பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய உலகப் புகழ்பெற்ற ஆன்மீக இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மறைஞானி யோகி, மகாவதார பாபாஜி யார்? பத்ரிநாராயணனுக்கு அருகிலுள்ள வட இமயமலைச் சிகரங்களில் வாழும் மரணமற்ற ஞானியாக அறிமுகப்படுத்தப்படும் பாபாஜி, மறுபிறவிச் சுழற்சியிலிருந்து முழுமையாக விடுபட்டவரும், மனிதகுலத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒளிவீசும் இளமையான ஸ்தூல வடிவத்தைத் தக்கவைத்திருப்பவருமான ஒரு ‘மகாவதாரம்’ (உன்னத அவதாரம்) தெய்வீக அவதாரம் என்று விவரிக்கப்படுகிறார். பாபாஜியைச் சந்தித்தவர்கள் அவருடைய இயல்பு தூய அன்பு என்றும், பணிவு அவரது தனிச்சிறப்பு என்றும் கூறுகின்றனர். அவருடைய புனிதப் பெயரை பயபக்தியுடன் உச்சரிப்பது உடனடி ஆசியை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் (YSS) மூத்த சன்னியாசி ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி வழங்கிய இந்த ஆங்கில சொற்பொழிவின் மூலம் மகாவதார பாபாஜி பற்றி மேலும் அறிந்துகொள்ள அழைக்கிறோம். ஆன்ம-அனுபூதிக்கான புனித, விஞ்ஞானபூர்வ கிரியா யோக உத்தியானது — பாபாஜியிடமிருந்து லாஹிரி மகாசயர், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மற்றும் இறுதியாக பரமஹம்ஸ யோகானந்தர் வழியாக எவ்வாறு ஒரு தடையற்ற குரு-சிஷ்ய பரம்பரையின் ஊடாக பரவியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 1920-ஆம் ஆண்டில், இப்போதனைகளை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பணியை பாபாஜி அவரிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சொற்பொழிவு, இந்தி, பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது.

















