YSS பக்தர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற வருடாந்திர கோடைகால சிறுவர் மற்றும் சிறுமியர், இளையோர் முகாம்களில் ஒரு வார கால மகிழ்ச்சியான தோழமைக்காகக் கூடினர். ராஞ்சி, நொய்டா மற்றும் சென்னையில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமங்கள், உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு ஊட்டமளிக்கும் தியானம், வேடிக்கையான செயல்பாடுகள் மற்றும் அகத் தூண்டுதலில் ஒரு வார கால ஆழ்ந்த அனுபவத்திற்காக 7-17 வயதுடைய குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை வரவேற்றன.
குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் போதனைகளின் அடிப்படையில், இந்த முகாம்கள் இளையோர்களுக்கான ஆன்மீகக் கல்வி என்னும் அவரது லட்சியத்தை ஊக்குவிக்கின்றன — தியானம் மற்றும் சரியான செயல்பாடு நிறைந்த சமநிலை வாழ்க்கை வாழ குழந்தைகளுக்கு ஆற்றலூட்டுகின்றன. ஒவ்வொரு ஆசிரமத்திலும் உள்ள முகாம் நிகழ்ச்சி நிரல், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் பல்வேறு வயதுப் பிரிவினரின் தேவைகளுக்கு ஏற்ப கவனமாகத் திட்டமிடப்பட்டது. இதில் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், கூட்டு தியானங்கள், சன்னியாசிகள் வழிநடத்தும் சத்சங்கங்கள், கதை சொல்லுதல், சத்தான உணவுகள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் ஆகியவை அடங்கும்.
ராஞ்சி ஆசிரமம்:
YSS ராஞ்சி ஆசிரமத்தின் புனித வளாகத்தில் நடைபெற்ற ஏழு நாள் இளையோர் முகாமில் 7-12 வயதுக் குழந்தைகளும், 13-17 வயது இளம் பருவத்தினரும் கலந்துகொண்டனர். சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம் உள்ளிட்ட அன்றாட ஆன்மீகப் பயிற்சி, கீர்த்தனங்ள், குழுவாக பாடுதல், மற்றும் கிருஷ்ண கதா (பகவான் கிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளை விவரித்தல்) போன்ற பக்திச் செயல்களுடன் கலந்து வழங்கப்பட்டது. “பாபாஜி குகை” என்று அழைக்கப்படும் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கூடாரத்திலும் தியானங்கள் நடத்தப்பட்டன. இது, இமயமலையில் உள்ள உண்மையான குகையின் அமைதியான அதிர்வுகளுக்கு மனதளவில் ஒருவரை இட்டுச்செல்ல உதவியது.
எப்படி-வாழ-வேண்டும் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் பல்வேறு வகையான படைப்பாற்றல்மிக்க மற்றும் சுய-மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவற்றுள் சமூக நாகரிகம், பூமாலை உருவாக்குதல், தோட்டக்கலை மற்றும் கைவினைக் கலைகள் அடங்கும். சிந்தனைமிக்க மற்றும் பொறுப்புமிக்க நடத்தையை ஊக்குவிக்கும் விதமாக, குழந்தைகளுக்கு தினமும் “சுயமாக-இயங்கும் செயல்பாடு” ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் நாட்குறிப்பு எழுதுதல், அக ஆய்வு செய்தல் மற்றும் ஆசிரமத்தின் வழிநடத்தப்படும் உலாக்களில் ஈடுபடலாம்.
மறக்கமுடியாத அந்த வாரமானது, குழந்தைகளும் இளம் பருவத்தினரும், வாரம் முழுவதும் அன்புடன் வடிவமைத்திருந்த பல்லக்குகளில், குருமார்களின் புகைப்படங்களைப் பக்தியுடன் சுமந்து சென்று, கீர்த்தனங்கள் பாடியவாறே கொண்டாட்ட “பல்லக்கு” ஊர்வலத்துடன் நிறைவடைந்தது. மேலும் அவர்கள் ஆன்மீக வினாடி வினா, புதையல் வேட்டை, குருதேவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய ஒரு சிறப்பு ஆவணப்படத் திரையிடல் மற்றும் கடந்த வார நினைவுகளை அசைபோட வைத்த முகாம் படக்காட்சி ஆகியவற்றிலும் கலந்துகொண்டனர்.
நொய்டா ஆசிரமம்:
YSS நொய்டா ஆசிரமம் மே மற்றும் ஜூன் மாதங்களில், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு 2 வார கால தனித்தனி முகாம்களை நடத்தியது. பங்கேற்பாளர்கள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பயிற்சி பெற்ற குழுத் தலைவர்களின் அன்பான வழிகாட்டுதலின் கீழ் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆசிரமத்தில் நடைபெற்ற காலை ஜப-நடைப் பயிற்சிகள், முகாமின் ஆன்மீக தினசரி நடைமுறையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்ததுடன், அன்றைய தினத்திற்குச் சரியான மனநிலையை ஏற்படுத்தக் குழந்தைகளுக்கு உதவின. குரு கதா மற்றும் தினசரி சுந்தரகாண்ட அமர்வுகளும் குழந்தைகளின் பக்தி வெளிப்பாட்டையும் வெளிக்கொணர்ந்தன. பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் அடிப்படையிலான எப்படி-வாழ-வேண்டும் வகுப்புகளோடு, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் அவசரகால முதலுதவி போன்ற வாழ்க்கை திறன்களை வளர்ப்பதற்கான அமர்வுகளும் முகாமில் இடம்பெற்றிருந்தன. சிறு குழந்தைகள் சன்னியாசிகளுடன் உரையாடி, தங்கள் ஆன்மீக ஆர்வத்தைத் தணித்துக் கொள்ளும் வாய்ப்பையும் பெற்றனர்.
சென்னை ஆசிரமம்:
சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்ட YSS ஆசிரமம், ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே முதல் வாரம் முழுவதும், சிறுவர் மற்றும் சிறுமியருக்காக இரண்டு தனித்தனி கோடைக்கால முகாம்களை நடத்தியது. ஒவ்வொரு முகாமும் சன்னியாசிகளால் நடத்தப்பட்ட, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒரு மனதைத் தொடும் சந்திப்பு மற்றும் வரவேற்பு நிகழ்வுடன் தொடங்கியது. முகாம் அட்டவணை, “இளம் வயதினருக்கான ஆன்ம குணங்கள்” என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கவனமாக வடிவமைக்கப்பட்டது; ஒவ்வொரு நாளும் கருணை, பணிவு, ஆனந்தம், தைரியம், விவேகம் மற்றும் பக்தி போன்ற குறிப்பிட்ட ஆன்மீக குணங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
கைவினைப் பொருட்கள், அனிமேஷன் படங்களின் திரையிடல்கள் மற்றும் விளையாட்டுகள் போன்ற செயல்பாடுகள், அன்றைய நாளின் கருப்பொருளை வளப்படுத்தும் வகையிலும், குழந்தைகளின் ஆன்மீகக் குணங்கள் குறித்த புரிதலை ஆழப்படுத்தவும், அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தன. சமையல் மற்றும் தளர்த்தி இருத்தல் குறித்த சிறப்பு அமர்வுகளும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய முழுமையான கருத்தை குழந்தைகள் வளர்க்க உதவின.
யோகதா சத்சங்க ஆசிரமங்கள் முழுவதும் நடைபெற்ற கோடைக்கால முகாம்கள், கல்வி மற்றும் ஆன்மீக ஏகாந்த வாசங்களாக மட்டுமல்லாமல், பரமஹம்ஸ யோகானந்தரின் உலகளாவிய மற்றும் காலத்தால் அழியாத போதனைகள் மூலம் இளம் உள்ளங்கள் தங்கள் அகத்திறனைக் கண்டறியும் ஒரு நேரமாகவும் அமைந்தன. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் நினைவுகளையும், அகத் தூண்டுதலையும், நடைமுறை விவேகத்தையும் சுமந்து வீடு திரும்பியபோது, பலர் குருஜியுடன் ஆழமான ஒரு பிணைப்பையும், தங்கள் அக வாழ்க்கையை வளர்த்துக் கொள்வதற்கான கருவிகளையும் கொண்டு சென்றனர்.
அனுபவப் பகிர்வுகள்:
பெற்றோரும் குழந்தைகளும் முகாமில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்:
குழந்தைகள்:
“நான் தியான வகுப்புகளையும், பானை ஓவிய வகுப்புகளையும் அனுபவித்து மகிழ்ந்தேன்… நான் இங்கே நல்ல நண்பர்களைப் பெற்றேன்.”
“இந்த (சென்னை) முகாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது! நான் அடுத்த ஆண்டு நிச்சயமாக மீண்டும் வர விரும்புகிறேன், என் நண்பர்களையும் அழைத்து வர ஆவலாக உள்ளேன். தியானத்திற்குப் பிறகு நான் உணர்ந்த அதே மகிழ்ச்சியை அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்…”
பெற்றோர்கள்:
“...இந்த முகாம் வேடிக்கை மற்றும் கற்றலின் சரியான சமநிலையாக இருந்தது, குழந்தைகள் குருஜியின் போதனைகளை உள்வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகத் துய்த்து மகிழ வழிவகுத்தது…”
“...இதுபோன்ற நிகழ்ச்சிகள், குருஜி காட்டிய சமநிலை வாழ்க்கைப் பாதையை குழந்தைகள் பின்பற்ற உதவும்”
“அழகிய ஆசிரமச் சூழலில், சன்னியாசிகள் மற்றும் பிற குழந்தைகளுடன் சேர்ந்து ஆன்மீக வழக்கத்தை மேற்கொள்வது என் குழந்தைக்கு அளப்பரிய நன்மை அளித்துள்ளது…”
கோடைக்கால முகாம் குழந்தைகளின் “குருஜிக்கு கடிதங்கள்”
2025 ஆம் ஆண்டு ராஞ்சி இளையோர் முகாமின் போது, இளம் பக்தர்கள், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதங்கள் மூலம் தங்கள் பக்தியை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டனர். பின்வருபவை சில பகுதிகள்:
என் அன்பிற்குரிய குருஜி,
… நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? தாங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். நான் தியானத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும், படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் என் பெற்றோருக்கு மகிமை கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம். நான் எப்போதும் நல்லவற்றை சிந்திக்க விரும்புகிறேன், நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஜெய் குரு!
தங்கள் சீடன்.
– S
அன்பிற்குரிய குருஜி,
நான் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? சில நாட்களுக்கு முன்பு நான் உங்களுக்கு டெய்ரி மில்க் சாக்லேட் கொடுத்தேன். உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். நான் அறிவியல் பிரிவை தேர்வு செய்துள்ளேன்… எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. உங்கள் கண்கள் மிகவும் அழகானவை. நான் தினமும் தியானம் செய்வதில்லை, ஆனால் முயற்சி செய்வேன்.
அன்புடன்,
– MK
தெய்வீக குருதேவா,
தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? நான் இங்கு நலமாக இருக்கிறேன். எனக்கு மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டியுள்ளது.
எப்போது என்னிடம் வருவீர்கள்? எப்போது எனக்கு உங்கள் தரிசனம் அருள்வீர்கள்? கடந்த முறை நான் உங்களைப் பார்த்தபோது ஏற்பட்ட அந்தப் மகிழ்ச்சி எனக்கு நினைவிருக்கிறது. ஒருமுறை நீங்கள் என்னிடம் வந்து உங்கள் தரிசனம் அருளிவிட்டால், வாழ்க்கையின் சவால்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பதை நான் அறிவேன். மேலும், எனது இச்சா சக்தியை வலுப்படுத்த உங்கள் அருளாசி எனக்குத் தேவை. குருஜி, நான் உங்களை நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியும். ‘நீரே எனது ஒரே அன்பாக ஆகும் வரை உம்மை அன்பு செய்வேன்’ என்ற நிலையை நான் அடைய எனக்கு அருள் புரியுங்கள்.
தங்கள் அன்பிற்குரிய புதல்வி,
– D
குருஜி, எப்படி இருக்கிறீர்கள்? நான் நலமாக இருக்கிறேன். இந்த ஆசிரம முகாமிற்குள் என்னை அழைத்து வந்ததற்கு நன்றி. இங்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டிலிருந்தே நான் இங்கு வருவதற்கு காத்துக்கொண்டிருந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நன்றி. குருஜி, நான் உங்களை நேசிக்கிறேன்.
– K
அன்பிற்குரிய குருஜி,
எனது விருப்பத்தைக் கேட்க தாங்கள் திருவுளம் கொள்வீர்கள் என நம்புகிறேன். தாங்கள் என்னுடன் உரையாடி, என் வாழ்வில் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மேலும் எனக்கு ஒரு விருப்பம் உள்ளது. உங்கள் லிச்சி மரத்திலிருந்து எனக்குச் சில லிச்சி பழங்கள் வேண்டும்.
அன்புடன்,
— AV




















