலாவை மேற்கொள்ள உங்களை அழைக்கிறோம். கிரியா யோகப் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக பரமஹம்ஸ யோகானந்தர் SRFஐ நிறுவியதன் நூற்றாண்டை ஒட்டி, 2020 இல் இந்த “வர்சுவல் யாத்திரை” உருவாக்கப்பட்டது.

இதைப் பகிர